By 5 September 2018 0 Comments

ஐ.அமெரிக்க – துருக்கி முரண்பாட்டில் பாகிஸ்தானின் பங்கு!!(கட்டுரை)

துருக்கிய அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட ஐக்கிய அமெரிக்கப் போதகர் அன்ட்ரூ பிரன்சன் கைது செய்யப்பட்டதில் இருந்து எழுந்துள்ள அவநம்பிக்கையால், சமீபத்தில் துருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவிழந்துள்ளதுடன், இது தொடர்பில் எதிர்த்தரப்பு நடவடிக்கைகளை, ஐ.அமெரிக்காவும் துருக்கியின் மீது மேற்கொண்டுள்ளது. அதன் பிரகாரம், ஐ.அமெரிக்கா, பொருளாதாரத் தடைகளை துருக்கி மீது சுமத்தியிருப்பதுடன், இரும்பு, அலுமினிய வர்த்தகங்களின் மீது அதிகரித்த தீர்வைகளை துருக்கி மீது ஐ.அமெரிக்கா சுமத்தியிருப்பது, துருக்கியின் பொருளாதாரத்தை வெகுவாகவே பாதித்துள்ளது. இதனால், துருக்கியின் பணமான லிரா, ஐ.அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், கணிசமான அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இதனால் சர்வதேச வர்த்தகத்தில் துருக்கிக்காகக் கொடுக்கல் – வாங்கல் தொடர்பான சமநிலை மாறுபட்டிருப்பதுடன், அதிகரித்த மாற்று விகிதங்கள், பெருகிய கடன்கள் ஆகியவை, துருக்கியின் பொருளாதாரத்தை வெகுவாகவே பாதிக்கின்றன.

வரலாற்று ரீதியாக, துருக்கியும் ஐ.அமெரிக்காவும், நேட்டோ நட்பு நாடுகளாகும். பனிப்போருக்குப் பிந்திய காலப்பகுதியில் இருந்து இரு நாடுகளும், பாதுகாப்பு, இராஜதந்திர உறவு, அதன் அடிப்படையான நட்பை, நீண்டகாலமாக அனுபவித்திருக்கின்றன. இரு நாடுகளும் பல சர்வதேச பிரச்சினைகள் தொடர்பாகத் தீர்வுகள் காண்பதற்கு இணக்கமாக இருந்தன. குறிப்பாக, “பயங்கரவாதத்தின் மீதான போர்” அல்லது மத்திய கிழக்கில் உள்ள நிலைமை என்பது, ஐ.அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையிலேயே குறித்த பிராந்தியத்தில் சாத்தியமாயிற்று. ஆனால், ஐ.அமெரிக்க – துருக்கி உறவுகளில் ஏற்பட்ட பிளவு, பன்முகமானது.

குறிப்பாக, ஈராக்கில் குர்திஷ் அரசாங்கம் அமைவதை ஐ.அமெரிக்கா ஏற்றுக்கொண்டமையைத் தொடர்ந்து இப்பிளவு விருத்தியடைந்து. இந்நிலையைப் பொறுத்தவரை, யுத்தத்துக்குப் பின்னரான சிரியாவின் பூகோளவியலில் குர்திஷ் அமைப்பின் இருப்பை, ரஷ்யாவும் ஐ.அமெரிக்காவும் ஆதரிக்கின்றன. மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போராட்டத்தில் குர்திஸ் குழுவின் முக்கிய பாத்திரத்தை, ஐ.அமெரிக்காவும் ரஷ்யாவும் அடிக்கடி வலியுறுத்துகின்றன. மறுபுறத்தில் துருக்கி, YPG குழுவை, சிரியாவின் அங்கமாகவே பார்க்கிறது. எனவே துருக்கி, பிராந்தியத்தில் உள்ள குர்திஸ் அமைப்பான YPG-ஐ, துருக்கியிலுள்ள PKK அமைப்பை ஒத்ததாகவே கருதுகின்றது. இது, துருக்கியின் உள்நாட்டு விவகாரங்களில் எவ்வாறு PKK குர்திஷ் மக்களுக்கு தனித்துவமானதோர் அடையாளத்துக்கான அழைப்பு விடுக்கின்றதோ, அதேபோன்று பிராந்தியத்தில் துருக்கிக்கு எதிரான ஒரு குர்தக்‌ஷ் தன்னாட்சி அரசு அமைவதற்கு, YPG வழிவகுத்துவிடும் என கருதுகின்றது. இருந்தபோதிலும், மொஸ்கோவும் வொஷிங்டனும், YPG-ஐ பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட மறுத்துவிட்டன என்பது, ஐ.அமெரிக்காவுக்கு எதிராகத் துருக்கி செயற்படக் காரணமாயிற்று.

இரண்டாவதாக, ட்ரம்ப்பின் அரசாங்கம், நேட்டோ உடன்படிக்கையைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கின் பாதுகாப்புச் செலவீனங்களை ஐ.அமெரிக்கா, ஐரோப்பா ஏற்காது என அறிவித்ததிலும் இருந்து ஆரம்பமாயிற்று. மேலும் இது தொடர்பில் துருக்கி தனிமைப்படுத்த
ப்பட்டமை, சிரிய, ஈரானிய அரசாங்கங்களின் எதிர்ப்பை துருக்கி சந்திக்கையில், ஐ.அமெரிக்கா துருக்கி சார்பாக நிற்காமை ஆகியன, இப்பிளவை மேலும் விரிவுபடுத்தின.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, துருக்கியுடனான ஒற்றுமையை காண்பிப்பதற்கான நேரம் இதுவாகும். கடந்த காலத்தில், துருக்கி, எப்போதும் பிராந்திய மற்றும் உலக விவகாரங்களில் பாகிஸ்தானை ஆதரித்துள்ளது. காஷ்மிர் பிரச்சினை, ஆப்கானிஸ்தான் நெருக்கடி போன்ற பல விடயங்களில், இரு தரப்பினருக்கும் இராஜதந்திர உறவைப் பலப்படுத்தியதுடன், பாதுகாப்பு சார்பான விடயங்களைப் பகிரப்படுவதில் இரு தரப்பினரும் நீண்டகால உறவைப் பேணியிருந்தனர். மேலும், இரு நாடுகளும் ஆழ்ந்த வேரூன்றிய கலாசார, மத கொள்கைகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்பது ஒரு புறமிருக்க, இவ்விரு நாடுகளும், பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (ECO) அங்கத்தவர்களாகவும், இராணுவ ரீதியாக, இரு நாடுகளும், தொடர்ச்சியாகவே கூட்டுப் பயிற்சிகள், பகிரப்படும் தொழில்நுட்பம், ஆயுத உபகரணங்கள், துருப்புகளின் பயிற்சி ஆகியவற்றில் இணைந்து பணியாற்றுகின்ற
மையானது, பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அதனை ஆதரிக்கும் ஒரே ஒரு முஸ்லிம் நேட்டோ நாடாக துருக்கி அமைவதென்பது, மிகைப்படுத்தப்பட்டதாக இருக்க முடியாது.

பாகிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பிரதமர் இம்ரான் கான், வெளிப்படையாக ஐ.அமெரிக்காவின் தற்காலிக இராஜதந்திர அழுத்தத்துக்கு மத்தியில், துருக்கிக்கான ஆதரவை உறுதிசெய்துள்ளமை, இதன் பிரகாரமே ஆகும். அதன் அடிப்படையில், பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம், உத்தியோகபூர்வமாக துருக்கியைக் கண்டிக்கும், அதன் உள்விவகாரங்களில் தலையிடும் ஐ.அமெரிக்கக் கொள்கையை நேரடியாகவே கண்டனம் செய்துள்ளது. எது எவ்வாறிருந்த போதிலும், துருக்கிக்கு தார்மீக ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் ஆதரவு தரக்கூடிய பாகிஸ்தான், எந்த அளவுக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடியும் என்பது சந்தேகமே.

மறுபுறத்தில், ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மை, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் பங்கைப் பற்றிய சந்தேகங்கள் அடிப்படையில், பாகிஸ்தான் – ஐ.அமெரிக்க உறவுகளும் நல்ல நிலையில் அமையவில்லை. ஆயினும், தெற்காசியாவின் பூகோள மூலோபாய சூழலைக் கருத்திற்கொண்டு, பாகிஸ்தான் திறமையான நடவடிக்கையொன்றை மேற்கொள்ள
வேண்டுமாயின், அது ஐ.அமெரிக்காவுடனான உறவை முறித்துக்கொள்ளாது என்பது ஒரு புறமிருக்க, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் தற்போதைய கண்டனமானது, பாகிஸ்தான் தனது நாட்டின் இறையாண்மை, தேசிய மதிப்பீடு ஆகியவற்றைப் பாதுகாக்கவும், தனது ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளார்ந்த இறைமையை ஐ.அமெரிக்கா போன்ற மேற்கத்தேய நாடுகளின் “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்” இழக்க விரும்பாத நிலையாகும் என்பதுடன், துருக்கியின் ஆதரவுடன் ரஷ்யாவும் சீனாவும் முன்னோக்கி வந்துள்ளன என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே, பாகிஸ்தான் இந்த முரண்பாட்டில் தனக்காக எந்தவோர் உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆயினும், இந்நிலை எவ்வளவு காலத்துக்கு செல்லுபடியாகும் என்பது கேள்விக்குறியே. இந்நிலையிலேயே, பாகிஸ்தான் அரசாங்கம் அண்மையில் துருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான முரண்பாட்டை, தான் ஒரு நடுநிலைமையாளர் என்ற நிலையில் இருந்து தீர்க்க முன்வந்தமை பார்க்கப்பட வேண்டியதாகும். இருந்தபோதிலும், இப்பேச்சுவார்த்தைக் கதிரைக்கு இரு நாடுகளும் வர விரும்புகின்றனவா என்பதே இப்போதைய கேள்வியாகும்.Post a Comment

Protected by WP Anti Spam