By 11 September 2018 0 Comments

உடற்பயிற்சி மனதுக்கும் நல்லது!!( மருத்துவம்)

ஆராய்ச்சி

அனைவருமே இன்று உடல் உழைப்பற்ற பணிகளைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். பணியிடத்தில்தான் இந்நிலை என்றால் படியேற லிஃப்ட், எஸ்கலேட்டர், அருகிலிருக்கும் இடங்களுக்கும் இரு சக்கர வாகனப் பயணம், ஏசி கார் என சொகுசு வாழ்க்கை வாழும் நாம் உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்களை தானாகவே வரவழைத்துக் கொள்கிறோம்.

இது உடற்பயிற்சி பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. இந்த உடற்பயிற்சி பற்றாக்குறை மனநலத்துடன் தொடர்புள்ளதாக புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளது ‘லான்சட்’ அமெரிக்க நாளிதழ்.

ஆராய்ச்சியாளர்கள், 2011, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டிலிருந்து 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 13 லட்சம் மக்களிடம் நோயறிதல் மற்றும் தடுப்பு நடத்தை அபாய காரணிகள் கண்காணிப்பு அமைப்பு கணக்கெடுப்பு மையங்கள் (Centre fro Disease Control and Prevention Behavioural ris Factors Surveillance) நடத்திய சர்வேயியிலிருந்து பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தனர்.

பின்னர், குறிப்பிட்ட நாட்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, அந்த நாட்களில் உடற்பயிற்சி செய்தவர்கள் மற்றும் செய்யாதவர்களின் மனநலத்தை ஒப்பீடு செய்ததன் அடிப்படையில் உடற்பயிற்சி செய்யாதவர்களைவிட, உடற்பயிற்சியை தவறாமல் செய்தவர்கள் மனநல ஆரோக்கியம் மிக்கவர்களாக இருந்ததை கண்டறிந்தனர்.

ஆராய்ச்சிக் குழுவில் ஒருவரான மன நல நிபுணர் போஸ் குறிப்பிடும்போது, ‘என்னிடம் வரும் பல நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டவர்களாகவும், தங்களின் வசதியான வட்டத்திலிருந்து வெளியேறாதவர்களாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் சிறந்த மருந்து, சைக்கிள் பயிற்சி இயற்கை சூழ்ந்த வெட்ட வெளியில் சைக்கிள் பயிற்சி செய்வது நல்லது. மனிதனின் உடல் இயக்கம் இல்லாத நேரங்களில் மனம் செயல்படாத நிலைக்கு தள்ளப்படுகிறது. உடல்நிலை மனதைப் பாதிப்பதைப்போலவே மனநிலை, உடலைப் பாதிக்கும்.

மனமும், உடலும் ஒன்றோடொன்று இரண்டு வழிகளிலும் தொடர்புடையவை. நீங்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமென்றால் தவறாது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுறுசுறுப்பாக இயங்கும் நேரங்களில் மனமும் மகிழ்ச்சியாக இருப்பதை நம்மில் பலரால் உணர முடியும்.

குழுவாக இணைந்து சைக்ளிங், ஏரோபிக் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது மனநலத்தை உயர்த்தும். மேலும், நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் நோயின் தீவிரத்தை குறைத்துக் கொள்ள முடியும்’ என்கிறார்.

உடற்பயிற்சி நிபுணர் அரசுவிடம் இந்த ஆராய்ச்சி பற்றிக் கேட்டோம்…

‘‘தசைகள் கட்டமைப்பிற்கானது மட்டுமல்ல உடற்பயிற்சி. ஒரு தனி நபர் தன்னுடைய மன ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் உதவுகிறது. ஒருவர் எத்தகைய மன அழுத்தத்தில் இருந்தாலும், தன்னுடைய பிரச்னைகளை மறந்து ஜிம்மிற்கு வந்து பயிற்சி செய்யும் அந்த ஒரு மணி நேரம் மிக முக்கியமானது. பலருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது.

என்னுடைய பயிற்சிக்கூடத்திற்கு வருபவர்களிடையே இந்த மாற்றத்தை நன்கு உணர முடிகிறது. அதாவது, உடற்பயிற்சிகள் செய்யும்போது உடல் எண்டார்பின் எனப்படும் வேதிப்பொருளை வெளியிடுகிறது.

இந்த எண்டார்பின் மூளையில் உள்ள ரிசப்டார்ஸ்களுடன் தொடர்பு கொள்வதால், மன வலி மற்றும் உடல்வலிகளின் தீவிரத்தைக் குறைக்கின்றன. மன நிலை ஆரோக்கியமாக உணரும் ஒருவருக்கு, குழப்பமான மற்றும் துயரமான உணர்ச்சிகள் குறைந்து நிம்மதியான தூக்கம் கிடைக்கிறது.

தூக்கமின்மையே இன்று பெரும்பாலான மன இறுக்க நோய்களுக்கு காரணமாகும்போது நல்ல உறக்கத்தை கொடுக்கும் உடற்பயிற்சிகள் அவசியம்தானே. உடலுக்கும், மனதுக்கும் பலனளிக்கும் உடற்பயிற்சிகளைப்பற்றி மக்கள் இனி தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது’’ என்கிறார்.Post a Comment

Protected by WP Anti Spam