By 17 September 2018 0 Comments

வாழ்வென்பது பெருங்கனவு!!(மகளிர் பக்கம்)

ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும், பத்திரிகையாளராக வேண்டும் என கண்ட கனவெல்லாம் கனவாகவே இருக்கையில், கற்பித்தல் என்ற பெரும் பொறுப்புடன் இன்று தலைமையாசிரியையாக பணியாற்றியபடியே தன் கனவுகளை எழுத்தின் வாயிலாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார் கவிஞர் தி. பரமேசுவரி. சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின்பேத்தியும் கூட. அவர் கண்ட கனவுகளும், அதில் நிறைவேறியவையும் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டவை.

“கனவுகள் ஒருபோதும் முதுமையடைவதில்லை. நுரைத்துச் சுழித்தோடும் பேராற்றின் கரையில் அமர்ந்தபடி, மாறா இளமையுடன் பொலியும் என் கனவுகளைக் காண்கிறேன். கடையிதழிலோர் முறுவல்; கண்ணிடுக்கில் ஒற்றை நீர்; முதல் கனவு. வீட்டில் இருந்த நூலக அறையே என் அறையாக இருந்தது ஒரு காலம். கிடைத்ததையெல்லாம் படித்தேன்; பெரும்பாலும் புதினங்கள். அவை கனவுகளின் பொன் வேய்ந்த மாளிகைகள். தளர்நடையிட்டவளின் கரம்பற்றி அழைத்துச் சென்றதோ அடர்வனம். அன்றிலிருந்து இந்தக் கணம் வரையிலும் என் வாழ்வாகவும் தளரும்போதெல்லாம் தாங்கும் தூணாகவும் நிற்கின்றன கனவுகள். கையில் ஏடெடுத்துப் படித்த நாள் முதல் தொடர்ந்த என் நினைவுகளில் நான் ஓர் எழுத்தாளராகவே பதிந்திருக்கிறேன். படைப்பாளர் என்ற சொல்லை நினையுந்தோறும் வியந்திருக்கிறேன். எழுத்துக்காரி என்ற சொல் ஒன்றே மடிமீது தலை சாய்த்து ஆசுவாசம் கொள்ளச் செய்கிறது.

படித்த ஏதோவொரு புத்தகத்தின் ஏதோவொரு பக்கத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் என் இளம் வயதுக்கனவுக்குள் புகுந்து கொண்டார். சில காலம் அதையே மனத்துள் உருப்போட்டு வந்தேன். ஒவ்வொரு முறையும் மெல்லிய புன்னகையுடன் என் கனவைக் கடந்தார் என் ஆசிரியர். எப்போது என்று அறியாமலே, பத்திரிகையாளராக வேண்டும் என்றொரு கனவு கண்டேன். பால்யத்திலிருந்து இளமையை நோக்கி நகர்ந்திருந்தவளின் கனவு கூர்மைப்பட்டிருந்தது. தொடர்ந்து இதழ்களை வாசித்தேன். இதழ்களின் வகைமைகளை ஓர்ந்தேன். எனக்குப் பிடித்த கட்டுரைகளை எழுதியவர்களின் பெயர்களைக் கவனிக்கத் தொடங்கினேன். சிறுகதைகள் எனக்கு நெருக்கமாகின. ஓவியர்களின் கோடுகளும் வண்ணச் சேர்க்கையும் கனாக்களின் நறுமணத்துக்கு இசையமைத்தன.

கல்லூரிப்பருவத்தில் தீவிரப்பட்ட இக்கனவுதான் கல்லூரியில் சுற்றிதழ் நடத்தத் தூண்டியது. பின்னாளில் ‘தழல்’ என்ற சிற்றிதழையும் நடத்தச் செய்தது. தாத்தாவின் செங்கோலில் அவ்வப்போது எழுதத் தொடங்கினேன். பற்றிக்கொண்டது என் பெருங்காடு. எப்போதும் மனம் எழுதுவதைப் பற்றியே சிந்தித்தது. பாடத்தைக்கூடப் பத்திரிகை மொழியில் எழுதி விளையாடியிருக்கிறேன். வெளியே செல்வதில் பெருங்கட்டுப்பாடுகள் சூழ்ந்திருந்த என் வீட்டில், தந்தையற்ற சூழலில் பத்திரிகையாளர் கனவிற்கு மேல் சிவப்பு மசி அடிக்கப்பட்டது.
“நமது இன்றைய செயல்களுக்கு நேற்றைய கனவுகளே பொறுப்பு” என்ற கீட்ஸின் வரிகளை நினைத்துக் கொள்கிறேன். திடப்பட்டிருந்த மனம் எழுத்தையே நாடியது. அது செலுத்திய வழியிலேயே கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டேன். கல்லூரி அளவிலான பரிசுகளைப் பெற்றேன். எழுத்தின் மீதிருந்த பித்து, மேலும் மேலும் படிக்கத் தூண்டியது. ஜெயகாந்தன் என்னை வழிநடத்தினார்; சுஜாதா ஒவ்வொன்றாய் அறிமுகப்படுத்தினார். அவர் காட்டிய இடத்தில் நின்றிருந்த தி.ஜானகிராமனை வாசித்தேன்.

அங்கிருந்து அசோகமித்திரனிடம் பயணப்பட்டேன். லா.ச.ரா, அம்பை என்று தேடித்தேடிப் படித்தேன். கண்கள் வழியே காட்சிகள் விரிந்தன. மேலும் கனவுகள் பெருகின. தொடர்ந்து புத்தகங்களை அறிமுகப்படுத்தியபடியும் உரையாடியும் விவாதித்தும் விசாலப்படுத்தினார் தாத்தா.மாவட்ட ஆட்சியர், பத்திரிகையாளர் என்று கண்ட கனவெல்லாம் கலைந்து இன்று ஆசிரியராகப் பணியாற்றினாலும் எழுத்தாளரென்பதே என் வாழ்வு. நான் எழுத்தாளர் என்பதே என் பெருமிதம். சிக்கெனப் பற்றிக்கொண்ட அப்பெருங்கனவே என் இன்றைய உயரம். முதன்முதலில் அச்சில் பார்த்த என் கட்டுரை இன்றைக்குப் படிக்கையில் சிரிப்பை வரவழைத்தாலும் ஒருபோதும் என்னால் மறக்க முடியாத கட்டுரையது. வாழ்வின் சுழல்களுக்கிடையிலும் பத்திரிகை தொடங்கி நடத்தும் கனவு இப்போதும் பின்னமாகாமல் பத்திரமாய் இருக்கிறது. சுள்ளிகள் பொறுக்கிவந்து கூடு கட்டும் பறவையைப் போல அவ்வப்போது சிற்சில முயற்சிகள்.

ஒன்றையே காதலித்து உள்ளம் ஓங்குவதென என் மனம் எப்போதும் எழுத்தையே தேடுகிறது. இனிப்பை நாடும் எறும்பென எழுத்தைச் சார்ந்து நிற்கிறேன். முனைவர் பட்ட ஆய்வு “ம.பொ.சி பார்வையில் பாரதி” என்ற பெயரில் முதல் நூலாக வெளிவந்தது முதல் வர இருக்கும் “சொல்லால் அழியும் துயர்” என்னும் கட்டுரை நூல் வரையிலும் அடையும் ஆனந்தத்துக்கு எல்லையே கிடையாது. புத்தகங்களை வாங்குவதும் வாசிப்பதும் எழுதுவதும் தரும் மகிழ்ச்சி என்பது வானைவிட உயரமானது; கடலைவிட ஆழமானது. ‘எனக்கான வெளிச்சம்’, ‘ஓசை புதையும் வெளி’, ‘தனியள்’ என்ற மூன்று கவிதைத் தொகுப்புகளும் ‘சமூகம் வலைத்தளம் பெண்’ உள்ளிட்ட இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன. ம.பொ.சியின் சிலப்பதிகார உரை, ‘தமிழன் குரல்’ என்னும் இதழ்த்தொகுப்பு, ‘கலிகெழு கொற்கை’ என்றொரு தொகுப்பு என ஆறேழு தொகுப்புகள் சாத்தியப்பட்டிருக்கின்றன.

எழுத்துக்கு இடையூறாக வந்த தடங்கல்களை எப்பாடுபட்டேனும் கடந்தே வந்திருக்கிறேன். குடும்ப வாழ்வின் சட்டகங்களைப் பெயர்த்து, எழுத்தின் கரடுமுரடான பாதைக்குள் நடந்தேன்; நடக்கிறேன். பயண வழியில் மறித்த உறவுகளைச் சலனமின்றி வெட்டி வீழ்த்தியிருக்கிறேன். எழுத்தின் பெயரால் ஏமாந்திருக்கிறேன்; ஆனால் இவ்வுடலில் உயிர் தங்கியுள்ள வரையிலும் வாசிப்பை மறவேன். வாழ்வின் நடுப்பகுதியில் நின்றுகொண்டு இரு பக்கமும் பார்க்கிறேன். சிறு வயதில் என் கனவுக் குடுவையில் பச்சையாய், மஞ்சளாய், நீலமாய் ஏராளமான கனவுகள் சிறகடித்திருக்கின்றன. வெவ்வேறு பாதைகளில் மனமழிந்திருக்கிறது. அலைந்திருக்கிறேன்; கனவுகள் திசைமாறும்போதெல்லாம் கலங்கியிருக்கிறேன். என்றைக்கும் அடிநாதமான மெளனத்துள் ஒடுங்கும் இசைபோல எழுத்துள் ஒடுங்கியிருக்கிறேன். நான் எழுத்தைப் பற்றியிருக்கிறேன். எழுத்து எனக்குப் பற்றுக்கோடாயிருக்கிறது.

எங்கோ ஒருவர் என்னைப் படித்துவிட்டுப் பேசுவது என் அன்றைய நெல்மணியாகிறது. ஒரு நல்ல கவிதை எழுதிய நாள் திருநாளாகிறது. எழுதாத நாளெல்லாம் பிறவாத நாட்களாகப் பேதலிக்கச் செய்கிறது. பிணைக்கப்பட்ட கயிறுகளிலிருந்து விடுவித்துக்கொள்ளப் போராடும் போராட்டம் போலொரு எழுத்து. சுநாதமாகப் பொழியும் பாடலையொத்தவொரு எழுத்து. உடலைக் கீறி வழியும் குருதியைப் போலுமொரு எழுத்து. ஒவ்வொரு முறையும் தாளின் முதல் எழுத்தெடுத்து ஓடுவது, உலகின் இறுதியை அடைவதைப் போலத் தோன்றினாலும் எழுதும் வேகம் கைவரப் பெற்ற கணம், பிடிவாதமான குதிரையின் மீதேறி லகானைக் கைப்பற்றும் கணம். முரட்டு யானையை அங்குசத்தால் வசப்படுத்தி அதன் மீதமரும் தருணம். அதன் சுகம், எழுதிப் பார்க்கும்போது மட்டுமே உணர முடியும்.வாசிப்பே, சகலத்தையும் நேசிக்க எனக்குக் கற்றுக்கொடுத்தது. அன்பை உணர்த்தியது. எழுத்தின் மூலம் அன்பை விதைக்கிறேன். அதை யாரும் அறுவடை செய்யலாம். எழுத்து என்னும் ஒற்றைப் பெருங்கனவுக்குள் பயணிக்கத் தொடங்கி விட்டேன். மாயப் புல்லாங்குழல் என்னை அழைத்துச் செல்கிறது. என் கனவு.. என் வாழ்வு.. என் பயணம்.”Post a Comment

Protected by WP Anti Spam