75 ரயில் விபத்துகளில் 40 பேர் பலி !!(உலக செய்தி)
மத்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ரயில் விபத்துகளின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த ஆகஸ்ட் வரையிலான ஓராண்டு காலத்தில் நாடு முழுவதும் 75 ரயில் விபத்துகள் நடந்திருப்பதாகவும், அதில் 40 பேர் உயிரிழந்ததாகவும் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
இதில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி உத்தரபிரதேசத்தில் பாடசாலை வேன் மீது ரயில் மோதி 13 குழந்தைகள் பலியான சம்பவம் உள்ளிட்ட ஒருசில பெரிய சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. எனவே இது கடந்த 5 ஆண்டுகளில் குறைவான விபத்துகள் பதிவான ஆண்டாக கடந்த ஆண்டு அமைந்துள்ளது.
முன்னதாக கடந்த 2016-17 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த 80 விபத்துகளில், 249 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. 2013-14 ஆண்டு காலகட்டத்தில் நடந்த 139 விபத்துகளில் 275 பேர் பலியாகி இருக்கின்றனர். 2014-15 ஆம் ஆண்டில் 108 விபத்துகளும், 196 உயிரிழப்புகளும் நிகழ்ந்து இருக்கின்றன.
இதைப்போல ஆளில்லா ரயில்வே கடவையை கடக்கும் போது நடந்த விபத்துகளும் கடந்த ஆண்டில் வெறும் 8 மட்டுமே பதிவாகி இருப்பதாக ரயில்வேத்துறை கூறியுள்ளது. இது 2013-14 இல் 52 ஆகவும், 2014-15 ஆம் ஆண்டில் 39 ஆகவும், 2015-16 இல் 23 ஆக இருந்தது. 2016-17 ஆம் ஆண்டு 13 விபத்துகள் நடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.