By 28 September 2018 0 Comments

கஜூவும் அவாவும்( கட்டுரை)

இலங்கையின் தேசிய விமான சேவையான, ஸ்ரீ லங்கன் விமான சேவை விமானத்தில், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட தரம் குறைந்த மரமுந்திரிகைப் பருப்பு (கஜூ) பற்றி, ஜனாதிபதி விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதையடுத்து, அது தொடர்பில், தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் போல, முதன்மைப்படுத்தப்பட்டு நோக்கப்படுவதையும் காண முடிகின்றது.

‘கஜூ’ விடயத்திலேயே, நாட்டின் ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இவ்வளவு அக்கறை செலுத்துவது பாராட்டத்தக்கதும் மகிழ்ச்சிகரமானதும் என்பதில் மறுகருத்தில்லை.

ஆனால், இதே அக்கறையை, நாட்டில் இடம்பெறுகின்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில், அரசாங்கம் வெளிப்படுத்துகின்றதா? இவ்விடத்தில் எழுகின்ற, தர்க்க ரீதியான கேள்வி இதுவாகும்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு, கஜூ விநியோகம் செய்பவரை இடைநிறுத்த குறித்த விமான சேவை, தீர்மானம் எடுத்திருப்பதால், நாட்டில் உள்ள சாதாரண மக்களின் வாழ்வியலில், பெரும் சாதக நிலைமைகள் ஏற்படப் போவதில்லை.

சாதாரண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், விலையேற்றங்கள், இனமுறுகல்கள், இனவாதம் போன்ற அன்றாடப் பிரச்சினைகள் தீர்ந்து விடப் போவதில்லை.

அதாவது, தேசிய இனப்பிரச்சினை, மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், இதைவிட முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய தேவையிருந்தும், அரசாங்கத்திடமிருந்து அவ்வாறான போக்குகளைக் காண முடியவில்லை.

சில தினங்களுக்கு முன், ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற விவசாய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கன் விமான சேவையில், தனக்கு வழங்கப்பட்ட மரமுந்திரிகைப் பருப்பு பற்றிக் குறிப்பிட்டிருந்தார். “நான் நேபாளத்திலிருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த போது, விமானத்தில் அவர்கள் கஜூ தந்தார்கள்; அது மனிதன் உண்ணும் தரமன்று. அதை நாய் கூடத் தின்னாது. யார் இந்தத் தரமற்ற கஜூவுக்கு ஒப்புதல் அளித்திருக்கின்றார்கள்? யார் இதற்குப் பொறுப்பு?” என்று விமர்சன ரீதியாக, ஜனாதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்விவகாரம் அரசியல், சமூக, வணிக அரங்கில் பேசுபொருளானதால், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸுக்கு வெட்கமாகப் போய்விட்டது. அந்நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுத்தது. தம்மிடம் இருந்த கஜூ இருப்புகள் அகற்றப்பட்டதாகவும் கஜூ விநியோகம் செய்யும், டுபாயைச் சேர்ந்த கொம்பனியின் விநியோக ஒப்பந்தத்தை, இடை நிறுத்தியுள்ளதாகவும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

2014ஆம் ஆண்டு, கொரிய விமான சேவை ஒன்றின் உரிமையாளரின் மகளான ஹெதர் சோ, அந்நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, தனக்கு ‘மெகடாமியா’ என்ற பருப்பைத் தட்டில் வைத்து வழங்காமல், பிரிக்கப்படாத பக்கெட்டுடன் வழங்கியதால் ஆத்திரமுற்று, அந்த விமானப் பணிப் பெண்ணை வெளியேற்றுவதற்காக, புறப்பட்ட விமானநிலைய வாயிலுக்கு, மீண்டும் விமானம் செல்ல வேண்டுமென்று உத்தரவிட்டார். இதனால் அவர், பின்னர் பல சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்தளவுக்கு ஆக்ரோஷமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. என்றாலும், ஸ்ரீ லங்கன் விமான சேவையின் கஜூ தொடர்பான அவருடைய விமர்சனமும், 2014 இல் இடம்பெற்ற மேற்குறிப்பிட்ட சம்பவத்தையே ஞாபகப்படுத்துகின்றது.

ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு, பாவனைக்குதவாத கஜூவைக் கொடுத்துவிட்டு, இப்போது உப்புக்குச்சப்பாக விளக்கமளிப்பது பொறுப்பற்ற செயற்பாடாகும். ஜனாதிபதிக்கே பாவனைக்குதவாத பண்டத்தைக் கொடுத்தவர்கள், ஏனைய பயணிகளுக்குக் கொடுக்கும் உணவில், உரிய தரத்தைப் பேணுவார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது.

எது எவ்வாறிருப்பினும், ஜனாதிபதி மைத்திரி, கஜூ விடயத்தில் (கூட) அவதானமாக இருந்து, அதை வெளியுலகுக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது, நன்றி பாராட்டுதலுக்கு உரியதும் மனமகிழ்ச்சியைத் தருவதும் ஆகும்.

ஆனால், நாட்டில் நடைபெற்ற, இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இன்னபிற தலையாயதும் முக்கியத்துவம் மிக்கதுமான விடயங்களில், ஜனாதிபதியோ, பிரதமரோ, பொறுப்பு வாய்ந்தவர்களோ இந்தளவுக்கு அக்கறை எடுத்துச் செயற்படாதது, ஏன் என்ற கேள்வி, சாதாரண மக்களின் பெரும்பாலானோர் மனங்களில், உருவாகியிருப்பதாகச் சொல்ல முடியும்.

பொருட்கள், சேவைகளின் விநியோகம், அவற்றின் தரம், விலைநிர்ணயம் தொடக்கம், இனவாதம் தொட்டு தேசிய இனப்பிரச்சினை வரையான முக்கியத்துவம்மிக்க விவகாரங்களில், இதைவிடப் பன்மடங்கு அக்கறை செலுத்த வேண்டிய தேவையிருந்தும், அந்தளவுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமை, மக்கள் மனங்களில் குறிப்பாக, முஸ்லிம்களிடத்தில் மனக்கிலேசத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

நாட்டில் சிறியதும் பெரியதுமாக இனக்கலவரங்கள் அரங்கேற்றப்பட்டன. இனவாதம் இன்னும் கொதிநிலையில் இருக்கின்றது. முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், ஹலால், அபாயா, மாட்டிறைச்சிக் கடை போன்றவை நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இலங்கை முஸ்லிம்களிடத்தில் ஆயுதங்களோ, தீவிரவாதக் குழுக்களின் ஊடுருவலோ இல்லை என்று பாதுகாப்புத் தரப்பு அறிவித்திருக்க, புலிகளின் ஆயுதங்கள், முஸ்லிம்களிடம் இருப்பதாகவும் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டிருப்பதாகவும் ‘கரடிவிடும்’ கைங்கரியங்களும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சின்னஞ்சிறு கஜூவை அவதானித்த ஜனாதிபதி, இந்த விவகாரங்களை அவதானிக்காமல் விட்டிருக்கமாட்டார். சிறுபான்மை மக்களின் வாக்குகளால், ஆட்சிபீடமேறிய அரசாங்கம் என்ற வகையில், இவ்வாறான முக்கியத்துவம் மிக்க விவகாரங்கள் தொடர்பில், காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக மேற்சொன்ன பல விடயங்களில், முஸ்லிம்கள் முழுமையாகத் திருப்திப்படும் விதத்திலான நடவடிக்கைகளை, அரசாங்கம் எடுத்ததாகக் கூற முடியாதுள்ளது.

முன்னைய அரசாங்கம், ஊழல் புரிவதாக விமர்சித்து, மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்ட இந்த அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள், ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர். பிணைமுறி விவகாரம் அதில் முக்கியமானது. இந்த மோசடியின் மூலம், மக்கள் பணத்தில் கைவைத்தவர்களுக்கு, உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

அத்துடன், கடந்த அரசாங்கத்தில் நிதி மோசடி, கொலை, கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பலர், இன்னும் சட்டத்தின் பிடிக்குள் இறுக்கப்படவில்லை.

நல்லாட்சி ஆட்சிக்கு வந்ததும், பிடித்துச் சிறையில் அடைப்பார்கள் என்று ‘இலவு காத்த கிளி’ போல, மக்கள் எண்ணிக் கொண்டிருக்க, குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்குரியவர்கள் பலர், இன்னும் வெளியில்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

வஸீம் தாஜூடீனைக் கொன்றவர்கள், ஊடகவியலாளர்களையும் புத்திஜீவிகளையும் கடத்தியவர்கள், கொலை செய்தவர்கள் எனப்பலர், இன்னும் சட்டத்தின் பிடிக்குள் சிக்கவைத்து, தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை.

மிக முக்கியமாக, சந்திரிகா அம்மையாரின் வலது கையாக இருந்த, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரண அறிக்கை, தற்போது சந்திரிக்காவும் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நல்லாட்சியில் கூட பகிரங்கப்படுத்தப்பட்டு, அவரது மரணத்தின் பின்னால் இருக்கின்ற மர்மம் துலக்கப்படவில்லை. அதில், யாராவது தவறிழைத்திருந்தால் அவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படவும் இல்லை.

தரமற்ற கஜூவை உண்பது, உடல்நலத்துக்குத் தீங்கானது. ஆனால், அதைவிடப் படுமோசமான விளைவுகளை, ஏற்படுத்தக்கூடிய மதுபான வகைகள், சிகரெட் வகைகள் நாட்டில் விற்பனையாகின்றன.

சட்ட ரீதியாக, அரசாங்கத்தின் அங்கிகாரத்துடன் இது நடைபெறுகின்றது. இதுவெல்லாம், இலங்கைப் பிரஜைகளுக்கு எந்தளவுக்கு ஆபத்தானது என்பதை அரசாங்கம் நன்கறியும். ஆனால், வரி வருமானத்தின் முக்கியத்துவம் கருதி, அவை நாட்டுக்குள் தடைசெய்யப்படவில்லை.

மாறாக, சட்ட விரோதமாக விற்றால்தான் கூடாது என்பது போலவும், ‘புகைத்தல் புற்றுநோயை உண்டுபண்ணும்’ என்று பெட்டியில் அச்சிட்டால், புகைத்தல் கட்டுப்பாட்டுக்கு வந்து விடும் என்ற நினைப்பிலும் செயற்படுவது போலவே எண்ணத் தோன்றுகின்றது.

ஆனால், நாட்டில் சிகரெட், அங்கிகரிக்கப்பட்ட மதுபான வகைகளுக்குப் புறம்பாக, கேரள கஞ்சா, அபின், ஹெரோயின், கொக்கெயின் போன்ற பல வகையான போதைப் பொருட்கள் கறுப்புச் சந்தையில் விற்பனையாகின்றன.

இவைதவிர, புதுப்புதுப் பெயர்களில் போதை மாத்திரைகளும் லேகியங்களும் டொபி வகைகளும் இளைஞர் சமூகத்துக்குள் ஊடுருவி, பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளுக்குள்ளும் சென்றுள்ளதை யாரும் மறைக்க முடியாது.

தரமற்ற கஜூவை விட, இவையெல்லாம் படுபாதகமானவையாக இருந்தும், உடனடியாகத் தீர்வு காண, பொறுப்பு வாய்ந்தவர்களால் இயலவில்லை.

“இவையெல்லாம் கடும் சிக்கல் நிறைந்த, சற்றே பெரிய விவகாரங்கள்” என்று அரசாங்கம் சொல்லலாம். அப்படியென்றால், நாட்டில் இருக்கின்ற பொருட்கள், சேவைகள் அதனோடு சம்பந்தப்பட்ட மக்களுக்கு, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இங்கு பட்டியலிட்டுக் கூற முடியும்.

அதாவது, நாட்டில் அத்தியாவசிய பாவனைப் பொருட்கள், உணவு வகைகளின் விலைகள், அடிக்கடி அதிகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் என்பது ஆட்சியையே அதிர்விக்கக் கூடியது என்பதை, அரசாங்கம் அறிந்திருந்தும் விலை நிர்ணய சூத்திரத்தைக் காரணம் காட்டி, குறுகிய காலத்துக்கு இரண்டாவது தடவையாக விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால், பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. அத்துடன் மின்சாரக் கட்டணங்களும் அதிகரிக்கப்படலாம். இதேவேளை, கோதுமை மா, சீனி, சமையல் எரிவாயு, பால்மா போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டதை விடவும், அதிகரிக்கப்பட்ட தடவைகள் அதிகமாகும்.

அத்தியாவசிய பொருட்கள், எரிபொருட்களின் விலைகள் பற்றியே, நாம் பகிரங்கமாகப் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், நாம் யாரும் கவனிக்காத வகையில், மிகவும் சூசகமான முறையில், அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுக் கொண்டு போகின்றன. மாதத்துக்கு ஒருமுறை கொள்வனவு செய்யும் சமையல் எரிவாயு விலையில் செலுத்தும் கவனத்தை, அன்றாடம் கொள்வனவு செய்யும் பொருட்களில் செலுத்தத் தவறி விடுகின்றோம்.

அன்றாடம், பயன்படுத்துகின்ற குளியல் சவர்க்காரங்கள், சலவைச் சவர்க்காரங்கள், சலவைத் தூள்கள், பற்பசை உள்ளடங்கலாக, கிட்டத்தட்ட எல்லா வகையான அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகளும் ஒரு மாதத்துக்கு ஒரு தடவையாவது அதிகரிக்கப்படுகின்றது.

இரண்டு மாதங்களுக்கு முன், 45 ரூபாய்க்கு வாங்கிய சவர்க்காரத்தை, இன்று 55 ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது. அடுத்த மாதம், இந்த விலை சற்று அதிகரிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு பல்தேசியக் கம்பனிகள், மக்களின் அன்றாட உழைப்பை, இரகசியமாகக் கொள்ளையிட்டுக் கொண்டிருக்கின்றன.

சமகாலத்தில், தரமற்ற உணவுப் பொருட்களும் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சுவையூட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. சுகாதார அமைச்சோ, ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையோ, நுகர்வோர் அதிகார சபையோ, மக்களோ பொதுவாக அதைக் கண்டு கொள்வதில்லை. ஆனால், பொறுப்புள்ள ஓர் அரசாங்கம், கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

சேவை வழங்கும் கொம்பனிகளும் கண்ணுக்குப் புலப்படாத சுரண்டலை மேற்கொள்கின்றன. தொலைத் தொடர்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், சில வங்கிகள், வட்டிக் கடைகள், நிதிக் குத்தகை நிறுவனங்கள் உள்ளிட்ட கணிசமான நிறுவனங்கள், தமக்கு வழங்கப்பட வேண்டிய சேவைக் கட்டணங்களுக்கு மேலதிகமாக, ‘அந்த வரி, இந்த வரி’, சேவைக் கட்டணம், தாமதக் கட்டணம், தண்டத் தொகை என்று பெருந்தொகைப் பணத்தை, மிகவும் நுட்பமான முறையில் சூறையாடிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

இவையெல்லாம், சட்டவிதிகளுக்கு அமைய நடைபெற்றாலும், ஒரு குறிப்பிட்ட சேவையைப் பெறுவதற்காக, மக்கள் அளவுக்கதிகமான கட்டணத்தை, வீணாகச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.

அன்றாடக் காய்ச்சிகளாக வாழ்கின்ற கீழ்வர்க்க, நடுத்தர வர்க்க மக்கள், இந்த நாட்டின் தேசிய வருமானத்துக்கு உழைத்துக் கொடுத்துவிட்டு, இந்த நிலைமைகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். விலைகூடிய உணவுப் பொருட்களை (கஜூ போன்ற) வாங்குவது ஒருபுறமிருக்க, அன்றாட உணவுக்கே கஷ்டப்படுகின்ற நிலையிலேயே, இவர்கள் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

“இந்தத் தரக்குறைவான கஜூவை, விமானத்தில் வழங்க அனுமதியளித்தது யார், யார் இதற்குப் பொறுப்பு?” என்று ஜனாதிபதி கேட்டது போன்று, மேற்குறிப்பிட்ட விலை அதிகரிப்புகளுக்கும் அதிகமானதும் மேலதிகமானதுமான கட்டண அறவீடுகளுக்கும் தரம்கெட்ட உணவுப் பொருள் விற்பனைக்கும் மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரிப்புக்கும் யார் பொறுப்பு? என்ற கேள்வி, மக்கள் தரப்பில் இருந்து, அரசாங்கத்தை நோக்கி முன்வைக்கப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.

ஆகவே, ஸ்ரீ லங்கன் விமான சேவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட பழமுந்திரிகை பருப்புகளின் தரம் குறித்து, அவர் விமர்சனங்களை முன்வைத்து, அது விடயத்தில் நடவடிக்கை எடுக்கச் செய்தது போலவே…. மேற்குறிப்பிடப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலை அதிகரிப்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் சுரண்டல், சேவை வழங்கும் நிறுவனங்களின் பகற்கொள்ளை என்பவை தொடர்பிலும் ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்த வேண்டும்.

கஜூ விவகாரத்தில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் விரைந்து செயற்பட்டதைப் போல, இனப்பிரச்சினைக்குத் தீர்வு, இனமேலாதிக்கம், இனவாத ஒடுக்குமுறை, இனக்கலவரங்கள், நிதிமோசடிகள், கொலைகள், கொள்ளைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், போதைப்பொருள் வியாபாரங்கள் போன்றவற்‌றிலும், அரசாங்கமும் பொறுப்பானவர்களும் அதேமுனைப்போடு, ஆக்கபூர்வமாகச் செயற்பட்டு, தமது தார்மீக பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் அவாவாகும்.Post a Comment

Protected by WP Anti Spam