மியூசிக்கலி !!(மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 31 Second

எங்கும் எதிலும் ஆன்லைன் மையம். எதையெடுத்தாலும் ட்ரெண்ட். இதோ இளைஞர்களின் அடுத்த ஹாட் சாய்ஸ் மியூசிக்கலி ஆப். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை டப்ஷ்மாஷ் என்னும் ஆப் ட்ரெண்டில் இருந்து அதன் மூலம் பலரும் பிரபலமானது நாமறிந்ததே. அதே கான்செப்ட், அதே ஸ்டைல்தான். ஆனால் இதில் அப்படி என்ன ஸ்பெஷல், ஏன் இவ்வளவு மக்கள் மியூசிக்கலியை விரும்புகிறார்கள் என்ற கேள்விகளுடன் களத்தில் இறங்கினோம். 29 மொழிகளில் கலக்கும் இந்தமியூசிக்கலி சீனாவில் இருந்து களமிறக்கப்பட்டது. சீனா, ஷாங்காயில் தலைமை அலுவலகமும், சான்பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா நாடுகளில் கிளைகளையும் கொண்டு இயங்குகிறது.

2017ல் Bytedance Technology Co என்னும் சீனா நிறுவனம் musically.ly, incஐ 1 பில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 100 கோடிக்கு வாங்கியுள்ளது. 2014லேயே ரிலீஸ் செய்யப்பட்ட இந்த மியூசிக்கலி 2017க்குப் பிறகுதான் பிரபலமாகியுள்ளது. எல்லாவற்றிற்கும் காரணம் இந்த பச்சை நிற ஏலியன் டான்ஸ்தான் என்கிறது மியூசிக்கலி ரசிகர் பட்டாளம். நண்பர்கள் இந்த பச்சை நிற கொஸிட்டா ஏலியன் போல் நடனம் ஆடச் சொல்லி சவால் வைத்தனர். அப்படியே இதில் உள்ள ஆப்ஷன்கள் பிடித்துப் போய் தங்கிவிட்டோம் என்கின்றனர். டப்ஷ்மாஷ் ஆப்புக்கும் இதற்கும் உள்ள பெரிய வித்தியாசங்கள் இதில் உள்ள ஆப்ஷன்கள்.

அதாவது சிறப்பு அனிமேஷன் எஃபெக்ட்கள் செய்துகொள்ளலாம், கொட்டும் மழையை நிற்க வைக்கலாம், பாம் வெடிக்கச் செய்யலாம், நடனம் ஆடலாம், டூயட் வீடியோ செய்யலாம், அடுத்தவர் வீடியோவை அப்படியே டவுன்லோடு செய்து ஷேர் செய்துகொள்ளலாம். இப்படி பல ஆப்ஷன்கள் மியூசிக்கலியில் உண்டு. மியூசிக்கலியில் என்னவெல்லாம் செய்தால் ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்கும் என சில பிரபல மியூசர்களிடம் பேசினோம். மியூசிக்கலி மூலம் பிரபலமாகி இப்போது நடிப்புத் துறையிலும் கால் பதித்து விட்ட விஷ்ணு உன்னிகிருஷ்ணன், “சொந்த ஊர் கேரளா, கொல்லம். படிச்சது பிஜி (சினிமடோகிராஃபி). காலேஜ் முடிச்சு ரெண்டு வருஷம் இருக்கும். அப்போ ஒரு சின்ன விபத்து.

அதனால வீட்ல ஓய்வுல இருந்தேன். அப்போதான் இந்த டப்ஷ்மாஷ் ஆப் பயன்படுத்தினேன். நிறைய ஃபாலோயர்கள், அப்படியே மியூசிக்கலிக்கு வந்துட்டேன். டப்ஷ்மாஷ்ல வெறும் 10 செகண்ட் வீடியோதான் பண்ண முடியும். ஆனால் மியூசிக்கலில ஒரு நிமிஷம் வரைக்கும் வீடியோ பண்ணலாம். எனக்கு இந்த மியூசிக்கலி, டப்ஷ்மாஷ் தான் நடிக்கிற வாய்ப்பையே ஏற்படுத்திக் கொடுத்துச்சு. அதனாலேயே இந்த ரெண்டு ஆப்பும் எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால் சமீப காலமா ஒரு சிலர் லைக்ஸ்காக மோசமான ட்ரெஸ்லாம் போட்டு கிட்டத்தட்ட மியூசிக்கலி ஆப்னு சொன்னாலே ஏதோ 18+ ரகம் மாதிரி மாத்திட்டாங்க.

இதனால உண்மையாவே திறமையான அல்லது வெறும் ஜாலிக்காக கண்ணியமா வீடியோ பண்ற மக்களையும் பாதிக்குது. உங்க கிட்ட திறமை இல்லைன்னா கூட பரவாயில்லை ஆனால் தவறான வழியில வர லைக்ஸ் உங்களுடைய எதிர்காலத்தையே பாதிக்கலாம்” என்கிறார். இன்னொரு மியூஸரான சுஹைல், “சொந்த ஊரு கன்னியாகுமரி. ஃபேஷன். மாடலிங், நடிப்புல ஆர்வம் அதிகம். எனக்கு என் நண்பர் வில்ஸா அண்ணா மூலமாதான் மியூசிக்கலி அறிமுகம் ஆச்சு. ஒரே மாதிரி இல்லாம பிரபல காமெடியன் தங்கதுரை டயலாக் எல்லாம் பண்ண ஆரம்பிச்சேன். இப்போ மத்த வீடியோக்களை விட தங்கதுரை டப் பண்ணினா லைக்ஸ் ஏறும். ஆனால் இதுல பெரிய பிரச்னையே நமக்கான ரசிகர்களை உருவாக்குறதுதான்.

தனியா தெரியணும். அப்போ ஈஸியா ரசிகர்கள் கிடைப்பாங்க. மியூசிக்கலில நான் பார்த்த பெரிய சிக்கல் ஒண்ணுதான் திறமையே இருந்தாலும்கூட அழகான பொண்ணுங்க, பசங்களுக்கு அதிக ஃபாலோயர்கள், அடுத்து லைக்ஸ்க்காக எப்படி வேணாலும் இறங்கி கிளாமர் காமிச்சு லைக்ஸ் வாங்குறது. இதனால்தான் மியூசிக் கலி ஆப் கொஞ்ச காலமா ட்ரோல்களுக்கு ஆளாகுது. முக்கியமா மீம் கிரியேட்டர்களுக்கும் மியூஸர்களுக்கும் ஆகவே ஆகாது. காரணம் இந்த தவறான போக்கு. அடுத்து ஹாஷ்டாக். இதை மட்டும் மறந்துடவே கூடாது.

எத்தனை வீடியோ பண்ணாலும் சரியான ஹாஷ்டாக் ட்ரெண்டு வார்த்தை களை போட்டுடணும். நாம அழகா இல்லை, நமக்கு யார் ரசிகர்கள் வரப் போறாங்கன்னு யோசிக்கவே வேண்டாம். எத்தனையோ பேர் வெறுமனே நெகட்டிவ் ஸ்டைல் வீடியோக்கள் செய்து கூட பிரபலமாகுறாங்க” என்கிறார். நெகட்டிவ் என்றவுடன் டக்கென ஞாபகத்திற்கு வந்தார் மியூசிக்கலி புகழ் ‘சித்ரா காஜல்’. ‘லேடி பவர்ஸ்டார்’ என இணைய உலகம் இவருக்கு பெயர் வைத்து விட்டது.‘இது தானா சேர்ந்த கூட்டம்’ என ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்தார். “எனக்கு சொந்த ஊரு புதுச்சேரி. சொந்தமா பிஸினஸ் பண்ணிட்டு இருக்கேன்.

ஆரம்பத்துல என்னை எல்லாரும் கிண்டலடிச்சதை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன். சில நாட்கள் அழுதிருக்கேன். அப்பறம்தான் என்னை வெச்சு காமெடி செய்து பலரும் சந்தோஷப் படறாங்கனு புரிஞ்சது. என் பையன் மியூசிக்கலி வீடியோ பண்ண ஆரம்பிச்சப்போ அது மூலமா நானும் ஆரம்பிச்சேன். நான் பலரையும் சிரிக்க வைக்கிறேன்னு நினைக்கும் போது நிறைவா இருக்கு. மத்தவங்க மாதிரி எனக்கு இந்த மியூசிக்கலி ட்ரிக்ஸ், லிப் சின்க் இதெல்லாம் தெரியாது. நானா ஏதோ ஒரு வீடியோ போடுவேன் அதுக்கு லைக்ஸ் வருது. நிறைய பேர் என்னைக் கிண்டல் பண்ணி வீடியோ போட்டு என்னை சிரிக்க வைக்கிறாங்க.

என்ன வேணும்னாலும் செய்ங்க… என்னைக் கிண்டல் பண்றதா நினைச்சு தூக்குல தொங்குற மாதிரி, கத்தில குத்திக்கிற மாதிரி, குளத்துல விழறது இதெல்லாம் பண்ணாதீங்க. எனக்கு பயமா இருக்கு. ஒருத்தரை சுலபமா அழ வைக்கலாம், சிரிக்க வைக்க முடியாது. அதை நான் செய்யறேன்னு நினைக்கும் போது யார் என்ன கேலி பேசினா என்ன நாம நம்ம வேலைய பார்ப்போம்னு என்னை நானே பக்குவப் படுத்திக்கிட்டேன்” என்கிறார். இவர்கள் மட்டுமல்ல தனக்கென வேறு தளங்களில் தனி ரசிகர் பட்டாளமே இருந்தாலும், “பரவாயில்லை. இது எங்களுக்கு ஃபன் டைம், ஜாலியா இருக்கு” என்கிறார்கள் சில பிரபலங்கள்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் வாணி போஜனும் ஒரு மியூஸர்தான். “ஹேய்! எவ்ளோ ஜாலியா இருக்கு தெரியுமா? ஆக்சுவலி நானும் என் அண்ணா பையனும் ஒரே ஒரு வீடியோ பண்ணினோம். அப்பறம் பார்த்தா ஏகப்பட்ட வியூஸ். ஒரே ஆச்சர்யமா போயிடுச்சு. அப்படியே அடிக்கடி வீடியோ போட ஆரம்பிச்சேன். இப்போ பார்த்தா டிவியில இருக்க வாணிக்கும், மியூசிக்கலி வாணிக்கும் நிறைய வித்தியாசத்தை மக்கள் பார்க்கறாங்க. ஏற்கனவே என்னை சீரியல் மூலமா பலருக்கும் தெரியும். அதனால இங்கேயும் ஃபேமஸ் ஆகிட்டேன்.

அழகு, அழகில்லை இதெல் லாம் நான் பார்க்கவே மாட்டேன். வீடியோ சூப்பரா இருந்தா அடுத்த செகண்ட் லைக் அழுத்திடுவேன். ஒவ்வொருத்தரும் எப்படி யெல்லாம் நடிக்கிறாங்க” என சிலாகிக்கிறார். சன் டிவி விஜேவான தியா, “சும்மா ஒரு ஷூட்டிங் இடைவேளை அப்போதான் இந்த மியூசிக்கலி செய்து பார்த்தேன் ஏகப்பட்ட லைக்ஸ் கமெண்ட்ஸ். அட நல்லா இருக்கேணு களத்துல குதிச்சிட்டேன். சில வீடியோக்களுக்காக நானே சொந்தமா ஆடியோக்கள் உருவாக்கக் கூட ஆரம்பிச்சேன். இப்போ டிவியில எந்த அளவுக்கு நான் பிரபலமோ அதைவிட இங்கே எனக்கு ஃபாலோயர்ஸ் அதிகம்” என்கிறார்.

‘திறமையக் காட்ட ஒரு சிறப்பான தளம் இது. சரியா பயன்படுத்தினா நிச்சயமா நமக்கு பாராட்டுகள் குவியும். ஒரே ஒரு விஷயம்… திறமையக் காட்டுங்க, டப்பிங் சரியா வரலைனா கூட பரவாயில்லை. ஆனால் கிண்டல் செய்து கேலி பண்ணி அல்லது ஆபாசமான வீடியோக்கள் மூலமா ரசிகர்கள் வரணும்னு நினைச்சா ஆரோக்கியமான பார்வையாளர்கள் கிடைக்கறது கஷ்டமாகிடும்’ என்கின்றனர் மியூசிக்கலி ஆப்பை கண்ணியமாக பயன்படுத்துவோர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகள் மீது தந்தை புகார் !!(சினிமா செய்தி)
Next post ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா?(அவ்வப்போது கிளாமர்)