சம்பிக்கவின் ஆபத்தான ‘சமாதானத் தூது’!!(கட்டுரை )

Read Time:14 Minute, 9 Second

இலங்கை மத்திய அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சரொருவர், சமாதானத் தூதொன்றோடு வந்திருக்கிறார். கடும்போக்குக் கொள்கைகளைக் கொண்டவரெனக் கருதப்படும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும், பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கோரியிருக்கிறார்.

பாடசாலைக் காலங்களில், இரண்டு மாணவர்களுக்கிடையில் ஏற்படும் பிடுங்குப்பாடுகளைத் தீர்க்கும் நோக்கத்துடன், அப்பகுதிக்கு வரும் ஆசிரியரொருவர், “சரி, இரண்டு பேரும் கைகுலுக்கி, சமாதானமாகிக் கொள்ளுங்கள்” என்று சொல்வதைப் போன்று தான், அமைச்சரின் கருத்து அமைந்திருக்கிறது.

ஏனென்றால், விடுதலைப் புலிகளை இவ்விடயத்தில் இழுத்ததன் மூலம், படையினர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்யும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டியதாகவிருக்கிறது. ஏற்கெனவே, படையினர் மீதான குற்றச்சாட்டுகளை இல்லாமல் செய்வதற்கான பரிந்துரையை அல்லது திட்டத்தை, ஐக்கிய நாடுகளில் சமர்ப்பிக்கப் போவதாக, ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

ஆகவே, படையினர் மீதான அழுத்தங்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்துவரும் நிலையில், அவற்றைச் சமாளிப்பதற்காக, பல்வேறுபட்ட திட்டங்களுடன் அரசாங்கம் களமிறங்கியிருப்பதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

ஆனாலும் கூட, படையினரையும் விடுதலைப் புலிகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் இந்த முயற்சி ஆபத்தானது.

விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காகப் போராடிய அமைப்பு என்பது தான், தமிழ் மக்களில் பெரும்பாலானோரின் நிலைப்பாடாக இருக்கிறது. இதில், எந்தவிதமான விட்டுக்கொடுப்புகளையும் மேற்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. ஆனால், அதையும் தாண்டி, விடுதலைப் புலிகள் அமைப்பு, ஆயுதக்குழு என்பது தான், உணர்வுகளுக்கு அப்பாலான உண்மையாக இருக்கிறது.

மறுபக்கமாக, இலங்கைப் படையினர் என்போர், நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து உருவாக்கப்பட்ட, இறையாண்மைமிக்க நாடொன்றின் படையினர். ஆயுதக்குழுவொன்றையும் படையினரையும் ஒரே மட்டில் வைத்துப் பார்க்க முனைவது, எப்போதுமே சரியானதாக அமையாது.

“இரண்டு தரப்புகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குவோம்” என்று சொல்வதன் மூலமாக, “இரண்டு தரப்புகளும் தவறு செய்தன” என்ற, பொதுமைப்பாடான கருத்தை ஏற்படுத்த முனைவதையும் அனுமதிக்க முடியாது.

இறுதிக்கட்ட யுத்தத்தில், தமிழ் மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டு, புலிகள் மீது இருக்கிறது. அதேபோல், சிறுவர்களைப் படைகளுக்குச் சேர்த்தமை; இறுதிக்கட்ட யுத்தத்தில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பியோடியோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை; இறுதிக்கட்ட யுத்தத்துக்கு முன்னரான காலப்பகுதிகளில் அப்பாவிப் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள்; அரசியல் தலைவர்களின் கொலைகள் போன்றனவெல்லாம், புலிகள் அமைப்பு மீது காணப்படும், பாரதூரமான குற்றச்சாட்டுகள். நடுநிலைப் பார்வையிலிருந்து பார்க்கும் போது, இவ்வாறான குற்றச்சாட்டுகள், அவ்வமைப்பின் நோக்கங்கள் குறித்துக் கேள்விகளை எழுப்புகின்றன.

ஆனால், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட படையினர், பொதுமக்களை வேண்டுமென்றே கொன்றமை; சரணடைந்தவர்களை, சர்வதேச சட்டத்துக்கு முரணாகக் கொன்றமை; வைத்தியசாலைகள் உள்ளிட்ட, பொதுமக்கள் தங்கியிருந்த இடங்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல்களை நடத்தியமை; பாலியல் குற்றங்கள்; சித்திரவதை போன்ற குற்றங்களையெல்லாம் செய்தனர் என்ற குற்றச்சாட்டு, சர்வதேச மட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இனவழிப்பை மேற்கொண்டார்கள் என, தமிழர் தரப்பால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகள் என்ற ஆயுதக்குழு மீதான குற்றச்சாட்டுகளையும், இக்குற்றச்சாட்டுகளையும் ஒப்பிட முடியுமா? அதுவும், அவ்வமைப்பு அழிக்கப்பட்ட பின்னர், அவ்வமைப்பு மீதான குற்றச்சாட்டுகளைக் காட்டி, படையினரதும் அரசாங்கத்தினதும் அரசினதும் பொறுப்புக்கூறல் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியுமா என்பது, கேள்விக்குரிய ஒரு விடயம் தான்.

ஆனாலும் கூட, விடுதலைப் புலிகளின் பெயரை, அமைச்சர் சம்பிக்க பயன்படுத்தியமைக்கும் ஒரு காரணம் இருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு, தவறு செய்ததாக ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டில், பெரும்பான்மையான தமிழர்கள் இல்லை என்பது தான் அக்காரணம். ஆகவே, விடுதலைப் புலிகள் தவறு செய்தார்கள் என்று ஏற்றுக்கொள்ள தமிழ்த் தரப்பு மறுக்கும் போது, அதே நிலைப்பாட்டைப் பயன்படுத்தி, படையினர் மீதான குற்றச்சாட்டுகளையும் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியாக இதைப் பார்க்க முடியும்.

ஏனென்றால், தமிழ்த் தரப்பின் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்றாக, விடுதலைப் புலிகள், தவறே செய்யாதவர்கள் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது காணப்படுகிறது.

இதில், ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்துதல் அவசியமானது. விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்கள், அவர்களின் உருவாக்கத்தை நிராகரிக்கின்றவையாகக் கருதப்படத் தேவையில்லை. விடுதலைப் புலிகள் மீதான முற்றுமுழுதான விமர்சனங்களைக் கொண்டவர்களும் கூட, விடுதலைப் புலிகள் அமைப்பு என்ற அமைப்பு, இலங்கையில் தோன்றுவதற்கான நியாயப்பாட்டை ஏற்றுக்கொள்வர். ஆகவே, விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்கள், அவ்வமைப்பைக் கேள்விப்படுத்துவதாகவோ அல்லது அவ்வமைப்புக்கான நியாயப்பாட்டை நிராகரிப்பனவாகவோ கருதப்படக்கூடாது.

விடுதலைப் புலிகள் இயக்கம், ஆயுதரீதியாக அழிக்கப்பட்ட பின்னர், அவ்வமைப்பு மீதான விமர்சனங்கள் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன என்ற கேள்வி இருக்கிறது. அதேபோல், விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்கள் என்று சொல்லப்பட்டு, தெற்கில் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களில் பெரும்பாலானவை, தமிழ் மக்கள் மீதான அல்லது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மீதான விமர்சனங்களாக இருக்கின்றன என்ற நியாயமான, யதார்த்தபூர்வமான கருத்தும் இருக்கிறது.

விடுதலைப் புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் விமர்சனங்களை அதிகமாக முன்வைப்பதன் மூலம், இலங்கை அரச (இலங்கை அரசாங்கம் இல்லை, இலங்கை அரசு. இலங்கையின் அரசாங்கங்கள் எப்போது மாறிவந்தாலும், இலங்கையிலுள்ள அரச கட்டமைப்பு, எப்போதும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்தது என்பது தவிர்க்கப்பட முடியாத உண்மை) தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நீதியின்மைகளுக்கும் கொடூரங்களுக்கும் அவை ஈடாகுமா என்ற கேள்வியும் தவிர்க்கப்பட முடியாதது.

ஆனாலும் கூட, போருக்குப் பின்னரான காலப்பகுதியில், போரில் தமிழ்த் தரப்பு (அல்லது விடுதலைப் புலிகள் தரப்பு. பார்ப்போரின் பார்வையைப் பொறுத்து இது வேறுபடும்) தோல்வியடைந்த பின்னர், அவை தொடர்பில் போதுமானளவு ஆய்வுகள், நடுநிலையான முறையில் மேற்கொள்ளப்பட்டனவா என்ற கேள்வி இருக்கிறது. அரச, அரசாங்கத் தரப்புகள், தமிழ் மக்களுக்குச் செய்த அல்லது செய்திருக்காத விடயங்கள் குறித்தே, பிரதானமான கவனம் காணப்பட்ட பின்னர், விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தமைக்கான ஏனைய காரணங்கள் முழுதாக அலசப்படவில்லை என்பது உண்மையானது. இன்னமும் கூட, “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என, தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பிழைப்பு நடத்தும் சூழலைப் பார்க்கிறோம். இவற்றுக்கு மத்தியில், ஆயுதப் போராட்டம் தொடர்பான நியாயமான ஆய்வுகள் எவ்வாறு இடம்பெற முடியும்?

ஆயுதப் போராட்டத்தின் மீதான விமர்சனமென்பது, எதற்காக அவசியமென்ற கேள்வியெழுந்தால், விமர்சனங்களைச் செவிமடுக்கவே தயங்குகின்ற ஒரு சூழல் காணப்படும்போது, அப்போராட்டத்துக்கு எதிரான முடிவுகள் பெறப்படும் போது, அவற்றைத் தமிழ்ச் சூழல் எவ்வாறு எதிர்கொள்ளுமென்ற பிரச்சினை இருக்கிறது.

எனவே தான், விடுதலைப் புலிகளின் பெயருக்கு அல்லது அவர்கள் மீதான சர்வதேச விமர்சனத்துக்கு, தமிழ்த் தேசிய அரசியலும் அதன் தலைமைத்துவங்களும், எவ்வாறான பதற்றத்தை வெளிப்படுத்துமெனச் சரியாகக் கணித்துவைத்துள்ள பெரும்பான்மையினத் தரப்பு, போர்க் குற்றச்சாட்டுகள் என்று வரும் போது, இரு தரப்புகளும் தான் பாதிக்கப்படும் என்ற விடயத்தை, அவ்வப்போது ஞாபகமூட்டி வந்திருக்கிறது. அதில், இறுதிக்கட்டமாகத் தான், இந்தப் பொது மன்னிப்புப் பற்றிய கதை உலாவவிடப்பட்டிருக்கிறது. இதே நிலைப்பாட்டைத் தான், ஐக்கிய நாடுகளிலும் சென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எனவே தான், அமைச்சர் சம்பிக்கவின் கருத்துக்கான எதிர்வினைகளைப் பற்றிச் சிந்திக்கும் அதேநேரத்தில், ஐக்கிய நாடுகள் போன்ற உயர்மன்றத்தில், “மன்னிப்போம், மறப்போம்” வகையிலான உரையொன்றை ஜனாதிபதி ஆற்றுவாராயின், அதற்கு என்ன பதிலளிப்பது என்பதைப் பற்றியும் ஆராய வேண்டியிருக்கிறது.

ஏனென்றால், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவான பின்னர், உலகத் தலைமையொழுங்கில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களுக்கு மத்தியில், “மன்னிப்போம், மறப்போம்” தான் தமிழ் மக்களுக்குச் சிறந்த தீர்வு என, சில தரப்புகள் குறிப்பிடக்கூடும். அதற்கான அழுத்தமும், தமிழ்த் தரப்புக்கு வழங்கப்படலாம். அப்போது என்ன செய்யப் போகிறோம் என்பது தான், எம்முன்னாலுள்ள கேள்வியாக, இப்போது இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்வென்பது பெருங்கனவு !!(மகளிர் பக்கம்)
Next post அபிராமியின் இளமை அட்டகாசம்!!(வீடியோ)