By 19 September 2006

தமிழர் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கு அதி உயர் உலக விருது- சங்கரிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

Anandasangari.jpgஅகிம்சையும் சகிப்புத்தன்மையையும் முன்னிலைப்படுத்தும் அகில உலகத்தலைவர்களுக்கு வழங்கப்படும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அதி உயர் சர்வதேச யுனஸ்கோ விருது தமிழர் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் ஜனநாயகத்திற்காகவும், பன்முக அரசியலிற்காகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களிற்காகவும் திரு.வீ. ஆனந்தசங்கரி அவர்கள் நடாத்திவரும் சகிப்புத்தன்மை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரானதும் சமாதானத்திற்குமானதுமான போராட்டத்திற்காக சர்வதேச அங்கீகாரமாகவே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்மக்களின் தலைவராக திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதற்காகவே இவ்விருது வழங்கப்படுவதாக அரசியல் அவதானிகள் கருத்துரைத்துள்ளனர். இலங்கையில் தலைதூக்கியுள்ள படுகொலைகளை எவர் செய்தாலும் மிக வன்மையாகவும் வெளிப்படையாகவும் கண்டித்து வருபவர் ஆனந்தசங்கரி அவர்கள்.

இறைவனால் வழங்கப்பட்ட உயிரைப் பறிக்கும் உரிமை வேறு எவருக்கும் இல்லை என தனது உயிர் அச்சுறுத்தலிற்கும் மத்தியில் நின்று ஆணித்தரமாக குரல் கொடுத்து வருபவர்.

நாளாந்தம் தமிழர்கள் கொல்லப்படுவதை தமிழர்களை தமிழர்களே அழிக்கும் நிலமையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அதுவே தனது முதல் விருப்பம் என்றும் அதனை செயற்படுத்த வியாபார நோக்கங்களையும் சுயநலன்களையும், பதவி, புகழ் ஆசையையும் புறந்தள்ளிவிட்டு பத்திரிகைகளும் புலம்பெயர்ந்த மக்களும் தமிழ் அமைப்புக்களிடம்; குறிப்பாக விடுதலைப்புலிகளிடம் அழுத்தம் கொடுக்க இனியாவது முன்வரவேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என்றார்.

தனிப்பட்ட இழப்புக்கள்.

அரசியல் வன்முறைக்கு தனது கட்சித்தலைவர்கள் பலர் உட்பட பல சகாக்களையும், ஆதரவாளர்களையும் இழந்துள்ள ஆனந்தசங்கரி அவர்கள் தனது குடும்ப அங்கத்தவர்களையும் பயங்கரவாதத்திற்கு பலி கொடுத்திருக்கிறார்.

இவரது இளைய சகோதரர் வீரசிங்கம் ஞானசங்கரி புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஞானசங்கரியின் இருபுதல்வர்களும் புலிகளால் கடத்தப்பட்டு இதுவரை காணாமற் போனவர்கள். அதேபோல் ஆனந்தசங்கரியின் மூத்த சகோதரரும் தென்மராட்சி பிரஜைகள் குழு தலைவரும் சட்டத்தரணியுமான வீரசிங்கம் இராஜசங்கரி அவர்கள் இந்திய அமைதிப்படை தங்கியிருந்த காலகட்டத்தில் சுடப்பட்டார்.

அவரை புலிகள் கௌரவப்படுத்தி நாட்டுப்பற்றாளர் இராசசங்கரி வீதி என ஒரு வீதிக்கும் பெயரிட்டிருந்தனர். அதேவேளை ஆனந்தசங்கரி அவர்களின் பெறாமகனும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான யோகசங்கரி அவர்கள் சென்னையில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த வருடம் லண்டனில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் ஆனந்தசங்கரியின் பெறாமகளான சயனுஜா பரதசங்கரி பலியானார். இதுபோன்ற இழப்புக்கள் எனக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தமிழ்மக்களது குடும்பத்திலும் ஏற்பட்டிருக்கிறது. ஆயுதப்போராட்டம் எமக்கு பெற்றுத்தந்த பலன் இதுதான் என்கிறார் ஆனந்த சங்கரி.

தனித்துவ அரசியல்.

கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலில் சந்தர்ப்பவாத கூட்டமைப்பினரின் கூட்டுச்சதியில் துப்பாக்கி அச்சுறுத்தல்களினாலும் வாக்கு மோசடிகளிலும் ஆனந்தசங்கரி அவர்களின் பிரச்சாரம் முடக்கப்பட்டு ஜனநாயக விரோத தேர்தல் மோசடி மூலம் ஆனந்தசங்கரி அவர்கள் வஞ்சகமாக தோற்கடிக்கப்பட்டார்.

பாராளுமன்ற பதவிக்காக இலட்சியத்தை கைவிட்ட ஏனைய தமிழ்கூட்டமைப்பு அரசியல்வாதிகள் போல் இல்லாது இலட்சியத்திற்காகவும் கொண்ட கொள்கைக்காகவும் பதவியை இழக்கத்துணிந்தவர். அந்த தேர்தல்முறைகேடுகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புக்குழு.

ஜாதிக ஹெல உறுமய தனது ஆசனத்தில் ஒன்றை ஆனந்தசங்கரிக்காக விட்டுக் கொடுக்க முன்வந்தபோது அது நகைப்புக்குரிய விடயம் என பா.உ பதவியை ஏற்க ஆனந்தசங்கரி மறுத்துவிட்டதும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒன்றே.

துப்பாக்கிகளும் வன்முறைகளும் மட்டுமல்ல வியாபார நோக்கு கொண்ட சில வானொலிகள், பத்திரிகைகள், இணையத்தளங்கள் இணைந்து பொய்ப்பரப்புரைகளை திட்டமிட்டு நிறைவேற்றின என்று பத்திரிகா தர்மத்தை சாடியிருந்தார்.

புலிசார்பு இணையதளங்களில் அவரது புகைப்படங்களை உருமாற்றி தமது வக்கிர ங்களை வெளிப்படுத்தியிருந்தபோதும் அவதூறுப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தபோதும் தமது பயங்கரவாத எதிர்ப்பை நிறுத்தாமல் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய கருத்துக்களை முன்வைத்து வந்திருந்தார்.

ஆனந்தசங்கரி அவர்களது கருத்துக்களை தமிழ்த்தேசியப்பத்திரிகைகள் பிரசுரிக்க மறுத்தபோது அவருக்காதரவாக வெளிநாடுகளில் குறிப்பிட்ட சில இணையத்தளங்கள், வானொலிகள், ஆங்கில, சிங்கள ஊடகங்கள் வெளியிட்டன.

பல தடைகளையும் இடர்களையும் இழப்புக்களையும் தனியே தாண்டிவந்த ஆனந்தசங்கரியை யுனஸ்கோ விருது தேடிவந்து கௌரவித்து கொண்டது தமிழ்மக்களின் ஜனநாயகப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல உண்மையே தனது பலம் என்கிற ஆனந்தசங்கரியின் அசைக்க முடியாத தன்னம்பிக்கையின் உன்னத வெற்றியுமாகும். இவ்விருதினை பெறும் முதல் இலங்கைத்தமிழ் அரசியல் தலைவர் ஆனந்தசங்கரி என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

-சற்குருநாதன்Comments are closed.