விரிசலடையும் மனக்கசப்பு!!(கட்டுரை)

Read Time:19 Minute, 2 Second

சிறிய கட்சிகள் தொடக்கம், பெரிய கட்சிகள் வரை, எல்லா அரசியல் கட்சிகளுக்குள்ளும், உள்ளக முரண்பாடுகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன.

ஒவ்வொருவரது பார்வைக் கோணமும் எதிர்பார்க்கைகளும் வேறுபடுகின்ற போது, கருத்தியல் வேற்றுமைகள் எழுவது, சர்வ சாதாரணமாகும். இப்படியான ஒரு சிக்கலுக்குள், தேசிய காங்கிரஸ் கட்சி, இப்போது சிக்கத் தொடங்கி இருக்கின்றது.

முன்னதாகவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும், அதன் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கும் இடையிலான உட்கட்சிப் பூசல்கள், பெரும் பிளவுகளாக உருவெடுத்திருந்தன.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பல பிளவுகளையும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ஒரு பிளவையும் சந்தித்திருக்கின்றனர்.

இந்நிலையில், இதுவரை காலமும் கட்சித்தாவல் சார்ந்த, சிறுசிறு பிளவுகளைச் சந்தித்திருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி, பருமனில் பெருத்த எந்த முரண்பாடுகளையும் எதிர்கொண்டிராத தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, அவ்வாறான ஒரு சவாலுக்கு, முகம் கொடுக்கும் துரதிர்ஷ்ட நிலைக்கு இன்று உள்ளாகியுள்ளார்.

தேசிய காங்கிரஸின் தலைமைக்கு மிக நெருக்கமானவரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பைக்கும் ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு, அது பிளவாக விரிவடைந்துள்ளது.

இருவருக்கும் நடுவில் இருப்பவர்கள், முகநூல் வழியாக இவ்விவகாரத்துக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்த நிலையில், உதுமாலெப்பை, தனது இராஜினாமாக் கடிதத்தை, கட்சித் தலைவர் அதாவுல்லாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

தேசிய காங்கிரஸின் தலைவரான அதாவுல்லாவின் அரசியல் போக்குகள், சற்று மாறுபட்டவை. ஏனைய முஸ்லிம் கட்சிகளின் மாமூலான போக்குகளில் இருந்து, வேறுபட்டதோர் ஒழுங்கில், தேசிய காங்கிரஸ் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இதற்காக அதாவுல்லா புகழப்பட்டதும் உண்டு; இகழப்பட்டதும் உண்டு. ஆனால், எல்லாக் காலத்திலும் அவருடன் விசுவாசமாக இருந்த எம்.எஸ். உதுமாலெப்பை இன்று முரண்படுகின்றார் என்பதும், கட்சியை விட்டு விலகப் போகின்றார் என்பதும், கட்சியை நேசிப்போரிடையே மனக்கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கத்தில், கட்சி இரண்டுபட வேண்டுமென விரும்புவோரிடையே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹும் அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்த ஏ.எல்.எம். அதாவுல்லா, தலைவரின் மரணத்துக்குப் பின்னர், மு.காவுக்கு முன்மொழியப்பட்ட இரட்டைத் தலைமைத்துவத்தை எதிர்த்து, ரவூப் ஹக்கீமை தனித் தலைவராகப் பிரகடனம் செய்ய முன்னின்றார்.

ஆனால், மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே, “ஹக்கீமின் போக்குகள், முஸ்லிம் சமூகத்துக்கு விடிவைப் பெற்றுத்தராது. அவர் வெளிநாடுகளுக்கும், வேறு தரப்புகளுக்கும் சோரம் போகின்ற அரசியலைச் செய்து வருகின்றார்” என்று கூறி, தன்னுடன் சிலரை இணைத்துக் கொண்டு, மு.காவில் இருந்து பிரிந்து வந்தார்.

ஓர் அமைச்சராக இருந்த போதும், தமக்கான ஓர் அரசியல் கட்சி தேவை என்பதை உணர்ந்து, அதாவுல்லா ஆரம்பித்த கட்சியே, தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் இயங்கி வருகின்றது.

ஏனைய முஸ்லிம் கட்சிகளைப் போலவே, தேசிய காங்கிரஸூடனும் இந்த 15 வருடங்களில் பலர் வந்து சேர்ந்திருக்கின்றார்கள்; பலர் பிரிந்து சென்றிருக்கின்றார்கள். ஆனால், இதையெல்லாம் கட்சித் தலைவர் அதாவுல்லா பெரியதாக அலட்டிக் கொண்ட மாதிரித் தெரியவில்லை.

தேசிய காங்கிரஸ் என்பது மு.கா போன்று, பரந்துபட்ட ஒரு கட்டமைப்பைக் கொண்டதல்ல என்பதுடன், அதாவுல்லா என்ற தனிஅரசியல் ஆளுமையில் பெரிதும் தங்கியிருக்கும் கட்சி என்றே, இன்று வரையும் கருதப்படுகின்றது.

அதிகாரங்கள் எல்லாம் பெரும்பாலும் அதாவுல்லாவிடம் குவிக்கப்பட்டிருப்பது போல தோன்றினாலும், தீர்மானங்களை அவரே எடுப்பதாக, அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்தாலும், தேசிய காங்கிரஸுக்குள் பாரிய பிளவுகள் இதுகால வரைக்கும், ஏற்பட்டதில்லை என்றே கூற வேண்டும். பாரிய பிளவுகள் ஏற்படாமைக்கும் கட்சி அடைந்த முன்னேற்றத்துக்கும் பிரதான காரணம், அதாவுல்லாவின் கொள்கைகளும் அபிவிருத்தி அரசியல் சார்ந்த வெற்றிகளும் எனலாம்.

அதாவது, தேசிய காங்கிரஸ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களையும் உள்ளூராட்சி, மாகாண சபை அதிகாரங்களையும் பெறும் கட்சியாகப் போட்டி அரசியலில் முன்னேறியுள்ளது.

அபிவிருத்தி அரசியலுக்குச் சமாந்திரமாக, உரிமை அரசியலில் வடக்கு, கிழக்கு பிரிப்பு, விடுதலைப் புலிகளை ஒழித்தல் போன்ற முக்கிய விவகாரங்களில் சில குறிப்பிடத்தக்க நிலைப்பாடுகளை அதாவுல்லா எடுத்தார். அதிகாரமில்லாத சூழலிலும், கணிசமான மக்கள், அக்கட்சிக்கு ஆதரவளிக்க, இவைவெல்லாம் காரணமாகின.

ஆனாலும், இனவாதம் ருத்ர தாண்டவமாடிய வேளையிலும், கடந்த ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தேசிய காங்கிரஸ் எடுத்த நிலைப்பாடுகள், கட்சிக்கு ஒரு பெரிய சறுக்கலை ஏற்படுத்தியது.

ஆனால், மேற்சொன்ன வெற்றிகரமான, பின்னடைவான எல்லாக் காலங்களிலும் அதாவுல்லாவுடன் இருந்த விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவராகவே, எம்.எஸ். உதுமாலெப்பை இருந்துள்ளார்.

உதுமாலெப்பையும், அதாவுல்லாவைப் போலவே, அடிப்படையில் மர்ஹும் அஷ்ரபின் அரசியல் வழித்தடத்தில் பயணித்து, பின்னர் தேசிய காங்கிரஸோடு இணைந்து கொண்டவர்.

தனக்கு, கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற பதவியை வழங்கியது மட்டுமல்லாமல், மாகாண சபை உறுப்பினராக, அமைச்சராக முன்னேறுவதற்கு அடித்தளமிட்டவர் அதாவுல்லா என்ற, நன்றியுணர்வு உதுமாலெப்பையிடம் எப்போதும் இருக்கின்றது. அதாவுல்லாவுக்கு, அவர் எப்போதும் முழுமையான விசுவாசத்தைக் காட்டுவதற்கு, அதுவே முதன்மைக் காரணம் எனலாம்.

இவ்வாறாக, இருவருக்கும் இடையில் ஆழமான புரிதலுடன் கூடிய உறவு காணப்பட்டபோதிலும், அண்மைக் காலமாக, கட்டம் கட்டமாக, மனக் கசப்பு ஏற்பட்டு வந்ததை அவதானிக்க முடிந்தது. அதுவே தற்சமயம் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.

தேசிய காங்கிரஸ், மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரித்ததால் சரிவொன்றைச் சந்தித்திருந்த போதிலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெற்றியின் மூலம், சற்று அதை ஈடு செய்திருக்கின்றது.

ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுதல், உள்ளூராட்சி சபைகளை நிறுவுதல் போன்ற விடயங்களில் அதாவுல்லா எடுத்த நிலைப்பாடுகளை, உதுமாலெப்பை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்தப் பின்னணியில், இவ்விருவரையும் மூட்டிவிடும் வேலைகளை, சில செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்ததுடன், மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை, உதுமாலெப்பை நடத்துவதாகவும் அதாவுல்லாவின் காதுகளுக்குத் தகவல்கள் சென்ற வண்ணமிருந்தன.

இவ்வாறிருக்கையில், அக்கரைப்பற்றில் நடைபெற்ற கூட்டத்தில், உதுமாலெப்பை ஆற்றிய உரையில், சில விடயங்களை வெளிப்படையாகப் பேசி இருந்தார். கட்சித் தலைவர் என்ற வகையில், அதாவுல்லா சில முடிவுகளை எடுக்க, இது, உடனடிக் காரணமாகி இருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.

குறிப்பாக, இந்தப் பின்புலத்திலேயே கட்சியின் உயர்பதவிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

தேசிய காங்கிரஸின் 13ஆவது பேராளர் மாநாடு, கடந்த வாரம் அக்கரைப்பற்றில் நடைபெற்ற போது, கட்சியின் உயர்பீடத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

குறிப்பாக, நீண்டகாலமாகக் கட்சியின் தேசிய அமைப்பாளராகக் கடமையாற்றி வந்த எம்.எஸ். உதுமாலெப்பை, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு கட்சியின் பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

அதாவுல்லாவுக்கு அடுத்த தலைவராக உதுமாலெப்பையை முன்னிலைப்படுத்தவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அதாவுல்லா தரப்பு கூறுகின்றது.

இருப்பினும், பிரதித் தலைவர் என்பது, அதிகாரங்கள் அற்ற பதவி என்றும், இவ்வாறான பதவியை வழங்கியதுடன், உதுமாலெப்பைக்கு நெருக்கமான சிலரையும் உயர்பீடத்தில் உள்ளடக்கவில்லை என்பதை, உதுமாலெப்பை தரப்பு குற்றச்சாட்டாக முன்வைக்கின்றது.

தேசிய காங்கிரஸ் தலைவர், எந்த நோக்கத்தில் இதைச் செய்திருந்தாலும், இது பிரதித் தலைவரை, கடுமையாக அதிருப்தியடையச் செய்தது என்று, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

வழக்கம்போல, இருதரப்பு ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் மோதி, இவ்விவகாரத்தை மேலும் சிக்கலாக்கி விட்டுள்ளனர்.

உதுமாலெப்பை, வேறு கட்சிகளுடன் தொடர்பிலிருப்பதாக, அதாவுல்லா தரப்புச் சந்தேகித்த போதும், கடந்தசில தினங்களாக, உதுமாலெப்பையைச் சமரசம் செய்வதற்கு, அதாவுல்லா பகிரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டதாகவும் அவை பயனளிக்கவில்லை என்றும் அறிய முடிகின்றது.

இவ்வாறான சூழலில், தேசிய காங்கிரஸின் தலைவரான ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கு, கட்சியின் புதிய பிரதித் தலைவரான எம்.எஸ். உதுமாலெப்பை வியாழக்கிழமை (20) கடிதமொன்றை எழுதியிருக்கின்றார்.

உண்மையில், இது இராஜினாமாக் கடிதமாகும். அதாவது கட்சியின் பிரதித் தலைவர் பதவி, உயர்பீட உறுப்பினர் பதவி ஆகியவற்றிலிருந்து உதுமாலெப்பை இராஜினாமாச் செய்திருக்கின்றார்.

“என்மீது நம்பிக்கை வைத்து, இதுவரை தேசிய காங்கிரஸ் சார்பில், கட்சி ரீதியிலான உயர்பதவிகளையும் கிழக்கு மாகாண சபையில் அமைச்சர் என்ற பதவியை இரண்டு தடவைகளும் மற்றும் பல உயர்பதவிகளையும் வழங்கியதோடு, என் மீது நம்பிக்கை வைத்து, கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கும் என்னை நியமித்ததற்கு என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இருந்தபோதிலும், எனக்குப் புதிதாகத் தங்களால் வழங்கப்பட்ட, தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியிலும், அரசியல் அதிஉயர்பீட உறுப்பினர் பதவியிலும் எனது தனிப்பட்ட காரணங்கள் நிமித்தம், தொடர்ந்தும் செயற்பட முடியாமையால் இவ்விரு பதவிகளிலிருந்தும் 2018.09.18ஆம் திகதியிலிருந்து இராஜினாமாச் செய்து கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இது தொடர்பாக, எம்.எஸ். உதுமாலெப்பையைத் தொடர்புகொண்டு, மேலதிக விவரங்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

அதேபோல், இவ்வாறான கடிதம் ஒன்று, தமக்குக் கிடைக்கப் பெற்றதா என்பதையும் இந்த இராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பதையும் அறிந்து கொள்ள, கட்சித் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவைத் தொடர்பு கொண்ட போதும், இப்பத்தி அச்சுக்குப் போகும் வரை அம்முயற்சி பயனளிக்கவில்லை.

எது எவ்வாறாயினும், தேசிய காங்கிரஸில் ஆரம்பத்திலிருந்தே பதவிகளை வகித்தது மட்டுமன்றி, தலைமைத்துவத்துக்கு மிகவும் விசுவாசமாகவும் இருந்து வந்த எம்.எஸ். உதுமாலெப்பைக்கும் அக்கட்சியின் தலைவருக்கும் இடையிலான அரசியல் உறவு விரிசலடைந்து, இன்று பிளவாகியுள்ளமை தெளிவாகிறது. அத்துடன், இனி அவர் அக்கட்சியில் பயணிப்பதற்கான நிகழ்தகவுகளும் குறைவடைந்துள்ளன.

அபிவிருத்தி சார்ந்த சேவை விடயத்தில், மக்கள் மனங்களை வென்ற ஒரு கட்சித் தலைவரும் பிரதித் தலைவரும் பிரிவது என்பது, நடந்திருக்கவே கூடாத ஒன்று என்றே, மக்கள் கருதுகின்றனர்.

ஏனைய கட்சிக் காரர்கள் இதுவிடயத்தில் சந்தோஷப்பட்டாலும் அவ்விதமான மனநிலை, கட்சியின் நலன் விரும்பிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

உண்மையில், இது நிகழ்ந்திருக்கவே கூடாத ஒரு பிளவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், பிடிவாதங்களாலும், கொள்கை நிலைப்பாடுகளாலும் அரசியல் எதிர்பார்ப்பு மாறுபடுவதாலும் இது நிகழ்ந்திருக்கின்றது. அதாவுல்லாவும் உதுமாலெப்பையும் கிழக்கு அரசியலில் முக்கியமானவர்கள் என்பதால், இப்பிளவு பல தரப்பாலும் மிகவும் உன்னிப்பாக நோக்கப்படுகின்றது.

குறிப்பாக, அதாவுல்லாவை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பமாக, முஸ்லிம் காங்கிரஸூம் மக்கள் காங்கிரஸூம் இதைப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே, உதுமாலெப்பையைத் தம்பக்கம் இழுத்தெடுப்பதற்கான முயற்சியை, மக்கள் காங்கிரஸ்காரர்கள் மேற்கொண்டிருந்த போதிலும், இப்போது முஸ்லிம் காங்கிரஸூம் தம்பக்கம் இழுத்தெடுப்பதற்கான பகிரத பிரயத்தனங்களை மேற்கொள்வதாகத் தெரிகின்றது.

ஆனால், உதுமாலெப்பையுடனான சமரச முயற்சிகள் எதுவும் பயனளிக்காத நிலையில், அவர் தேசிய காங்கிரஸில் இருந்து இராஜினாமாச் செய்துள்ள கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவரது இராஜினாமா நடைமுறைக்கு வந்தாலும் கூட, மிகக் கிட்டிய காலத்தில், அவர் வேறெந்த முஸ்லிம் கட்சிகளுடனும் இணைந்து கொள்ளமாட்டார் என்றும், சில நாட்களுக்கு ஓய்வுநிலை அரசியலில் இருப்பார் என்றும் அனுமானிக்க முடிகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோகைன் பயன்படுத்தியதால் இங்கிலாந்து ராணுவத்தில் சீக்கிய வீரர் பணி நீக்கம்!!
Next post காமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்!!(அவ்வப்போது கிளாமர்)