By 28 September 2018 0 Comments

PERSONA முகத்திரை!!(மகளிர் பக்கம்)

மனித மனங்களின் ஆழத்தில் பொதிந்துள்ள ரகசியங்களைத் திரைக்கலையினூடாக உலகிற்குக் காட்சிப்படுத்தியவர் பெர்கமன். குறிப்பாக பெண்களின் அக உலகை இவர் போல திரைப்படங்களில் சித்தரித்தது யாருமில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். அந்த வகையில் இரு பெண்களுக்கு இடையில் நிகழும் பரிமாற்றங்களைப் புதிய பரிமாணத்தில் பெர்கமன் சித்தரித்த படமே ‘பர்சனோ’. புகழ்பெற்ற நடிகை ஒருத்தி அகச்சிக்கலுடன் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது எதிர்பாராதவிதமாக மனநிலை பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து போன அவள் மௌனியாகிவிடுகிறாள். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படும் அவள் அங்கிருக்கும் தொலைக்காட்சியில் வன்முறைக் காட்சிகளைப் பார்க்க நேரிடுகிறது. அது மேலும் அவளை நிலைகுலையச் செய்கிறது.

தன் அன்பு மகனையும், கணவனையும் கூட வெறுக்கும் நிலைக்கு ஆளாகிறாள். நடிகைக்கு வேண்டப்பட்ட மருத்துவர் ஒருவர் ‘நடிகையின் நிலை மோசமாகிக் கொண்டே செல்கிறது. இங்கிருந்தால் அவரின் நிலை இன்னும் மோசமடையும்’ என்று கடற்கரையை ஒட்டியிருக்கும் தனது கோடைக்கால இல்லத்துக்கு ஒரு செவிலியின் துணையுடன் நடிகையை அனுப்பி வைக்கிறார். படத்தின் கதை முழுவதும் அந்த இல்லத்திலேயே அரங்கேறுகிறது. நடிகையால் சுத்தமாகப் பேச முடியாது. ஆனால், செவிலிக்கோ எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இருவேறுபட்ட மனநிலையை உடையவர்கள் ஒரே இடத்தில் சங்கமிக்கிறார்கள். பேசுவதற்கு ஒருவர் கிடைத்துவிட்டார், தனிமையான சூழல், பக்கத்தில் யாருமில்லாத சுதந்திரம்.

அப்புறமென்ன நடிகை கேட்காவிட்டாலும் கூட அந்த செவிலி இடைவிடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறாள். தனது அந்தரங்கம் முதற்கொண்டு வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத அத்தனை விஷயங்களையும் நடிகையிடம் மடை திறந்த வெள்ளம்போல் கொட்டிவிடுகிறாள். நடிகையிடம் இருந்து வெறும் மௌனமும், முக அசைவும், சிறு புன்னகையும் மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது. நடிகையின் மனநிலை பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் தான் பேசுவது அவளுக்குப் புரியவில்லையோ என்று செவிலி நினைக்கிறாள். அடுத்த நாள் நடிகை சில கடிதங்களை செவிலியிடம் கொடுத்து உரியவரிடம் சேர்க்கச் சொல்கிறாள். அவள் அப்படி என்னதான் எழுதியிருப்பாள் என்று போகும் வழியிலேயே கடிதத்தைத் திறந்து படிக்கிறாள் செவிலி. அதில் நேற்று தான் சொன்ன அனைத்தையும் ஒன்றுவிடாமல் நடிகை எழுதியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள்.

செவிலிக்கு நடிகையின் மீதான் கோபம் தலைக்கேறுகிறது.‘திரையில்தான் போலியாக இருக்கிறாய். வாழ்க்கையிலும் ஏன் போலித்தனமாக நடித்துக்கொண்டே இருக்கிறாய்’ என்று நடிகையைச் சாடுகிறாள். நடிகையை உடல்ரீதியாக தாக்கவும் செய்கிறாள். நடிகையும் பதிலுக்குத் தாக்குகிறாள். சண்டை வலுப்பெறுகிறது. ஒரு கட்டத்தில் ‘உதவி செய்வதற்கு மட்டுமே வந்திருக்கிறேன்’ எனபதை உணர்ந்த செவிலி நடிகையிடம் மன்னிப்பு கேட்கிறாள். ‘நீ என்னிடம் பேசாமல் இருந்ததற்காக இப்படி நடந்துகொண்டேன்…’ என்று மிகவும் வருந்துகிறாள். ‘நீ பேசாமல் இருப்பது என்னை மிகவும் தனிமைப்படுத்துகிறது…’ என்று அழுகிறாள். ‘நான் மிகவும் கஷ்டப்படுகிறேன், தயவு செய்து என் கூட பேசு…’ என்று கெஞ்சுகிறாள். அப்போதும் மௌனம் மட்டுமே நடிகையிடம் இருந்து பதிலாகக் கிடைக்கிறது. இறுதியில் செவிலி நடிகையிடம் பேசிப் பேசி மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்ததால் மிகவும் மனம் நொந்து தன்னையும் அந்த நடிகையைப் போல உணர்கிறாள். அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இறுதியில் செவிலி மௌனமாகி தன்னை நடிகையாக கற்பனை செய்து பார்க்கிறாள்.

அப்போது நடிகை செவிலியைப் போல மெல்ல பேச ஆரம்பிக்கிறாள். இரு ஆளுமைகளும் ஒன்றோடு ஒன்று கலப்பதுடன் படம் நிறைவடைகிறது. நடிகைக்குத் தன் மகன், கணவன் மீது வெறுப்பு உண்டாக காரணமாக இருப்பது, தான் கர்ப்பமடைந்த காலத்தில் தாய் ஆகிவிடுவோமோ என்ற பய உணர்வு, குழந்தை பெறும்போது மிகுந்த வலி ஏற்படும் என்ற பயம், கர்ப்பமானால் உடல் பெருத்து தன் அழகு காணாமல் போய் நடிக்க முடியாமல் போய் விடுமோ என்ற பயம், குழந்தை பிறந்தால் அதை கவனிக்க வேண்டும், நடிக்க முடியாமல் போய்விடும் அதனால் குழந்தை இறந்தே பிறக்க வேண்டும் என்று கூட நினைக்கிறாள். இந்த பய உணர்வு மகன் பிறந்த பின்பும் கூட கணவன், மகன் மீது வெறுப்பை உண்டாக்குகிறது. இந்த பய உணர்விற்கு காரணமாக இருப்பது, தான் ஒரு நடிகை என்ற உணர்வு. அதனால் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி மௌனமாகி விடுகிறாள்.

தன் வாழ்க்கையிலும், தொழிலிலும் போலித்தனமாக இருப்பதால்தான் நடிகை மௌனமாகி விட்டாளோ என்றும் கூட பார்வை யாளர்கள் நினைக்கலாம். எல்லாவற்றையும் நம்முடைய பார்வைக்கே விட்டுவிடுகிறார் இயக்குனர் பெர்கமன். நடிகையாக, செவிலியாக நடித்தவர்களின் நடிப்பு அற்புதம். பெண்களே பேசத்தயங்கும் உண்மைகளை பட்டவர்த்தனமாக உடைத்து தெறிக்க விடுகிறார் பெர்கமன். மைக்ரோஸ்கோப் வழியாக பெண்ணின் மனதுக்குள் ஊடுருவி பலவற்றை நமக்குத் திறந்துகாட்டுகிறார். ஒவ்வொரு சட்டகமும் கருப்பு வெள்ளைச் சித்திரம். கதை என்று பார்த்தால் ஒரு வரி தான். ஆனால், நடிகையிடம் செவிலி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஆயிரம் அர்த்தங்கள் பெறுகிறது. இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள்தான் படத்தின் மையம். செவிலி நடிகையின் முகத்திரையைக் கிழிப்பதைப் போல நம்முடைய முகத்திரை யாராவது ஒருவரால் கிழித்து எறியப்படும் போதோ, இல்லை தானாக தன் போலித்தனங்களை உணரும்போதோ மனிதர்கள் பெரும்பாலும் முகத்திரை கிழியப்படும் இடத்தில் மௌனமாகிவிடுகிறார்கள். அல்லது மிகுந்த குற்றவுணர்வுக்கு ஆளாகி யாருடனும் பேச முடியாமல் போய்விடுகிறார்கள் அந்த நடிகையைப் போல!Post a Comment

Protected by WP Anti Spam