By 27 September 2018 0 Comments

காதல் !!(மகளிர் பக்கம்)

நீரில் ஒரு விண்மீன் செய்யும் மாயம் காதல்
– பாப்லோ நெருதா

ஒரு பெண்ணின் மென்மையான உணர்வுகளினூடாக அவளின் தனிமையை, அவளுக்குள் சுரக்கும் காதலை, ஏக்கத்தை அழுத்தமாகச் சித்தரிக்கிறது போலந்து திரைப்படமான ‘ஏ ஷார்ட் ஃபிலிம் எபௌட் லவ்’.போலந்தின் தலைநகரான வார்சாவின் வாழ்வியலை வெளிப்படுத்தும் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு. அங்கே வீற்றிருக்கும் ஒரு பிளாட்டில் தன்னந்தனியாக அனாதையைப்போல் வசித்துவருகிறாள் மேக்தா. வயது முப்பதுக்கு மேல் இருக்கும் அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. காலையில் எங்கு செல்கிறாள், என்ன வேலை செய்கிறாள் என்று எதுவும் வெளிப்படுத்தப்படுவதில்லை. அவளை ஒரு பாலியல் தொழிலாளியைப் போலவே அருகிலிருப்பவர்கள் பார்க்கிறார்கள்.

அழகு ததும்பும் அவளைத்தேடி ஆண் நண்பர்கள் அடிக்கடி அந்த பிளாட்டிற்கு வருகை புரிகிறார்கள். அவளுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். சில சமயங்களில் அவளிடம் சண்டையிடுகிறார்கள்; அவளைத் தாக்குகிறார்கள். தன் நிலையை எண்ணி மனம் சோர்ந்து கவலையில் தவிக்கின்ற நாட்களிலும், ஆறுதலாக யாருமே அருகில் இல்லாத பொழுதுகளிலும் தனியே அழுது புலம்புகிறாள். அவளின் அந்த அழுகை நான்கு சுவர்களைத் தாண்டி வெளியே எதி ரொலிப்பதில்லை. இப்படித்தான் அவளின் அன்றாட நாட்கள் துயருடன் மெதுவாக ஊர்ந்து நகர்கிறது.

மேக்தாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும், ஒவ்வொரு அசைவையும் எதிரில் இருக்கும் பிளாட்டில் வசித்து வரும் டோமக், தொலைநோக்கியின் வழியாக கண்காணிக் கிறான். அவளைக் கண்காணிக்கவே அந்த தொலைநோக்கியைத் திருடி வந்திருக்கிறான். மேக்தாவை விட வயதில் இளையவன் என்றாலும் அவனுக்கு அவள் மீது தீராத காதல். தவிர, டோமக் ஒரு அநாதை, அவனுக்குத் தபால் நிலையத்தில் கிளார்க் வேலை. ஒரேயொரு நண்பன் மட்டுமே இருந்தான். இப்போது அவனும் பணிநிமித்தமாக அவனை விட்டுப்பிரிந்து வெகுதொலைவில் இருக்கிறான். அந்த நண்பனின் அம்மாவுக்குத் துணையாக ஒரு குடியிருப்பில் தங்கியிருக்கிறான்.

அதுதான் மேக்தாவின் வீட்டுக்கு எதிரில் இருக்கும் அந்த பிளாட்! டோமக் மேக்தாவைத் தொலைநோக்கியின் வழியாக கண்காணிப்பது நண்பனின் அம்மாவுக்குத் தெரிய வந்தாலும் அவள் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. டோமக் மேக்தாவை நேரில் சந்திக்க அதிகாலையில் அவள் வீட்டுக்குப் பால் சப்ளை செய்யும் வேலையை பகுதி நேரமாகச் செய்கிறான். தபால் நிலையத்தில் வேலை செய்வதால் பொய்யான மணியார்டர்களை அவள் வீட்டு முகவரிக்கு அனுப்புகிறான். அவளும் மணியார்டர் தான் வந்திருக்கிறது என்று தபால் நிலையத்துக்குப் போய் ஏமாற்றமடைகிறாள். அவள் ஏமாறுவதை பொறுக்காத டோமக், “நான் தான் மணியார்டரை அனுப்பினேன்.

உன்னைப் பார்ப்பதற்காக அப்படிச் செய்தேன். தினமும் உன்னை தொலைநோக்கி வழியாக பார்த்துட்டு இருக்கேன். நேத்து கூட நீ அழுதாய்…’’ என்கிறான். உண்மையறிந்து டோமக்கின் மீது கோபப்படுகிறாள். தன் ஆண் நண்பர்களிடம் இந்தவிஷயத்தைச் சொல்கிறாள். அதில் ஒருவன் டோமக்கை தாக்குகிறான். மிரட்டுகிறான். இருந்தாலும் டோமக் அசராமல் அவளைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறான். தொலைநோக்கியின் வழியாக அவளைக் கண்காணிப்பதை நிறுத்துவதில்லை. ஆனால், மேக்தா ‘நீ ரொம்ப சின்னப் பையன். இந்த உலகில் காதல் எல்லாம் இல்லை. காமம் மட்டும் தான்…’’ என்று அவனை உதாசீனப்படுத்துகிறாள்.

கவலையுறும் டோமக் தன் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயல்கிறான். அதிக ரத்தம் வீணாகி மயக்கமடைகிறான். மருத்துவமனையில் தீவிரசிகிச்சையில் அனுமதிக்கப்படுகிறான். அவன் இருக்கும் அறை இருளில் மூழ்குகிறது. டோமக்கை உதாசீனப்படுத்தியதை எண்ணி மேக்தா குற்றவுணர்வு கொள்கிறாள். தன்னைத்தேடி வரும் ஆண்களை வீட்டுக்குள் கூட அனுமதிக்க மறுக்கிறாள். அவளின் மனம் டோமக்கைத் தேடுகிறது. வீட்டிலிருக்கும் தொலைநோக்கியை எடுத்து டோமக்கின் அறையை நோட்டமிடுகிறாள். அவன் அங்கில்லை என்பதை அறிந்து அழுகிறாள். கொஞ்ச நாட்களில் சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்புகிறான் டோமக்.

அவன் அறையில் வெளிச்சம் படருவதைக் காணும் மேக்தா உடனே அவனது பிளாட்டிற்குச் செல்கிறாள். நண்பனின் அம்மா, அவளைத் தடுக்கிறாள். ஒரு கட்டத்தில் மேக்தாவிற்கு வழிவிடுகிறாள். டோமக்கை அன்பு சுரக்க காண்கிறாள். மன்னிப்பு கோருகிறாள். அவனின் அறைக்குச் சென்று அந்த தொலை நோக்கியில் தன் வீட்டைப் பார்க்கிறாள். அதில் மனமுடைந்து அவள் அழுத ஒரு காட்சி விரிகிறது. அவள் அழும்போது ஒரு கை அவள் தலைகோதி ஆறுதலளிக்கிறது. அந்தக் கைக்குச் சொந்தமானவனின் வயிற்றில் தன் தலையைச் சாய்த்துக்கொள்கிறாள் மேக்தா. அந்த கைக்குக் சொந்தமானவன் டோமக்.

தொலைநோக்கியின் வழியாக அவள் பார்த்த காட்சி நிஜத்திலும் அரங்கேற அவள் விரும்புவதோடு படம் முடிகிறது. நம் அன்புக்குரியவர்களை எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறோம். டோமக் மேக்தாவைத் தேடுவதைப் போல, இறுதியில் மேக்தா டோமக்கைத் தேடுவதைப் போல. அந்த தேடலைக் குறிக்கும் குறியீடாக தொலைநோக்கியை அற்புதமாகப் பயன்படுத்தியிருப்பார் இயக்குனர் Krzysztof Kieslowski. படத்தில் ஒலிக்கும் பின்னணி இசை அப்படியே நம்மை காட்சிகளுக்குள் இழுத்துச் செல்கிறது. மத்திம வயதில் தனித்து இருக்கும் பெண்ணின் நிலையை ஆழமாகச் சொல்வதாலும், அதே நிலைதான் நம்ம ஊரிலும் என்பதாலும், அந்த நிலை இன்னும் தொடர்வதாலும் இப்படம் இன்றைக்கும் முக்கியத்துவம் பெறுகிறது.Post a Comment

Protected by WP Anti Spam