பிரதமருக்கு எதிராக ராணுவ புரட்சி: தாய்லாந்தில், ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது

Read Time:4 Minute, 52 Second

Tailand.Flag.jpgதாய்லாந்தில் பிரதமருக்கு எதிராக புரட்சி நடத்தி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் பிரதமர் அவசர நிலை பிரகடனம் செய்தார். தாய்லாந்து பிரதமர் தக்சின் ஷினவத்ராவை எதிர்த்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் தெருமுனை போராட்டங்கள் நடத்தி வருகின்றன. அவர் பதவி விலகக்கோரி இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் அரசியலில் குழப்பநிலை நிலவுகிறது. அடுத்த மாதம் நடைபெற வேண்டிய பாராளுமன்ற தேர்தல், நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அவசர நிலை பிரகடனம்

இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் தக்சின் ஷினவத்ரா நிïயார்க் சென்றுள்ளார். அவர் அங்கிருப்பதை பயன்படுத்தி, ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் வேலையில் இறங்கியது. ராணுவ தளபதி சோந்தி பூன்யரத்லின் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, ராணுவ டாங்கிகள் தலைநகர் பாங்காக் நகர தெருக்களில் புகுந்தன.

இதை கேள்விப்பட்ட பிரதமர் தக்சின் ஷினவத்ரா, ராணுவ தளபதியை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார். ராணுவம் சட்ட விரோதமாக எங்கும் நடமாடக்கூடாது என்று உத்தரவிட்டார். தலைநகர் பாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். அவரது பேச்சு, தாய்லாந்து டி.வி.யில் ஒலிபரப்பப்பட்டது.

ராணுவம் கைப்பற்றியது

இதைத்தொடர்ந்து, ராணுவ தளபதிக்கு ஆதரவாக ராணுவ வீரர்கள் புரட்சியில் ஈடுபட்டனர். பாங்காக்கில் அரசு தலைமை செயலகத்துக்கு செல்லும் சாலைகளை அடைத்துக் கொண்டு ராணுவ டாங்கிகளை நிறுத்தினர். இதன்மூலம் அரசு தலைமை செயலகத்தை சூழ்ந்து கொண்டு அதை கைப்பற்றினர்.

சுமார் 20 ராணுவ வீரர்கள், தலைமை செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அதை ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுபோல் பிரதமர் அலுவலகத்தையும் கைப்பற்றினர். ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி பாங்காக் நகர தெருக்களில் நடமாடி வருகிறார்கள்.

டி.வி.யில் ஒளிபரப்பு

இச்செய்தி, தாய்லாந்து அரசு டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. அரச குடும்பத்தினரின் படங்கள் காட்டப்பட்டன. 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராணுவ புரட்சியின்போது ஒலிபரப்பட்ட பாடல்கள், மீண்டும் ஒலிபரப்பப்பட்டன. அரச குடும்பத்துக்கு விசுவாசமான படைகள், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதற்காக பாங்காக்கை கைப்பற்றி இருப்பதாக டி.வி.யில் அறிவிக்கப்பட்டது.

நாட்டு மக்கள் அமைதியாக இருக்குமாறு படை தளபதிகள் கேட்டுக்கொண்டனர். நாட்டின் அரசியல் சீர்திருத்தத்தை தீர்மானிப்பதற்காக ஒரு கமிஷன் அமைக்கப்படுவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

பிரதமர் திரும்புகிறார்

இதற்கிடையே, பிரதமர் தக்சின் ஷினவத்ரா ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் முன்கூட்டியே பேசுகிறார். அவர் இன்று பிற்பகலில்தான் பேசுவதாக இருந்தது. ஆனால் தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள நிலைமையால் அவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கே பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாக, வியாழக்கிழமை (நாளை) அவர் தாய்லாந்து திரும்புகிறார்.

அமெரிக்கா கருத்து

தாய்லாந்து நிலவரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித்தொடர்பாளர் பிரடெரிக் ஜோன்ஸ் கூறுகையில், `தாய்லாந்து பற்றிய செய்தியை பார்த்தோம். கூடுதல் தகவல்களை கேட்டிருக்கிறோம்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழர் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கு அதி உயர் உலக விருது- சங்கரிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
Next post இங்கிலாந்து இளவரசியின் நிர்வாண போட்டோ விலைக்கு கிடைக்கிறது