By 7 October 2018 0 Comments

நலம் தரும் நட்சத்திரப் பூ!!(மருத்துவம்)

பிரியாணி, குருமா போன்ற ஸ்பெஷல் உணவு தயாரிப்பின்போது சேர்க்கப்படும் மசாலா சேர்மானங்களில் அன்னாசிப்பூவும் ஒன்று. இதனை Star Anise என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். வாசனையுடன் சுவை கூட்ட மட்டும்தான் இந்த அன்னாசிப்பூ பயன்படுகிறதா அல்லது ஏதேனும் மருத்துவ காரணிகள் இருக்கிறதா என்று இயற்கை மற்றும் யோகா மருத்துவரான தீபாவிடம் கேட்டோம். ‘‘நம்முடைய சமையலில் தாளிப்பு என்கிற முறை தொன்று தொட்டு காலமாக நாம் கடைபிடித்து வருகிறோம்.

இதற்காகவே அஞ்சறைப்பெட்டி என்கிற மருத்துவ குணமுடைய ஒன்றை ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் பார்க்கலாம். அதில் கடுகு, வெந்தயம், சீரகம், மஞ்சள், மிளகு, உளுந்து, பெருஞ்சீரகம், உளுந்தம்பருப்பு அதோடு அன்னாசிப்பூ என்கிற ஒரு உணவுப்பொருளையும் பயன்படுத்தி வருகிறோம். இது பெரும்பாலும் மசாலா உணவு தயாரிப்பில் மட்டும் பயன்படுத்துகிறோம். இந்த அன்னாசிப்பூ என்பது மிகுந்த மருத்துவ குணங்களை உடையது.

அன்னாசிப்பூ மிகவும் எளிதில் கிடைக்கக் கூடியது. இதில் ஆன்டி ஆக்சிடென்ட், வைட்டமின்- ஏ வைட்டமின்-சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இது நட்சத்திர வடிவம் கொண்ட ஒரு மசாலா பொருள். இது தெற்கு சீனாவில் உருவானது. இது பெரும்பாலும் இந்திய மற்றும் சீன சமையல் முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஜீரணத்திற்காகவும், உணவு வாசனைக்காகவும் சேர்க்கப்படுகிறது.

அன்னாசிப்பூவில் கலோரிகள் குறைவு. எனவே, உடல் பருமன் உடையவர்கள் அவர்களுக்கு உணவு தயாரிக்கும்போது இதை அதிகளவு சேர்க்கலாம். இது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும்போது ஜீரண கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலை தீர்க்கிறது. ரத்த செல்களின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. தோல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் இது தீர்வாக அமைகிறது.

அன்னாசிப்பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் முடி உதிர்வு, தலைமுடி வறட்சி, சரும நோய்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக, இதன் எண்ணெயில் Onithol என்கிற முக்கியமான மூலக்கூறு உள்ளது. இதை உடலில் தசைப்பிடிப்புகள் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தசைப் பிடிப்புகள் நீங்கும். முகப்பருக்கள் தொந்தரவுகள் இருந்தால் அன்னாச்சிப் பூவை பொடியாக்கி, தேன் கலந்து முகத்தில் பூசினால் உடனடியாக குணமடையும். பெண்கள் தங்களுடைய கூந்தலை பராமரிப்பதற்கு இதன் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

அஜீரணக் கோளாறுகள், இதயம் பாதிப்பு, வாய் துர்நாற்றம், நுரையீரல் பாதிப்பு, சளி தொந்தரவு, உயர் ரத்த அழுத்தம், குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் பாதிப்பு போன்றவைகளுக்கு அன்னாசிப்பூ அருமருந்து. வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுக்கும்போது அவர்கள் துடிப்புடனும் சுறுசுறுப்புடனும் இருப்பார்கள். அதிகமான உணவு எடுத்துக் கொண்டவர்கள் ஜீரணமாகாமல் சிரமப்படுவதுண்டு. அவர்கள் தற்போது கடைகளில் கிடைக்கக்கூடிய ரசாயனம் கலந்த பானங்களைப் பயன்படுத்தாமல் அன்னாசிப்பூவினை பொடி செய்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்தால் உடனடியாக அஜீரண கோளாறு நீங்கி நிம்மதியாக உணர்வார்கள்.

மேலும் இது வயிற்றில் ஏற்படக்கூடிய வாயுத்தொல்லையை நீக்குகிறது. படபடப்பு உள்ளவர்கள் அன்னாசிப் பூவினை பயன்படுத்துவது நல்லது. படபடப்பை நீக்க அன்னாசிப்பூ தீர்வாக அமையும். அதுபோல வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு இயல்பாக மன அழுத்தம் இருக்கும். அவர்களும் அதிலிருந்து விடுபட அன்னாசிப்பூவினை பயன்படுத்துவது நல்லது.’’

எப்படி பயன்படுத்தலாம்?

‘‘அன்னாசிப்பூவினை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராகத் தயாரித்து அருந்துவதால் நல்ல செரிமானத்திற்கு உதவி செய்கிறது, மந்தத் தன்மையை போக்குகிறது, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்றவைகளுக்கு உடனடி நிவாரணியாக இருக்கிறது. அன்னாசிப்பூ + இஞ்சி + ஜீரகம் சேர்ந்த தேநீர் செய்து குடித்தால் ஜீரண மண்டலத்தை பலப்படுத்துவதுடன் ஜீரணம் தொடர்பான மற்ற கோளாறுகளும் நீங்கும். அன்னாசிப்பூவோடு சீரகம், மிளகு, தேன் கலந்து தேநீர் செய்து பயன்படுத்தும்போது சளி, காய்ச்சல், இருமல் போன்றவை குணமாகும். நுரையீரலுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனை பயன்படுத்தி ஆஸ்துமா போன்றவற்றை சரி செய்யலாம். ஈரலை பற்றிய வைரஸ் நோய்களுக்கு மருந்தாக அன்னாசிப்பூ இருக்கிறது!’’

பெண்களின் நலன் விரும்பி!

அன்னாசிப்பூவை பெண்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது பெண்களுடைய மாதவிடாய்க்கு காரணமாக இருக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன்கள் சுரப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வயிற்று வலி, வயிற்றுப்பிடிப்பு போன்றவைகளுக்கு அன்னாசிப்பூ பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். அன்னாசிப்பூவை பால் கொடுக்கும் தாய்மார்கள் பாலில் தேன் கலந்து அன்னாசிப்பூ பவுடரை கலந்து குடித்தால் தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam