By 3 October 2018 0 Comments

பிரியாணியால் எத்தனை பிரச்னை?!(மருத்துவம்)

எப்போதாவது சாப்பிடுகிற விருந்தாக இருந்த பிரியாணி, இப்போது அடிக்கடி சாப்பிடும் உணவாகிவிட்டது. எங்கேயாவது தென்பட்ட பிரியாணி கடைகள், இப்போது தெருவெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன. நம் வீட்டு சமையலறைக்குள்ளும் அதிகம் வாசனை பரப்ப ஆரம்பித்துவிட்டது. ஏனெனில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் இந்திய உணவு வகையாக இருக்கிறது பிரியாணி.

அது தற்போது ரோட்டோர தள்ளுவண்டிக் கடைகள் முதல் ஐந்து நட்சத்திர விடுதிகள் வரையிலான எல்லா இடங்களிலும் கிடைக்கிற, அனைத்து தரப்பினராலும் விரும்பப்படுகிற ஓர் உணவு வகையாகவும் இருக்கிறது. பிரியாணியின் வண்ணமும், சுவையும், வாசனையும் பார்ப்பவர் கண்களை ஈர்த்து, மனதைக் கவர்வதோடு, அதை அடிக்கடி சாப்பிடத் தூண்டும் விதமாகவும் இருக்கிறது. இப்படி நம்மை ஆக்கிரமித்து வரும் பிரியாணி கலாசாரம் ஆரோக்கியத்துக்கு உகந்ததுதானா என்று ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரியிடம் பேசினோம்…

‘‘இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக பல வகைகளில் பாரம்பரியமான உணவு வகைகள் உள்ளன. அதேபோல தென்னிந்திய உணவு, வட இந்திய உணவு என்று வகைப்படுத்துகிறபோது, தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்கென்றும் பல்வேறு தனிச்சிறப்புகள் இருக்கின்றன. இருந்தபோதும் தற்போது பிரியாணி என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு பொதுவான உணவு என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. அரிசி, இறைச்சி, மீன், காய்கறி போன்றவற்றோடு மசாலா பொருட்களைச் சேர்த்து காரசாரமாக பல வகைகளாக பிரியாணி செய்யப்படுகிறது.

இதில் சேர்க்கப்படும் மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி வகைகள், இறால் மற்றும் மீன் வகைகள், முட்டை மற்றும் காய்கறி வகைகளை அடிப்படையாக வைத்தும் பல வகைகளில் சமைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல சில ஊர்களின் பெயர்களை அடையாளமாகக் கொண்டும், பல பெயர்களில் விற்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். வணிக நோக்கில் தயார் செய்யப்படுகிற பிரியாணிகளில் நிறம் மற்றும் சுவைக்காக சேர்க்கப்படும் சில வேதிப்பொருட்களும், தயாரிப்பு முறைகளும் உடல்நலத்திற்கு ஊறு விளைவிப்பதாக இருக்கிறது.

நாம் நமது உடலை நல்ல திறனுடன் வைத்துக் கொள்வதற்கு ஆரோக்கியமான உணவு தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான சலிப்பூட்டும் உணவு முறையிலிருந்து தங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கு வெவ்வேறு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகள் தேவைப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் அயல்நாட்டு உணவு வகைகள் மீது நமக்கு ஏற்படுகிற ஆசையே நாளடைவில் புதியதொரு உணவு கலாச்சாரத்திற்கு நம்மை அடிமையாக்கி விடுகிறது’’ என்றவரிடம் பிரியாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று கேட்டோம்…

‘‘பிரியாணியில் பலவிதமான பொருட்கள் சேர்ந்துள்ளது. அதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் உடலுக்குத் தேவையான ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்தினை அளிப்பதாக இருப்பதால், அது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததே. இதில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதனுடன் சேர்க்கப்படும் இறைச்சி அல்லது காய்கறிகள் மட்டுமின்றி கத்தரிக்காய், தயிர் கலந்த வெங்காயம் என்று அதனுடன் சேர்த்துக் கொள்கிற பொருட்களும் உடல் நலனுக்கு உகந்ததே. பிரியாணியிலுள்ள பொருட்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. அதிலுள்ள செலினியம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பினைப் பாதுகாக்கவும், தைராய்டு அளவுகளை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.

இதில் நியாசின், வைட்டமின் பி போன்றவை நிறைவாக உள்ளது. இந்தப் பொருட்கள் புற்றுநோயைத் தூண்டும் ஃப்ரீ ரேடிக்கலுக்கு எதிராகப் போராடுகிறது. இதில் வைட்டமின் பி-6 நிறைவாக உள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதோடு ரத்த நாளங்களின் சேதத்தைத் தடுக்கிறது. உடற்பயிற்சிகள் செய்த பிறகு உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்புச் சத்துக்களைப் பெறுவதற்கு முட்டை மற்றும் கோழி பிரியாணியை சாப்பிடுவது நல்லது. மேலும் வெஜிடபிள் பிரியாணி உடலுக்குத் தேவையான கனிமங்கள் மற்றும் வைட்டமின்களின் நல்ல ஆதாரமாக உள்ளது.’’

ஆரோக்கியமான பிரியாணி தயார் செய்வது எப்படி?

‘‘பளபளப்பான வெள்ளை அரிசிக்கு பதிலாக முழு தானிய பழுப்பு நிற அரிசியைத் தேர்வு செய்யுங்கள். அதில் அதிகளவிலான வைட்டமின் பி மற்றும் ஃபைபர் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது. அதிக அளவு நெய் அல்லது வெண்ணெய் அல்லது எண்ணெயைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக குறைந்த அளவு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இறைச்சி போன்ற அசைவப் பொருட்களை பொரித்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, நீராவியில் அவித்து, சமைத்து சாப்பிடுவது நல்லது.

பிரியாணியில் புதினா இலைகள், கீரை இலைகள், கொத்தமல்லி இலைகள், ப்ரோக்கோலி, காலிஃபிளவர், கேரட், பீன்ஸ் அல்லது பிரெஞ்சு பீன்ஸ், கேப்சிகம், முட்டைக்கோஸ் போன்றவற்றைச் சேர்ப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களை இன்னும் கூடுதலாகப் பெற முடியும். சிக்கன், மட்டன் போன்ற இறைச்சிகளுக்குப் பதிலாக அதே சுவை மாறாமல், சோயா துண்டுகள் சேர்த்தும் பிரியாணி தயார் செய்யப்படுகிறது. சோயாவில் Phytoestrogen என்கிற பொருள் உள்ளது.

இது பெண்களின் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும், மாதவிடாய் அறிகுறிகளை எதிர்க்கவும் உதவுகிறது. மேலும் அது புற்றுநோய் மற்றும் இதயநோய் ஆபத்துகளுக்கு எதிரான விளைவுகளை உள்ளடக்கி இருப்பதோடு, இறைச்சிக்கு மாற்றாக புரதச்சத்தினை உடையதாகவும் இருக்கிறது. பிற பருப்பு வகைகள் அல்லது பனீர் போன்றவை பிரியாணியோடு சேர்க்கப்படுகிறது. இதிலுள்ள அதிகளவிலான நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தானது நீரிழிவு, உடல்பருமன் பிரச்னைகளை உடையவர்களுக்கு மிகவும் உகந்தது.

இஞ்சி, பூண்டு, வெங்காயம், மருத்துவ குணமுடைய மூலிகைப் பொருட்கள் மற்றும் மசாலா பொருட்களைச் சேர்த்து தயார் செய்கிறபோதுதான், அது முழுமையான பிரியாணியாக மாறுகிறது. இதுபோன்ற இயற்கையில் கிடைக்கக்கூடிய மசாலா மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயார் செய்தால் ஆரோக்கியமான பிரியாணி ரெடியாகிவிடும். பிரியாணி சாப்பிட்டு முடித்த பிறகு மூலிகை தேநீர் அல்லது சூடான தண்ணீரைக் குடிப்பது நல்லது. மூலிகை தேநீரானது குறைந்த கலோரிகளைப் பெற்றுள்ளது. மேலும் அது பசியின்மையைத் தடுப்பதோடு நீண்டகால வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.’’

பிரியாணி சாப்பிட்டால் உடல்நலப்பிரச்னை ஏற்படுமா?

‘‘பிரியாணி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதை தினசரி, அதிகளவு எடுத்துக்கொள்வதால் சில உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். இதை அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

பிரியாணி சாப்பிடும்போது குளிர்பானங்களைச் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது. வணிக நோக்கில் தயார் செய்து விற்கப்படும் பிரியாணியில், அதன் நிறம், மணம், சுவை போன்றவற்றை அதிகப்படுத்துவதற்காக சிலர் நிறமூட்டிகள், சுவையூட்டிகள் போன்றவற்றை சேர்க்கின்றனர். இவற்றில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் சிலவற்றால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.

வயிறு புடைக்க சாப்பிடுதல், சரியாக மென்று தின்னாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்று எரிச்சல் உண்டாகிறது. மேலும் சரி வர சமைக்காத, வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது. இந்த உணவுகளால் சாப்பாட்டுக்குப் பின் வயிற்றில் அமிலங்கள் அதிகமாக சுரப்பதால் இப்பிரச்னை உண்டாகிறது. சாப்பிட்டதும் பலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதைப் பார்த்திருப்போம். 30 முதல் 50 சதவீதம் பேருக்கு இந்த பாதிப்பு இருப்பதாகவும், நூற்றில் 20 பேருக்கு இது அன்றாடப் பிரச்னையாக இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.’’

இதை தடுக்க என்ன செய்யலாம்?

‘‘நாம் உயிர் வாழ்வற்காகவே சாப்பிடுகிறோம். அதை விட்டுவிட்டு உயிர் வாழ்வதே சாப்பிடுவதற்குத்தான் என்றிருப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. எனவே, நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களால் நம் உடலுக்குக் கிடைக்கிற நன்மைகளை சரியாகப் பெற வேண்டுமென்றால் தவறான உணவு பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அவரவர் உடல் நிலைகளை அறிந்து, சரியான அளவில், சரியான முறையில் பிரியாணி மட்டுமின்றி பிற எல்லா வகை உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதே ஆரோக்கியமான முறையில் உடல்நலத்தைப் பாதுகாத்திட உதவும்’’ என்கிறார் புவனேஸ்வரி.Post a Comment

Protected by WP Anti Spam