யாழ். திரைப்பட விழா விட்ட பெருந்தவறு!!(கட்டுரை)

Read Time:14 Minute, 14 Second

யாழ். சர்வதேசத் திரைப்பட விழா இன்று புதன்கிழமை ஆரம்பிக்கின்றது.

நான்காவது ஆண்டாக நடைபெறும், குறித்த திரைப்பட விழாவில் கவனம்பெற்ற உள்நாட்டு – வெளிநாட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. உள்ளூர் கலைஞர்களின் குறும்படங்களுக்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.

ஆனால், இம்முறை திரைப்பட விழா ஆரம்பிப்பதற்கு முன்னரேயே, திரைப்பட விழாக்குழு கருத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது, சர்ச்சைக்குரிய ‘Demons in Paradise’ என்கிற படத்தின் இயக்குநரான ஜூட் ரட்ணம்.

இம்முறை திரைப்பட விழாவில், மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 5, 2018), ‘Demons in Paradise’ படம் திரையிடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால், கடந்த திங்கட்கிழமை அந்த அறிவிப்பு, விழாக் குழுவால் மீளப்பெறப்பட்டிருக்கின்றது. இதையடுத்தே, ஜூட் ரட்ணம் கருத்துச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.

யாழ். சர்வதேசத் திரைப்பட விழா, 2015ஆம் ஆண்டு ஆரம்பித்தது முதல், அது நடத்தப்படும் நாள்கள் குறித்த சர்ச்சை நீடித்து வந்தது. தமிழர் தாயகப் பகுதிகளில், ‘தியாகி’ திலீபனின் நினைவு நாள்கள் செப்டெம்பர் மாதத்தின் 15ஆம் திகதி முதல், 26ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகின்றன.

குறித்த காலப்பகுதியில் திரைப்பட விழா நடத்தப்பட்டு, திலீபனையும் திலீபனின் போராட்டத்துக்கான காரணங்களையும் இருட்டடிப்புச் செய்வதற்கான முனைப்புகளை திரைப்பட விழா செய்வதான குற்றச்சாட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக்கு விழாக்குழு முடிவுகட்டி, விழா நாள்களை ஒக்டோபர் மாதத்துக்கு இம்முறை நகர்த்தியிருந்தது. அது, பல தரப்புகளாலும் வரவேற்கப்பட்டிருந்தது.

ஆனால், இம்முறை ஜூட் ரட்ணம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு, திரைப்பட விழாக்குழுவின் மீதானதாக மாத்திரம் கொள்ளப்பட முடியாதது என்கிற காரணத்தாலேயே அதைப் பற்றிப் பேச வேண்டி ஏற்படுகின்றது. ஏனெனில், அது, அடிப்படையில் தமிழ்ச் சூழலின் இயங்குநிலை குறித்தும் கேள்வி எழுப்புகின்றது.

ஜூட் ரட்ணம் ‘Demons in Paradise’ படத்தினூடு, தமிழ்ப் போராட்ட இயக்கங்களுக்குள் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகள் பற்றிப் பேசுவதாக அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆனால், அந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் சகோதரப் படுகொலைகளைப் பற்றிப் பேசினாலும், தன்னுடைய அனுபவங்கள், எண்ணங்கள் வழி, படத்தின் ஓட்டத்தை நகர்த்திச் செல்லும் இயக்குநர், தன்னுடைய தனிப்பட்ட அரசியல் எதிர்பார்ப்புகளை ஒட்டுமொத்தச் சமூகத்தின் மீதும் இறக்கி வைக்கின்றார். அதற்காக, எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தும் கட்டத்துக்கும் செல்கிறார்.

குறிப்பாக, இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதைக்கூட, நியாயப்படுத்தும் கட்டத்துக்கு அவர் சென்றிருக்கின்றார். அதை, அவர் படத்தில் மாத்திரமல்ல, படம் குறித்த உரையாடல்கள், பேட்டிகளிலும் மீண்டும் மீண்டும் பதிவு செய்து வந்திருக்கிறார். “தமிழ்ச் சூழல், உள்ளக விமர்சனங்களைச் செய்வதில்லை. விமர்சனங்களை எதிர்கொள்ளும் தகுதியை வளர்த்துக்கொள்ளாத சிறுபிள்ளைத்தனமான சமூகமாக இருக்கின்றது” என்றும் அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றார். தன்னுடைய படத்தை, வடக்கு, கிழக்கில் திரையிடுவதற்கான தடையும் இடர்பாடுகளும் அதன் போக்கிலேயே வருவதாகவும் கூறி வருகின்றார். அதை, அண்மைய பி.பி.சி பேட்டியிலும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அப்படிப்பட்ட சூழலில், சிறு குழுக்களின் எதிர்ப்பை அடுத்து, யாழ். சர்வதேசத் திரைப்பட விழாவில் இருந்து, ‘Demons in Paradise’ படத்தைக் காட்சிப்படுத்துவதிலிருந்து விழாக்குழு நீக்கியிருப்பதானது, தமிழ்ச் சூழல் குறித்த ஜூட் ரட்ணத்தின் குற்றச்சாட்டுகளை ஆமோதிப்பது போன்றிருக்கின்றது.

இந்தப் பத்தியாளர் ‘Demons in Paradise’ படத்தை, கொழும்பில் உள்ளகத் திரையிடலொன்றின் போது பார்த்திருந்தார். அதன்பின்னர், ‘Demons in Paradise: மீட்க முடியாத குறைப்பிரசவம்’ என்கிற தலைப்பில் விமர்சனக் கண்ணோட்டத்தையும் எழுதி இருந்தார்.

ஆனால், படைப்பாளியின் சுதந்திரம் மீதோ, வெளியீட்டுக்கான உரிமை சார்ந்தோ எந்த அச்சுறுத்தலும் விடுக்கப்படுவதை ஆதரிக்கவில்லை. குறிப்பாக, ‘Demons in Paradise’ தமிழ்ச் சூழலில் காட்சிப்படுத்தப்பட்டு, அது முன்வைக்கும் ஒரு பக்க அரசியல் தொடர்பில், நியாயமான கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். அதுதான், தமிழர் அரசியல், இயங்குநிலை குறித்து வெளியாரும், வெளியாருக்கு இணக்கமானவர்களுக்கும் முன்வைக்கும் கீழ்மையான பார்வையை அகற்றம் செய்ய உதவும். ஆனால், தற்போது நிகழ்ந்திருப்பது என்ன?

யாழ். சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குநராக அனோமா ராஜகருண இருக்கிறார். விழாக்குழுவின் தலைவராக கலாநிதி எஸ். ரகுராம், உறுப்பினர்களாக கலாநிதி சேரன் ருத்ரமூர்த்தி, கலாநிதி சிவமோகன் சுமதி உள்ளிட்ட கல்வியாளர்களும் இன்னும் சிலரும் இருக்கிறார்கள். திரைப்பட விழாவில், திரையிடப்பட வேண்டிய படங்கள் எவை என்பது தொடர்பில், இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பெற்றவர்களாக இவர்களே இருக்கின்றார்கள்.

அப்படிப்பட்ட சூழலில், ஒவ்வொரு படத்தையும் தனிப்பட்ட ரீதியில் பார்வையிட்டு, அதன் தரம், தகுதி ஆராய்ந்து, இறுதிப்பட்டியலை வெளியிட்டிருக்க வேண்டும். படங்கள் பேசுகின்ற அரசியல், சமூக ஒழுக்கம் உள்ளிட்ட நிலைப்பாடுகளால் எழும் ஆதரவையும் எதிர்வினைகளையும் எதிர்கொள்ளும் தைரியமும் இருக்க வேண்டும். அதுதான், ஆக்கபூர்வமாக யோசிக்கின்றவர்களின் அடிப்படை.

இலக்கிய விழாக்கள், திரைப்பட விழாக்களின் அடிப்படைகளே சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவதுதான். அதுவும், போருக்குப் பிறகான சமூகமாகப் பெரும் பாய்ச்சலோடு முன்னோக்கிச் செல்ல வேண்டிய சூழலில், நிறைவான உரையாடல்கள் நிகழ்த்தப்பட வேண்டும்; ஜனநாயக ரீதியிலும் கருத்தியல் ரீதியிலும் மேல்நோக்கி எழுந்து வரவேண்டும்; அதன் ஒவ்வொரு கட்டங்களிலும் பங்களிக்க வேண்டிய பொறுப்பு, தமிழ்ச் சூழலில் கல்வியாளர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் உண்டு.

இதைச் சிறுசிறு அழுத்தங்களுக்காக விட்டுக்கொடுப்பதும், ஒதுங்கிக் கொள்வதும், அவர்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழ்ச் சூழலையும் பின்னோக்கி இழுத்து விடுகின்றது. புத்திஜீவி அடையாளத்தைக் கோரும் கல்வியாளர்கள், சமூகத்தை எதிர்கொண்டு, கற்பித்து, சிந்தனைகளின் வழி முன்னோக்கி வர வேண்டும். அதற்கு, நீண்ட காத்திருப்பும் பொறுமையும் தைரியமும் வேண்டும். சின்னச் சின்ன அழுத்தங்களுக்கு எல்லாம் பின்வாங்கி, விடயங்களைக் கைவிடுவது என்பது, அபத்தமானது. இப்போது நிகழ்ந்திருப்பதும் அப்படியான ஒன்றே.

இந்த இடத்தில், தமிழ்ச் சூழலில் தம்மைத் தமிழ்த் தேசியவாதிகள் அடையாளத்துக்குள் வைத்துக் கொள்வதற்காக, சிறுபிள்ளைத் தனங்களைச் செய்யும் சில தரப்புகளுக்குச் சொல்லப்பட வேண்டிய செய்திகளும் உண்டு.

அது, தமிழ்த் தேசியத்தின் தேவை, இந்த நாட்டில் ஏன் எழுந்தது, அதன் நீடிப்புக்கான காரணங்கள் என்ன என்பதைச் சரியாக விளங்கிக் கொண்டு, முன்செல்லும் பொறுப்பை வலியுறுத்துவது சார்ந்தது.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது, உணர்ச்சி வசப்படுதலால் மாத்திரம் எழுந்தது என்கிற தோரணையை, மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தும் தரப்புகள், தமிழ் மக்களின் உண்மையான அரசியல் தேவை, உரிமைகளின் கோரல்களை நிராதரவாக விட்டுச் செல்கிறார்கள். மாற்றுக் கருத்துகளைக் கொண்டிருக்கின்ற புத்தகங்களை வெளியிட அனுமதியோம்; படங்களைத் திரையிட அனுமதியோம் என்று புற்றீசல்கள் போலக் கிளம்புவதும், எந்தவித விளக்கமும் இன்றி, அரை அவியல்களுக்கு அங்கிகாரம் பெற்றுக்கொடுப்பதும் அறிவார்ந்த சமூகம் செய்யும் ஒன்றல்ல.

ஆனால், அவ்வாறான நிலையைத் தொடர்ந்தும் சில தரப்புகள் செய்கின்ற போதும், அது ஒட்டு மொத்தத் தமிழ்ச் சூழலின் இயங்கு நிலையும் அப்படித்தான் இருக்கின்றது என்கிற அடையாளத்தைக் கொடுத்துவிடுகின்றது.

யாழ். சர்வதேசத் திரைப்பட விழாவில், ‘Demons in Paradise’ படம் திரையிடப்பட்டு, அது தொடர்பில் சரியான விமர்சனங்கள் வெளிவந்திருக்க வேண்டும். அது, தென்னிலங்கையில் அளவுக்கு அதிகமாகக் கொண்டாடப்பட்ட காரணங்களை, கேள்விக்குள்ளாக்கி இருக்க வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்புகளையெல்லாம், சில சிறு குழுக்களின் அழுத்தங்களால் கல்வியாளர்கள் நிறைந்திருக்கின்ற திரைப்பட விழாக்குழு தவறவிட்டு, ஒட்டுமொத்தத் தமிழ் இயங்குநிலை மீதும் சேறடித்திருக்கின்றது.

எப்போதுமே, எந்தவொரு விடயத்தையும் எதிர்கொண்டு, அதை வெற்றிகொள்வதுதான் சமூக முன்னேற்றத்துக்கு உதவும். அதைவிடுத்து, ஒதுங்கி ஓடுவதாலோ, விலக்கி வைப்பதாலோ நிரந்தர வெற்றிகள் கிடைப்பதில்லை. வேண்டுமானால், சில நாள்களுக்கான வெற்றிகள் கிடைக்கலாம்.

தற்போது, நிகழ்ந்திருப்பது, சிறிய சில குழுக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தமையே ஆகும். ஆனால், அது, அந்தக் குழுக்களைத் தாண்டியே வராது. ஆனால், தமிழ்ச் சூழலும் அதன் இயங்கு நிலை குறித்தும், சர்வதேச ரீதியில் ஜூட் ரட்ணம் முன்வைத்து வந்த கருத்துகளை அது வலுப்படுத்தும். அது, தமிழ் மக்கள் மீது கீழ்மையான அடையாளத்தையே பதிவு செய்யும். இது, உரிமைகளுக்காகப் போராடும் சமூகத்துக்கு நல்லதல்ல.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்போது குழந்தைப்பேறு வேண்டாமா? (மகளிர் பக்கம்)
Next post கல்யாண தேன் நிலா!!(அவ்வப்போது கிளாமர்)