By 6 October 2018 0 Comments

டயட் சார்ட் !!(மருத்துவம்)

இனிப்பு அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு வரும் என்றும், அப்படியே ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால் பிடித்த உணவு எல்லாவற்றையும் நிறுத்திவிட வேண்டியதுதான் என்றும் பொதுவான நம்பிக்கை இன்றும் உள்ளது. நம் வாழ்க்கையில் இனிப்பே கிடையாதா எனவும் நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் அளவுக்கு மீறிய பயம் கொண்டிருக்கின்றனர். மேலும் எந்த உணவுமுறையைப் பின்பற்றுவது? எந்த உணவை எப்போது சாப்பிடுவது போன்ற குழப்பங்களும் இல்லாமல் இல்லை. இந்த குழப்பங்களுக்கான தீர்வுகள் பற்றி உணவியல் நிபுணர் முத்துலட்சுமியிடம் கேட்டோம்…

‘‘நீரிழிவு நோயைப் பொறுத்த வரையில், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதோடு உடற்பயிற்சியோடு கூடிய உணவுக்கட்டுப்பாட்டை சரிவர கடைபிடித்து வருவதால் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். இந்த மருந்தை சாப்பிட்டால், இந்த உணவு முறையை கடைபிடித்தால் அல்லது இதை சாப்பிடாமல் இருந்தால் இந்த நோய் என்னை விட்டு போய் விடும் என்று இன்னும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு. மேலும், நீரிழிவு நோயாளிகளின் உணவைப் பற்றிய பல மூடநம்பிக்கைகளும் மக்களிடையே பரப்பப்படுகிறது. அவை அனைத்தும் உண்மை அல்ல.

இனிப்பு அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் என்று சிலர் நினைக்கிறார்கள். டைப் 1 நீரிழிவு நோய் மரபியல் மற்றும் தன்னுடல் எதிர்வினை தூண்டல்(Autoimmune Trigger) காரணமாகவும், டைப் 2 நீரிழிவு மரபியலோடு, உடல்பருமன், உடல் உழைப்பில்லா நிலை போன்ற வாழ்வியலோடு தொடர்புடைய பல்வேறு ஆபத்துக் காரணிகளால் வருவது. அரிசிக்குப் பதில் கோதுமை உணவை சிலர் எடுத்துக் கொள்வதும், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கருத்து உள்ளது.

ஆனால், கார்போஹைட்ரேட்டோ, அரிசியோ உங்களது எதிரிகளல்ல. எந்த வகையான அரிசி உண்கிறீர்கள் என்பதே முக்கியம். பாலீஷ் செய்யாத கைக்குத்தல் அரிசி, ப்ரவுன் அரிசி, கம்பு, ராகி மற்றும் சிறுதானியங்கள் மூலம் கிடைக்கும் கார்போஹைட்ரேட் நல்லது. இவற்றில் Low Glycemic Index அளவு குறைவாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை மெதுவாக தாக்கக் கூடியவை. பாலீஷ் செய்த வெள்ளை அரிசியில் இருக்கும் உயர் க்ளைசமிக் குறியீட்டினால் ரத்த சர்க்கரை அளவை மிக வேகமாக அதிகரிக்கும் என்பதாலேயே தவிர்க்கச் சொல்கிறோம்.

சாதம் தவிர, அரிசியினால் செய்யப்படும் இட்லி, தோசை, அடை போன்ற அனைத்து உணவு வகைகளுக்குமே கூடிய வரை வெள்ளை அரிசியை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில், சிறுதானியங்களால் செய்து சாப்பிடலாம். மாம்பழம், சப்போட்டா, வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடக் கூடாது என்பார்கள். அந்தந்த பருவத்தில் கிடைக்கும் அனைத்து வகையான பழங்களையும் சாப்பிடலாம். மாம்பழத்தில் ‘ஏ’ வைட்டமின் சத்து மிகுந்திருப்பதால் கல்லீரலுக்கு மிகவும் நன்மை தருகிறது.

இந்த வருடம் எந்த அளவிற்கு மாம்பழம் சாப்பிடுகிறோமோ அடுத்த வருடம் மாம்பழ சீசன் வரும் வரை ஒரு வருடத்துக்குத் தேவையான ‘ஏ’ வைட்டமின் சத்தை உடலில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என்பதால், நீரிழிவு நோயாளிகளும் ஒரு நாளைக்கு 3 முதல் 4 துண்டுகள் வரை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம். அதையும் காலை அல்லது மாலை தேநீர் வேளைகளில் எடுத்துக் கொள்ளலாம். மாலை 5 மணிக்குப்பின் நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடக் கூடாது. பொதுவாக இரவு உணவுக்குப்பின் பழங்கள் சாப்பிடும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது.

அனைவருமே இதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், உடல் ஓய்வு நிலைக்குப் போகும்போது கல்லீரலும் வேலை செய்யாது என்பதால் சர்க்கரையானது உடலில் தங்கி ரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும். சிலர், வாழைப்பழம் சாப்பிடாவிட்டால், எனக்கு காலையில் மலம் இறுகிவிடும் என்று தவறான நம்பிக்கையில் இரவில் வாழைப்பழம் எடுத்துக் கொள்வார்கள். இது தவறான பழக்கம். இதுபோன்ற உணவில் செய்யும் சின்னச் சின்ன தவறுகளால் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து உறங்கும் போதே மயக்கம் வருகிறது,

ஃபாஸ்டிங்கில் சர்க்கரை அளவு அதிகமாக காண்பிக்கிறது. நான் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தும் சர்க்கரை அளவு குறையவே இல்லை என்று சிலர் புலம்புவதை பார்த்திருப்போம். நீரிழிவு நோய்க்காக இன்சுலின் உபயோகிப்பவராகவோ அல்லது மருந்துகள் எடுத்துக் கொள்பவராகவோ இருந்தால், சாப்பிட வேண்டிய உணவின் அளவைப் பொருத்து, மருந்தின் அளவை மருத்துவர் பரிந்துரைத்திருப்பார். ஆனால், இது நீங்கள் விரும்பும் அளவுக்கு சாப்பிடலாம் என்று அர்த்தமல்ல. விருந்து, விழாக்களில் இனிப்பு வகைகளை சாப்பிட்டுவிட்டு மருந்தோ, ஊசியோ போட்டுக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறு.

பிடித்த உணவை அறவே விட்டு விட வேண்டும் என்ற அவசியமில்லை. அதை சமைக்கும் முறையையும், உண்ணும் முறையையும் மாற்றி சாப்பிடலாம். உதாரணமாக மீனோ, உருளைக்கிழங்கோ உங்களின் விருப்பமான உணவு என்றால் அதை எண்ணெயில் வறுத்து சாப்பிடுவதற்கு பதில், வேகவைத்து சாப்பிடலாம். எதையும் அதிகமாக சாப்பிடாமல் அளவோடு சாப்பிடலாம். பாதாம், நிலக்கடலை, முளைகட்டிய பயறுவகைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

காலை இட்லி, தோசையோடு நிலக்கடலை சட்னி, பருப்பு சாம்பார், மதிய உணவில் பருப்பு, தேனீருடன் முளைகட்டிய பயறு என மூன்று வேளை உணவிலும் புரோட்டீன் சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் சேர்த்துக் கொள்வதில் கட்டுப்பாடே கிடையாது. கிழங்கு வகைகளைத் தவிர மற்ற எல்லா காய்களையும் அளவில்லாமல், வேகவைத்தோ, சாலட்டாகவோ சாப்பிடலாம். முக்கியமாக, நீரிழிவு நோயாளிகள் குரோமியம் மிகுந்த முழுதானியங்கள், பிரோக்கலி மற்றும் மீன் உணவு வகைகளை சேர்த்துக் கொள்வதால் இன்சுலின் சுரப்பை தூண்டி சர்க்கரையை கட்டுப்படுத்தும். மேலும், இரவில் வெந்தயத்தை ஊறவைத்து காலையில் வெந்தயநீர் அருந்தலாம். பட்டை கலந்த நீர், கருந்துளசி, வெந்தயம் போன்றவற்றுக்கு இயற்கையிலேயே இன்சுலின் சுரப்பை நிர்வகிக்கும் சக்தி உள்ளது.’’

மாதிரி உணவுத் திட்டம்

காலை எழுந்தவுடன் வெந்தய நீர்(இரவில் ஊறவைத்தது) – 200 மிலி நீருடன் 1 டீஸ்பூன் கலந்து பருகவும். காலை உணவாக ஓட்ஸ் இட்லி -2 (அ) தடிமனான தோசை – 1 (அ) முட்டை தோசை -1 (அ) காய்கறி ஊத்தப்பம் -1 (அ) பொங்கல் – 1 கப் சாப்பிடலாம். இதற்கு துணை உணவாக காய்கறிகள் சேர்த்த பருப்பு சாம்பார் – 1 கப் தயிர் (அ) கெட்டியான மோர் – 1 கப் எடுத்துக் கொள்ளலாம். சாப்பிட்டவுடன் 200 மிலி அளவு பட்டைத்தூள் கலந்த நீர் அருந்த வேண்டும்.

நண்பகல் (11 மணியளவில்) க்ரீன் டீ – 200 மிலி (எலுமிச்சைச் சாறு + பட்டைத்தூள் – 1 டீஸ்பூன், கொய்யாப்பழம் (அ) ஆப்பிள் (அ) அவகேடா – 1.
மதிய உணவுக்கு ப்ரவுன் அரிசி (அ) கைக்குத்தல் அரிசி – 100 கிராம் (வேகவைத்தது), காய்கறி பொரியல் – 1 கப், சாம்பார் (அ) சிக்கன் கிரேவி (அ) மீன் கிரேவி (அ) முட்டைப் பொரியல் – 1 கப், கீரை கூட்டு (அ) பொரியல் – 1 கப், தயிர் (அ) கெட்டி மோர் – 1 கப். சாப்பிட்டவுடன் 200 மிலி அளவு பட்டைத்தூள் கலந்த நீர் அருந்த வேண்டும்.

மாலை 3 மணிக்கு க்ரீன் டீ – 200 மிலி. மாலை 6 மணிக்கு வேகவைத்த நிலக்கடலை (அ) சுண்டல் – 1 கப் (அ) பாதாம், பிஸ்தா, வால்நட் இவற்றில் ஏதோ ஒன்று – 1 கைப்பிடி அளவு. இரவு உணவு (8 மணிக்குள்) சப்பாத்தி (அ) சிறுதானிய தோசை (அ) பருப்பு அடை – 2, காய்கறிகள் சேர்த்த குருமா (அ) சிக்கன் (அ) மீன் (அ) முட்டை(இவை எண்ணெயில் பொரிக்கப்படாமல் வேகவைத்தோ, பேக்கிங் செய்தோ இருக்கலாம்), தயிர் (அ) கெட்டி மோர் – 1 கப். இரவு சாப்பிட்டவுடனும் பட்டைத்தூள் சேர்த்த 200 மிலி நீர் அருந்த வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam