By 5 October 2018 0 Comments

திரைக்கடல் ஓடு தமிழிசை பாடு!!(மகளிர் பக்கம்)

தமிழ் இசையை உலக நாடுகளுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் சென்னையை சேர்ந்த ஆரோ ராபின் ஸ்டாலின், திலானி இணையர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பாட்டு சொல்லிக்கொடுக்கும் பயிற்சியாளராகத் தொடங்கிய இவர்களின் பயணம் தற்போது வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இணையம் வழிவகுத்துள்ளது. தமிழ் மொழி, தமிழர்களின் கலாசாரம், தமிழ் இசைக்கு இருக்கும் பண்பாட்டு தளம் போன்றவற்றை உலக நாடுகள் அறிய, மொழி கலப்பு இல்லாத தமிழ் இசையை “உலகத் தமிழிசை திருவிழா” என்று வெளி நாடுகளில் நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்து கொண்ட இசை இணையர்களிடம் அவர்களின் இசைப் பயணம் குறித்து பேசினேன். “இசைதான் எங்களின் உயிர் மூச்சு” என்று பேசத் துவங்கினார் திலானி. “நான் பிறந்துவளர்ந்தது எல்லாம் இலங்கையில். சிறு வயதிலிருந்தே தமிழ் இசை மீது எனக்கு ஆர்வம் இருந்தது..எங்கள் நாட்டில் 11 ஆம் வகுப்பிலே இசைக்கென்று தனிப்பாடப் பிரிவு இருக்கிறது. அதை நான் தேர்வு செய்து படித்தேன். பெரும்பாலானோர் இசைப் பாடத்தை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் எனக்கு யாரும் ஊக்குவிக்கவில்லை. எனினும் என்னுடைய அம்மாதான் என் மீது நம்பிக்கை வைத்தார்.

12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு சங்கீதம் கற்றுக்கொள்ள சென்னை இசைக்கல்லூரியில் சேர்ந்தேன். எங்களுடைய நாட்டில் உள்ள இசைக்கும், இந்தியாவில் இருக்கும் இசைக்கும் வேறுபாடு இருக்கிறது. நான் முழுமையான இசையை கற்றுக்கொண்டது இங்குதான். ஸ்டாலின் எனக்கு கல்லூரியில் சீனியர். நாங்கள் காதலர்களானோம். கல்லூரிப் படிப்பை முடித்ததும் நாட்டிற்கு சென்று பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் முடிந்து சென்னை வந்த பிறகு பொருளாதாரச் சிக்கல் அதிகம் இருந்தது. வீட்டிலே சங்கீதம் கற்றுத்தர முடிவு செய்து பயிற்சி வகுப்பு துவங்கினோம்.

ஸ்டாலின் குரல் பயிற்சி அளித்தார். நான் தமிழ் இசை, கர்நாடக சங்கீதம், திரை இசைப் பாடல் கற்றுக்கொடுத்தேன். சிலர் வீட்டிற்கு வந்து பாட்டு சொல்லிக் கொடுக்கச் சொன்னார்கள். அப்படிப் போகும்போதுதான் ஒருவர் எங்களுடைய உறவினர் கனடாவில் இருக்கிறார். அவருடைய குழந்தைக்கு ஆன்லைன் மூலம் கற்றுத்தரமுடியுமா? என்று கேட்டார். முதலில் அது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை இல்லை. முயற்சி செய்து பார்க்கலாம் என்று முயற்சி செய்தோம். அதில் வெற்றியும் பெற்றோம். அதன் பின் பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு பாட்டு கற்றுத்தரச்சொல்லி கேட்டனர்.

இப்போது கனடா, சுவிட்சர்லாந்து,ஆஸ்திரேலியா, மலேசியா, லண்டன், அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற இடங்களில் வாழும் தமிழர்களுக்கு ஆன்லைன் மூலம் அவர் குரலிசை பயிற்சி அளிக்கிறார். நான் தமிழ் இசை, கர்நாடக இசை, திரையிசைப் பாடல்கள் என பயிற்சி அளித்து வருகிறேன். வீட்டிற்குள் இருந்தும் ஆளுக்கு ஓர் அறையில் இருந்துகொண்டு பார்க்கக் கூட நேரமில்லாமல் பயிற்சி அளிக்கும் அளவிற்கு பணியில் தற்போது இருக்கிறோம்.

ஆண்டிற்கு இரு முறை அந்தந்த நாடுகளில் இருக்கும் பயிற்சி மாணவர்களை சந்தித்துவிட்டு வருகிறார் ஸ்டாலின். எல்லோரும் எல்லா இசையையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தமிழிசை மீது மிகுந்த ஈடுபாடு இருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. எங்களிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் அவரவர் நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாங்கள் கஷ்டப்பட்ட காலத்தில் எங்களை மீட்டு வந்தது தமிழ் இசைதான்” என்றார்.

இவரைத்தொடர்ந்து குரலிசை பயிற்சியாளர் ஆரோ ராபின் ஸ்டாலினிடம் பேசினேன்.“திரைப்படம் எடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். சங்கீதத்தின்மீது எனக்கு இருந்த ஆர்வத்தால் இசைக்கல்லூரியில் படித்துக்கொண்டே உதவி இயக்குனராக முயற்சி செய்துகொண்டிருந்தேன். இசைக்கல்லூரி முடித்தபிறகு திருமணம் செய்து கொண்டேன். ‘வெயில்’ பட உதவி இயக்குனர் சரவணனை சந்தித்து உதவி இயக்குனராக வேலை வேண்டும் என்று கேட்டேன். அவர் ‘முதலில் நான் உனக்கு ஒரு வேலை கொடுக்கிறேன்.
அதை முடித்துவிட்டு வா பார்க்கலாம்’ என்று சொன்னார். அவரின் உறவினரின் பெண் குழந்தைக்கு பாட்டு சொல்லித் தரச்சொன்னார் .நானும் தொடர்ந்து பயிற்சி கொடுத்தேன். சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த இசை நிகழ்ச்சியில் அந்தக் குழந்தை முதல் பரிசு வென்றது. இதை அறிந்ததும் சரவணன் சொன்னார், “உங்களுக்கு சினிமா வேண்டாம். சங்கீதத்தில் உங்களுக்கு நல்ல திறமை இருக்கிறது. நீங்கள் அதன் வழியே போங்கள்” என்றார்.

உண்மையில் அவருடைய அந்த வார்த்தைதான் இன்று குரலிசைப் பயிற்சியாளராகவும், இசைப் பயிற்சியாளராகவும் என்னை மாற்றியிருக்கிறது. தெரிந்தவர்கள், வீட்டிற்கு அருகில் இருந்தவர்களென குறைந்த எண்ணிக்கை கொண்ட குழந்தை களுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கத் தொடங்கினோம். இன்று ஆன்லைன் மூலம் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு பயிற்சி அளித்துவருகிறேன். வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழிசையை ஆர்வமாகக் கற்றுக் கொள்கிறார்கள். ஆண்டுதோறும் வெளிநாடுகளில் கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஆனால் தமிழ் இசையைப் போற்றும் விதமாக உலகத் தமிழ் இசை விழா ஒன்றை நடத்த திட்டமிட்டேன். தமிழ் இசையின் சீர்காழி மூவர் என்று சொல்லப்படும் முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்தேன். முதலில் லண்டனில் நடத்த வாய்ப்பு கிடைத்தது. லண்டனில் உள்ள தமிழ் இசை பயிற்றுவிப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களை ஒருங்கிணைத்தேன்.

அவர்களோடு கலந்து பேசி அவர்களின் ஒத்துழைப்போடு 2018 பிப்ரவரி மாதம் லண்டனில் உலகத் தமிழிசை திருவிழாவை நடத்தினேன். எதிர்பார்த்ததை விட தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் என 1000க்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை என் சொந்தப் பணத்திலே செய்தேன். நுழைவுக் கட்டணம் இல்லாமல் விழாவை நடத்தி முடித்தேன். என்னுடைய நோக்கம் தமிழிசையை உலக நாடுகளில் வளர்க்க வேண்டும் என்பதே தவிர பணம் சம்பாதிப்பதற்காக அல்ல.

லண்டனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உலகத் தமிழிசையை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் அனுமதி பெற்று 2018 ஏப்ரல் மாதத்தில் வெற்றிகரமாக நடத்தினேன். முதல் மேடை ஏறுகிறவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். பிற மொழிக் கலப்பு இல்லாத தமிழ்ப் பாடல்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம். 2018 ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் உலகத் தமிழ் இசைவிழாவை நடத்தினேன். நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தமிழர்களுடைய பாரம்பரியக் கலைகளான பறை இசை, நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறப் பாடல்களையும் அடுத்தடுத்து நடத்தப்படும் விழாக்களில் சேர்க்க திட்டமிட்டிருக்கிறேன். பறை இசை பயிற்சி பெறுவதில் வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் அதற்கான முன்னோட்டத்தை நாங்கள் பார்த்தோம். என்னுடைய எல்லாப் பணிகளுக்கும் என்னுடைய மனைவி உறுதுணையாக இருந்து வருகிறார். அவரின் உதவி இல்லாமல் என்னுடைய முயற்சி சாத்தியம் இல்லை.

தொடர்ந்து எல்லா நாடுகளிலும் உலகத் தமிழிசை திருவிழாவை நடத்தி அதன் மூலம் தமிழிசையை உலகறிய செய்யவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.அதுவே என் வாழ்கையை உயர்த்திய தமிழ் சங்கீதத்திற்கு நான் செய்யும் சிறிய பணி என்று எண்ணுகிறேன்” என்கிறார் ஆரோ ராபின் ஸ்டாலின்.Post a Comment

Protected by WP Anti Spam