கொசுக்களினால் பரவும் நோய்கள்!!(மருத்துவம்)

Read Time:5 Minute, 4 Second

உலகளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. அளவில் சிறியதாக இருக்கும் இவை உயிருக்கே உலை வைக்கும் தன்மை கொண்டவை. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் கொசுகடியால் நோய் வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள். மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு, மூளை அழற்சி, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் போன்ற பல்வேறு நோய் பாதிப்புகளை கொசுக்கள் ஏற்படுத்துகின்றன.

மலேரியா: இது ஒருவகை ஒட்டுண்ணி நோயாகும். இது அனோபிலீஸ் என்ற கொசு மூலம் பரவுகிறது. இந்த கொசுக்கள் வெப்ப மண்டல பிரதேசங்களில் உயிர்வாழும் தன்மை கொண்டவை. மலேரியா நோய் பாதிப்புக்கு காய்ச்சல்தான் தொடக்க அறிகுறியாக இருக்கும். சாதாரண உடல்நல பாதிப்பாகத்தான் ஆரம்பத்தில் தெரியும். பின்னர் தலைவலி, தசை வலி, குறைந்த ரத்த அழுத்தம், சுய நினைவை இழக்கும் நிலைக்கு ஆளாகுதல், கடும் குளிர் போன்ற அறிகுறிகள் தென்பட தொடங்கும். மெல்ல மெல்ல நோயின் தாக்கம் அதிகமாகி கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஸ்போரோசோயிட்டுகள் எனும் ஒட்டுண்ணிகள் ரத்த ஓட்டத்தில் ஊடுருவி சிவப்பு அணுக்களுக்கு பாதிப்பை உண்டாக்கிவிடும்.

டெங்கு: ஏடீஸ் வகை கொசுக்கள் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக இருக்கின்றன. இது தொற்றுநோய் வகையை சார்ந்தது. இந்த நோய் பாதிப்புக்கு ஆளானவரின் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள், மற்ற நபர்களை கடிக்கும்போது அவருக்கும் டெங்கு நோய் பாதிப்பு உண்டாக்கிவிடும். நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு மூட்டு மற்றும் தசை பகுதியில் கடும் வலி உண்டாகும். இது எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. வெப்ப மண்டல பகுதியில்தான் இந்த நோய் அதிகமாக பரவும். கொசு கடித்தாலும் 4 முதல் 7 நாட்களுக்கு பிறகுதான் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி கள் தென்பட தொடங்கும். கடுமையான தலை வலி, கண் வலி, குமட்டல், வாந்தி, மூட்டுவலி, மார்பு, முகம், கை, கால் போன்ற பகுதிகளில் வீக்கம், கடுமையான காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஆரம்பத்தில் நோய் தாக்கம் லேசாக இருக்கும். பின் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

சிக்குன்குனியா: ஏடீஸ் ஏஜிப்டி கொசுக்கள் இந்த நோயை பரப்பும் தன்மை கொண்டவை. கடுமையான மூட்டுவலி, உடல் வீக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். ஏறக்குறைய இந்த நோயும் டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்புகளை கொண்டிருக்கும். கொசு கடித்த 4 நாட்களுக்குள்ளே நோய்க்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். குமட்டல், வாந்தி, உடல் வீக்கம், ரத்த ஓட்டத்தில் பாதிப்பு, மலச்சிக்கல், தலைச்சுற்று, விரல்களில் குளிர்த்தன்மை, தொண்டை வலி, கடுமையான தலைவலி போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும்.

ஜிகா வைரஸ்: சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுகிறது. இரண்டு நாட்களில் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். மூட்டுவலி, காய்ச்சல், வீக்கம், தலைவலி, சோம்பல், விழி வெண்படல அழற்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

மூளை அழற்சி: இது கொசுக்களால் பரவும் ஒரு வகை வைரஸ் நோயாகும். இதன்மூலம் மூளைக்குச் செல்லும் மென்படலத்தில் வீக்கம் ஏற்படும். கடும் காய்ச்சல், கழுத்து விறைப்பு, வலிப்பு நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க மாட்டோம்!!(உலக செய்தி)
Next post புலியூரில் அடாவடி செய்த போலிஸை சுற்றி வளைத்து ஊர்மக்கள் சரமாரியான கேள்விகள் | திணறிய போலிஸ்!!(வீடியோ)