By 9 October 2018 0 Comments

குரல்கள் – வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு… என்ன சொல்கிறார்கள் பெண்கள்?(மகளிர் பக்கம்)

கிடுகிடுவென உயர்ந்துகொண்டே வருகிறது பெட்ரோல், டீசல் விலை. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத விலை ஏற்றத்தால் வெளி மாநிலங்களில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் லாரி ஓட்டுநர்கள் அவ்வப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளன. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். அன்றாடத் தேவைகளுக்காக உழைக்கும் கூலித் தொழிலாளிகள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கடுமையான பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறித்து சில பெண்களிடம் கேட்டேன்.

ஜூலியட், வங்கி ஊழியர்

“தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தியபோது இந்தக் கட்டணம் கொடுப்பதற்கு இருசக்கர வாகனமே வாங்கி விடலாம் என்று தோன்றியது. இதனால் மாதம் ஒரு தொகையை சேமிக்க முடியும் என்று திட்டமிட்டேன். இந்த ஆண்டுதான் புதிதாக ஒரு இருசக்கரவாகனம் வாங்க வேண்டும் என்றிருந்தேன். ஆனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை நெருங்கி இருக்கும் இந்தச் சூழலில் இப்போது வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். மாத வருமானத்தை பெட்ரோலுக்கே செலவிடவேண்டியிருக்கும் போலிருக்கிறது. வண்டி வாங்கவேண்டும் என்கிற ஆசையே இவர்களால் போய்விட்டது. இப்படி இரண்டு அரசுகளும் மாறி மாறி பகல் கொள்ளையில் ஈடுபட்டால் நாங்கள் என்ன செய்வது? கோடிக்கணக்கில் ஊழல் செய்து அரசு கஜானாவை காலி செய்துவிட்டு வரி என்ற பெயரில் மக்களைச் சுரண்டுவதுதான் ஜனநாயக அரசா? சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளைக்காரனுக்கு வரி செலுத்த முடியாது என்றுதான் சுதந்திர போராட்டம் தொடங்கியதாகப் படித்திருக்கிறோம். இன்றும் அதே நிலைதான் என்றால் இந்தக் கொள்ளைக்காரர்களுக்கு அந்த வெள்ளைக்காரர்கள் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.”

ப்ரிசில்லா கலைமுகில், இல்லத்தரசி

“பெரும்பாலானோர் இரு சக்கரவாகனத்தில்தான் வேலைக்கு செல்கிறார்கள். சிலருக்கு இருசக்கர வாகனம் இருந்தால்தான் வேலையே இருக்கும். அவர்களுக்கெல்லாம் இது பெரும் பிரச்சனையாக இருக்கும். அவர்களுக்கு மாத வருமானமும் குறைவாகத்தான் இருக்கும். இந்த சூழ்நிலையில் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொருளாதாரரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். பணக்காரர்களால் இந்த பிரச்சனையை ஓரளவு சமாளித்துக்கொள்ள முடியும் ஆனால் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இந்த விலை ஏற்றம் பெரும் சவாலாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.”

சத்யா, இல்லத்தரசி

“நேற்று விற்ற தக்காளி விலை இன்று இல்லை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளும் இப்படி விலை ஏறினால் எப்படி குடும்பம் நடத்துவது? “காய்கறிகள் நல்ல விளைச்சல். இருந்தும் டீசல் விலை அதிகமாக இருக்கு. நாங்க என்ன பண்ணுறது?” என்று கேட்கிறார்கள் கடைக்காரர்கள். வீட்டிற்கு அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றாலும் ஆட்டோ கட்டணம் அதிகமாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வீட்டு பட்ஜெட் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாதா மாதம் கிடைக்கும் சம்பளத்தை பெட்ரோலுக்கும், விலை ஏறிக்கொண்டேயிருக்கும் அத்தியாவசிய பொருள்களுக்கும் செலவழித்துவிட்டால் குழந்தைகளின் எதிர்காலத்திற்கென்று எங்களால் என்ன சேமித்து வைக்க முடியும்?டிஜிட்டல் இந்தியா, அப்படி இப்படினு ஏதேதோ திட்டங்களை சொன்னார்கள்.

இப்படி மக்களை துயரத்தில் தள்ளுவதுதான் இவர்களின் டிஜிட்டல் இந்தியா என்று இப்போதுதான் புரிகிறது. சமையல் எரிவாயு விலை அதிகரித்திருக்கிறது. இதனால் மாத குடும்ப பட்ஜெட் வருமானத்தை மிஞ்சியதாக இருக்கிறது. பணமதிப்பிழப்பு என்று நடு ரோட்டில் நிற்க வைத்து கொன்றார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மக்களை கடன் காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் திட்டம் வசதி படைத்த பண முதலாளிகளுக்குதான் பயனுள்ளதாக இருக்கிறதே தவிர ஓட்டு போட்ட ஏழை எளிய மக்களுக்கானதாக இல்லை. அவர்களின் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில்தான் மத்திய, மாநில அரசுகள் மக்களை வைத்திருக்கிறது.”

பார்கவி, சமூக செயற்பாட்டாளர்

“முதலாளிகளை மேலும் சந்தோஷப்படுத்த அரசாங்கம் உழைக்கும் வர்க்கத்தை வயிற்றில் அடிக்கும் திட்டம்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு. பணமதிப்பிழப்பு போலவே முன்னெப்போதும் இல்லாத திடீர் விலை உயர்வு என்பது மத்திய அரசின் மக்களுக்கு எதிரான திட்டங்களுள் ஒன்று. மீனவர்களின் தேசிய தொழிலாளர் சங்கங்களுடன் இணைந்து இருக்கும் என் போன்றவர்களுக்கு இத்தகைய பொருளாதாரத் திட்டங்களால் மீனவத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இடையூறு மற்றும் துயரங்களே கண்ணுக்குத் தெரிகின்றன. பெரும்பாலும் கார்டுகள் மூலமாக இல்லாமல், பணப்பரிவர்த்தனையில் தொழில் செய்யும் சிறு மீனவர்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மிக அதிகம் பாதிக்கப்பட்டனர். ஜிஎஸ்டி விதிப்பினால் இன்று நிலைகுலைந்து நிற்கும் மீனவர்கள் மற்றும் கடல் பாசி சேகரிக்கும் பெண்களை பற்றி யாரும் பேசுவதே இல்லை.

தற்போது டீசல் விலையை உயர்த்தி புயலாலும், மழையாலும், பருவநிலை மாற்றம், எண்ணெய்க் கசிவு போன்ற துயரங்களைக் கடந்து வந்தும் கூட கந்து வட்டிக் கொடுமையால் படகுகளை கடலில் இறக்க முடியாமல் தவிக்கின்றனர். சரக்கு பெட்டகத் துறைமுகம் போன்றவை கட்ட முதலாளிகளுக்கு நிதி உதவியும், கடன் மன்னிப்பும் கொடுக்கும் அரசாங்கம் உழைப்பாளி வர்க்கமான மீனவர்களுக்கு டீசல் விலை உயர்வு, ஜி எஸ் டி போன்ற கஷ்டங்களையே மென்மேலும் கொடுக்கிறது. இத்தகைய திட்டங்கள் சாதாரண மக்களையே வெகுவாக பாதிக்கிறது. தற்போதைய அரசு, தங்களுக்கு எதிராக பேசுபவர்களை தாக்கும் மனநிலையிலும், முன்னாள் ஆட்சியை குற்றம் சாட்டுவதுமாக மட்டுமே செயல்படுகிறது.”

மாலதி, கல்லூரி மாணவி

“இருக்கின்ற பிரச் சனைகளில் இது ஒரு வேறு புதுப் பிரச்சனையாக சேர்ந்து கொண்டிருக்கிறது. பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியபோது மாணவர்கள் ஒன்றிணைந்து போராடினார்கள். அதற்குக் காரணம் கல்லூரி கட்டணமே கட்ட வழி இல்லாதபோது பஸ்கட்டணம் கூடுதல் சுமையாக இருந்தது. அதே போலவே இன்று பெட்ரோல். டீசல் விலையும் ஒவ்வோர் ஏழை எளிய குடும்பங்களில் உள்ளவர்களுக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இன்றைய சூழலில் வீட்டிற்கு ஓர் இரு சக்கர வாகனம் என்றாகி விட்டது. என்றபோதிலும் இந்த விலை உயர்வு இரு சக்கர வாகனம் வைத்திருக்காதவர்களையும்கூட அதிகமாக பாதிக்கிறது. அத்தியாவசிய பொருட்களில் இருந்து, ஆடை அணிகலன் வரை அனைத்துப் பொருட்களின் விலையும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அதிகரித்திருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும்போது வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதாக சொன்னார்கள். அதில் ஒரு சதவீதம் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார்கள் என்று நாங்கள் கனவுதான் காண வேண்டும் போலிருக்கிறது. வேலை வாய்ப்பு இல்லை, போதிய வருமானம் இல்லை. ஆனால் விலைவாசி மட்டும் உயர்ந்து கொண்டே சென்றால் இந்த நாட்டில் வாழ்வது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. பொருளாதார வசதி இல்லாமல், அடிப்படை வசதி இல்லாமல் பெற்றோர் எப்படி தன் பிள்ளைகளை படிக்க அனுப்புவார்கள்? இதே நிலை நீடித்தால் இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கைதான் அதிகரிக்கும்.”Post a Comment

Protected by WP Anti Spam