By 16 October 2018 0 Comments

ஹெல்த் காலண்டர்!!(மருத்துவம்)

மனநல பிரச்னைகளைப் பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10-ம் நாள் உலகம் முழுவதும் சர்வதேச மனநல தினம் (World Mental Health Day) கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் 45 கோடி வரையிலான மக்கள் மனநல பிரச்னைகளால் துன்புற்று வருகின்றனர். இந்தியாவில் இளம் வயதினர், குழந்தைகள் உட்பட 15 லட்சம் மக்கள் கடுமையான மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம்.

ஒருவருடைய உணர்வு, சிந்தனை, செயல்படும் விதம் போன்றவற்றை மன நோய் பாதிக்கிறது. இதனால் மனநிலை, மனஒருமைப்பாடு, ஒருங்கிணைக்கும் ஆற்றல், தொடர்புகொள்ளுதல், கவனத்திறன் போன்றவற்றில் பிரச்னைகள் உருவாகின்றன. இதுபோன்ற மனநல பிரச்னைகள் தீவிரமடையும்போது அவர்கள் அசாதாரண நடத்தைகளுக்கு ஆளாகிறார்கள். அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு, கடுமையான உடல்நலக் கேட்டிற்கு உள்ளாகின்றனர். நாட்டின் அதிகமான மனநோய்ப் பளுவை கருத்தில் கொண்டு இந்திய அரசு 1982-ல் தேசிய மனநலத் திட்டத்தைத் தொடங்கி,செயல்படுத்தி வருகிறது.

மனநல பிரச்னைக்கான காரணிகள்

* மனக்கலக்கம், தனிமை, பழக்க வழக்கங்களால் ஏற்படும் நெருக்கடி, சுயமரியாதைக் குறைவு, குடும்பத்தில் மரணம் அல்லது மணவிலக்கு போன்ற சூழ்நிலைகளால் ஏற்படும் மன அழுத்தம்.

* விபத்து, காயம், வன்முறை, வன்புணர்ச்சி ஆகியவற்றால் உண்டாகும் உளவியல் அதிர்ச்சிகள்.

* மூளைக் காயம் அல்லது மூளைக் குறைபாடு, தொற்றால் உண்டாகும் மூளைச் சிதைவு.

* மது, போதைப் பழக்கம் மற்றும் மரபியல் பிறழ்ச்சிகள் போன்ற இவை அனைத்தும் மனநல பிரச்னைக்குரிய காரணிகளாக உள்ளது.

மனநோய் சமூகக் களங்கம் அல்ல மனநோயுடையவர்கள் முரட்டுத்தனமானவர்கள், பொது மக்களுக்கு ஆபத்தானவர்கள் என்கிற தவறான எண்ணம் நம்மிடையே உள்ளது. இத்தகைய எதிர்மறையான மனப்பாங்காலும் தவறான நம்பிக்கையாலும் மன நோயுடையவர்கள் சமூகப் புறக்கணிப்பை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதால் சமூகக் களங்கம் ஏற்படுகிறது.

மன நோயுடையவர்கள் பொது மக்களோடு தகுந்த முறையில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதால், அவர்களுக்கு இடையே உள்ள உறவு நிலை பாதிக்கப்படுகிறது. மனநோயை சமூகக் களங்கமாகப் பார்க்கும் எண்ணத்தை முறியடிப்பதற்கு, மனநோய் குறித்த சரியான புரிதல் மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

* சர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 12-ம் தேதி எலும்புத் தசை நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சர்வதேச மூட்டுவாத தினம் (World Arthritis Day) அனுசரிக்கப்படுகிறது. எலும்பு மூட்டுகளில் ஏற்படும் அழற்சியே மூட்டுவாதம். இந்நோய் 100 வெவ்வேறு வகையான மூட்டு நோய்களாக வெளிப்படுகின்றன. பொதுவாக எலும்புகளைச் சார்ந்திருக்கும் குருத்தெலும்புச் சிதைவால் ஏற்படுகிற எலும்பு மூட்டு வாதம் மற்றும் ஆரோக்கியமான மூட்டுத் திசுக்களை நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் தாக்குவதால் உண்டாகும் தன்தடுப்பாற்றல் நோய் என்கிற வாதமூட்டழற்சி போன்ற இருவகைகளில் இந்நோய் உண்டாகிறது.

பொதுவாக எலும்பு மூட்டுவாத நோய் முதியவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் கைகள், முழங்கால், முதுகெலும்பு போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக 15 சதவிகித மக்கள் (18 கோடி பேர்) இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டுகளில் வலி அல்லது மூட்டு வலுவிழந்து மென்மையாக இருத்தல், மூட்டுகளைச் சுற்றி விறைப்பு, வீக்கம் அல்லது சிவந்திருத்தல், மூட்டுகளின் இயக்கம் குறைதல், மூட்டுகளில் சிதைவு, உடல் எடை இழப்பும் களைப்பும், மூட்டுகளில் முறிவோசை கேட்பது போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக உள்ளது.

நோயின் ஆபத்துக் காரணிகள்

* குடும்பத்தில் யாருக்காவது இப்பிரச்னை இருந்திருந்தால் சில வகை மூட்டுவாத நோய் ஏற்படுகிறது.
* வயது கூடும்போது இந்நோயின் ஆபத்தும் அதிகரிக்கிறது.
* ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கே இந்நோய் அதிகமாக ஏற்படுகிறது.
* அதிக உடல் எடையானது முழங்கால், முதுகெலும்பு, இடுப்புப் பகுதிகளில் அதிக அழுத்தம் அளிப்பதால் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம் உள்ளது.
* ஏற்கெனவே மூட்டுக் காயம் உள்ளவர்களுக்கு அதே மூட்டில் வாதநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
* முழங்காலை மடக்கி அதிக நேரம் பணி செய்பவர்களுக்கு இந்நோய் ஆபத்து அதிகமாக உள்ளது.

மூட்டுவாத நோயாளிகள் பின்பற்ற வேண்டியவை

* பால், தயிர் போன்ற பால் பொருட்கள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை, அதிகக் காய்கறிகள் மற்றும் பழங்கள் என்று ஆரோக்கியமான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* உடல் எடையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது அவசியம். எனவே மருத்துவர் ஆலோசனைப்படி எளிய, அழுத்தம் அளிக்காத உடல் பயிற்சிகளோடு ஆரம்பித்து அவர் கொடுக்கும் உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றி தொடர் உடற்பயிற்சிகள் செய்யலாம்.

* மருத்துவர் பரிந்துரைப்படி மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். எண்ணெய் தேய்த்து நீவுதல், வலியைக் குறைக்க வெப்ப ஒத்தடம், வீக்கத்தைக் குறைக்க குளிர் ஒத்தடம் போன்றவற்றை 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம். எலும்பு மூட்டைச் சுற்றியுள்ள தசைக்கும் இணைப்புத் திசுக்களுக்கும் எண்ணெய் தேய்த்து நீவிவிடும்போது விறைப்பு குறைந்து, மூட்டு அசைவு அதிகரிக்கும்.

* மூட்டுகள் காயம்படாமல் பாதுகாக்க அடிக்கடி மூட்டுகளை மடக்கி உட்காருவதைத் தவிர்க்க வேண்டும்.

மூட்டுகளும் தசைகளும் விறைப்பாவதைத் தடுக்க உடல் அமர்வு நிலைகளை குறிப்பிட்ட இடைவெளிகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். மூட்டு வாதத்தை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும், அதனால் ஏற்படும் ஊனங்களைத் தவிர்க்கவும், கையாளவும் தற்போதைய மருத்துவத்துறை வளர்ச்சியானது பெரிதும் உதவுகிறது. மருத்துவத்தோடு, நம்பிக்கையும், நோயை எதிர்த்துப் போராடும் மனவலிமையும் நோயின் விளைவுகளை எதிர்கொள்ள மிகவும் அவசியம். எனவே, போதுமான பராமரிப்போடும், நம்பிக்கையோடும் இருந்தால் மூட்டுவாத நோயாளிகளும் நலமாக வாழலாம்.

* சர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15-ஆம் நாள் சர்வதேச கைகழுவுதல் தினம் (Global Hand Washing Day) கடைபிடிக்கப்படுகிறது. நோய்களைத் தவிர்த்து உயிரைக் காக்க சோப்பினால் கைகழுவும் ஓர் எளிமையான, மலிவான மற்றும் நல்ல பலனளிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய புரிதலையும், விழிப்புணர்வையும் அதிகரிப்பதே இந்த தினத்தின் முக்கிய நோக்கம்.பெரும்பாலான தொற்று கிருமிகள் கைகள் மூலமாகவே பரவுகின்றன.

பணியிடம் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து நாம் எடுத்து வரும் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை அடிக்கடி சரியான முறையில் கைகழுவுவதன் மூலம் அகற்ற முடியும். பெரும்பாலான தொற்று நோய்களை எளிய முறையான கைகழுவுதல் மூலம் தடுக்கலாம். கழிவறையைப் பயன்படுத்திய பின், குப்பையைக் கையாண்ட பின், சாப்பிடும் முன் போன்ற முக்கியமான நேரங்களில் கைகழுவுவதை ஒரு தொடர் பழக்கமாக மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

பல நோய்களும் தொற்றும் பரவாமல் தடுக்க மிகச்சிறந்த ஒரு வழியே கைகழுவுதல். எப்போதெல்லாம் கைகழுவ வேண்டும்?உங்கள் கைகள் அழுக்காக இருக்கும்போது, கழிவறையைப் பயன்படுத்திய பின், உணவைச் சமைக்க, பரிமாற, உண்ணத் தொடங்கும் முன், செல்லப் பிராணிகளையும் பிற விலங்குகளையும் தொட்ட பின், வெளிப்புற வேலைகளுக்குப் பின், நோயாளிகளைச் சந்திக்கும் முன்னும் பின்னும், இருமல், தும்மல், மூக்குப்பிடித்தப் பின், குப்பைக் கூடையைத் தொட்ட பின், காலணிகளைப் பாலிஷ் செய்த பின் பொதுப் போக்குவரத்தில் சென்று வந்த பின், ரூபாய் நோட்டுகளை எண்ணிய பின்னர் இதுபோன்ற எல்லா காரணங்களுக்காகவும் கைகளைக் கழுவுங்கள்.

கைகழுவும் முறை கைகளை நீரால் நனைக்கவும், போதுமான அளவுக்கு சோப்பிடவும், வலது உள்ளங்கையில் இடது உள்ளங்கையை வைத்து விரல்களைப் பின்னவும், விரல்கள் பிணைந்திருக்க உள்ளங்கைகளைத் தேய்க்கவும், அழுத்தி கைகளைத் தேய்த்து, எல்லா பகுதிகளையும் கழுவவும். உள்ளங்கை, மணிக்கட்டு, விரலிடுக்கு, நகத்தைச் சுற்றி நுரையைத் தேய்க்கவும். இடது பெருவிரலை வலது உள்ளங்கையால் பற்றி சுழற்றி தேய்க்கவும். இதே போல் மாற்றிச் செய்யவும். வலது கை விரல்களை மடக்கி இடது உள்ளங்கையால் பற்றி முன்னும் பின்னும் சுழற்றியும் பின் மாற்றியும் தேய்க்கவும்.

கைகளைக் கழுவி, ஒரே தடவை பயன்படுத்தும் சுத்தமான காட்டன் துண்டு கொண்டு துடைத்து, அந்தத் துண்டினைக் கொண்டே குழாயை மூடவும். இப்போது உங்கள் கைகள் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். ஆல்கஹால் சுத்திகரிப்பானைக் கொண்டு கைகழுவும் முறைஉள்ளங்கை நிறைய சுத்திகரிப்பானை எடுத்து கைகளின் எல்லா பகுதியிலும் பூச வேண்டும். கைகளை உள்ளங்கையில் தேய்க்க வேண்டும். வலது உள்ளங்கையை இடது புறங்கையின் மேல் வைத்து விரல்களைப் பின்னவும், இதையே மாற்றிச் செய்ய வேண்டும்.

உள்ளங்கைமேல் உள்ளங்கையை வைத்து விரல்களைப் பின்ன வேண்டும். இப்போது விரல்களின் பின்புறத்தை எதிர் உள்ளங்கையில் வைத்து விரல்களைப் பின்ன வேண்டும். இடது பெருவிரலை வலது உள்ளங்கையால் பற்றி சுழற்றி தேய்க்க வேண்டும். பின் இதேபோல் மாற்றிச் செய்ய வேண்டும். வலது கையின் விரல்களை மடக்கி இடது உள்ளங்கையால் பற்றி சுற்றித் தேய்க்க வேண்டும். பின் இதேபோல் மாற்றிச் செய்ய வேண்டும். கைகள் காய்ந்த பின் சுத்தமாக இருக்கும்.

அனைவரின் கவனத்திற்கு…

* நகத்தைக் குட்டையாக வெட்டுங்கள். நீளமாக வைக்க விரும்பினால் அழுக்குகள் சேராமலும் தொற்று பரவாமலும் இருக்கும்படி சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம்.

* தோல் உலராமல் இருக்க மென்மையான சோப்பைப் பயன்படுத்துங்கள். கையை உலர்த்த துடைப்பதை விடவும் ஒத்தி எடுப்பது நல்லது. ஈரப்பசை அளிக்கும் லோஷனை பயன்படுத்தலாம்.

* தண்ணீரோ, சோப்போ இல்லாதபோது நீரற்ற சோப்பும் கிருமிநாசினியும் சிறந்த மாற்று. அவை தற்போது திரவ வடிவில் சிறிய பேக்குகளிலும் கிடைக்கின்றன.

* கழிப்பறையைப் பயன்படுத்திய பின்னும், உணவைக் கையாளும் முன்னும் கண்டிப்பாக கைகழுவ வேண்டும்.

* சோப்பில்லாமல் வெறும் நீரால் கைகழுவுவதால் அதிக பலன் கிடைக்காது. இதனால் சரியான முறையில் கைகழுவுவதற்கு சோப்பும் சிறிதளவு
தண்ணீரும் போதுமானது.

* சோப்பால் கைகழுவுதல் என்பது நோய் தொற்றுகளைத் தடுத்து நமது உயிரைக் காப்பாற்ற உதவும் சிறந்த தடுப்புமுறை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சரியான முறையில் கைகழுவுவதால் நமது நாட்டின், வீட்டின் வரவு செலவில் எவ்வளவு பெரிய சேமிப்பு உண்டாகிறது என்பதை எண்ணிப்பார்த்து, இந்த சர்வதேச கைகழுவுதல் தினத்தில் இப்பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்கத் தொடங்குவோம்.Post a Comment

Protected by WP Anti Spam