செல்லுலாய்ட் பெண்கள் !!(மகளிர் பக்கம்)

Read Time:25 Minute, 20 Second

வாழ்க்கை, –சினிமா இரண்டையும் சவாலாய் எதிர்கொண்டு சாதித்த கே.ஆர்.செல்லம்

தன் மனைவியை விட்டு விட்டுக் கண் காணாமல் ஓடிப் போனான் ஒரு கணவன். திக்குத் திசை தெரியாத புதிய ஊரில் குழந்தைகளுடன் கலங்கி நின்ற அந்த எளிய கிராமத்துப் பெண்ணுக்கும் அவள் குழந்தைகளுக்கும் வாழ்வளித்தது ஒரு சினிமாக் கம்பெனி.

85 ஆண்டுகளுக்கு முன் இரண்டு குழந்தைகளுடனும் அழகான தன் மனைவியுடனும் சொந்த ஊரிலிருந்து பிழைக்க வந்த இடத்தில், அதிலும் சினிமாக் கம்பெனிக்குச் சொந்தமான ஒரு வீட்டில் தன் மனைவியை விட்டு விட்டுக் கண் காணாமல் ஓடிப் போனான் ஒரு கணவன். திக்குத் திசை தெரியாத புதிய ஊரில் குழந்தைகளுடன் கலங்கி நின்ற அந்த எளிய கிராமத்துப் பெண்ணுக்கும் அவள் குழந்தைகளுக்கும் வாழ்வளித்தது ஒரு சினிமாக் கம்பெனி.

தன் அழகாலும் திறமையாலும் அந்தப் பெண் ஒரு திரைப்பட நடிகையாகிப் பேரும் புகழும் பெற்றதுடன் தன் குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி, பின்னர் மீண்டும் திரைத்துறை சார்ந்த ஒருவரையே மறுமணம் செய்து கொண்டு 1960-கள் வரை ஏறத்தாழ 30 ஆண்டுகள் திரையில் நட்சத்திரமாக ஜொலித்தார் அந்த நடிகை. அவர் கனகவல்லி என்ற கே.ஆர்.செல்லம் குழந்தைப் பருவம் தொலைத்த கனகவல்லி தஞ்சை மாவட்டம் கம்பயநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ரங்கசாமி அய்யங்கார், சிதம்பரத்தில் பள்ளி ஆசிரியராக வேலை.

அவரின் இரண்டு மகள்களில் ஒருவர் கனகவல்லி; அக்கால பிராமண குல சம்பிரதாயப்படி 11 வயதில், படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டது. ஏழை வாத்தியார் ஏதோ தன் வசதிக்கு ஏற்ப தன் மகள்கள் இருவருக்கும் கல்யாணம் செய்து வைத்துக் ‘கரையேற்றித்’ தன் கடமையைச் செவ்வனே முடித்துக் கொண்டார். கனகவல்லி அதன்பின் குழந்தைப் பருவத்துக்கே உரிய இயல்பான குறும்புத்தனத்தையும் மகிழ்ச்சியையும் முற்றாகத் தொலைக்க வேண்டி வந்தது.

வேலையில்லாத, பொறுப்பில்லாத கணவன், கொடுமைக்கார மாமியார், உலகம் அறியாத வயதுக்குள் அடுத்தடுத்து இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகள் என்று துன்பக்கேணிதான் வாழ்க்கை. வறுமையின் கொடுமையால் வெளியில் சென்று பிழைக்கலாம் என்ற நோக்கத்தில் மனைவி கனகவல்லியையும் தன் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பம்பாயில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்குப் பயணப்பட்டார்கள். ஆனால், அங்கு வேலை எதுவும் கிடைப்பதற்கான வாய்ப்பில்லாததால், சுவற்றில் அடித்த பந்து போல் போன வேகத்திலேயே, மீண்டும் சென்னையை நோக்கித் திரும்பினார்கள்.
சென்னைப் பட்டணம் வந்தால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற ஆசை இருந்தது. சென்னப்பட்டணம் வந்து சேர்ந்தார்கள். இது நடந்தது 1935-ஆம் ஆண்டில். ஸ்டுடியோ கட்டும் நோக்கத்தில் உருவான சினிமா நிறுவனம் அதே ஆண்டில் தமிழ்த் திரைத் துறையிலும் சில பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ‘ஸவுத் இண்டியா ஃபிலிம் கார்ப்பொரேஷன் லிமிடெட்’ என்ற பெயரில் புதிதாக ஒரு சினிமா கம்பெனி உருவாக்கப்பட்டது. சென்னையில் திரைப்பட ஸ்டுடியோக்கள் அதிகம் இல்லாத காலம்.

பெரும்பாலான படங்கள் கல்கத்தாவுக்கும் பம்பாய்க்கும் சென்றே படமாக்கப்பட்டு வந்தன. அதனால் படத் தயாரிப்பு என்பது அதிகம் செலவு வைக்கக்கூடியதாய் இருந்தது. ஆனாலும், சினிமாவின் மீது கொண்ட தீராக் காதலால் அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல் செயல்பட்டு வந்தார்கள் சில சினிமா ஆர்வலர்கள். சென்னையில் சொந்தமாக ஒரு ஸ்டுடியோ கட்டுவது என்ற நல்ல நோக்கத்துடனே இந்தக் கம்பெனி தொடங்கப்பட்டது.

அதற்கான மூலதனத்தையும் சினிமாவின் மூலமே சம்பாதிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஒரு படம் தயாரித்து வெளியிடுவதும் அவர்களின் நோக்கமாக இருந்தது. அப்படி தயாரிக்கப்பட்ட படம் ‘கௌசல்யா.’இந்த நேரத்தில்தான் கனகவல்லியை அழைத்துக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தார் அவரது கணவர். ‘ஸவுத் இண்டியா ஃபிலிம் கார்ப்பொரேஷன் லிமிடெட்’ கம்பெனியில் பணியாற்றி வந்த ஒருவர் கனகவல்லியின் கணவருக்கு நண்பர். அவரின் தயவால், அந்தக் கம்பெனிக்குச் சொந்தமான வீட்டில் மனைவி,

குழந்தைகளுடன் தங்கிக்கொண்டு தினமும் காலையில் வேலை தேடி வெளியே சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம். பின்னர் வேலை தேடுவதே ஒரு வேலையாகவும் அன்றாட நிகழ்வாகவும் வாழ்க்கையும் ஆகிப் போனது. எவ்வளவு அலைந்து திரிந்தும் வேலை கிடைக்காமல் போகவே மனைவியையும் குழந்தைகளையும் அநாதரவாக விட்டு விட்டுக் கண் காணாமல் போனார் கணவர். பள்ளிப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத அந்தப் பெண், தன் இரு குழந்தைகளுடன் தனியாக மதராஸப் பட்டணத்தில் என்ன செய்வாள்? அழுது அரற்றத்தான் முடிந்தது அவளால்.

மனைவியைத் தனியாகத் தவிக்க விட்டுக் கணவன் விலகி ஓடிப் போவதும், மீண்டும் எப்போது திரும்பி வந்தாலும் மனைவி அவனை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதும் இங்கு நியதியாக, எல்லோராலும் ஏற்கப்பட்ட ஒரு விஷயமாக இருப்பது அனிச்சைச்செயல். நம் புராணங்கள், இதிகாசங்கள், ஏனைய காவியங்கள் அனைத்தும் அதை ஏற்றுக்கொண்டதுடன் பெண்கள் மீதும் ஏற்றி வைக்கப்பட்ட ஒரு ‘எளிய’ விஷயமாகவே பார்க்கப்பட்டது.

அதிலும் மனைவியுடன் குழந்தைகளையும் சேர்த்தே விட்டு விட்டுப் போனான் என்றால் அது, அப்பெண்ணின் தலையில் கல்லைக் கட்டிக் கிணற்றில் போட்டு விட்டுப் போன கதைதான். அப்படி நாம் ஏராளமான பெண்களை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறோம். தங்களால் இயன்ற ஏதோ ஒரு வழியில் சம்பாதித்துத் தன்னையும் தன் குழந்தைகளையும் காப்பாற்றிக் கரை சேர்ந்த பெண்கள் பலர் உண்டு. ஆனால், இதையே ஒரு மனைவி செய்தாளென்றால் இங்கு பெரும் பிரளயமே மூண்டு விடும்.

அவளுக்குப் பல பட்டப்பெயர்கள் சூட்டப்படுவதும் வாடிக்கை. அதன் பின் அந்தப் பெண் சாகும்வரை இந்தச் சமூகம் அவளை நிம்மதியாக வாழ விடாது. சுற்றி இருந்தவர்கள் முதலில் பரிதாபப்பட்டார்கள். பின் தங்களுக்குத் தெரிந்த தொழிலான சினிமாவில் சேர்ந்து நடிக்கும்படி சிபாரிசு செய்தார்கள். முதலில் கனகவல்லி அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. ஆறாத் துயரமும் பசியும் வறுமையும் சில நாட்களிலேயே அவரது மனதை மாற்றியதுடன், ‘சினிமாவில் நடித்தால் என்ன? குடியா முழுகி விடும்?’ என்ற எண்ணத்தையும் அவரிடம் தோற்றுவித்தது.

‘கௌசல்யா’ படத்தின் மூலம் புது வாழ்வு பெற்ற செல்லம் அப்போது தயாராகி வந்த ‘கௌசல்யா’ படத்தில் கருணையின் பொருட்டு கனகவல்லிக்கும் ஒரு வேடம் அளிக்கப்பட்டது. இப்போது போல் திருமணமானவுடன் கதாநாயகி அந்தஸ்து பறி போகின்ற காலமல்ல அது, படிப்பில்லா விட்டாலும், வறுமையில் உழன்றாலும், திருமணம் ஆகி குழந்தை குட்டிகள் பெற்றவராயிருந்தாலும் திரைத்துறை எல்லோருக்கும் வாழ்வளித்தே வந்துள்ளது. சினிமாவுக்காக கே.ஆர். செல்லமாக மாறினார் கனகவல்லி.

படம் வெற்றிகரமாக முடிந்து கெயிட்டி தியேட்டரில் வெளியானது. உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அந்தப் படம் ஒரு சில நாட்கள் மட்டுமே ஓடியதால் கம்பெனி மூடுவிழா கண்டது; ஸ்டுடியோ கட்டும் திட்டமும் கைவிடப்பட்டது. ஆனால், தோல்வியிலும் எதிர்பாராமல் கிடைத்த ஒரு வெற்றியாக, நஷ்டத்திலும் ஒரு லாபமாக ‘கௌசல்யா’ படத்தின் மூலம் கே.ஆர்.செல்லம் என்ற அழகான, திறமையான நடிகை தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்தார்.

செல்லம் வேறு சில நடிகைகளுடன் நட்பையும் தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டு, அடுத்தடுத்து பல சினிமாக் கம்பெனிகளில் வாய்ப்புக் கேட்டு நடிப்பைத் தன் முழு நேரத் தொழிலாக்கிக் கொண்டார். கே.என். மீனாட்சி என்ற நடிகை செல்லத்துக்கு உற்ற தோழியாகி அவருக்குப் பல பட வாய்ப்புகளைப் பெற்றுத் தர உதவியாக இருந்தார். குடும்பப் பெண்கள் நடித்த படமும் நீச்சல் உடை அறிமுகமும்‘கௌரவமான குடும்பப் பெண்கள் நடித்த படம்’ என்றெல்லாம் அக்காலகட்ட சினிமா போஸ்டர்களில் வாசகங்கள் புதிதாக இடம் பெற ஆரம்பித்தன.

இதன் மூலம், அதற்கு முன்பாகவே திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகைகளை ‘கௌரவமற்றவர்கள்’ என மறைமுகமாக இழிவுபடுத்தவும் முடிந்தது. அப்படியானால், அவர்களெல்லாம் குடும்பத்தில் இருந்து வராமல், எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை. யாருக்குத்தான் இங்கு குடும்பம் இல்லை? புராண இதிகாசக் கதைகள் மட்டுமே படமாகிக் கொண்டிருந்த நிலை மாறி, சமூகக் கதைகளும் படமாக்கப்பட்டு வந்த நேரம்.

தமிழ்ப் படங்களுக்குப் புத்துயிரூட்டிய முன்னோடி இயக்குநர் கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளியான ‘பால யோகினி’ படம் செல்லத்துக்கும் புது வாழ்வு அளித்தது. இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் செல்லம் நடித்திருந்தார். படமும் மிகப் பிரமாதமாக ஓடி சாதனை படைத்தது. ஆண்டுக்கொரு படம்தான் என்றாலும் தொடர்ந்து நடித்தார் செல்லம். 1938-ல் காடுகளில் எடுக்கப்பட்ட சண்டைகளும் சாகசங்களும் நிறைந்த படம் ‘வனராஜ கர்ஸான்’.

இது தமிழில் எடுக்கப்பட்ட முதல் கானக வாழ்க்கை பற்றிய படமும் கூட உடலின் முக்கால் பகுதி வெளியே தெரியும்படியாக நீச்சல் உடை அணிந்து கதாநாயகி செல்லம் உலவி வர, அதுவரை மனிதப்பிறவியையே கண்ணால் கண்டிராத கானகத்தில் வளர்ந்த கர்ஸான், பாய்ந்தோடி வந்து கதாநாயகியைத் தோளில் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் ஓடுவதும், அதை எதிர்த்துக் கதாநாயகி கை கால்களை உதைத்துக் கொண்டு தப்பிக்க முயல்வதும் என்று அந்தப் படத்தில் காட்சிகள் இடம் பெற்றதால், பத்திரிகைகள் ‘ஆபாசம், அநாகரிகம்’ என்று கர்ஸான் படத்துக்கும் கதாநாயகி செல்லத்துக்கும் எதிராகத் தங்கள் கண்டனத்தைக் காத்திரமாகப் பதிவு செய்தன.

வேறு வழியில்லாமல் கதாநாயகி கே.ஆர். செல்லம், படத்தின் கதை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டதாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. 1938- ஆம் ஆண்டிலேயே கதாநாயகிக்கு நீச்சல் உடை அணிவித்து அழகு பார்த்து அகமகிழ்ந்தது தமிழ் சினிமா.

அதன் பின் பத்திரிகைகளும் நீச்சல் உடை காட்சிகளுக்குப் பழகிப் போனதால், அது பற்றிப் பெரிதாகக் கண்டு கொள்ளப்படாத நிலை ஏற்பட்டது. கதாநாயகன் கர்ஸானாக நடித்திருந்தவர், இந்திப் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற ஸ்டண்ட் நடிகர் ஜான் கவாஸ். இதே ஆண்டில் வேறொரு முக்கியமான பிரச்சனை பற்றியும் ‘சில்வர் ஸ்க்ரீன்’ சினிமாப் பத்திரிகை தலையங்கம் எழுதியது. அதுதான் இன்றைக்கும் தீராப் பிரச்சனையாக இருக்கும் கதாநாயக, நாயகிகளின் ஊதியம் குறித்த கோரிக்கை.

தமிழ் சினிமாவில் இந்தப் பாலின ஏற்றத்தாழ்வு எக்காலத்திலும் ஒரே மாதிரியான நிலையில் மாறாமல் இருந்ததையே அந்தத் தலையங்கம் பிரதிபலித்தது. இப்போதும் இந்த ஊதியப் பிரச்சனையில் நாயகனுக்கும் நாயகிக்கும் பாரபட்சம் காண்பிக்கும் நிலை தொடர்வது வருத்தத்துக்குரியது.

தன் படங்களால் மக்கள் கவனத்தை ஈர்த்தார் கே.ஆர். செல்லம் நடிக்கத் தொடங்கியதிலிருந்தே, ஒவ்வோர் ஆண்டிலும் அவர் நடித்து வெளியான படங்கள் ஏதோ ஒருவிதத்தில் பரபரப்பு ஏற்படுத்துபவையாக, மக்கள் கவனத்தைக் கவர்ந்திழுப்பவையாகவே இருந்தன.

1939ல் வெளியான படம் ‘அதிர்ஷ்டம்’. இப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் என அனைத்துப் பொறுப்புகளையும் கவிஞர் ச.து.சுப்பிரமணிய யோகி ஏற்றிருந்தார். அவருக்கும் இப்படத்தின் மூலமே திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது. பத்திரிகைகளில் இப்படத்தின் விளம்பரம் தலைகீழாகப் பிரசுரிக்கப்பட்டு கவன ஈர்ப்பைப் பெற்றது. அதற்காகவே அப்படி பிரசுரிக்கும் உத்தியைக் கையாண்டார்கள்.

இப்படத்தில் இடம் பெற்ற ‘ஐயா, சிறு பெண் ஏழை என்பால் மனம் இரங்காதா…’ என்னும் பாடல் கிராமஃபோன் ரெக்கார்டுகள் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானதுடன், நாடெங்கும் உள்ள பிச்சைக்கார, பிச்சைக்காரிகளின் தேசிய கீதமாகவும் ஆனது. கே.ஆர். செல்லம் கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் தொடர்ச்சியாகப் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஜெமினி நிறுவனம் தயாரித்த ‘மதன காமராஜன் கதை’ அப்படியான ஒரு படம்.

ஃபாண்டஸி கதையான அப்படத்தில், ஆற்றில் தண்ணீர் எடுத்துச் செல்லும் பெண்களின் குடங்களை ராஜகுமாரன் அம்பினால் துளையிடுவதும், மந்திரி குமாரன் மீண்டும் அத்துளையினை அடைப்பதாகவும் காட்சிகள் ஆரம்பமாகும். ஏராளமான பெண்கள் ஆற்றிலிருந்து தண்ணீர்க் குடங்களைச் சுமந்து கொண்டு செல்லும் காட்சியில் அவர்களில் ஒருவராக செல்லம் நடித்திருந்தார். நகைச்சுவையான சந்தேகமெனும் பெரு நெருப்பு ஏ.வி.எம்.தயாரித்த ‘என் மனைவி’ நகைச்சுவைப் படத்தில் கே.சாரங்கபாணி யும் செல்லமும் கணவன், – மனைவியாக மிகப் பிரமாதமாக நடித்திருப்பார்கள்.

கணவனும் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொள்வதும் வேவு பார்ப்பதுமாகப் படம் முழுதும் ரசிகர்களை வயிறு நோகச் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மருத்துவர் சாதி, மத, மொழி வேறுபாடின்றி, காசு வாங்காமல் அனைவருக்கும் இலவசமாக வைத்தியம் செய்யும் காட்சிகள் அதிசயப்பட வைப்பவை. வசதியான வீடுகளில் வேலைக்காரப் பெண்கள் நடத்தப்படும் விதமும் மெல்லிய நகைச்சுவையுடன் விமர்சிக்கப்பட்டிருக்கும்.
அப்போதைய புதிய வரவுகளான ஏரோப்ளேன், வானொலி போன்றவற்றைப் பற்றி வேலைக்காரப் பெண் வியந்து பாடும் பாடலும், சமையற்காரர் சமையல் செய்த நேரம் போக, கொட்டாங்கச்சி வயலினை வாசித்துக்கொண்டே, ‘சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்’ என்று பாடுவதும், எஜமானருடன் கோபித்துக்கொண்டு ரேடியோவில் பாடப் போகிறேன் எனப் புறப்படுவதுமாக ரசிக்கவும் சிரிக்கவும் ஏராளம் காட்சிகள் உண்டு.
நகரத்தில் இருப்பதால், மனைவி ஓயாமல் ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறாள்.

அதனாலேயே நகரத்தை விட்டுத் தள்ளி கிராமத்தில் குடியேறியதாக சாரங்கபாணி சொல்வார். அந்த நாளின் சென்னையான மயிலாப்பூர் நகர வாழ்க்கையையும் அதிகம் நாகரிகமடையாத நகரை ஒட்டியிருக்கும் ‘கிராமப் பகுதிகளான’, கோடம்பாக்கம், சேத்துப்பட்டு என பல பகுதிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இன்றைக்கு இப்பகுதிகளை கிராமம் என்று சொன்னால் நம்பக் கூடியவர்கள் யார்?

இப்போதும் பார்க்கக் கிடைக்கும் படம் இது. தேவதாசி ஒழிப்பு முறை அமலுக்கு வந்த பின் வெளியான படம் என்பதால், தேவதாசிப் பெண்கள் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதன் மீதான விமர்சனம், சமூகத்தின் பார்வை என்ற பெயரில், நகைச்சுவையினூடே விஷ வித்தாகத் தூவப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் கச்சா ஃபிலிம் தட்டுப்பாடு இருந்ததால், நீளம் குறைத்துச் சிக்கனமாய் எடுக்கப்பட்ட படமும் கூட.

தமிழ்த்திரையில் களம் கண்ட சில நகைச்சுவை ஜோடிகள் அனைவரும் வெகு பிரபலம். என். எஸ்.கிருஷ்ணன் டி.ஏ.மதுரம், காளி.என்.ரத்தினம் சி.டி.ராஜகாந்தம், கொத்தமங்கலம் சுப்பு சுந்தரிபாய், கே.ஏ.தங்கவேலு எம்.சரோஜா, ஏ.கருணாநிதி – டி.பி.முத்துலட்சுமி இணையைப் போல கே.சாரங்கபாணி கே.ஆர். செல்லம் இணையும் நகைச்சுவையில் பேர் சொல்லும் ஜோடி.

48-ல் வெளியான ‘வேதாள உலகம்’ படம் இவர்களின் நகைச்சுவைக்கு ஓர் உதாரணம். நாட்டின் இளவரசி என்றாலும் அரைக்கிறுக்காக விழிகளை உருட்டி உருட்டிப் பேசியபடியே, இளவரசனாக நடித்த டி.ஆர். மகாலிங்கத்தின் மீது காதல் போதை ஏற ‘ராஜாக்குட்டி’ என்று கொஞ்சியவாறே துரத்துவதும், ஆனால் அவரோ இவரைக் கண்டு பதறிப் பதுங்குவதும், போகும் இடமெல்லாம் கதாநாயகனின் நண்பனான கே.சாரங்கபாணி தடுத்து இவரை எதிர்கொள்வதும் வேடிக்கையும் குறும்பும் நிறைந்த காட்சிகள்.

அந்தக் கால ‘லக்ஸ்’ சோப் மாடல் நகைச்சுவையோடு, குணச்சித்திர நடிகை யாகவும் பல படங்களில் நடித்துப் பெயரெடுத்தவர். அத்துடன் அன்று முதல் இன்று வரை ‘சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்’ எனப் பெயர் பெற்ற லக்ஸ் சோப்பின் அந்தக் கால மாடலாகவும் அறியப்பட்டவர். சினிமா கம்பெனியில் நிராதரவாகக் கைவிட்டுப் போன கணவர் மீண்டும் திரும்பி வராததாலும் தன் குழந்தைகள் மற்றும் தன் எதிர்காலத்தை எண்ணியும் கே.ஆர்.செல்லம் 1944-ல் எடிட்டர் பி.வெங்கட்ராமனை மறுமணம் செய்து கொண்டார்.

படிப்படியாக அம்மா, அக்கா, அத்தை வேடங்களுக்கும் மாறத் தொடங்கினார். 1954ல் வைஜெயந்தி மாலாவைக் கதாநாயகியாக்கி ஏ.வி.எம். தயாரிப்பில் மூன்று மொழிகளில் வெளியான ‘பெண்’ தமிழ்ப்படத்தில் கதாநாயகியின் தாயாக நடித்தார் செல்லம். அதன் பிறகும் 50களின் நடிகை என்று சொல்லும்படி பல படங்களில் தன் பங்களிப்பைச் செலுத்தினார். 60களுக்குப் பின்னர் திரையுலக வாழ்க்கையை விடுத்து முழுக்க முழுக்கக் குடும்பம், குழந்தைகள் என்று தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

கே.ஆர்.செல்லம் நடித்த படங்கள்

கௌசல்யா, வனராஜ கர்ஸான், பாலயோகினி, சூர்யபுத்திரி, மீரா, அதிர்ஷ்டம், மதன காமராஜன், என் மனைவி, பூம்பாவை, மகாத்மா உதங்கர், பக்த ஜனா, சகா, என் கணவர், ஒன்றே குலம், ஒரே வழி, தாய் உள்ளம், பெற்ற தாய், மெட்ராஸ் மெயில், வேதாள உலகம், வைரமாலை, ராஜி என் கண்மணி, கள்வனின் காதலி, மங்கையர் திலகம், மாதர் குல மாணிக்கம், கற்புக்கரசி, பாட்டாளியின் வெற்றி, ஜாதகம், வேலைக்காரன், மச்சரேகை, தெய்வ நீதி, பெண், எங்கள் செல்வி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை!!(வீடியோ)
Next post இவருக்கு ஒரு வாரத்துக்கு 3191 கோடியா !(வீடியோ)