By 21 October 2018 0 Comments

பேரம் பேசுமா கூட்டமைப்பு?(கட்டுரை)

தற்போதைய அரசாங்கம் 2015இல் பதவிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டுத் திட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவு வழங்கி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறையும் அவ்வாறு நடந்து கொள்ளுமா, என்ற கேள்வி, இப்போது பரவலாக எழுந்திருக்கிறது.

அரசியல் கைதிகளின் விடுதலையை முன்வைத்து, பாதீட்டுத் திட்டத்தை ஆதரிப்பதற்குப் பேரம்பேச வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளமை தான், இந்தக் கேள்விக்கான மூல காரணம்.

அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தான், பாதீட்டுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்க, தமது விடுதலையை முன்னிறுத்தி, அரசாங்கத்துடன் பேரம்பேச வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருந்தனர்.

அதற்குப் பின்னர், வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்தில், நடந்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடலிலும், அதே தீர்மானம் தான் எடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இணங்கினால் மாத்திரமே, பாதீட்டுத் திட்டத்தை ஆதரிப்போம் என்று, கூட்டமைப்பு நிபந்தனை விதிக்க வேண்டும் என்று, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருந்தார்.

அதற்குப் பின்னர், மாவை சேனாதிராசாவும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இணங்காவிடின், அரசாங்கத்தின் பாதீட்டுத் திட்டத்தை ஆதரிக்கப் போவதில்லை என்ற தொனிப்பட, ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம், அந்தக் கருத்து குடிகொண்டு இருப்பதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனும் கூட, யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். ஆனால், இரா.சம்பந்தனோ, அந்தக் கருத்துகளுக்கு ‘ஆப்பு’ வைக்கும் வகையில், மட்டக்களப்பில் கருத்து வெளியிட்டார். தற்போதைய அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவையை, அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

வடக்கு மாகாண முதலமைச்சர், ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனிடம், பாதீட்டுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு கோரப்பட்டது. ஆனால், அவர் அந்த வாக்குறுதியை வழங்க மறுத்து விட்டார். “கட்சியின் முடிவை மீறமாட்டேன்” என்றும், எனினும், “அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, அழுத்தங்களைக் கொடுப்பேன்” என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆக, பாதீட்டுத் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதா, என்ற விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது, இரண்டுபட்ட நிலையில் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

கடந்த 12ஆம் திகதி, ஜனாதிபதியைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், 17ஆம் திகதி இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைத் தருவார் என்று உறுதியளித்து இருப்பதாகக் கூறியிருந்தார். எனினும், கடந்த 17ஆம் திகதி நடந்த சந்திப்பிலும், வழக்கம் போலவே ஜனாதிபதி உறுதி ஒன்றைக் கொடுத்து, கூட்டமைப்பினரை அனுப்பியிருக்கிறார். “அடுத்தவாரம், பிரதமர், சட்டமா அதிபர் உள்ளிட்டோருடன் அமர்ந்து பேசி முடிவெடுப்போம்” என்று, அவர் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு, ஒரே இரவில் ஜனாதிபதியோ அரசாங்கமோ தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கை பொய்யானதாகவே தெரிகிறது. அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்பவர்களும் சரி, நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்பவர்களும் சரி, புனர்வாழ்வு அளித்து விடுவிக்க வேண்டும் என்று கோருபவர்களும் சரி, அனைத்து அரசியல் கைதிகளுக்கும், ஒரே நேரத்தில் விடுதலை கிடைக்காது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதில், அரசியல் பிரச்சினைகள், சட்டரீதியான சிக்கல்கள் என்று பல இருக்கின்றன. உதாரணத்துக்கு, நீதிமன்றங்களில் வழக்கு நடந்து கொண்டிருப்பவர்களை எழுந்தமானமாக விடுவிக்க முடியாது; தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களையும் கூட, அவர்கள் மேன்முறையீடு செய்திருப்பின் அதன் மீது தீர்ப்பளிக்கப்படும் வரை, அல்லது அந்த மேன்முறையீட்டை விலக்கிக் கொள்ளும் வரை, விடுவிக்க முடியாது. இப்படிப் பல்வேறு சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் தான், 107 அரசியல் கைதிகளின் விடுதலையும் ஒரே இரவில் நிகழ்ந்து விடும் சாத்தியம் குறித்து, கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.

எதுஎவ்வாறாயினும், கூட்டமைப்பின் தலைமையால், பாதீட்டுத் திட்டத்தை ஆதரிக்க, அரசியல் கைதிகளின் பிரச்சினையை முன்னிறுத்திப் பேரம்பேச முடியும். ஆனால், அதற்கு அரசாங்கமும் இணங்கி வருமா என்பதே கேள்வி.

“பாதீட்டுத் திட்டத்தை தோற்கடிப்போம்” என்று மஹிந்த ராஜபக்‌ஷ அணி கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது. அவர்கள் இப்படிச் சூளுரைப்பது, இதுதான் முதல் முறையன்று. கடந்த மூன்றரை வருடங்களாக, “ஆட்சியைக் கவிழ்ப்போம்”, “அரசாங்கத்தை மாற்றுவோம்” என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, அதை நம்பி, இந்த அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்ற கணக்குடன் பேரம் பேசச் செல்ல முடியாது. ஆட்சியைக் கவிழ்க்கும் முனைப்பு, ஒன்றிணைந்த எதிரணியிடம் இருந்தாலும், அவர்களுக்குப் போதிய ஆதரவு கிடைத்தால் தான், பாதீட்டுத் திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழும். கடந்த முறைகளில், பாதீட்டுத் திட்டத்துக்கு, மூன்றில் இரண்டு ஆதரவு கூடக் கிடைத்தது நினைவிருக்கலாம்.

தற்போதைய அரசாங்கம் கூட, நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் தான் இருக்கிறது. இப்படியானதொரு நிலையில், அரசாங்கத்திடம் போய் கூட்டமைப்பு பேரம்பேச முனைந்தால், யாரும் அவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டார்கள். ஏனென்றால், கூட்டமைப்பின் தேவை, அவர்களுக்கு இப்போதைக்கு இல்லை.

இது மாத்திரமன்றி, தற்போதைய நிலையில், அரசாங்கம் கவிழ்க்கப்படுவதை ஜே.வி.பியும் கூட விரும்பவில்லை. குறுக்கு வழியில் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வருவதற்கு, அது இடமளித்து விடும் என்பதை ஜே.வி.பி அறியும். “தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தி, மீண்டும் மஹிந்தவிடம் ஒப்படைக்கப்படுவதை, அனுமதிக்கமாட்டோம்” என்று சில நாட்களுக்கு முன்னர் விஜித ஹேரத் கூறியிருக்கிறார்.

2007ஆம் ஆண்டு பாதீட்டுத் திட்டத்தின் போது, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தோற்கடிக்கப்படும் ஒரு கட்டம் வந்தது. அப்போது ஜே.வி.பி தான், அரசாங்கத்தைக் காப்பாற்றியிருந்தது. அதுபோன்ற முடிவை, ஜே.வி.பி இன்னொரு முறை எடுக்காது என்பதற்கு, உத்தரவாதம் இல்லை.

பாதீட்டுக்கு ஆதரவளிப்பதாயின், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால், அதை முன்னிறுத்திப் பேரம்பேச முனையும் போது, அங்கே வெடிப்புத்தான் ஏற்படும்.

அதாவது, அரசாங்கத்தை வளைக்க முனையலாமே தவிர, அதை முறிக்க முனைந்தால், அதன் விளைவுக்கு கூட்டமைப்பும் முகம் கொடுக்க நேரிடும். அதை, இரா.சம்பந்தன் புரிந்து கொண்டிருக்கிறார். அவர், தற்போதைய அரசாங்கத்தை ஏன் பாதுகாக்க வேண்டும் என்று, விளக்கமளித்தது அதனால் தான்.

சரியோ, தவறோ, நடக்குமோ, நடக்காதோ, அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். அது தற்போதைய அரசாங்கக் காலத்தில் மட்டுமே சாத்தியப்படும் என்று இரா.சம்பந்தன் உறுதியாக நம்புகிறார்; அது அவரது நம்பிக்கை.அதில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய பல விடயங்கள் இருப்பதை, மறுக்க முடியாது.

அப்படியான நிலையில், அவர், தான் நம்புகின்ற ஒரு விடயத்தைக் கெடுக்கக் கூடிய காரியத்தில், இறங்குவார் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

அதேவேளை, சுமந்திரன் ஊடாக, அவர் இன்னொரு காயை நகர்த்துகிறார் என்றும் தோன்றுகிறது. “பாதீட்டுத் திட்டத்துக்கு எதிராக, வாக்களிக்க நேரிடும்” என அரசாங்கத்தை எச்சரிக்க வேண்டும் என்று, கூட்டமைப்புக்குள் வலியுறுத்தும் தரப்புகளின் குரலுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்க முற்படுவதே அது. உட்கட்சி ஜனநாயகமாக, சுமந்திரன் அதனை வெளிப்படுத்த முற்பட்டிருக்கிறார்.

யாழ்ப்பாண ஊடகவியலாளர் சந்திப்பில் சுமந்திரன் வெளியிட்ட சில கருத்துகள், நவீன அரசியல் உத்திகளை நோக்கி, கூட்டமைப்பு நகர்வதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

இன்றைய நவீன அரசியலில், ஒரு பண்பு இருக்கிறது. செய்த தவறை ஏற்றுக் கொண்டு, இன்னொரு வாய்ப்பைக் கோருவது. இது அரசியலில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் என்பன போன்ற புதிய ஒரு மாற்றமாகும். கூட்டமைப்பு நிறைவேற்றத் தவறிய விடயங்களைத் தமிழ் மக்களிடம் ஒப்புக்கொண்டு, வடக்கு மாகாண சபைக்கு, இன்னொரு வாய்ப்பைத் தருமாறு கேட்போம் என்று கூறியிருக்கிறார் சுமந்திரன்.

இவ்வாறான, மாற்று அரசியல் உத்திகளைக் கையாளக் கூட்டமைப்பு முற்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலையை முன்வைத்துப் பேரம்பேசும் விடயம் அவர்களுக்குச் சிக்கலானதே. பேரம் பேசுவதற்கான வாய்ப்பு வர வேண்டும்; அல்லது அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இந்த இரண்டும் கூட்டமைப்புக்குச் சாதகமாக இல்லாதபோது, மீண்டும் அரசியல் கைதிகளை முன்வைத்துப் பேரம் பேசத் தவறிவிட்டது என்ற கல்லெறிக்கு, கூட்டமைப்பு உள்ளாகப் போவது உறுதி.Post a Comment

Protected by WP Anti Spam