By 21 October 2018 0 Comments

ஆடை பாதி ஆரோக்கியம் மீதி!!(மகளிர் பக்கம்)

பண்டிகைக் காலம் நெருங்குகின்றது. போனஸ் தொகையும் வந்துவிடும். அடுத்தது என்ன? விளம்பரங்கள் உசுப்பேத்த விதவிதமாய் புதுத் துணிகள் வாங்க ஷோ ரூம்களுக்கு கிளம்பியாச்சா? ஒரு நிமிடம்.. இதோ உங்களுக்காகத்தான் இது.. புது ஆடை வாங்கியதும் முதல் வேலையே வாங்கியதை அணிவித்து, கண்ணாடி முன் அழகுபார்ப்பதுதான். தொடரும் அடுத்தடுத்த தினங்களில் வாங்கிய புத்தாடைகளைப் பயன்படுத்தத் தொடங்குவீர்கள்.

புதிதாய் வாங்கிய ஆடையின் மடிப்புக் கலையாமல் புதுசாய்..இன்னும் புதுசாய்.. அப்படியே போட்டு பார்ப்பது ஒரு சுகம் தான். ஆனால் அதன் பின்னிருக்கும் அபாயத்தை உணர்ந்தோமா? புதிய ஆடைகளை வாங்கியதுமே, துணிகளை அலசிக் காய வைத்து அதன் பிறகே அணிய வேண்டும். இதை நம்மில் யாருமே பின்பற்றுவதில்லை.

புதுத்துணி எடுத்ததுமே இரண்டு அல்லது மூன்று தடவைகளுக்கு மேலாகப் போட்டு பயன்படுத்திய பிறகே துவைக்க மனமில்லாமல் அரை மனதோடு வேண்டாவெறுப்பாய் துவைக்கப் போடுகிறோம். இது மிகவும் தவறான ஒரு செயல். எந்த உடையை நாம் தேர்வு செய்கிறோமோ, அது நம் கைகளை அடைவதற்கு முன், தயாரிப்புக் கூடாரங்களில் இருந்து புறப்படும்போதே நிறைய ரசாயனங்களை சுமந்தே கிளம்புகிறது.

அவை நம் சருமங்களில் படும்போது அலர்ஜி மட்டுமல்ல சரும நோய்களையும் கொண்டு வந்து சேர்க்கும். இது குறித்து ஆடை உற்பத்தித் துறையில் கால் நூற்றாண்டு கால்பதித்து, பெண்களின் இரவு உடைகளை வடிவமைத்து வரும் நிறுவனத்தின் உற்பத்தித் துறையில் உள்ள முத்துக்குமாரிடம் பேசியபோது, “துணி உருவாகுவதற்கு முன்பு நெய்ய பயன்படும் நூலில் பூஞ்சைகள் உருவாகாமல் தடுப்பதற்கும், துணியின் நிறம் மாறாமல் அப்படியே நீடித்திருக்கவும் நிறைய ரசாயனங்கள் சேர்க்கப்படும்.

இந்த ரசாயனங்களில் முக்கியமாகச் சேர்ப்பது அனிலின் மற்றும் ஃபார்மால்டிஹைடு. இவற்றைப் பயன்படுத்துவதாலேயே துணியின் நிறம் மாறாமல் புதிதாக அப்படியே இருக்கிறது. ஆனால் இவை இரண்டும் சருமத்திற்கு எதிராய் வினையாற்றும் ரசாயன அமிலங்கள் என்கிறார். நாம் தேர்ந்தெடுத்த ஆடை ஷோ ரூமிற்குள் வந்தபிறகு அதை குறைந்தது ஒரு இருபது நபராவது ட்ரையல் என்கிற வகையில் அணிந்து பார்த்திருப்பார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… பலர் அணிவித்து அழகு பார்த்த உடையில் அவர்களின் சருமத்தில் இருக்கும் எத்தனைவிதமான கிருமிகள் பரவியிருக்கும். ரசாயனமும் கிருமியும் கலந்த இந்தப் புத்தாடைகளை அப்படியே நாம் தொடர்ந்து அணிந்தால் நமது சருமம் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ளும்? சற்றும் யோசிக்காதீர்கள்..!? நீங்கள் எப்போது புத்தாடை அல்லது புதுத் துணி வாங்கினாலும் உடுத்துவதற்கு முன் நீரில் அலசுங்கள். வெயிலில் காயவையுங்கள். பிறகு பயன்படுத்துங்கள். உங்கள் சருமம் மட்டுமல்ல உடல் ஆரோக்கியமும் பாதுகாப்பாய் இருக்கும்” என்கிறார்.Post a Comment

Protected by WP Anti Spam