கூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது!!(கட்டுரை)

Read Time:13 Minute, 57 Second

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத் திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள்.

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நல்லாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றுக்கு, கூட்டமைப்பு ஆதரவளித்து வந்திருக்கின்றது.

அதுவும், பாதீட்டுத் திட்டம் போன்ற, மிக முக்கிய நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதும் கூட, கூட்டமைப்பு எந்தவித அழுத்தத்தையும் அரசாங்கத்துக்கு வழங்காது, ஆதரவளித்து வந்திருக்கின்றது. இது, தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவான அதிருப்தியையும் தோற்றுவித்திருக்கின்றது.

“மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில், அரசாங்கத்தின் பக்கம் 150க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்ற தருணத்தில், 16 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பு, பாதீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால், அதைத் தோற்கடித்துவிட முடியாது. மாறாக, பல முயற்சிகளுக்குப் பின்னர், தோற்றுவித்த புதிய அரசாங்கத்தை, நெருக்கடிக்குள் தள்ளுவதாகவே இருக்கும். அது, நாம் அடைய வேண்டிய இலக்குகளைத் தடுப்பதாகிவிடும்” என்கிற நிலைப்பாட்டை, இரா.சம்பந்தன் அவ்வப்போது கூறி வந்திருக்கின்றார்.

அதாவது, ராஜபக்‌ஷ அரசாங்கத்தை அகற்றுவதற்காக, கூட்டமைப்பு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு என்பது மிகப்பெரியது. அந்த அர்ப்பணிப்பின் கனதியாலேயே, நல்லாட்சி அரசாங்கம் உருவாகி இருக்கின்றது.

அப்படியான கட்டத்தில், அந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதும் கூட, தங்களுடைய தலையாய கடமை என்று, சம்பந்தன் நினைக்கிறார்; வெளிப்படுத்தியும் வருகின்றார்.

ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பதோடும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதோடும், சம்பந்தனினதும் கூட்டமைப்பினதும் பொறுப்பு முடிந்துவிட்டதா என்கிற கேள்வியை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வடிவில், தமிழ்த் தேசிய அரசியல் சூழல், எழுப்பி வருகின்றது.

ஒரு கேள்வி, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வடிவில் எழுப்பப்படுகின்றது என்றால், அந்தக் கேள்விக்கான பதில், நியாயபூர்வமானதாக வழங்கப்படவில்லை என்று அர்த்தம்.

அந்தக் கேள்வி, அரசியல் ரீதியாக எதிரிகளால் மாத்திரம் எழுப்பப்படும் ஒன்றாக இருந்தால்கூட, அதைத் தவிர்ப்பதற்கான காரணத்தை, ஒருவாறு புரிந்து கொள்ளலாம். ஆனால் கேள்வியானது, ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த மக்களால், கூட்டமைப்பைத் தமது தலைமையாகத் தேர்தெடுத்த மக்களால் எழுப்பப்படுகிறது.

அந்தக் கேள்வியை, எந்தவொரு தருணத்திலும் புறந்தள்ளிவிட்டு, தமிழர் அரசியலையோ, உரிமைகளையோ பற்றிப் பேசமுடியாது. அந்தக் கட்டத்தில், தீர்க்கமான முடிவுகளின் பக்கத்துக்குக் கூட்டமைப்பினர் நகரவேண்டி இருக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆயுட்காலம், அதிக பட்சம் இன்னும் ஆறோ ஏழோ மாதமாக இருக்கும். நவம்பரில் சமர்ப்பிக்கப்படவுள்ள பாதீட்டுத் திட்டமே, நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதிப் பாதீடாகவும் இருக்கும்.

அப்படியான கட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு, கூட்டமைப்பு சாதித்த விடயங்கள், அடைவுகள் குறித்து, மீளாய்வு செய்துபார்க்க வேண்டிய கடப்பாடு ஏற்படுகின்றது.

“ஆட்சி மாற்றத்துக்காக ஒத்துழைத்தோம்; சர்வதேசத்தோடு முரண்படாது, விடயங்களைக் கையாண்டிருக்கின்றோம்” என்கிற விடயங்கள் மாத்திரம், தமிழ் மக்களின் அரசியல், அபிவிருத்தி அடைவுகளை நிறைவேற்றப் போதுமானதா என்கிற கேள்வியைக் கூட்டமைப்பு, தனக்குள்ளேயே எழுப்ப வேண்டும். அதன் தார்மீகம் உணர்ந்து, ஒவ்வொரு நாளும் செயற்பட வேண்டும்.

ஆட்சி மாற்றத்தால் கிடைத்த ஜனநாயக இடைவெளியும் காணி விடுவிப்பு உள்ளிட்ட சில முன்நகர்வுகளும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை தான். ஆனால், அரசாங்கமாக, தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் படி, நல்லாட்சி அரசாங்கம் செயற்படவில்லை என்பதுதான் தொடரும் பிரச்சினை.

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தலின் போது, புதிய அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில், நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளப்போவதாக, மைத்திரியும் ரணிலும் கூறிக்கொண்டார்கள். அதைச் சம்பந்தனும் தமிழ் மக்களிடம் ஒப்புவித்திருந்தார்.

தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பில், புதிய அரசமைப்பு ஊடாக, குறிப்பிட்டளவான அடைவுகளை அடைந்துகொள்ள முடியுமென்று அவர் நம்பினார். ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னர், 19ஆவது திருத்தச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட சில விடயங்களைத் தவிர, அரசியல் தீர்மானங்களை எடுப்பது தொடர்பில், அரசாங்கம் பாரிய வெளிப்படுத்தல்களைச் செய்யவில்லை.

ஒரு கட்டத்துக்கு மேல், மைத்திரியும் ரணிலும் தங்களைப் பலப்படுத்துவது சார்ந்து சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். இந்தச் சிக்கலான நிலைமையைக் கூட்டமைப்பு, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இருவரிடமும் சரியான அழுத்தத்தைப் பிரயோகித்து, விடயங்களை நகர்த்தியிருக்க வேண்டும்.

ஆனால், வழக்கமாக சம்பந்தனின் விட்டுப்பிடிக்கும் அணுகுமுறையால், நிலைமை மோசமாகி இருக்கின்றது. அரசாங்கத்தை யார் காப்பாற்றுவார்களோ இல்லையோ, கூட்டமைப்பு, அதன் வழி நிற்கும் என்கிற நிலையை, மைத்திரியும் ரணிலும் உணர்ந்து விட்டார்கள்.

அதன்பின்னர், அவர்களுக்குத் தங்களைப் பலப்படுத்துவது மாத்திரமே, பிரதான விடயமாக மாறியது. அவர்கள், மேற்கொள்ள வேண்டிய முக்கிய அரசியல் தீர்மானங்களைக் கிடப்பில்போட்டு, அதிகார அரசியலைக் கையிலெடுத்துச் செயற்பட ஆரம்பித்தார்கள்.

புதிய அரசமைப்பு தொடர்பான நம்பிக்கையை, சம்பந்தனும் எம்.ஏ. சுமந்திரனும் இன்னமும் வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த நம்பிக்கை சார்ந்து, அவர்களுக்குள்ளேயே மிகப்பெரிய அவநம்பிக்கை உண்டு.

புதிய அரசமைப்புக்கான காலம் கடந்துவிட்டது; வாய்ப்புகள் தவறவிடப்பட்டுவிட்டன என்பதுவும் அவர்களுக்குத் தெரியும். ஆனாலும், அதையும் மீறி, அந்த நம்பிக்கையின் பக்கத்தில் நிற்கவேண்டி இருக்கிறது.

ஏனெனில், அரசியல் தீர்வு தொடர்பிலும், புதிய அரசமைப்புத் தொடர்பிலும், கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில், கூட்டமைப்பு வழங்கிய நம்பிக்கைகள், அளவுக்கு அதிகமாகும்.

2016க்குள் தீர்வு, 2017 தீபாவளிக்குள் தீர்வு என்று, சம்பந்தன் ஒவ்வொரு முறையும் தமிழ் மக்களிடம் வெளிப்படுத்தும் போது, அதை மிகப்பெரிய உறுதிப்பாட்டோடுதான் வெளிப்படுத்தினார்; அதையே சுமந்திரனும் வெளிப்படுத்தினார்.

ஆனால், காரணங்கள் சொல்லப்படாமலே, ஒவ்வொரு அரசியல் தீர்மானத்துக்கான வாய்ப்புகளும் காலந்தாழ்த்தப்பட்டன.

இன்றைக்கு, தமிழ் மக்கள் மத்தியில், நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் கூட்டமைப்பு மீதும் எழுந்திருக்கின்ற அதிருப்தி என்பது, இரண்டு வடிவங்களில் வருவது.
ஒன்று, அபிவிருத்தி சார்ந்த கட்டங்களிலானது.

மற்றையது, அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளாது, இழுத்தடிப்புச் செய்தமை/ செய்கின்றமை சார்ந்து வருவது.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, புதிய அரசமைப்பு உள்ளிட்ட விடயங்கள், அரசியல் தீர்மானங்களின் வழி வருபவை. இந்த விடயங்கள் சார்ந்து, ராஜபக்‌ஷ அரசாங்கத்தைக் காட்டிலும், சில முன்னேற்றகரமான நகர்வுகளை, நல்லாட்சி அரசாங்கம் செய்திருக்கின்றது. ஆனாலும், அவற்றின் முழுமையான பலன்கள் மக்களைச் சென்றடையவில்லை. என்பதுதான் பிரச்சினை.

“அரசியல் கைதிகள் என்று, யாரும் இல்லை” என, ஒவ்வொரு முறையும் நீதி அமைச்சர்களாக இருக்கின்றவர்கள் கூறுகிறார்கள். அது, மஹிந்த காலத்தில் மட்டுமல்ல, தற்காலத்திலும் தொடரவே செய்கின்றது.

பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அப்படியான நிலையில், விடயங்களைக் கையாள்வது சிக்கலானதுதான்.

குறிப்பாக, சட்டரீதியான விடயங்களையும் சேர்த்துக்கொண்டுதான், அரசியல் தீர்மானமொன்றை அரசியல் கைதிகள் விடயங்களில் எடுக்க வேண்டியிருக்கின்றது. ஆனால், அதற்கான கடப்பாட்டை, அரசாங்கம் வெளிப்படுத்தாமல், தென்னிலங்கையின் அரசியல் இழுபறிக்குள் சிக்கி, விலகியோடிக் கொண்டிருக்கின்றது.

இப்படியான கட்டத்தில், யாரைப் பற்றியும் எந்தவித அடிப்படைச் சிந்தனைகளும் இன்றி, அல்லாடும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதோ, அதற்கு ஆதரவளிப்பதோ, கூட்டமைப்பின் தலையாய பிரச்சினையல்ல. இப்போதாவது, மக்களின் எதிர்பார்ப்பை, வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு, கூட்டமைப்புக்கு உண்டு.

இருக்கின்ற சூழலில் இருந்து, இன்னொரு மோசமான சூழலுக்குள் நகர்ந்துவிடக்கூடாது என்கிற, சம்பந்தனின் நினைப்புச் சரியானதுதான். ஆனால், எந்தவித அடைவுகளும் இன்றி, அப்படியே தேங்குவதால், யாருக்கும் பலன் இல்லை. அதுவொரு குட்டையின் நிலையை ஏற்படுத்தும்.

மாறாக, இருக்கின்ற சூழலை,இன்னும் சிறப்பாக மாற்றும் கட்டத்தை நோக்கி, ஓடும் ஆற்றலுள்ள ஆறாக, கூட்டமைப்பு மாற வேண்டும். அதுதான் தற்போதைய ஒரே எதிர்பார்ப்பு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யோகா சுவாசகோச முத்திரை!!( மகளிர் பக்கம்)
Next post கலவியில் முத்தம்!!(அவ்வப்போது கிளாமர்)