சம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்!!(கட்டுரை)

Read Time:17 Minute, 48 Second

“தமிழர்கள், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஆயுதம் ஏந்தாமல், மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியை பின்பற்றியிருக்கலாம்” என, எதிர்க்கட்சித் தலைவவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் உரையாற்றும் போதே, அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.

இது, தமிழர்களின் பெயரால், பல தமிழ் ஆயுதக் குழுக்களால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் தொடரப்பட்ட, 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தையே நிராகரிக்கும் கூற்றாகும்.

ஆயினும், தமிழ்த் தரப்பினரிடமிருந்து, அதற்கு எவ்வித எதிர்ப்போ, மறுப்போ, ஆதரவோ தெரிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சாடிப் பேச, சந்தர்ப்பம் கிடைக்காதா என்று காத்திருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் போட்டியாளர்களாவது, அக்கூற்றைத் தமக்குச் சாதகமாகப் பாவித்ததாகத் தகவல்கள் இல்லை.

இக்கூற்றை எதிர்ப்பதாக இருந்தால், புலிகளின் ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்த வேண்டியிருக்கும்; அப்போராட்டத்தை ஆதரித்துக் கருத்து வெளியிட வேண்டியிருக்கும்.

புலிகள் மீண்டும் வர வேண்டுமென்று, கடந்த ஜூலை இரண்டாம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச நிகழ்ச்சியொன்றின் போது, பகிரங்கமாகக் கூறிய சிறுவர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். இப்போது அவர், கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிலவேளை, எவரும், சம்பந்தனின் கூற்றை எதிர்த்துப் பேசாதிருக்க, இதுவும் காரணமாக இருந்திருக்கலாம்.

சம்பந்தனின் கருத்தைப் போன்றதொரு கருத்தை, புலிகள் அமைப்பின் ஆலோசகராக இருந்த கலாநிதி அன்டன் பாலசிங்கமும், ஒரு முறை வெளியிட்டு இருந்தார். ஆனால், அது புலிகளின் முழுப் போராட்டக் காலத்தையும் நிராகரிப்பதாக இருக்கவில்லை.

புலிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் காலத்தில், அதாவது 2003ஆம் ஆண்டில், கிளிநொச்சியில் புலிகளின் நீதிமன்றத் தொகுதியொன்றைத் திறந்து வைக்கும் வைபவத்தின் போதே, பாலசிங்கம் அக்கருத்தை வெளியிட்டு இருந்தார்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, 1995ஆம் ஆண்டில், சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டு, ‘பக்கேஜ்’ என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை, புலிகள் ஏற்றிருக்கலாம் என்றே, பாலசிங்கம் அன்று கூறியிருந்தார்.

தற்போது போலவே, மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பரவலாக்கும் திட்டமாகிய அந்த ‘பக்கேஜ்’ ஊடாக, இலங்கையானது, பிராந்தியங்களின் ஒன்றியமாகக் குறிப்பிடப்பட்டது.

இந்தப் ‘பக்கேஜை’, அன்றைய அரசமைப்புத்துறை அமைச்சராகவிருந்த பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடன் இணைந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நீலன் திருச்செல்வமே வரைந்திருந்தார். கலாநிதி திருச்செல்வம், பின்னர் இந்தக் ‘குற்றத்துக்காக’, புலிகளின் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால், 1999ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

பாலசிங்கத்தின் மேற்படி உரையை அடுத்து, ‘புலிகள், கலாநிதி திருச்செல்வத்தை ஏன் கொன்றார்கள்’ என, டீ.பீ.எஸ். ஜெயராஜ் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில், சம்பந்தனின் கூற்று, இலங்கையில் தமிழர்கள் விடயத்தில் மட்டுமன்றி, பல நாடுகளில் வாழும், சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கியிருக்கும் திரிசங்கு நிலையிலான, பாரியதொரு நெருக்கடியையே கோடிட்டுக் காட்டுகிறது.

முட்டி மோதி, உரத்துக் கேட்காவிட்டால், எதுவும் கிடைக்கவும் மாட்டாது; முட்டி மோதினால், அது அழிவிலேயே முடிவடையும் என்பதே, அந்த இரண்டுங்கெட்ட நிலையாகும்.

சம்பந்தனின் கூற்று, புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்களைக் குறை கூறுவதாகவே, மேலோட்டமாகப் பார்க்கும் போது தெரிகிறது.

ஆனால், ஆயுதப் போராட்டம் பிழையென்றால், அதனால் இழக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான உயிர்களுக்கு, ஆயுதக் குழுக்கள் மட்டும்தான் பொறுப்புக் கூற வேண்டுமென்று, கூற முடியாது.

ஏனெனில், ஆயுதப் போராட்டத்துக்கான புறச்சூழலை, அரசாங்கமும் தமிழர் தரப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியுமே உருவாக்கின.

ஆயுதப் போராட்டமானது, தனித் தமிழ் நாட்டுக்கான கோரிக்கையின் தவிர்க்க முடியாத விளைவாகும். அதைச் சம்பந்தனே, 2012ஆம் ஆண்டு மே மாதத்தில், மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14ஆவது மாநாட்டின் போது, இவ்வாறு கூறுகிறார். “இந்த வகையிலேயே, எமது கட்சியும் அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணி, 1976ஆம் ஆண்டில், ‘தமிழ் ஈழம்’ என்ற தனி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தது. எமது கட்சியின் இந்த முடிவின் அடிப்படையிலும் எம்மை ஒரு பலம் வாய்ந்ததொரு நிலைக்குக் கொண்டு வருவதற்கும், வன்முறையை வன்முறையாலேயே எதிர்க்க முடிவெடுத்த தமிழ் இளைஞர்கள், ஆயுதக் குழுவாகக் கிளர்ந்தெழுந்தனர்”

1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதியன்று, தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் பெயர் மாற்றப்படுவதோடு நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தையே, சம்பந்தன் இங்கு குறிப்பிட்டிருந்தார். அதுதான், ஆயுதப் போராட்டத்துக்கு இட்டுச் சென்றதென, அவர் கூறியிருந்தார்.

அந்தத் தீர்மானத்துக்கு, நியாயமான காரணங்கள் இருந்தனவா, இல்லையா என்பதை ஆராய முனைவதாக இருந்தால், இப்போது அவ்வாறான காரணங்கள் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

எவ்வாறாயினும், அந்தத் தீர்மானத்தின் பிரகாரம், தனி நாட்டைக் காண்பதானது, சாத்வீகமான முறையில் முடியுமா என்ற கேள்வியும் எழுகின்றது.

உலகநாடுகள், சாத்வீகமாகப் பிரிந்து சென்ற வரலாறு இருக்கிறது. 1905ஆம் ஆண்டில், சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்தமை; 1991ஆம் ஆண்டில், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சோஷலிஸத்தைக் கைவிட்டதை அடுத்து, அப்பிராந்தியத்தில் இருந்த செக்கோஸ்லோவாக்கியா – செக் என்றும் ஸ்லோவாக்கியா என்றும் இரண்டு நாடுகளாகப் பிரிந்தமை ஆகியன, இதற்கு உதாரணங்களாகும்.

ஆனால், இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை இல்லை. இங்கு பிரிந்தால், பலாத்காரமாகவே பிரிந்துச் செல்ல வேண்டும். இருப்பினும், அது சாத்தியமா என்பது கேள்விக்குறியே.

அது, பிராந்தியத்தில் பூகோள அரசியல் யதார்த்தத்துக்கு ஏற்புடையதா என்ற கேள்வியும், ஆரம்பம் முதலே எழுப்பப்பட்டு வந்தது. அதாவது, இலங்கையில் தனித் தமிழ் நாடொன்று உருவாவதற்கு இந்தியா இடமளிக்குமா என்ற கேள்வி, ஆரம்பத்திலிருந்தே எழுப்பப்பட்டு வந்தது.

மேற்படி மட்டக்களப்பு மாநாட்டின் போது, சம்பந்தன் அதைப் பற்றியும் இவ்வாறு கூறுகிறார். “எமது அரசியல் போராட்ட வரலாற்றில், இந்தியாவின் தலையீடு தவிர்க்க முடியாததொன்றாகியது. எமது அபிலாஷைகள் எவையாயினும், இலங்கையில், இந்தியாவின் நலன்களுடன் இசைந்து போகாத அரசியலொன்றை, இந்தியா ஒருபோதும் வரவேற்காது”

அவ்வாறாயின், மிதவாத அரசியல் தலைவர்கள், அவ்வாறானதோர் அரசியல் முடிவை, அன்று ஏன் எடுத்தார்கள்?

1970ஆம் ஆண்டுக்குப் பின்னர், இரு பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையே தமிழ் அரசியல் கட்சிகளுக்கான ‘கிராக்கி’ இல்லாமல் போனமையே காரணமென, சீனா சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த காலஞ்சென்ற என். சண்முகதாசன், ஒரு முறை கூறியிருந்தார்.

அதாவது, 1970ஆம் ஆண்டுக்கு முன்னரான ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசாங்கத்தை அமைக்க, ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், கடும்போட்டியில் ஈடுபட்டன. அந்த நிலையில், தமிழ்த் தலைவர்களின் உதவியை, ஐ.தே.க நாடி நின்றது.

ஆனால், 1970ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது, வரலாற்றில் முதன் முறையாக, ஸ்ரீ ல.சு.க உள்ளிட்ட ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி, மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன், ஆட்சியை அமைத்தது. தமிழ்த் தலைவர்களின் ஆதரவு கிடைத்தாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு, அதனால் பயன்பெற முடியாத நிலை உருவாகியது.

எனவே, தமிழரசுக் கட்சிக்கு இருந்த ‘கிராக்கி’ இல்லாமல் போய்விட்டது. அந்தநிலையில், தம்மீது கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே, தமிழ்த் தலைவர்கள், பிரிவினைவாதத்தைத் தூக்கிப் பிடித்தனரென, சண்முகதாசன் வாதிட்டார்.

அந்த வாதம், சரியோ பிழையோ, பிரிவினைவாதத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, 1977ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது, அதைப் பிரதான சுலோகமாகப் பாவித்து, தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதற்குத் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவும் கிடைத்தது.

ஆனால், தமிழீழத்தை அடைய, அதற்கு அப்பால் மிதவாதத் தலைவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. இந்த நிலையிலேயே, மிதவாதத் தலைவர்களால், உணர்ச்சி வசப்படுத்தப்பட்ட இளைஞர்கள், வேகமாக ஆயுதத்தின் பக்கம் திரும்பினர்.

அவர்கள், மிதவாதத் தலைவர்களுக்குத் துரோகிப் பட்டத்தையும் சூட்டினர். தர்மலிங்கம், ஆலாலசுந்தரம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், தங்கத்துரை என்று பல மிதவாதத் தமிழ்த் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

பின்னர், 2000ஆம் ஆண்டில், ஏதோ ஒரு சக்தி தலையிட்டதால், மிதவாதத் தலைவர்களுடன், புலிகள் ஓரளவு இணக்கமாகச் செயற்பட முன்வந்தனர்.

அந்த மிதவாதத் தலைவர்களும், தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள், புலிகள்தான் என ஏற்றுக்கொண்டனர். அதுவரை, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சந்திரிகாவின் சகல திட்டங்களையும் எதிர்த்து வந்த ஐ.தே.க, நோர்வேயின் மத்தியஸ்தத்துடன், புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, சந்திரிகா முற்பட்ட போது, அதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தது.

அரசியல் களத்தில், இந்தப் பாரிய மாற்றங்கள், ஒரு சில மாதங்களுக்குள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அன்று முதல், 2009ஆம் ஆண்டில் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்படும் வரை, தமிழரசுக் கட்சி உள்ளிட்ட, பல தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், ஆயுதப் போரில் ஈடுபட்டு வந்த புலிகளை, தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர்.

எனவே, “ஆயுதப் போரில் ஈடுபடாதிருந்திருக்கலாம், காந்திய வழியில் போராடியிருக்கலாம்” எனச் சம்பந்தன் இப்போது கூறும் கருத்தானது, ஆயுதப் போரில் ஈடுபட்டவர்கள் மீது, குறை கூறுவதாக இருந்தால், அது நியாயமில்லை. அந்த ஆயுதப் போருக்கான பொறுப்பை, மிதவாதத் தலைவர்களும் ஏற்க வேண்டும்.

இப்போது பிரச்சினை என்னவென்றால், நாம் ஏற்கெனவே கூறியதைப் போல், உலகின் பல நாடுகளில், சிறுபான்மை மக்களுக்குத் தமது உரிமைகளை வென்றெடுக்கவும் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் பொருத்தமான போராட்ட வழிமுறையொன்று இல்லாதிருப்பதே ஆகும்.

அஹிம்சை வழிப் போராட்டங்களை, ஆட்சியாளர்கள் அனேகமாகப் பொருட்படுத்துவதில்லை. அவர்கள், பேரினவாதச் சக்திகளின் கைதிகளாக இருப்பதே, அதற்குக் காரணமாகும்.

போரில் வெற்றி பெற்ற அரசாங்கம், அடுத்ததாகத் தமிழ் மக்களின் மனதை வென்றெடுக்க வேண்டுமென, எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையில், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை என்று வரும் போது, மிகவும் மந்தகதியிலேயே அவர்களின் கைகள் இயங்குகின்றன.

அதற்காக, உரிமைகளை வென்றெடுக்க வன்முறைப் போராட்ட வடிவத்தைத் தேர்ந்தெடுக்கவும் முடியாது. அது, பேரழிவிலேயே முடிவடையும்.

ஆயுதப் படைகளின் பலம், அனுபவம் மட்டுமல்ல, பூகோள அரசியல் நிலைமைகளும் அதற்குக் காரணமாகின்றன. இதுவே யதார்த்தம்.

இந்த நிலையிலேயே, தமிழ்த் தலைவர்கள், தேசியக் கட்சிகளுடன் இணைந்து, அக்கட்சிகளுக்குள் பேரம் பேச வேண்டுமென்ற கருத்து, தற்போது முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழ் மக்கள், அவ்வாறானதொரு நிலைமையை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்குலகின் மையம் !!(மகளிர் பக்கம்)
Next post செக்ஸ் அடிமை!!(அவ்வப்போது கிளாமர்)