சாத்தானாகும் கடவுள்!!(மருத்துவம்)

Read Time:13 Minute, 3 Second

அலைபேசியால் மனித வாழ்வே இன்று அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. மனிதனின் ஒப்பற்ற இந்த கண்டுபிடிப்பு தீட்டின மரத்தையே பதம் பார்த்துக் கொண்டிருப்பதை தாமதமாகத்தான் உணர்ந்திருக்கிறோம். இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எல்லாவற்றுக்கும் இந்த போன்தான் காரணம் என்று சொல்வதை கேட்க முடிகிறது.

மனநலத்திற்கும், இன்னும் பிற போதைப் பழக்கங்களிலிருந்து வெளிவருவதற்கும் மன நல ஆலோசனை பெறுவதைப் போலவே அதிகப்படியாக ஸ்மார்ட்போன் உபயோகிப்பதிலிருந்து வெளிவரவும் ஆலோசனை கேட்டு வருவோர் சமீபத்தில் அதிகரித்துள்ளனர். இதில் ஆண், பெண், வயது என எந்த பாரபட்சமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

ஸ்மார்ட்போன் இல்லாத நிமிடத்தை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. சில நிமிடங்கள் காணாமல் போனதுபோல் தோன்றினாலும் கை, கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது. சமீபத்தில் பெங்களூருவில் தன்னுடைய செல்போனை மனைவி எடுத்துவிட்டார் என்பதற்காக அவரது கையையே கணவர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆவடியில் கல்லூரி மாணவி ஒருவர் மொபைல் தொலைந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இப்படி மனிதனுக்கு உதவி செய்ய கடவுளாக வந்த செல்போன் இன்று, மனிதனையே அழிக்கும் சாத்தானாக பல இடங்களிலும் மாறிக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
உளவியல் ஆலோசகர் லீனா ஜஸ்டினிடம் பேசினோம்…

‘‘உடலின் வெப்ப அளவை வைத்து நிலைத்தன்மையை கணக்கிடும் ஒரு டிகிரி கூடினால் காய்ச்சல் என்கிறார் மருத்துவர். அதுவே தொடர்ந்து நீடிக்குமானால், குறிப்பிட்ட நோயைச் சொல்லி நோயாளி என்கிறார். இதேதான் செல்போன் உபயோகத்திலும் நடக்கிறது.

தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே உபயோகித்து வந்த போன், இன்று உட்கார்ந்த இடத்திலேயே பங்கு சந்தை முதல் பதவி நாற்காலி வரை எத்தனை பெரிய டீலையும் முடிக்க முடியும் அளவுக்கு முக்கியத்துவம் நிறைந்ததாகிவிட்டது. கொஞ்ச கொஞ்சமாய் நம்மை நீயின்றி நானில்லை என சொல்ல வைத்ததோடு, பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து, யூ டியூபைப் பார்த்து பிரசவம் செய்யும் அபாய கட்டத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

செல்போனால் கதிர்வீச்சு பாதிப்பு, கண்ணுக்கு கெடுதல் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டபோது, அலட்டிக்கொள்ளாத நாம், அது நம் தனிப்பட்ட வாழ்வை தாறுமாறாக்கி போடுவதை கண்டதும்தான் அலறி அடித்து விழித்துக் கொண்டிருக்கிறோம். அது அற்புதமான மனித உறவுகளையெல்லாம் சத்தமேயில்லாமல் அழிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

கூடவே, தேவையற்ற உறவுகளை மிஸ்டு கால்களாலும், வாட்சப் மெசேஜ்களாலும் வளர்த்துக் கொண்டிருக்கிறது. மனிதகுலம் இதுவரை கண்டிராத ஆபாசங்களின் உச்சங்களையெல்லாம் தொட்டுக் கொண்டிருக்கிறது. கையடக்க ஆண்ட்ராய்டு போன்கள் பலருக்கும் தங்கள் ஆபாச வடிகாலாகவே மாறிப்போனது. இதன் விளைவுகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் பார்த்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

கவுன்சிலிங் வருபவர்கள், ‘இந்த போனை பார்க்கவே அருவெறுப்பாக உள்ளது, என் வாழ்க்கையையே இது கெடுத்து விட்டது, பேசாமல் செத்துவிடலாம் என நினைக்கிறேன்’ என்பார்கள். அந்த செல்போன் நானா காரணம் என்று சொல்வது போல் சமர்த்தாக அவரது கைக்குள் இருக்கும். மனதைத் தொட்டு சொல்லுங்கள் அது செல்போனால் வந்த வினையா? என்று கேட்டால், மெதுவாக, இல்லைதான். ஆனால்… என இழுப்பார்கள்.

இன்னும் பல கண்டுபிடிப்புக்கள் வரத்தான் போகிறது. நமக்கு எது வேண்டுமோ அதை விடுத்து வேண்டாததை தேர்ந்தெடுத்தால் அதற்கு யார் பொறுப்பு? முறையான தேவையுடன் கையாளவும், சரியான நபருடன், அளவான கால அளவில் அளவளாவவும் மற்றும் தகவல்களை கவனமாக பரிமாறிக் கொள்ளத் தெரியாமல், நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகளே குடும்பத்தினரிடையே ஏற்படும் மனப் பிரச்னைக்கும், சமூக கேட்டிற்கும் வழிவகை செய்கிறது.

ஸ்மார்ட்போனுக்கு முந்தைய தலைமுறை தனிமையை நேசித்தது, அந்தத் தனிமையிலும் தன்னோடு கூட, தான் சார்ந்த சமூகத்தையும் யோசித்தது. வரம்பு மீறும் சந்தர்ப்பங்கள் வாய்த்ததேயில்லை அப்படியே நேர்ந்தாலும், அது இலைமறை காயாய் குடும்பத்தினரிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. எல்லோருக்கும் நலம் தரும் ரகசிய முடிவுகள் வெளியாட்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டது.

தன் சுக துக்கங்களை வாட்ஸ் அப் டிபியில் வைத்து, உலகறிய செய்யப்படவில்லை. அப்போது நம் வாழ்வும் சந்தோஷத்துடன் இன்னும் கௌரவமானதாக இருந்தது. வாழ்வியலில் ஒரு கட்டுக்கோப்பு இருந்தது. அதன் விளைவு சமூக கட்டமைப்பிற்கு ஒத்த சிந்தனை, வாழ்க்கை முறை அவர்களுக்கு எளிதாக சாத்தியமாயிற்று.

இன்று சில நிமிட தனிமைக்குக் கூட ஏதோ பால் மறந்த குழந்தையை போல அவசர அவசரமாக போனைத் தேடுகிறோம். மருத்துவமனையோ, சாவு வீடோ, பிரசவ அறையோ எதைப் பற்றியும் கவலையில்லை. பிணத்தின் முகத்தோடு முகம் வைத்து ஒரு செல்ஃபி்; மரணத்தருவாயில் இருப்பவரோடும் செல்ஃபி; உடனடியாக டிபி எதிரில் இருப்பவரிடம் பேசும் போது கிடைக்கும் சந்தோஷத்தை விடவும், எங்கோ இருப்பவரிடம் பேசி மகிழ்வதில் விருப்பமுள்ளவர்களாக படிப்படியாக நம் மூளையை பழக்கப்படுத்தி கொண்டுவிட்டோம்.

அந்த நபர் நேரில் வந்தால், நாம் அப்படி பேசுவதில்லை. ஆனால், போகும்போது மறக்காமல் போன் செய்வதாக சைகை செய்கிறோம்.
வேறொன்றுமில்லை, தனிமையை நிர்வகிக்கத் தெரியாமல், த(டு)டம் மாறிக் கொண்டிருக்கிறோம். எதிரே சொல்ல முடியாததை எழுத்தால் சொல்லி மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறோம். படு மோசமான ஒரு உளவியல் கலாச்சாரம்.

அன்பையும் எமோஜி மூலம் சொன்னால்தான் எதிராளி புரிந்து கொள்வார் என நம்புகிறோம். சாதாரண அரட்டை அடிப்பதில் தொடங்கி போகப்போக அந்தரங்கம் பகிர்வது வரை எல்லாம் கைபேசியிலேயே நடப்பதால் சக மனிதர்களிடம் நம்மால் உண்மையாக எதையும் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. விளைவு மன அழுத்தம்; தனிமை உணர்வு; யாருமற்ற நிலையை உணர்ந்த தாழ்வு மனப்பான்மை தலை தூக்குகிறது.

மீண்டும் இதற்கான தீர்வை செல்போனிடமே தேடி, நாள் முழுதும் அதிலேயே செலவிட்டு மனதை திசை திருப்ப முயற்சித்து தோற்று கையறு நிலையில்தான் உளவியல் மருத்துவரை தேடி வருகிறார்கள். இதுதான் அதீத ஸ்மார்ட்போன் உபயோகித்தலின் பலன். ஸ்மார்ட்போனை உபயோகிக்கவே கூடாது என்று கூறவே முடியாது அது காலத்தின் கட்டாயம்.

ஆனால், இதனால் நாம் தொலைத்த விஷயங்கள் நிறைய….இதிலிருந்து மீள்வதுதான் எப்படி? நீங்களாக அழைத்து பேசும் கால்களை இன்றைக்கு முறைப்படுத்துங்கள். வாரம் ஒரு முறை அழைக்க வேண்டிய நபர்; வாரமிரு முறை; தினசரி அழைக்க வேண்டிய நபர் என ஒரு தாளில் எழுதி வகைப்படுத்துங்கள். அழைப்புகளுக்கு மட்டும் என்றில்லை, உங்கள் நேரத்தை திருடும் எல்லா செல்போன் செயல்பாடுகளையும் இதே போன்று வகைப்படுத்தலாம்.

அவற்றை உடனடி அல்லது தினசரி உபயோகம், வாரமொரு முறை, வாரமிருமுறை என வகைப்படுத்துங்கள். இவர்களில் என் முன்னேற்றத்திற்கு பயன்படும் உரையாடல்களை செய்பவர், என் பொழுது போக்கு, என் நேரத்தை வீணாக்குபவர் அல்லது வீணாக்கும் காரியம் என மூன்று வகைக்குள் கொண்டு வாருங்கள். மேற்கண்டவற்றிற்கு நீங்கள் செலவழிக்கும் நேர அளவை கணக்கிடுங்கள்.

மூன்றாவது பிரிவில் (அதாவது பொழுதை வீணாக்கும் பிரிவில்) அதிக நேரம் செலவழித்து கொண்டிருப்பீர்களானால் நீங்கள் செல்போன் அடிக்க்ஷனில் இருக்கிறீர்கள் என்று பொருள். இன்றைக்கு ஒருநாள் மட்டும் இப்போதிருந்து நாளை இந்நேரம் வரை நான் என்னை அழிவுக்குள்ளாக்கும் குறிப்பிட்ட காரியத்திற்காக என் மொபைலை பயன்படுத்த மாட்டேன் என உங்களுக்கு நீங்களே ஒரு சவால் விடுங்கள். கண்டிப்பாக ஜெயிப்பீர்கள்.

ஒருநாள் ஜெயித்து விட்டாலே நீங்கள் பாதி கிணறு தாண்டி விட்டீர்கள். மறுநாளும் இதேபோன்று ஒரு மானசீக சவால். நீ ஜெயிப்பாய் என சுய வசியம் செய்து கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே. தொடருங்கள் இந்த போராட்டத்தை 21 நாட்களுக்கு. மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே செல்போனைப் பயன்படுத்துங்கள். அதற்கு மாற்று வழிகளையும் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.

வீணாக்கப்படும் நம் பொழுதெல்லாம் ஆக்கம் பெற்றால், நாமும் ஏற்றம் பெறுவோம். சமூகமும் முன்னேற்றமடையும். இவை சுயமாக உங்களை நீங்களே மீட்டெடுக்கும் வழிகள். இவை பயன் தராத பட்சத்தில் மன நல ஆலோசகரை அணுகி ஒரு உந்துதலளிக்கும் கவுன்சலிங் எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் மீள்வீர்கள்… மீள வேண்டும். அற்ப விஷயங்கள் நம்மை அழிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயக்குமார் பகீர் ஆடியோ | உதவி கேட்ட பெண்ணுக்கு குழந்தை கொடுத்தாரா? சிக்கினாரா அமைச்சர்?(வீடியோ)
Next post தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)