ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யலாமா?!(மருத்துவம்)

Read Time:11 Minute, 39 Second

‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ பழமொழி வேறு எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ, முடியை பொறுத்தவரையில் முற்றிலும் உண்மை. சுருண்ட முடியை வைத்திருப்பவர்கள் நேரான முடியை விரும்புவதும், நேரான முடியை வைத்திருப்பவர்கள் சுருண்ட முடியை விரும்புவதும் இதற்கு ஒரு நல்ல உதாரணம். இந்த ஆசையை நிறைவேற்றத்தான் எத்தனை பொருட்கள்… எத்தனை விளம்பரங்கள்… இப்படி ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங்(Hair straightening) செய்துகொள்வது கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா?!

தற்காலிகமான ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங்

ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங்கில் தற்காலிகமான முறை மற்றும் நிரந்தரமான முறை என 2 வகைகள் உள்ளது. இவற்றில் தற்காலிகமான ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் மிகவும் பிரசித்தி பெற்ற முறை. இதில், முடியை இரண்டு நீளமான அயர்ன் ப்ளேட்களுக்கு இடையில் வைத்து முடியின் வேரிலிருந்து நுனி வரை இழுப்பார்கள். இப்படி பல முறை, முடியை கொஞ்சமாக கொஞ்சம் பிரித்துச் செய்யும் பொழுதுதான் முழுவதுமாக நேராக்க முடியும்.

இவ்வாறு செய்யும்பொழுது உருவாகும் சூடு, முடியில் உள்ள ஹைட்ரஜன் பாண்ட் (Hydrogen Bond) மற்றும் ஸால்ட் லிங்கேஜ்களை (Salt-Linkages) உடைத்து முடியை நேராக்கும். அடுத்த முறை முடியில் தண்ணீர் படும்வரை முடி நேராக இருக்கும். முடியை சுருளச் செய்வதற்கும் இதே முறைதான் பின்பற்றப்படுகிறது. ஆனால், இதில் ஈர முடியை ஹேர் ரோலர்களில் டைட்டாகச் சுற்றி வைத்து அதன்பின் சூடான காற்றின் மூலம் உலர விடுவார்கள். முடியை ஈரப்படுத்தி சுற்றி வைக்கும்போது ஆல்ஃபா கேரட்டின், பீட்டா கேரட்டினாக மாறும்.

அதன்பின் முடியை உலர வைக்கும்போது அந்த சுருண்ட முடியில் ஆல்ஃபா கேரட்டின் திரும்பவும் உருவாகும். ஹாட் ப்ளோ ட்ரையிங் (Hot Blow Drying) செய்யும்போது முடியின் வெப்ப நிலை 800oc வரை உயரும். ஆனால், ஹாட் அயர்னிங்(Hot Ironing) செய்யும்போது முடியின் வெப்ப நிலை 170 – 220 டிகிரி சென்டிகிரேட் வரை உயரும். முடியின் வெப்ப நிலை இவ்வளவு அதிகளவு உயரும்போது, முடியினுள்ளே உள்ள தண்ணீர் அனைத்தும் ஆவியாகி முடிக்கு வட்டப்பரிதியின் சுருக்க அழுத்தம் (Circumferential Contraction Stress) ஏற்படும்.
இதனால் முடியின் க்யூட்டிக்கிளில் உடைப்பு ஏற்படும்.

அதுமட்டுமில்லாமல் ஹாட் அயர்னிங் செய்யும்பொழுது முடிகளில் உராய்வு ஏற்பட்டு சேதம் ஏற்படும். ஆக, எது மாதிரி செய்தாலும் முடிவில், முடியை எளிதாக உடைக்கக்கூடிய அளவிற்கு முடியின் பலத்தை குறைக்கச் செய்கிறது. ‘என் முடியை பாதுகாக்கும் ஸ்ப்ரே அடித்தபின் தான் ஸ்டைலிங் செய்தார்கள்’ என்று சொன்னீர்கள் என்றால், அந்த ஸ்ப்ரே என்ன செய்யும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

சிலிக்கான் பாலிமர்கள், மினரல் ஆயில், பெட்ரோலியம் போன்ற பொருட்களால் செய்யப்பட்டிருக்கும் அந்த ஸ்ப்ரேக்கள், முடியில் ஏற்படும் உராய்வை குறைக்கும். முடியில் உள்ள நீர் ஆவியாகும் வேகத்தை குறைக்கும். (Circumferential Contraction Stress-ஐயும் குறைக்கும். முடி ஈரப்பதத்தை உறிவதையும் குறைக்கும். அதனால் நீண்ட நேரம் முடி நேராக இருக்கும். அப்படி என்றால் முடிக்கு எந்த சேதமும் ஏற்படாதா என்று கேட்டால், சேதத்தின் அளவை குறைக்க முடியுமே தவிர, சேதத்தை முற்றிலும் தடுக்க முடியாது.

ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் நிரந்தர முறைகள்

ஹேர் ரிலாக்ஸிங் (Hair Relaxing), நிரந்தரமான ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் (Permanent Hair Straightening), கெமிக்கல் ஹேர் ஸ்மூத்தனிங் (Chemical Hair Smoothening) எல்லாமே Lanthionization என்னும் ஒரு முறையைத்தான் குறிக்கின்றன. Lanthionization என்பது சுருண்ட முடி அல்லது பராமரிக்க முடியாத முடியை மெட்டல் ஹைட்ராக்ஸைட்ஸைக் (Metal Hydroxides) கொண்டு நேராக்குவது. எ.கா: Sodium hydroxide, Lithium hydroxide, Pottassium hydroxide, Guandine hydroxide.

இவை அனைத்தும் Alkalis – காரங்கள். இவற்றைக் கொண்டு முடியில் உள்ள Disulfide Bond-ல் உள்ள ஒரு சல்ஃபரை நீக்குவார்கள். அதன்பின் Lanthionine Bond ஆக Disulfide Bond மாறும். இதைச் செய்யும்போது முடியில் உள்ள 35 சதவீத Cysteine, Minor Peptide Hydrolysis ஏற்பட்டு Lanthionine ஆக மாறும். இதைச் செய்தபின் திரும்பவும் நிரந்தரமாக டைசல்பேட் பான்டை உருவாக்க முடியாது. அதாவது நேராக மாற்றப்பட்ட முடியை பின்பு எந்த சிகிச்சையினாலும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது.

இம்முறையில் PH 13-க்கு மேல் இருக்கக்கூடிய, மேற்கூறிய காரங்களை உபயோகிப்பார்கள். இவ்வளவு காரத்தன்மை உள்ள கெமிக்கலை தப்பாக உபயோகித்தால் முடி கரைந்துகூட போகக்கூடும். இந்த முறையை சரியாக செய்தாலும்கூட, முடியின் பலம் (Tensile Strength) 30% குறையும். முன்பு மிகவும் பரவலான முறையில் 37% Formaldehyde Solution இதற்கு உபயோகித்தார்கள். இதைச் செய்யும் ஹேர் ஸ்டைலிஸ்ட்டுக்கும் இது மிகவும் ஆபத்தான தொழில்சார் ஆபத்து (Occupational Hazard) ஏற்படக்கூடும்.

இதைக்கொண்டு தன் முடியை நிரந்தர ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்துகொண்ட கர்ப்பிணி ஒருவருக்கு பிறந்த குழந்தைக்கு, அதன் 2-வது வயதில் ரத்தப்புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் வேறு பல ஆய்வுகளும் Formaldehyde-ன் அளவினால் உள்ள ஆபத்தை உறுதி செய்தபடியால், இப்போது Formaldehyde Free கெமிக்கல்களை இதற்கு உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் அந்த Formaldehyde free Products எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பது கடுமையான சட்டதிட்டங்கள் கொண்டுவந்தால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.

தற்போது Carbocysteine என்ற Dibasic Amino acid-ஐ கொண்டு ஸ்மூத்தனிங்/ஸ்ட்ரெயிட்டனிங் செய்கிறார்கள். Glycolic ஆசிட் சிகிச்சை செய்த பின்போ அல்லது ஹாட் அயர்ன் செய்யும்போதோ இதையும் உபயோகப்படுத்துகிறார்கள். இந்தப் பொருளை உபயோகப்படுத்தும்போது மொத்த ஃபார்மால்டிஹைட் வெளிப்பாடு (Formaldehyde Exposure) கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் முறைகள் நம்மூரில் இப்போது பிரபலமாக இருந்தாலும், வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணம் ஆப்பிரிக்க பெண்கள்.

அவர்களுடைய முடி, பிறப்பிலே மிகவும் சுருண்டு இருப்பதால் அதை நேராக்குவதற்காக பல முறைகளை உபயோகிக்கிறார்கள். அவர்களுடைய கடினமான முடியை பராமரிப்பதில் மிகவும் சிரமத்தை உணர்ந்த அவர்கள், இந்த முறைகளை செய்ய ஆரம்பித்த பிறகு அவர்களால் அதை நிறுத்தவே முடியாத அளவுக்கு அவர்களுடைய மனதில் பதிந்துவிட்டது. இந்த ஸ்ட்ரெயிட்டனிங் முறைக்கு அவர்களில் பலர் அடிமைப்பட்டு இருக்கிறார்கள். அதனால் இதைச் செய்தால் கெடுதல் என்று தெரிந்தும்கூட அவர்களால் அதை நிறுத்த முடிவதில்லை.

இப்பொழுது அவர்களுக்கு மனோரீதியான ஆதரவு தருவதற்கு பல ஆதரவு குழுக்கள் உருவாகியுள்ளன. அதேபோல் இயற்கை தந்த முடியை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்ற ஒரு அமைப்பும் உருவாகியுள்ளது. அவர்கள் தங்களுடைய இயற்கையான முடியுடன் வாழ ஆலோசனை கூறுகிறார்கள். இதற்கு மேலாக, Chris Rock என்ற புகழ் பெற்ற அமெரிக்க காமெடியின் நடிகர் தன்னுடைய பெண், ‘அப்பா எனக்கு ஏன் நல்ல முடியில்லை?’ என்று கேட்டதற்காக, Good Hair என்ற படத்தை சொந்தமாக எடுத்து அதில்,

முடியை நேராக்க உபயோகப்படுத்தப்படும் சோடியம் ஹைட்ராக்சைட்(Sodium Hydroxide) எப்படி ஒரு கூல் டிரங்க் டின்னையே உருக்கிவிடக்கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்தது என்பதை தத்ரூபமாக விளக்கியுள்ளார்.இது மட்டுமா? India Arie என்ற பாப் ஸிங்கர் I am not my hair… Iam not this skin… என்ற பாடலையும் பாடியுள்ளார்.வாழும் வாழ்க்கை என்பது ஒரு முறைதான். இயற்கை நமக்கு கொடுத்ததை இயல்பாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்ததை செய்து பார்க்கலாம்.

ஆனால், அதைச் செய்யும் முன் இது நிஜமாகவே நல்லதா, செய்துதான் ஆக வேண்டுமா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அதையும் மீறி செய்துதான் ஆக வேண்டும் என்று தோன்றினால், ஒரு தடவை அல்லது இரண்டு தடவை ஆசைக்கு வேண்டுமானால் செய்துகொள்ளலாம். ஆனாலும் அதனால் உண்டாகும் சேதம் அதிகம்தான். எதற்கும் அடிமையாகாத வாழ்க்கை வாழுங்கள்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமான விபத்தின் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி வீரர் உயிரிழப்பு!!(உலக செய்தி)
Next post மேற்குலகின் மையம் !!(மகளிர் பக்கம்)