விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார் முதல் பெண் விண்வெளி சுற்றுலாப் பயணி
உலகின் முதல் பெண் விண்வெளி சுற்றுலாப் பயணியான அனெüஷா அன்சாரி (40) விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை (ஐஎஸ்எஸ்) சென்றடைந்தார். விண்வெளிக்கு அவரை அழைத்துச் சென்ற ரஷிய “சோயுஸ்’ விண்கலம் புதன்கிழமை விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து ரஷிய “சோயுஸ்’ விண்கலம் கடந்த திங்கள்கிழமை விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டது.
ஈரானில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் பெண் தொழிலதிபரான அனெüஷா அன்சாரி, உலகின் முதல் பெண் விண்வெளி சுற்றுலாப் பயணியாக அதில் சென்றார்.
அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாள்கள் இருந்துவிட்டு பூமிக்குத் திரும்புவார். அவருடன் சென்ற ரஷிய விண்வெளி வீரர் மிகையீல் தியூரின், அமெரிக்க விண்வெளி வீரர் மைக்கேல் லோபஸ் அல்ஜீரியா ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கி இருந்து பணியாற்றுவர்.