மெட்டாஸ்டாடிக் புற்றுநோய் என்பது என்ன?(மருத்துவம்)

Read Time:11 Minute, 23 Second

‘காதலர் தினம்’ படத்தி மூலம் தமிழிலும் பிரபலமான இந்தி நடிகை ‘சோனாலி பிந்த்ரே’வுக்கு புற்றுநோய் என்ற செய்தியால் சினிமா ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்தி திரையுலகமே சோகத்தில் திகைத்துப் போயிருக்கிறது. ‘உடலில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவரைச் சந்தித்து சில பரிசோதனைகள் எடுத்துக் கொண்டேன். அதன் முடிவில் நான் மெட்டாஸ்டாடிக் புற்றுநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இப்போது நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன்.

இது எதிர்பாராத சூழல். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் நான் போராடி வெற்றி பெற்று வருகிறேன். எனக்கு என் நண்பர்களும், உறவினர்களும் உறுதுணையாக இருக்கின்றனர். எனக்கு ஏற்பட்ட புற்றுநோயுடனும் போராடி விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று இன்ஸ்டாக்ராமில் சோனாலி பதிவிட்டிருந்தார். இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் புற்றுநோய் குறித்த எச்சரிக்கை உணர்வையும், அச்சத்தையும் அதிகம் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக இதுபோன்று பிரபலங்களின் நோய்கள் பற்றிய செய்திகள் பரவும்போது அவருக்கே இப்படி என்றால் நம் நிலை என்ன என்று மக்கள்
பீதி அடைவது இயற்கை. அதையும் தவிர, மெட்டாஸ்டாடிக் கேன்சர் என்பது புற்றுநோயில் ஒரு வகையா எதனால் வருகிறது என்பன போன்ற பலவித சந்தேகங்களும் சாதாரண மக்களிடம் எழுந்துள்ளது.மெட்டாஸ்டாடிக் கேன்சரைப்பற்றிய முழு சந்தேகத்தையும் தீர்த்துக்கொள்ள புற்றுநோய் நிபுணர் பிரசாந்த் கணேஷைத் தொடர்பு கொண்டோம்.

மெட்டாஸ்டாடிக் கேன்சர் என்றால் என்ன?

‘‘பொதுவாக புற்றுநோய் உடலின் ஒரு தனி உறுப்பில் உருவாகும். இது அந்த உறுப்பின் பெயராலேயே குறிப்பிடப்படும். உதாரணத்துக்கு மார்பகத்தில் ஏற்படுவது மார்பகப் புற்றுநோய். ஆனால், நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு ஏற்பட்டிருப்பது புற்றுநோயின் ஒரு நிலை. அவர் அதனை மெட்டாஸ்டாசிஸ் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஓர் உறுப்பில் உருவான புற்றுநோய்க் கிருமிகள் அந்த இடத்திலிருந்து ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் அமைப்பு(Lymph system) மூலம் பிற பகுதிகளுக்குப் பரவும் நிலைக்குத்தான் ‘மெட்டாஸ்டாடிஸ் (Metastatis) என்று சொல்கிறோம்.’’

இது புற்றுநோயில் ஒரு வகையா?

‘‘கண்டிப்பாக புற்றுநோயின் ஒரு வகை கிடையாது. புற்றுநோயின் ஒரு தன்மை(Behaviour) ஆகும். எந்த வகைப் புற்றுநோயும் மெட்டாஸ்டாடைஸ் ஆகலாம். அதேபோல் முற்றிய உள்புற்றுநோயை(Locally Advanced cancer) மெடாஸ்டாடிக் புற்றுநோயோடு குழப்பிக் கொள்ளக்கூடாது. முற்றிய புற்றுநோயில் ஓர் உறுப்பில் இருக்கும் புற்றுநோய் கட்டியிலிருந்து ஒரு துண்டு அந்த உறுப்பின் அருகில் இருக்கும் திசுக்களுக்கு அல்லது நிணநீர் மண்டலங்களுக்கு பரவுகிறது.

ஆனால், மெட்டாஸ்டாடிக்கில் ஓர் உறுப்பிலிருந்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் பரவக்கூடியது. உதாரணத்திற்கு ஒருவருக்கு மார்பகத்தில் புற்றுநோய்கட்டி இருந்தால் அங்கிருந்து ரத்தம் மூலம் நுரையீரலுக்கு பரவலாம். கல்லீரலிலிருந்து தோலுக்கு, மூளையிலிருந்து எலும்புக்கு மற்றும் நுரையீரலிலிருந்து தோலுக்கு என எங்கிருந்தும், எங்கு வேண்டுமானாலும் பரவலாம்.

ஆனால், மார்பகத்திலிருந்து நுரையீரலுக்கு பரவினால், அதை நுரையீரல் புற்றுநோய் என்று குறிப்பிடுவதற்குப் பதில் ‘மெட்டாஸ்டாடிக் மார்பக புற்றுநோய்’ என்றுதான் கூறுவோம். காரணம் முதன்மை இடமான மார்பகத்திலிருந்து, நுரையீரலுக்குப் பரவுவதால் இப்படிச் சொல்லப்படுகிறது. எந்த வகைப்புற்றுநோயும் எந்த உறுப்பிலிருந்தும் மெட்டாஸ்டாட்டைஸ் ஆகலாம்.’’

இதனைக் கண்டறிவது எப்படி?

‘‘முதன்மை கட்டியிலிருந்து Biopsy எடுத்து சோதனை செய்வதன் மூலமோ அல்லது மற்ற உறுப்பில் பரவியுள்ள கட்டியிலிருந்தும் Biopsy எடுத்தும், மற்ற உறுப்புக்கு பரவியிருப்பதை கண்டுபிடிக்கலாம். சில நேரங்களில், புற்றுநோய் பரவியிருக்கும் உறுப்பில் தோன்றும் அறிகுறிகளை வைத்து முதன்மைக்கட்டி இருக்கும் இடத்தை அறிந்துகொள்வோம்.’’

மெட்டாஸ்டாடிக்கின் அறிகுறிகள் என்ன?

‘‘புற்றுநோய் உருவாகியுள்ள உறுப்பின் தன்மைக்கு ஏற்ப அறிகுறிகள் இருக்கும். மூளைப் புற்றுநோய் என்றால் தலைவலி, நுரையீரல் புற்றுநோய் என்றால் தீவிர இருமல், கல்லீரல் என்றால் மஞ்சள் காமாலை என அறிகுறிகள் மாறுபடும். சிலவகைகளில் அறிகுறிகளே இருக்காது.’’

சிகிச்சைகள்…

‘‘முதன்மை புற்றுநோய் கட்டி எங்கிருந்து தொடங்கியது, எந்த அளவிற்கு பரவியுள்ளது, எங்கு பரவியுள்ளது, புற்றுநோயின் தன்மை, தீவிரம் மற்றும் நோயாளியின் வயது, ஆரோக்கியம், அவர் விரும்பும் சிகிச்சை போன்றவற்றைப் பொருத்து ஒருவருக்கு சிகிச்சை வழங்குகிறோம். புற்றுநோய் சிகிச்சையிலிருந்து இது மாறுபடலாம்.

பெரும்பாலும் மருந்துகள் மூலமே சிகிச்சை கொடுக்க முடியும். குறிப்பிட்ட புற்றுநோய் ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கேற்ப மற்றும் நோயாளியின் தாங்கும் சக்திக்கு ஏற்ப கீமோதெரபி சிகிச்சை போன்ற பிரத்யேக சிகிச்சைகள் கொடுக்கப்படும். அறுவை சிகிச்சை செய்வது வழக்கத்தில் இல்லை.’’

முற்றிலும் குணப்படுத்த முடியுமா?

‘‘சிலவகை புற்றுநோய்கள் குணமாகக் கூடியவை. முற்றிலும் குணமாக்க முடியாத புற்றுநோய்களை கட்டுப்படுத்தக்கூடிய சிகிச்சை முறைகளை முழு முயற்சியோடு மேற்கொள்வோம். நோயிலிருந்து மீள்வதற்கு நோயாளியின் ஒத்துழைப்பும், மனஉறுதியும் அவசியம். ஆரம்ப நிலையில் மருத்துவரை அணுகுவதால் மேலும் எளிதாகும்.’’

மெட்டாஸ்டாடிக் சிகிச்சைமுறையானது, சாதாரண புற்றுநோய் சிகிச்சையிலிருந்து வேறுபட்டதா?

‘‘மெட்டாஸ்டாடிக் புற்றுநோய் இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. முதலில் புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அரிதான சூழ்நிலைகளில் புற்றுநோயை முற்றிலும் அகற்றுவதற்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை என எல்லாம் ஒருங்கிணைந்த சிகிச்சை
முறைகளை பயன்படுத்துகிறோம்.’’

மெட்டாஸ்டாடிக் புற்றுநோய்க்கான சிகிச்சையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள்?

‘‘மெட்டாஸ்டாடிக் புற்றுநோய் வந்த பெரும்பாலான நோயாளிகளுக்கு அந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. இவர்களுக்கு புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சையே மேற்கொள்கிறோம். அதாவது நோயாளியின் வாழ்க்கைத்தரத்தை பராமரிப்பதற்காக முதல் விஷயமாக, அவர்களின் வாழ்க்கை முடிந்த அளவுக்கு நீடித்திருக்கும் வகையில்,

புற்றுநோயை கட்டுப்படுத்தும் சிறந்த சிகிச்சை முறைகள் மேற்கொள்வதையும், இரண்டாவதாக புற்றுநோயாலும், சிகிச்சையின்போதும் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் வேதனைகளை முடிந்தவரை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம். இவையிரண்டும் இந்த புற்றுநோய்க்கான சிகிச்சையில் மருத்துவர்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள்.’’

தற்காப்பு முறைகள் பற்றிச் சொல்லுங்கள்…

‘‘புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை விடுவதும், உடலுக்கு உடற்பயிற்சிகள் என எப்போதும் நாங்கள் வழக்கமாக சொல்லிக் கொண்டிருக்கும் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தற்காத்துக் கொள்வதோடு, நோயின் தீவிரத்தன்மையை
குறைத்துக் கொள்ள முடியும்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய ரிசர்வ் வங்கி எதிர் மத்திய அரசாங்கம்: இருபதுக்கு-20 போட்டியா, டெஸ்ட் போட்டியா?(கட்டுரை)
Next post கும்பகாசனம்!!( மகளிர் பக்கம்)