By 14 November 2018 0 Comments

உங்களால் முடியும்…மன உறுதியுடன் நோ சொல்லுங்கள்!!!(மருத்துவம்)

மது எல்லாவற்றையும் முடித்துவிட்டு, இறுதியாக உங்கள் உணர்வுகளையும் அழித்து விடுகிறது.
– ரிங்கோ ஸ்டார் (இங்கிலாந்து இசைக்கலைஞர்)

குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவும் மிகுந்த பலனளிக்கும். மற்றவர்களுக்குத்தான் அவர் குடிகாரர். நமக்கோ அவர் நம்மில் ஒருவர். அன்பானவர். தைரியமானவர். வெற்றிகள் பல குவித்தவர். புத்திசாலி. பிறரை விட அவருக்கு ஐ.க்யூ. கூட அதிகம். எல்லாவற்றிலும் சிறந்தவராக இருக்கிற அவர், குடிகாரராக இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லையே… வரலாற்றின் பல மேதைகளை / கலைஞர்களை / சாதனையாளர்களை அவர் உதாரணம் காட்டக்கூடும்.

‘அவர்கள் பலரும் மது அருந்தியவர்களே’ என்று. இருக்கலாம்.மது என்பது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாகவே காட்சியளிக்கிறது. உண்மையில், அதை நம்மோடும், இந்தக் காலகட்டத்தோடும் பொருத்திப் பார்க்க முடியாது. மது அருந்தியதால்தான் அவர்கள் மகத்தானவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஒரு சொட்டு ஆதாரம் கூட கிடையாது என்பதையும் நினைவில் கொள்க. நம் அன்புக்குரியவர் இந்த சுனாமிக்குள் சிக்காமல் இருப்பதுதானே உன்னதம்?

அதற்கு உறுதுணையாக இருக்கிற நீங்கள் மிகுந்த பாராட்டுக்கு உரியவர். ‘குடிக்க வேண்டாம்’ என நீங்கள் வலியுறுத்துவதால் மட்டுமே, இந்தப் பழக்கத்தை சட்டென நிறுத்தி விட முடியுமா, என்ன? ஆனால், இந்த விஷயத்தில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதுவே மிக முக்கியம். அவரையும் உறுதியாக இருக்கச் செய்யுங்கள். அவரால்தான் இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியும். உங்களால் அல்ல. ஆகவே… ஒருபோதும் பிளாக் மெயில் செய்ய வேண்டாம். உங்கள் ஆதரவுதான் அவருக்குத் தேவை… அலட்சியம் அல்ல.

அவர் ஒருவித வலியோடு வாழ்வதைப் புரிந்துகொள்ளுங்கள். இதை வேண்டுமென்றே அவர் தொடர்வதில்லை (‘எப்படியாவது இதை நிறுத்திடணும்… ஆனா, முடியலையே’ என்று கண்ணீர் விட்டு அழுதவர்களைப் பார்த்திருக்கிறேன்). உங்கள் அன்பும் ஆதரவும் நிச்சயம் நீங்கள் விரும்புகிற மேஜிக்கை நிகழ்த்தும். அவருக்கு நம்பிக்கை ஏற்படச் செய்யும் போது, மது அரக்கனுக்கு எதிரான போரில் தன்னந்தனியாக ஈடுபட முடியும். உங்கள் அன்புக்காகவே அவர் நிச்சயம் இதைச் செய்வார்.

மதுவின் ஆட்கொள்ளல் காரணமாக, அவர் பல நேரங்களில் மிக மோசமானவராக நடந்திருக்கலாம்… அதீதமாக புண்படுத்தியிருக்கலாம்… ஏராளமான இழப்புகளை அளித்திருக்கலாம். இவை எல்லாவற்றையும் மீறி அவருக்கு உங்கள் மீது அழியா அன்பு உண்டு. இதை மறக்க வேண்டாம். ஒருபோதும் அவரை வெறுக்க வேண்டாம். குடிநோய் மட்டுமே அவரது அத்தனை மாற்றங்களுக்கும் காரணம். பாதிக்கப்பட்டவரின் அன்பை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது.

அன்பு மறுதலிக்கப்படும் போது, அது தற்கொலைக்கும் தூண்டும். ‘நான் ஏன் வாழ வேண்டும்?’, ‘என்னை ஏன் இப்படி வெறுக்கிறார்கள்?’- இப்படி எப்படி எப்படி எல்லாமோ தோன்றும் எண்ணங்கள், அவரை மீண்டும் அதே பாதாளத்தில்தான் தள்ளும். குடியிலிருந்து மீள விரும்பும் அவருக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டியது கட்டாயம். உங்கள் அன்பும் பொறுமையுமே நல்ல சக்தியை வழங்கும். இந்த அளவு நீங்கள் சிரமப்படுவதற்கும் பலன் கிடைக்கும். மதுவிலிருந்து மீண்டு வரும் அவர் நிச்சயம் மகத்தான மனிதராகவே இருப்பார் உங்களுக்கு.

கடந்த கால செயல்களுக்காக அவர் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வேண்டாம். அவை எல்லாமே குடிநோயின் விளைவுகளே. வேண்டும் என்றே அவரால் செய்யப்பட்டது எதுவுமில்லை. கொஞ்சம் ஈகோவும் கொஞ்சம் வெட்கமும் காரணமாக இருக்கக்கூடும். மற்றபடி, அவரது அன்பில் போலித்தனம் இருந்ததா? ‘இல்லை’ என்பது உங்களது பதிலாக இருக்குமானால், உங்கள் அன்பே ஆயிரம் செய்யும். அவர் குடியிலிருந்து மீண்டு வருவார், உறுதியாக!Post a Comment

Protected by WP Anti Spam