என்னாது… வெந்தயத்துல டீயா?(மருத்துவம்)

Read Time:7 Minute, 47 Second

‘‘எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய வெந்தயத்தில் பல அபரிமிதமான சத்துக்கள் அடங்கியுள்ளன. பல நோய்களைத் தீர்க்கக் கூடிய, கட்டுப்படுத்தக் கூடிய திறன் கொண்டதாகவும் வெந்தயம் விளங்குகிறது.

இதனை சமையலில் ஒரு சேர்மானமாக சேர்த்து பயன்படுத்துவதைப் போலவே தேநீர் வடிவிலும் பயன்படுத்திப் பயன்பெறலாம். தற்போது இந்த வெந்தயத் தேநீர் பிரபலமாகியும் வருகிறது’’ என்கிறார் உணவியல் நிபுணரான பத்மினி வெங்கடேஷ். வெந்தயத்துல டீயா… எப்படி செய்வது, அதன் பலன்கள் என்னவென்று அவரிடம் கேட்டோம்…

‘‘நம் உணவுமுறையில் வெந்தயத்தின் இடம் முக்கியமானது. இதில் தயாமின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி ஆகியவையும், புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற
சத்துக்களும் அடங்கியுள்ளன. வெந்தயத்தை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் சத்து இப்படி தேநீராகப் பருகுவதால் மாறிவிடாது. தினமும் பருகும்போது நிறைய நன்மைகளை தரவல்லதாக இருக்கிறது.

இந்த தேநீரில் வெந்தயம், தேன், இஞ்சி போன்ற மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் சேரும்போது அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.வெந்தயம் இரும்புச்சத்து மிக்கது என்பதால் வெந்தய தேநீர் ரத்த சோகை பிரச்னையைத் தீர்க்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும். அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும். அந்த நேரத்தில் வெந்தய தேநீர் பருகினால் வலியில் இருந்து
உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இளவயது சிறுமிகள் வெந்தயத் தேநீர் பருகும்போது அவர்களின் வளர்ச்சி ஹார்மோன்கள் ஊக்குவிக்கப்படும். பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறு
களும் தடுக்கப்படும். உடலின் தேவையற்ற கொழுப்பை அகற்றி, உடல் எடையை வெந்தய தேநீர் குறைக்கச் செய்கிறது. இதிலுள்ள பொட்டாசியம் இதயநலனுக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம் ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் பெருமளவு குறையும். முடி உதிர்வுப் பிரச்னையும் வெந்தய தேநீர் குடித்து வருவதால் நீங்கும். வெந்தயத் தேநீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கப்படும்’’ என்பவர் வெந்தய டீ தயாரிக்கும் முறை பற்றி விளக்குகிறார்.

‘‘வெந்தயத்தை வறுத்து உபயோகிக்கும்போது அதன் கசப்புத்தன்மை குறைந்துவிடும். அதனால், முதலில் வெந்தயத்தை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி வறுத்த வெந்தயப் பொடியினை ஒரு டீஸ்பூன் எடுத்து, 250 மிலி அளவு முதல் நாள் இரவே வெந்நீரில் ஊற வைக்க வேண்டும்.

காலையில் அந்த நீரை வடிகட்டி சுவைக்கேற்ப டீத்தூள், இஞ்சி, தேன் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்துப் பருகலாம். டீத்தூள் சேர்க்காத பட்சத்தில் அப்படியே தேன் மட்டும் சேர்த்துக் கூட அப்படியே குளிர்ச்சியாக பருகலாம். நீரிழிவு பிரச்னை இல்லாதவர்கள் தேனுக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.’’

முதல்நாளே வெந்தயத்தை ஊறவைத்துத்தான் பயன்படுத்த வேண்டுமா?‘‘வெந்தயம் இரவு முழுவதும் ஊறுவதால் அதனுடைய முழுமையான சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் கலந்திருக்கும்.

இதனால் அதன் சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கும். அதற்காகவே வெந்தயத்தை முதல்நாள் ஊறவைக்கச் சொல்கிறார்கள். முதல் நாள் இரவு ஊற வைக்க முடியாதவர்கள் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து அதனுடன் டீத்தூள், நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.’’

வேறு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன?

‘‘வெந்தயத்தில் Saponins இருப்பதால் உடலில் எல்.டி.எல் கெட்ட கொழுப்பு அதிகரிப்பது தடுக்கப்படும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் சீர்படும். வெந்தயத்தின் வேதிப்பொருட்கள் புற்றுநோயைத் தடுக்க உதவும்.காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் குடலின் கழிவுகள் வெளியேறி மலச்சிக்கல் முதல் மலக்குடல் புற்றுநோய் வரை வராமல் தடுக்கிறது. ஜீரணக் கோளாறு கள் சரி செய்யப்படுகிறது. வெந்தய தேநீர் உடல் சூட்டைத்
தணிப்பதோடு எடை குறைப்புக்கும் அருமருந்தாக விளங்குகிறது.

கோடை காலத்தில் ஏற்படும் சரும நோய்களைத் தடுப்பதில் வெந்தயத்தின் பங்கு முக்கியமானது. மேலும் பசியின்மை, வயிற்று உப்புசம், உடல் பித்தம், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்போக்கு, சீதபேதி, கல்லீரல், மண்ணீரல் வீக்கம் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது. தாய்ப்பால் சுரக்கும் திறனையும், ரத்த ஓட்டத்தையும் வெந்தய டீ தூண்டுகிறது.’’

வெந்தய தேநீரைத் தவிர்க்க வேண்டியவர்கள் யார்?

‘‘வெந்தய டீ தயாரிக்கும்போது ஒரு நபருக்கு ஒரு டீஸ்பூன் அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் வெந்தயம் சேர்க்கும்போது வயிற்றுப் போக்கு, ஏப்பம், சளி போன்ற சிறுசிறு தொந்தரவுகள் வரக் கூடும். இதேபோல் சோயா, வேர்க்கடலை, பச்சை பட்டாணியால் அலர்ஜி இருப்பவர்களுக்கு வெந்தயமும் அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே, இவர்களும் தவிர்க்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்பதால் குறை சர்க்கரை உள்ளவர்களும் மருத்துவ ஆலோசனை பெற்றே வெந்தய டீ பருக வேண்டும்’’.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த வாலிபர்!!(உலக செய்தி)
Next post குழந்தைகளும் செய்யலாம் வீராசனம்!!( மகளிர் பக்கம்)