By 10 November 2018 0 Comments

வானவில் சந்தை!!(மகளிர் பக்கம்)

எதையும் ஏன் வாங்க வேண்டும்?

தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் பதவியிலிருக்கும் எனது நண்பர் ஒருவர் சமீபத்தில் புதிய வீடு கட்டிக் குடியேறினார். வீடு புதிதாகக் கட்டுவது பற்றியும், அதன் இடம் மற்றும் அழகுணர்ச்சி சார்ந்த தேவைகளுக்கேற்ப அலங்கார, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது பற்றியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். வரவேற்பறையில் புதிதாக வாங்கியிருந்த 65 இன்ச் எல் ஈ டி திரைக்குக் (தொலைக்காட்சிப் பெட்டி?!) கீழே நீள் செவ்வகமான வடிவத்தில் ஒரு சவுண்ட் பார் வைத்திருந்தார்.

நான் அவரிடம் அவர் முன்பு வைத்திருந்த ஆன்க்யோ 5.1 சரவுண்ட் சிஸ்டம் (அவர் வேலை நிமித்தம் முதன் முறை அமெரிக்கா சென்றிருந்த போது வாங்கியது) எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர், அதையெல்லாம் வைத்தால் பார்க்க அழகாக இருக்காது என்றார். அதோடு என்னை சமாதானப் படுத்தும் விதமாக அதை பெரிதாகப் பயன்படுத்துவதில்லை என்றும் சொன்னார். பிறகு எதற்கு இந்த சவுண்ட் பார் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன காரணம் வினோதமானது. ஷோரூமில் அதைப் பார்த்திருக்கிறார்.

என்ன என்று விசாரித்ததில் எல் ஈ டி திரையில் இசை சரியாகக் கேட்காது என்றும், சவுண்ட் பார் அந்தக் குறையைப் போக்கும் என்றும் சொல்லி விற்றிருக்கிறார்கள். நான் அவரிடம் ஷோரூமில் எல் ஈ டி திரையில் சத்தம் எப்படியிருந்தது என்று கேட்டேன். நன்றாகத் தானிருந்தது என்றார். பிறகு ஏன் சவுண்ட் பார் என்று நான் கேட்டாலும் அதற்கு ஒரு பொருத்தமான பதிலைச் சொல்லத்தான் செய்வார். அவரை நீண்ட காலம் நன்கு அறிந்தவன் என்ற முறையில் அவருக்கு சவுண்ட்பார் தேவையே இல்லை என்று சொல்ல முடியும்.

அவர் அப்படியெல்லாம் உயர் சத்தத்தில் இசை கேட்பவருமல்ல. அவர் கேட்பதற்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த உயர்தரமான எல் ஈ டி திரையே அதிகம். உண்மையில் இது ஒரு மனநிலை. வாங்கிக் குவிப்பது. தேவையா இல்லையா என்பதில்லாமல் கண்டதை எல்லாம் வாங்கிக் குவிப்பது. அதாவது ஒரு பொருளைக் கண்டதும் அது என்ன விலை என்ற கேள்வி மட்டுமே மனதில் எழுவது. அது என்ன செய்யும்? அது இப்போது எனக்குத் தேவையா என்ற கேள்விகள் எழாது. விலையை மட்டுமே பார்க்கிற கண்கள்.

அடுத்தபடியாக பர்சில் பணம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி, அதைப் பொறுத்தே வாங்கும் செயலைத் தீர்மானிப்பது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தின் அடிப்படையே இந்த மன அமைப்புதான். இதை நோக்கியே அமேசானின் கிரேட் இண்டியன் விற்பனையும் ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனையும் வடிவமைக்கப்படுகின்றன. பெரிய வெற்றியையும் ஈட்டுகின்றன.

நாம் எதையும் வாங்கும் முடிவை எப்படி எடுக்க வேண்டும்?

பொதுவாக நுகர்வை வழி நடத்துபவை தேவையும் விருப்பமுமே. தேவை அடிப்படை வசதிகள் சார்ந்தது. அதில் தேர்வு சாத்தியமில்லை. விலைத் தேர்வு மட்டுமே மிஞ்சுகிறது. உதாரணமாக, கேஸ் அடுப்பு வாங்கச் செல்பவர் இரண்டாயிரம் ரூபாய்க்கு ஓர் எளிய அடுப்பை வாங்கலாம். அல்லது பத்தாயிரம் ரூபாய்க்கு நவீனமான அழகு பொருந்திய அடுப்பை வாங்கலாம். இந்த முடிவு பெரும்பாலும் ஒப்பீட்டளவிலானதுதான். ஒருவரின் வருமானமும் வாழ்வுமுறையும் தீர்மானிப்பது.

அடுப்பு என்பது அடிப்படைத் தேவைதானென்றாலும் அதிலும் வெவ்வேறு அடுக்குகள் இருக்கின்றன. ஆனால், நாம் கவனம் அதிகம் செலுத்தவேண்டியது விருப்பம் சார்ந்த நுகர்விடமே. வாங்கிக் குவிக்கும் மன அமைப்பை நோக்கியே நாம் கவனம் கொள்ளவேண்டும். விருப்பம் பொதுவாக, விரும்பிய பொருளை வாங்கப் பணம் இருக்கிறதா என்று மட்டுமே பார்க்கிறது. எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு கார் வாங்கச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் திட்டம் நான்கு லட்சத்திற்குள் ஒரு காரை வாங்குவது.

உண்மையில் நீங்கள் இந்த நான்கு லட்சம் என்ற வரையறையை எப்படி வகுக்கிறீர்கள் என்று பாருங்கள். உங்கள் மாத வருமானத்தில் அந்தக் கார் வாங்குவதற்கான மாதத்தவணைப் பணம் ஒரு இடைஞ்சலாக இருக்காது என்பதாலேயே அதைச் செய்வீர்கள் இல்லையா? பெரும்பாலானவர்கள் சரியென்பீர்கள். ஆனால் இது சரியான வழிமுறையா என்றால் இல்லை. உண்மையில் உங்கள் குடும்பத் தேவைகளுக்கான மாதத் தவணைப் பணத்தை எடுத்து வைத்த பின்பே காருக்கான திட்டத்தைத் தீட்ட வேண்டும். எப்படி என்று பார்ப்போம்.

நீங்கள் வாங்கும் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிராவிடண்ட் ஃபண்ட் பணத்தை உங்களது செலவுத் திட்டத்தில் கணக்கிலெடுக்க மாட்டீர்கள் தானே. ஏனென்றால் நீங்கள் அதை கிட்டத்தட்ட மறந்து விடுவீர்கள். அதனாலேயே உங்களது முயற்சி ஏதுமின்றியே உங்கள் ஓய்வுக் காலத்தில் அந்தப் பணம் பெரிதும் உதவியிருக்கிறது. அதாவது நீங்கள் அதற்கெனத் திட்டமிடவில்லை. அதே போல, உங்களது பிற நிதி சார்ந்த குறிக்கோள்களுக்கான திட்டம் உங்களிடம் இருக்கிறதா? குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம், வீடு வாங்குதல் போன்ற நிதி சார்ந்த குறிக்கோள்களுக்கு.

உண்மையில் உங்களுக்குக் கிடைக்கும் பிராவிடண்ட் ஃபண்ட் பணமே ஓய்வுக்காலத்தைச் செம்மையாக நடத்தப் போதுமானதாக இருக்குமா? அதைக் கணக்கிட்டிருக்கிறீர்களா? இவை எவற்றையும் கணக்கில் கொள்ளாமல், அதற்கெனத் திட்டமிடாமல் நீங்கள் ஒரு காரை வாங்கச் செல்வதுதான் தவறு.
கார் என்றில்லை. எந்த ஒரு பொருளையும் வாங்கச் செல்லும் முன், உங்களது இன்றியமையாத நிதிக் குறிக்கோள்களுக்கான பணத்தை (சேமிப்பை) எடுத்து வைத்த பின்பு எஞ்சியுள்ள பணத்தையே கணக்கில் கொள்ளவேண்டும்.

இப்போது எந்தக் கார் வாங்கலாம் என்று யோசியுங்கள்? இதையே நிதித் திட்டமிடல் என்று சொல்கிறோம். இதைச் சொல்லும் போதே உங்களிடம் ஒரு ஐயம் எழலாம். அப்படியென்றால் எந்தப் பொருளையும் வாங்க முடியாது என்பதுதான் அது. உண்மை அதுவல்ல, நிதியை நன்கு திட்டமிடுகிற குடும்பங்களில் பொருட்களை வாங்குவது குறித்து நல்ல புரிதல் இருக்கிறது. சரியான தேர்வுமே சாத்தியமாகிறது. எங்களிடம் நிதி ஆலோசனை பெறும் குடும்பங்களிடம் இதைக் காண முடிகிறது. வாங்குவது சிறிய பொருள் தானே, அதற்கு இவ்வளவா என்று நீங்கள் நினைக்கலாம்.

உண்மையில் மாதந்தோறும் நீங்கள் செய்யும் சிறிய செலவுகள், பொருள் நுகர்வுகள் உங்களது அதிமுக்கியமான பெரிய குறிக்கோள்களை வெகுவாகப் பாதிக்கின்றன. ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் நிதியாலோசனை பெறுவது சிறப்பு. வானவில் சந்தை என்ற தலைப்பில் கடந்த இரு வருடங்களாக குங்குமம் தோழி வாசகர்களிடம் உரையாடியது எனக்கு மிகவும் உவப்பானதாக இருந்து வந்தது. வாய்ப்பிருந்தால் மீண்டும் வேறு தலைப்பில் நாம் உரையாடலாம். வாசகர்களுக்கும் குங்குமம் தோழி குழுவிற்கும் எனது நன்றிகள்.Post a Comment

Protected by WP Anti Spam