By 11 November 2018 0 Comments

பிள்ளைக் கனி அமுதே…!!(மகளிர் பக்கம்)

குணமா வாயில சொல்லச் சொல்லும் ஸ்மித்திகா

“சேட்டை பண்ணுனா அடிக்கக் கூடாது. அடிக்காம, திட்டாம குணமா வாயில சொல்லணும்” என அழுது கொண்டே பேசி, ஒரே நாளில் சமூக ஊடகங்களில் வைரலான பேபி ஸ்மித்திகாவை இப்போது தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. முகநூல், வாட்ஸ்ஆப் இவைகளைத் தொடர்ந்து, மீம்ஸ், டிக் டாக் மியூசிக்கலி என பிரபலமான குட்டிப்பெண் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் செய்தியானார். திருப்பூரில் வசிக்கும் ஸ்மித்திகாவை தொடர்பு கொண்டபோது…

‘‘நான் யு.கே.ஜி. படிக்கிறேன். சூப்பரா டிராயிங் பண்ணுவேன். டி.வி.யில வந்து என்னை போட்டோ எடுத்தாங்க. ரொம்ப க்யூட்டா பேசுறேன்னு சொன்னாங்க’’ என்று தொடங்கினார். ‘‘சேட்டை செய் வியா ஸ்மித்திகா’’ எனக் கேட்டதற்கு? ‘‘திடீர்னு சேட்டை எப்படி பண்ணுறது’’ என நம்மிடமே திரும்ப எதிர் கேள்வி கேட்கிறார். ‘‘ஸ்கூல்ல சேட்டை பண்ணுனா உன் டீச்சர் அடிப்பாங்களா’’ எனக் கேட்டதுக்கு, ‘‘அடிக்க மாட்டாங்க’’ என்றவர், ‘‘இப்பெல்லாம் நிறையபேரு வந்து என்கிட்ட பேசுறாங்க. அவுங்க யாருன்னே எனக்குத் தெரியாது’’ என்றார் மழலை மாறாமல்.

தொடர்ந்து அவரின் அம்மா பிரவீணா நம்மிடம் பேசினார். ‘‘எங்களது காதல் திருமணம். அவளின் அப்பா ஆட்டோ ஓட்டுகிறார். நான் ஒரு கம்பெனியில் டெய்லராக இருக்கேன். ஸ்மித்திகா அருகில் உள்ள பள்ளியில் யு.கேஜி. படிக்கிறாள். சின்னக் குழந்தையில் இருந்தே நிறைய குறும்பு பண்ணுவா. எது பேசுனாலும் கரெக்டா பேசுவாள். எது தப்பு, எது கரெக்டுன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லி விடுவாள். எப்படி இப்படி பேசுறான்னு எங்களுக்கே பல நேரம் ஆச்சரியமா இருக்கும். எங்க உறவுக்காரங்க எல்லாம் இவ பேசுறதக் கேட்கிறதுக்காகவே வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க.

இவ படிக்கிற ஸ்கூல் டீச்சர்களும் இவ பேசுறதப் பார்த்து ரொம்பவே ஆச்சரியப்படுவாங்க. எதுவாக இருந்தாலும் உன்னிப்பா கவனிப்பா. ரொம்ப மெச்சூடா பிஹேவ் பண்ணுவா. தொடர்ந்து எதையாவது கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பா’’ என்றார். ஸ்மித்திகாவின் வீடியோ ஃபேஸ் புக்கில் வைரலானது குறித்து அவரிடம் கேட்டபோது… ‘‘சாப்பிடக் கொடுத்து அனுப்பியதை ஸ்கூலில் சாப்பிடாமல் அப்படியே திருப்பிக் கொண்டு வந்துட்டா. அவுங்க அப்பாவும், நானும் அவளைக் கண்டிச்சோம். அதுக்குதான் அவ்வளவு பில்டப்ப அந்த மேடம் கொடுத்தாங்க.

அதை நான் அவளுக்குத் தெரியாமலே கேமராவை மறைத்து வைத்து வீடியோ எடுத்தேன். அதை எடுத்து ஒரு பதினைந்து நாள் கழித்து, வாட்ஸ்ஆப் வழியாக என் அக்காவுக்கு காட்டுவதற்காக அவரின் பக்கத்து வீட்டு நண்பர் ஒருவருக்கு அனுப்பினேன். அவர்கள் அதைப்பார்த்ததும், முகநூலில் பதிவேற்றி, அது ரொம்பவே வைரலாகி ஷேராகி விட்டது. இவ்வளவு நடந்ததும் எங்களுக்கு சுத்தமாகத் தெரியாது. எனக்கு முகநூல் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. ஷேர் ஆன வீடியோ வாட்ஸ்ஆப் வழியே திரும்பவும் ஸ்மித்திகாவின் அப்பா மொபைலுக்கே வந்தது.

அவர் என்னிடம் அதைக் காட்டினார். இந்நிலையில் ஸ்மித்திகா படிக்கும் பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் அம்மா எனக்கு போன் செய்து, உங்க பொண்ணு ஸ்மித்திகா பேசுன வீடியோ ஃபேஸ் புக்கில் வைரலாகுது. நீங்க பாக்கலையான்னு என்னிடம் கேட்டாங்க. அதுக்குப் பிறகுதான் எங்களுக்கே இந்த விசயம் தெரியவந்தது. அதை யாரு பதிவேற்றினார்கள், எப்படி பரவுச்சுன்னு சுத்தமாக எங்களுக்குத் தெரியாது. ஆனால் அந்த மொமன்ட் எங்களுக்கு பயங்கர சர்ப்ரைஸாக இருந்தது. ஒரே நாளில் ஸ்மித்திகா பிரபலமானாள். அப்போது எல்லா மீம்ஸும் அவள் பேசியதை வைத்தே வந்தது.

அதைப் பார்க்கும்போது எங்களுக்கு சந்தோசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதில் மனைவி ஒருவர் கணவனை அடிப்பது போலவும், அதுக்கு அவர் அடிக்காமல் வாயில குணமா சொல்லணும்னு சொல்ற மீம்ஸ்தான் எங்களுக்கு ரொம்பவும் பிடித்தது. சோஷியல் மீடியா நெட்வொர்க்கில் தீமைகள் இருந்தாலும் நன்மையும் நிறையவே இருக்கு. யாருன்னே தெரியாத எங்களை ஒரே நாளில் தமிழ்நாடே தெரியுற அளவுக்கு கொண்டு வந்து சேர்த்தது சோஷியல் மீடியாதான். தொடர்ந்து சென்னையில் இயங்கும் அனைத்து தொலைக்காட்சியும் வந்து ஸ்மித்திகாவை பேட்டி எடுத்து ஒளிபரப்பினாங்க.

திருப்பூரில் நாங்கள் வசிக்கும் பகுதியான மண்ணரையில், ஸ்மித்திகாவோட கட்அவுட்டை வைத்து, ஒரே நாளில் சென்னையில் அனைத்து மீடியாக்களையும் மண்ணரையை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்து பிரபலம் அடைந்த பேபி ஸ்மித்திகான்னு கட்அவுட்டே வச்சுட்டாங்க. என் பொண்ணை வைத்துத்தான் எல்லோரும் எங்களை தெரிஞ்சுக்குறாங்க. நீங்க ஸ்மித்திகா அம்மாதானன்னு எல்லோரும் என்னைக் கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நாங்க ரொம்பவே லக்கியான பெற்றோர்கள் எனப் பூரித்தவர், தொடர்ந்து அவள் பிரபலம் அடைந்ததை வைத்து, தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. படிப்பு பாதிக்கும்னு நாங்க சம்மதிக்கலை என்றார். போட்டோ எடுக்கணும்னு மட்டும் சொன்னா போதும் ஸ்மித்திகா மாதிரி போஸ் கொடுக்க யாராலும் முடியாது’’ என முடித்தார். “குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதோர்’.Post a Comment

Protected by WP Anti Spam