வா ரயில் விடப்போலாம் வா!!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 36 Second

குட்டிப் பெண் ப்ரித்திகாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. மண் மணம் கமழும் தன் வளமான குரலால் தமிழகத்தைக் கட்டிப் போட்டவர். திருவாரூர் அருகே இருக்கும் ஒரு குக்கிராமத்தில் இருந்த ஒரு சிறுமி இன்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் ‘வா ரயில் விடப் போலாம் வா…’ எனும் அழகான பாடலை பாடி இருக்கிறார்.

சாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்து மக்களுள் மக்களாக மாறி எல்லார் மனதிலும் இடம் பிடித்தவர் இன்றும் தான் வந்த பாதையையும் தன்னை உயர்த்திய அனைத்து மக்களையும் நினைவில் வைத்திருந்து நன்றி பகிர்ந்து நினைவுகூர்கிறார். “இதுதான் என்னோட முதல் சினிமா பாட்டு. ஒரு நாள் திடீரென இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சாரிடமிருந்து இந்த வாய்ப்பு குறித்து எனக்கு போன் வந்தது. ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த படத்திற்கு மக்கள் மனதை கவர்ந்த ஒரு பாடகி, அதிலும் கிராமத்துச் சாயல் உள்ள குரலாக தேடிக்கொண்டிருந்த போது என்னைப் பற்றி தெரிய வந்து தேடி விசாரித்து இந்த வாய்ப்பை வழங்கினார்கள். இந்த ஆண்டு போகி அன்று இந்த பாடலின் ரெக்கார்டிங் நடந்தது. போன மாதம் தான் ஆடியோ லாஞ்ச் நடந்தது. ரெக்கார்டிங் முடிஞ்சு பல நாள் ஆயிடுச்சு.

ஒரு நாள் திடீர்னு கூப்பிட்டு, ஆடியோ லாஞ்ச் நடக்கப் போகுதுன்னு என்னை இந்த படக்குழுவினர் இன்வைட் பண்ணப்ப தையத் தக்கான்னு துள்ளிக் குதிச்சேன். பாடினப்ப இருந்ததைவிட அப்பத்தான் அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. சந்தோஷ் நாராயணன் சார், மாரி செல்வராஜ் சார், பாடலாசிரியர் விவேக் சார் அனைவரும் பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னாங்க. சந்தோஷ் சார் எனக்கு மேலும் பல வாய்ப்புகள் தருவதாக சொல்லி இருக்கிறார்.

இந்த பாட்டுக்குப் பிறகு ஒரு வாய்ப்பு வந்திருக்கு. அது இன்னும் முடிவாகல. இப்ப நாங்க சென்னையில்தான் இருக்கோம். இங்க இருக்கிற புது ஃப்ரெண்ட்ஸ், புது ஸ்கூல்ல இருக்குற ஆசிரியர்கள் எல்லாரும் நிறையவே பாராட்டினாங்க” எனும் ப்ரித்திகா இன்னும் அதே கிராமத்து எளிமையுடன் இருக்கிறார். தற்போது சென்னையில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ப்ரித்திகா வாழ்வில் மேலும் பல சிகரங்களை தொட அவரை வாழ்த்துவோம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்! (சினிமா செய்தி)
Next post கலப்பட ஐஸ்க்ரீம்… கணக்கில்லாத ஆபத்து!High Sugar… Bad cholesterol… Chemical flavours… கலப்பட ஐஸ்க்ரீம்… கணக்கில்லாத ஆபத்து!(மருத்துவம்)