By 10 November 2018 0 Comments

அடை காத்த முட்டை- கூழ்!!(கட்டுரை)

தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில், தீபாவளிக்குத் தனி இடம் உண்டு. இருள் நீங்(க்)கி, ஒளி ஏற்றும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வு, 2016 தீபாவளிக்குள் வரும் என்றும், பின்னர் 2017 தீபாவளிக்குள் வரும் எனக் காலக்கெடுக்களை, தமிழ் மக்களுக்கு வழங்கியிருந்தார்.

அவர் ஏன், தீபாவளியை மய்யப்படுத்தி காலக்கெடுக்களை வழங்கினாரோ தெரியவில்லை. ஆனால், இவ்வாறாகத் தீர்வுகளைத் தரும் என, சம்பந்தன் நம்பியிருந்த நல்லாட்சி, 2018 தீபாவளிக்குள் தீர்த்துக் கட்டப்பட்டது போலாகிவிட்டது.

‘அரசியலில் இது எல்லாம் சகஜம்’ என்பது போல, பல திடுக்கிடும் சம்பவங்கள் அடுக்கடுக்காக நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒன்றாக இருந்து, அப்பம் உண்டு விட்டு, அவருக்கு எதிராக, ஜனாதிபதித் தேர்தலில் (2015) போட்டியிட்டார். அந்த நிகழ்வைக் காட்டிலும், தற்போது ரணிலுக்கு நடந்தது, இரட்டிப்பான பேரிடி எனலாம்.

ஏனெனில், “2015 ஐனாதிபதித் தேர்தலில், மஹிந்த வென்றிருந்தால், நான் ஆறடி நிலத்துக்குள் சென்றிருப்பேன்” எனக் கூறியவர் ஜனாதிபதி மைத்திரி. இருந்தபோதிலும், தற்போது மைத்திரியின் முன்னாலேயே மஹிந்த, பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இனிவரும் நாள்களில் மைத்திரி (ஜனாதிபதி), மஹிந்த (பிரதமர்) ஆட்சி தொடர்ந்தாலும் அவர்களுக்கிடையிலும், பல்வேறு விடயங்களில் உரசல்கள் வந்து செல்லலாம்.

சரி-பிழை; நியாயம்-அநியாயம் என்பதற்கு அப்பால், ஜனாதிபதி சிறந்த அரசியல்வாதி எனலாம். ஏனெனில், ஒருவரது வாழ்க்கை வரலாற்றை எழுதுவதை விட, அவரது சிந்தனை வரலாற்றை கூர்ந்து நோக்க வேண்டும்.

ஏனென்றால், எமிலியோ செக்கி என்பவர் கூறியதைப் போன்று, “எண்ணங்கள் யாருடைய சொத்தும் இல்லை. ஆனால், யார் அதை மிகவும் அருமையாக எடுத்து உரைக்கிறார்களோ, பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு அது சொந்தம் ஆகின்றது”.

ஆனால், இந்த எண்ணங்களுக்கும் வடிவமைப்புகளுக்கும் முழுமையாக, ஜனாதிபதி மைத்திரி மட்டுமே, உரிமை கோரலாமா என்பதும் மக்களது எண்ணமாக உள்ளது.

இலங்கையின் அரசியல் வரலாறு, என்றுமே கண்டிராத, அறிந்திராத அதிரடி மாற்றங்களை, நாடும் மக்களும் கண்டுள்ளனர். பலர் இந்தச் செய்தியை நம்பவே இல்லை. வெடிகள் கொளுத்தி, ஆரவாரமும் ஆனந்தமும் கொள்கிறார்கள். தமிழ் மக்களைப் பொறுத்த வரை இரண்டும் ஒன்றே.

இனி, நடைபெறவுள்ள ஆட்சியை நல்லாட்சி என அழைக்கலாமா? அப்படியாயின், 2015 ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம், இற்றை வரையிலான ஆட்சி நல்லாட்சியா? தமிழ் மக்களைப் பொறுத்த வரை, இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியிலிருந்து (1948), இன்னும் நல்லாட்சியைப் பார்க்கவில்லை.

வெளியே இருந்து உள்ளே (மனம்) செல்வது மகிழ்ச்சி; உள்ளே இருந்து வெளியே வருவது ஆனந்தம். நல்லாட்சி நடைபெற்ற, மூன்றரை ஆண்டு காலப் பகுதியில், தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கவில்லை; ஆனந்தமும் பரவவில்லை.

இவ்வாறாகக் கள நிலைமைகள் இருக்கையில், எந்தவிதமான நிச்சயத் தன்மைகளும் இல்லாத, முற்றிலும் வெறுமை நிலவிய சூழலில், சம்பந்தன் அரசியல் தீர்வு வரும் என, ஏன் நம்பினார்? இவர், அரசமைப்பு ஊடான தீர்வை முழுமையாக நம்பியமை, சின்னக் குழந்தைக்கு முழு நிலாவைக் காட்டி, சோறு ஊட்டியது போன்றதே.

புதிய அரசமைப்புத் தொடர்பில் கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சி) இருவர் மட்டுமே, அனைத்தும் அறிந்திருந்தனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், இது தொடர்பில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்தன.

தற்போது, கொழும்பில் கொளுந்து விட்டெரியும் பிரதமர் கதிரைக்கான போட்டியில், பெரும்பான்மையின அரசியல்வாதிகள் புதிய அரசமைப்பு என்றால் என்ன, ஏன் எனக் கேட்பார்கள்.

புதிய அரசமைப்பு முயற்சிகள் நடைபெற்ற கடந்த மூன்றரை ஆண்டுகள் காலப்பகுதியில் கூட, இதில் ஜனாதிபதியின் கடைக்கண் பார்வை பட்டதோ தெரியவில்லை, இது தொடர்பில் கூட்டமைப்பினரும், ரணில் விக்கிரமசிங்கவுடனேயே தொடர்பில் இருந்தனர்.

இந்நிலையில், பிரதமராகப் பதவி ஏற்றுள்ள மஹிந்த, ஜனாதிபதி மைத்திரி ஆகியோர் இணைந்து, அக்கறை செலுத்தி, அரசமைப்பு விடயத்தை முன்னகர்த்தி, பின்னடைவு கண்டுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு படைப்பர் என, படைத்தவனும் நினைக்க மாட்டான்.

எதிர்வரும் ஏழாம் திகதி, நாடாளுமன்றத்துக்கு அரசமைப்பு வரவிருந்த நிலையில், ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்றுள்ளது. ஆகவே, அரசமைப்பு நகர்வைத் தடுக்கக் கூடிய யுக்தியே, ஆட்சிக் கவிழ்ப்பு எனவும் கருதலாம். கூட்டமைப்பின் தலைமை, நீண்ட காலமாக அடை காத்த முட்டை (அரசமைப்பு முயற்சிகள்), குஞ்சு பொரிக்கவில்லை.

இதைவிடக் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, வீடு அற்றவர்களுக்கான வீட்டுத்திட்டம் எனப் பல விடயங்கள் படுத்துறங்கியே உள்ளன.

இதேவேளை, காணி அபகரிப்பு, பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில், வலிகாமம் வடக்கில் 10 ஏக்கர் காணியைப் படம் போட்டுக் கையளித்துவிட்டு, முல்லைத்தீவில் 2,000 ஏக்கர் காணிகள், காதும் காதும் வைத்தது போல கையகப்படுத்தப்படுகின்றன.

நல்லாட்சியை ஆட்சியில் அமர்த்த உதவி செய்து பின்னர், ஆட்சி புரிய நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வந்த கூட்டமைப்பால், இவற்றைத் தடுக்க முடிவில்லை. இந்நிலைமை குறித்து, தமிழ் மக்கள், கூட்டமைப்பின் மீது பல பக்க விமர்சனங்களை அடுக்கி உள்ளனர்.

பொதுவாக, விமர்சனம் என்பதே, சுயவிருப்பு, வெறுப்புகளைப் பிறர் கருத்தில் திணிப்பது என்றும் நோக்கலாம். ஆனால், கூட்டமைப்புத் தொடர்பாக, தமிழ் மக்களது விமர்சனங்களை, அவ்வாறு கூறவோ, நோக்கவோ முடியாது.

தமிழ் மக்களது உள்ளக் குமுறல்களை, பெரும்பான்மையினக் கட்சிகள் எள்ளளவேனும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், தமிழ் மக்களது மன ஓட்டத்துக்கு மாறாக, கூட்டமைப்பு நடக்க முற்பட்டதனாலேயே, மாற்று அணி பற்றிச் சிந்திக்கத் தோன்றி உள்ளது.

களத்தில் நின்று இயங்கும் அணி, சிறப்பாகச் செயற்பட்டால், இன்னோர் அணி தொடர்பில், யாரும் புதிதாகச் சிந்திக்க மாட்டார்கள். அவ்வாறான சிந்தனையும் ஆக்கபூர்வமானதாகத் தோன்றாது; ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, தமிழ் மக்களின் விமர்சனங்கள் மீதான அலட்சியமே, அடுத்த அணி, அணிவகுத்து வரக் காரணமாகி விட்டது.

இந்நிலையில், இருக்கின்ற தமிழ்க் கட்சிகளின் எண்ணிக்கை, உச்ச அளவில் உள்ளபோது, புது வரவைத் தமிழ் மக்கள் விரும்பாத போதும், வேறு தெரிவு ஒன்றும் இல்லாத படியாலேயே, புதுவரவை விரும்புகின்ற, ஆதரிக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

கூட்டமைப்பு, 2013இல் வடக்கு மாகாண சபையைக் கைப்பற்றிய போது, ‘தமிழர் ஆட்சி மலர்ந்தது’ எனக் கூறப்பட்டது. 2018இல் முன்னாள் வடக்கு முதலமைச்சர் தலைமையில், புதுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டவுடன், ‘தமிழர் தலைமை மலர்ந்தது’ எனக் கூறப்படுகின்றது.

ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், தமிழ்க் கட்சிகளிடையே அறிவு- பூர்வமான ஒற்றுமை, உணர்வு பூர்வமாக எப்போது ஏற்படுகின்றதோ, அன்றே தமிழர் தலைமை, உண்மையில் மலரும்.

தற்போது, நாடாளுமன்றத்தில் தமது பலத்தை நிரூபித்து, ஆட்சியை உறுதிப்படுத்த, மஹிந்த அணியும் ரணில் அணியும் களம் இறங்கி விட்டன. கூட்டமைப்பின் ஆதரவை, இரு அணிகளும் கோரி நிற்கின்றன.

அனைத்து விடயங்களிலும் தீர்மானம் எடுப்பது போல, கூட்டமைப்பின் இருவர், மூவர் இந்த விடயத்திலும் முடிவெடுத்தால், அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா என்ற நிலைமை உருவாகியுள்ளது. கூட்டமைப்புக்கு உள்ளேயே, ஆட்சி அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படாத சூழ்நிலையில், எவ்வாறு நாட்டின் ஆட்சியாளர்கள், ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து அளிப்பார்கள்?

நாட்டின் அரசியல் களம், மிகவும் கொந்தளிப்பான நிலையில் உள்ளது. அதை முறியடித்து, தூரநோக்கத்துடன் வினைதிறனாகக் கையாள, தமிழர்களது ஒற்றுமை மட்டுமே துணை நிற்கும். ஒற்றுமையாக, ஒருங்கிணைக்கப்பட்ட மிக நுணுக்கமான செயற்றிட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

தமிழ் மக்களது பலம், எலியைப் போன்றது; பெரும்பான்மையினத்தின் பலம், பூனையைப் போன்றது. எலி, பூனையுடன் மோதுகையில், அது ஒரு வளையின் அருகில் இருக்கும். அந்த வளையே ஒற்றுமை. அதை மறந்துவிடக் கூடாது.Post a Comment

Protected by WP Anti Spam