மத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா?(கட்டுரை)

Read Time:15 Minute, 53 Second

ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரை, முக்கியமான நாளாக, இன்றைய தினம் (06) அமைந்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளிலும், அந்நாடு எப்பாதை நோக்கிச் செல்லுமென்பதைத் தீர்மானிக்கின்ற நாளாக இது அமையவுள்ளது. ஐ.அமெரிக்காவின் மத்தியகாலத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாள் தான் இது.

மத்தியகாலத் தேர்தல் என்றால்?

ஐ.அமெரிக்காவில், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றம், இரண்டு அவைகளைக் கொண்டது. பிரதிநிதிகள் சபை என அழைக்கப்படுவது, கீழவையாகக் காணப்படுவதோடு, செனட் என்று அழைக்கப்படுவது, மேலவையாக உள்ளது. இதில், பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும். செனட்டுக்கான தேர்தலும், 2 ஆண்டுகளுக்கொரு முறை இடம்பெற்றாலும், செனட்டராகத் தெரிவாகும் ஒருவர், 6 ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார். எனவே, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கிட்டத்தட்ட மூன்றிலொரு பகுதி செனட்டர்கள், தேர்தலை எதிர்கொள்வர்.

பிரதிநிதிகள் சபையில், வாக்களிக்கும் தகுதிகொண்ட 435 உறுப்பினர்கள் உள்ளனர். செனட்டில், 100 செனட்டர்கள் உள்ளனர்.

ஐ.அமெரிக்காவில், ஜனாதிபதியின் பதவிக் காலம், 4 ஆண்டுகள் ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் போது, பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த அனைவருக்குமான தேர்தலும், சுமார் மூன்றிலொரு பங்கு செனட்டர்களுக்குமான தேர்தல் இடம்பெறும்.

அதேபோல், ஜனாதிபதி பதவியேற்று இரண்டு ஆண்டுகளிலும், பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த அனைவருக்குமான தேர்தலும், சுமார் மூன்றிலொரு பங்கு செனட்டர்களுக்குமான தேர்தலும் இடம்பெறும். ஆனால் இத்தேர்தல், மத்தியகாலத் தேர்தல் எனப்படும். ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தின் நடுவில் இடம்பெறுவதால், அப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

இம்முறை தேர்தலில், செனட்டில், வழக்கமாகத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய 33 பேரோடு, விசேட தேர்தல் இரண்டும் இடம்பெறவுள்ளன. ஆகவே, 35 செனட்டர்கள், இம்முறை தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

தற்போதைய நிலை

பிரதிநிதிகள் சபையில், 435 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பெரும்பான்மையைப் பெறுவதற்கு, 218 ஆசனங்கள் தேவை. தற்போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு, 241 ஆசனங்கள் உள்ளன. ஜனநாயகக் கட்சிக்கு, 194 ஆசனங்கள் உள்ளன.

செனட்டில் உள்ள 100 ஆசனங்களில், கடந்த தேர்தலில் 52 ஆசனங்களை, குடியரசுக் கட்சி வென்றது. ஜனநாயகக் கட்சிக்கு 46 ஆசனங்களும், ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து செயற்படும் சுயாதீன வேட்பாளர்களுக்கு 2 ஆசனங்களும் கிடைத்தன. எனவே நடைமுறையில், ஜனநாயகக் கட்சிக்கு 48 ஆசனங்கள் கிடைத்தன.

இதன் பின்னர், அலபாமாவின் செனட்டராகப் பணியாற்றிய ஜெப் செஷன்ஸ், நாட்டின் சட்டமா அதிபராகப் பதவியேற்ற நிலையில், அவரது இடத்துக்கு விசேட தேர்தல் நடத்தப்பட்டது. அதன்போது, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டக் ஜோன்ஸ் வெற்றிபெற்றார். எனவே தற்போது, குடியரசுக் கட்சிக்கு 51 ஆசனங்களும் ஜனநாயகக் கட்சிக்கு 49 ஆசனங்களும் உள்ளன.

பெரும்பான்மையைப் பெற

காங்கிரஸின் இரண்டு அவைகளிலும் பெரும்பான்மையைக் கொண்டுள்ள குடியரசுக் கட்சி, தமது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ளக் கடுமையாக முயல்கிறது.

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையைப் பெற வேண்டுமாயின், ஆகக்கூடியது 23 ஆசனங்களையே, குடியரசுக் கட்சி இழக்க முடியும். மறுபக்கமாக செனட்டில், ஓர் ஆசனத்தை இழக்க முடியும். செனட்டில் ஓர் ஆசனத்தைக் குடியரசுக் கட்சி இழந்தால், இரு கட்சிகளுக்கும் தலா 50 உறுப்பினர்கள் என்ற நிலை வரும். ஆனால், அப்படியான சமநிலை காணப்பட்டால், வாக்களிப்பின் போது, அந்தச் சமநிலையை முறியடிக்கும் வாக்கை, செனட்டின் தலைவராகச் செயற்படும் உப ஜனாதிபதி அளிக்க முடியும். எனவே, ஓர் ஆசனத்தைக் குடியரசுக் கட்சி இழந்தாலும், அக்கட்சியால் சமாளிக்கக்கூடியதாக இருக்கும்.

அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது?

அண்மைய சில நாள்களில், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கான ஆதரவு சிறிதளவு அதிகரித்திருந்தாலும், அதிகளவில் பிரபலமில்லாத ஒரு ஜனாதிபதியாகவே அவர் உள்ளார். மறுபக்கமாக, அவருக்கெதிரான எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில், “நீல அலை” எனக் கூறப்படும் ஆதரவு அலை, ஜனநாயகக் கட்சியின் பக்கம் வீசுகிறது என்று கருதப்படுகிறது. (ஜனநாயகக் கட்சியின் நிறம் நீலம்; குடியரசுக் கட்சியின் நிறம் சிவப்பு)

அதேபோல், ஐ.அமெரிக்காவின் அண்மைக்கால அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரை, ஜனாதிபதியாக முதற்தடவை பதவியேற்ற ஒருவரின் கட்சி, அவரது முதற்பதவிக் காலத்தில் இடம்பெறும் மத்தியகாலத் தேர்தலில் தோல்வியடைந்தமையே வரலாறாக உள்ளது.

உதாரணமாக, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பதவியேற்ற பராக் ஒபாமாவின் காலத்தில், பிரதிநிதிகள் சபையில் 63 ஆசனங்களை இழந்து, பெரும்பான்மையை ஜனநாயகக் கட்சி இழந்தது. செனட்டில் 6 ஆசனங்களை இழந்தாலும், மயிரிழையில் (51 ஆசனங்களுடன்) பெரும்பான்மையைத் தக்கவைத்தது.

ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் காலத்தில், இது விதிவிலக்காக அமைந்தது. ஆனால், செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், அவருக்கான ஆதரவு உயர்வாக இருந்தது.

பில் கிளின்டன், 54 ஆசனங்களை இழந்து, பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையைப் பறிகொடுத்தார். செனட்டிலும் 9 ஆசனங்களைப் பறிகொடுத்து, பெரும்பான்மையை இழந்தார்.

எனவே, நீல அலை, வழக்கமான போக்கு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, ஜனநாயகக் கட்சிக்கு வாய்ப்புகள் உள்ளனவெனக் கருதப்படுகிறது.

எதிர்வுகூறல்கள் என்ன சொல்கின்றன?

இதுவரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், பிரதிநிதிகள் சபையை, ஜனநாயகக் கட்சி கைப்பற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கட்சி, கிட்டத்தட்ட 192 ஆசனங்களைக் கைப்பற்றுவது ஓரளவுக்கு அல்லது உறுதியாகச் சாத்தியப்பாடுள்ளது எனக் கருதப்படுகிறது. எனவே, பெரும்பான்மையைக் கைப்பற்றுவதற்காக, மேலதிகமாக 26 ஆசனங்களே தேவைப்படுகின்றன.

இரண்டு கட்சிகளும் கைப்பற்றுவதற்குச் சாத்தியமுள்ள ஆசனங்களாக, 48 ஆசனங்கள் காணப்படுகின்றன. எனவே, இறுதிக்கட்டத்தில் பாரிய மனமாற்றமொன்று மக்கள் மத்தியில் ஏற்பட்டாலொழிய, ஜனநாயகக் கட்சியின் பக்கம், பிரதிநிதிகள் சபை செல்லவுள்ளது.

அப்படியாயின் செனட்?

ஏற்கெனவே பார்த்ததைப் போன்று, 35 ஆசனங்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளதோடு, பெரும்பான்மையைப் பெறுவதற்கு 2 ஆசனங்களே தேவைப்படுகின்ற நிலையில், நிலவுவதாகக் கூறப்படும் “நீல அலை”க்கு மத்தியில், செனட்டையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றுமென எண்ணக்கூடும். ஆனால், அதற்கான சாத்தியப்பாடுகள் மிகக்குறைவு என்றே கருதப்படுகிறது.

அதற்கு, முக்கிய காரணமொன்று உள்ளது. இம்முறை தேர்தல் இடம்பெறும் 35 ஆசனங்களில் 26 ஆசனங்கள், ஏற்கெனவே ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் கீழ் காணப்படும் ஆசனங்களாக உள்ளன. வெறுமனே 9 ஆசனங்கள் தான், குடியரசுக் கட்சியின் கீழ் காணப்படும் ஆசனங்களாக உள்ளன.

எனவே, தமது 26 ஆசனங்களைக் காப்பாற்றுவதோடு மாத்திரமல்லாது, குடியரசுக் கட்சியின் 2 ஆசனங்களைக் கைப்பற்றுவதென்பது, கடினமாகவே அமையுமெனக் கருதப்படுகிறது.

அதிலும், ஜனநாயகக் கட்சியின் 26 ஆசனங்களில் 14 ஆசனங்கள் தான், மிகவும் அதிக வெற்றிவாய்ப்புள்ளனவாகக் கருதப்படுகின்றன. ஏனையவற்றில் 6 ஆசனங்களை, ஜனநாயகக் கட்சி அநேகமாக வெல்லுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், மிகுதி 6 ஆசனங்களும், இரு தரப்பினராலும் வெல்லப்படக்கூடிய வாய்ப்புகளாக உள்ளன. குடியரசுக் கட்சியின் 9 ஆசனங்களில் 4 ஆசனங்களே, இரு தரப்பினராலும் வெல்லப்படக்கூடிய ஆசனங்களாக உள்ளன.

எனவே, பிரதிநிதிகள் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றினாலும், செனட்டை அக்கட்சி கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவே.

ஏன் முக்கியம்?

இத்தேர்தலைப் பொறுத்தவரை, ஏற்கெனவே சொல்லப்பட்டது போன்று, ஐ.அமெரிக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற ஒரு தேர்தலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலுமே அவ்வாறு என்ற போதிலும், இத்தேர்தல், அதிலும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், வழக்கமான அரசியல் போக்கை உதறித்தள்ளிவிட்டுச் செயற்படுகிறார். முன்னைய ஜனாதிபதிகளை விட, அதிக சர்ச்சைகளுக்கு உரியவராக இருக்கிறார்.

அதேபோல், உலக அரங்கிலிருந்து ஐ.அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அவர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதோடு, காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், ஆயுதப் பாவனை தொடர்பான பிரச்சினைகள், இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள், வெள்ளையினத் தேசியவாதத்தின் எழுச்சி போன்றவற்றை அவர் கையாளும் விதம், அதிக விமர்சனத்தைச் சந்தித்துள்ளது. அதேபோல், குடியேற்றவாசிகளை ஒட்டுமொத்தமாக வெறுக்கும் அவரின் நிலைப்பாடும், கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. குடியேற்றவாசிகள் மீதான அவரது எதிர்ப்பு, இனவாதத்தின் அடிப்படையில் உருவானது எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

எனவே தான், காங்கிரஸின் இரு அவைகளையோ அல்லது ஓர் அவையையோ ஜனநாயகக் கட்சி கைப்பற்றுமாயின், ஜனாதிபதி ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கான தடைகளை விதிக்க முடியும். ஐ.அமெரிக்காவின் அரச அமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில், சட்டங்களை உருவாக்கக்கூடிய அதிகாரம், காங்கிரஸுக்கே உள்ளது. எனவே, சர்ச்சைக்குரிய எச்சட்டத்தை உருவாக்குவதென்றாலும், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படும் காங்கிரஸின் அங்கிகாரத்தை, ஜனாதிபதி ட்ரம்ப் பெற வேண்டியிருக்கும். அப்போது, அவரது சர்ச்சைக்குரிய திட்டங்களை முன்னெடுக்க முடியாமலிருக்கும். ஜனாதிபதிப் பதவி, மிகவும் அதிக அதிகாரங்களைக் கொண்டதாகக் கருதப்படுகின்ற போதிலும், எதிரணியால் காங்கிரஸ் கட்டுப்படுத்தப்படும் போது, அந்நிலை வேறானது.

முன்னர் ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, 2008ஆம் ஆண்டில் பதவியேற்ற பின்னர், 2010ஆம் ஆண்டில், பிரதிநிதிகள் சபையை, குடியரசுக் கட்சிக்குப் பறிகொடுத்திருந்தார்.

பின்னர் 2014ஆம் ஆண்டில், செனட்டின் கட்டுப்பாட்டையும் பறிகொடுத்திருந்தார். இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டிலிருந்தே, அவரது கொள்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதோடு, 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு அவர் வெளியேறும் வரை, அந்நிலைமை மோசமடைந்தது. குறிப்பாக ஒரு கட்டத்தில், ஒபாமாவால் உச்சநீதிமன்றத்துக்கென முன்மொழியப்பட்ட நீதிபதியை உறுதிப்படுத்த வேண்டிய செனட், அவர் மீதான வாக்கெடுப்பை நடாத்தாமை ஒரு பக்கமாகவிருக்க, அவரைச் சந்திக்கவே மறுத்திருந்தது.

எனவே, தங்களது கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியை, காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த குடியரசுக் கட்சி எவ்வாறு நடத்தியது என்பதை, ஜனநாயகக் கட்சியினர் ஞாபகத்தில் வைத்திருப்பர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸின் அதிகாரத்தைக் கைப்பற்றினால், ஜனாதிபதி ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு, மிகப்பெரிய முட்டுக்கட்டைகளைப் போடுவரென எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர்கள் இரண்டு மனைவிகள் யார் தெரியுமா !!(வீடியோ)
Next post அல்லதைத் தவிர்க்க நல்லதே நினைப்போம்!!(மருத்துவம்)