By 15 November 2018 0 Comments

ஜனாதிபதிப் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டார் சிறிசேன!!(கட்டுரை)

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஏன் சில வாரங்களுக்கு முன்னர் கூட, இந்த விடயத்தைச் சொல்லியிருந்தால், அதைச் சொல்பவரின் மனநிலை, உளத்தகுதி, அரசியல் அறிவு போன்றவற்றையெல்லாம் கேள்விக்குட்படுத்தியிருப்பார்கள். ஆனால், இதை உறுதியாகச் சொல்வதற்கான தேவை எழுந்திருக்கிறது: ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கான தகுதியை, மைத்திரிபால சிறிசேன இழந்துவிட்டார் என்பது தான் அது.

இதைப் பற்றி நேரடியாகப் பார்ப்பதற்கு முன்னர், 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்தைப் பற்றிப் பார்ப்பது அவசியமானது. குறிப்பாக, அப்போது உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் பற்றிப் பார்க்க வேண்டியது அவசியம்.

மத்திய இடதுசாரித்துவக் கொள்கைகளைக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், மத்திய வலதுசாரித்துவக் கொள்கைகளைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் இணையும் போது, பொருளாதாரக் கொள்கைகள் உள்ளிட்ட பல விடயங்களில், கருத்து முரண்பாடு ஏற்படுமென்பது தெளிவு. எனவே தான், சாதாரண, தனியான கட்சியொன்றால் உருவாக்கப்பட்டால் ஏற்படும் அரசாங்கத்தை விட, தேசிய அரசாங்கத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுமென்பது வெளிப்படை. அதைத் தாண்டி, அவ்வரசாங்கத்தை வழிநடத்துவதற்கு, தேர்தல் அறிவு மாத்திரமன்றி, நாட்டை நேசிக்கும் திறனும் வேண்டும். அத்திறன், மைத்திரிபால சிறிசேன என்ற நபரிடம் இருப்பதாக எண்ணியே, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணியில் வேட்பாளராக அவரைக் களமிறக்கினர். ஆனால், ஒருவரது வெளித்தோற்றத்தை மாற்றலாம், அவரின் உண்மையான நிலைப்பாட்டை மாற்ற முடியுமா? ஏதோவொன்றைக் குளிப்பாட்டுவது தொடர்பான தமிழ்ப் பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது.

மைத்திரிபால சிறிசேன என்ற நபரைப் பலர் வெறுப்பதற்கு, பல தருணங்கள் இருந்தன. ஜனநாயகவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் பலர், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி, தனது முன்னாள் எதிரியான (?) மஹிந்த ராஜபக்‌ஷவை, பிரதமர் பதவியேற்க வைப்பதற்கு அழைத்தமையைத் தான், தங்களுக்கான திருப்புமுனையாகக் கருதுகிறார்கள். ஆனால், சிறிசேனவைத் தொடர்ந்தும் பார்த்து வந்தவர்களுக்கு, அவரின் உண்மையான குணநலனை அறிந்துகொள்வதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன. ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ என்ற எதிரிக்கு எதிராக இருந்த வரை, சிறிசேன என்ற கருவியை, அவர்கள் வெறுக்கத் தயாராக இருந்திருக்கவில்லை என்பது தான் உண்மையானது.

ராஜபக்‌ஷவின் ஆட்சியில் உண்மையாகவே வெறுப்புக்கொண்டு, கட்சிக்குள் இருந்துகொண்டு அவரை எதிர்த்த பின்னர், 2014ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி, சிறிசேன பிரிந்திருந்தார் என்றால் வேறு விடயமாக இருந்திருக்கும். ஆனால், ராஜபக்‌ஷவுடன் இருந்து, கிடைத்த தருணத்தில் எல்லாம் (அரசமைப்பின் 18ஆவது திருத்தம் உட்பட) அவரை நியாயப்படுத்திவிட்டு, ஜனாதிபதிப் பதவிக்கான வாய்ப்புக் கிடைத்தவுடன் கட்சி மாறுவதென்பது, பெரிதளவுக்குத் தியாகம் கிடையாது. சிறிசேன என்ற கருவி மூலம், நாட்டில் முக்கியமான மாற்றமொன்று ஏற்பட்டது என்ற அடிப்படையில், அக்கருவிக்கான நன்றியறிதலுடன் இருப்பது அவசியமானது தான்; ஆனால் அதற்காக, அவர் செய்தது சரியென்றாகிவிடாது. அதனால் தான், “துரோகிகளை நம்பாதே; அவர்கள், நீ உருவாக்கிய துரோகிகளாக இருந்தாலும் கூட” என்ற பழமொழி இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

ஜனாதிபதி சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில், அவர் மீதான விமர்சனங்களை முன்வைப்பதற்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை, வழக்கமான அரசியல்வாதிகள் செய்பவை தான் என்பதால், பெரிதாகக் கணக்கெடுக்கப்படவில்லை.

ஆனால், இவ்வாண்டு ஆரம்பத்தில், ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட சில நடவடிக்கைகள், அவரது முடிவெடுக்கும் திறனைக் கேள்விக்குட்படுத்தியிருந்தன. மஹிந்த ராஜபக்‌ஷவின் மீள்வருகையை உத்தியோகபூர்வமாக்கியது, இவ்வாண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ராஜபக்‌ஷ வழிநடத்தும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றி தான். அவ்வெற்றிகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான பங்களிப்பை, ஜனாதிபதி சிறிசேன வழங்கியிருந்தார்.

தான் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் எண்ணத்தில், தனது தலைமையிலான அரசாங்கத்தின் இணைந்து ஆட்சி செய்துகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி மீது அவர் முன்வைத்த விமர்சனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இலங்கையில் ஆட்சி புரிந்த ஊழல்மிகுந்த அரசாங்கங்களில் ஒன்றாக, ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் கருதப்பட்டது. அது உண்மையா, பொய்யா என்பது தனியான விவாதம். ஆனால், இதே சிறிசேன, அக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இப்படியாக இருக்கும் போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐ.தே.கவைப் பலவீனமாக்குகிறேன் என்ற போர்வையில், தனது கட்சியும் அங்கம் வகித்த அரசாங்கத்தை, “ராஜபக்‌ஷ அரசாங்கத்தை விட மோசமான ஊழலைக் கொண்ட அரசாங்கம்” என, அவர் வர்ணித்திருந்தார். அரசாங்கம் மீதான தொடர்ச்சியான விமர்சனங்களுக்குப் பிறகு, “எல்லோரும் கள்ளர்கள் தான். மஹிந்த இருக்கும் போது, வீதியையாவது போட்டார்கள்” என்று, மக்களில் கருத்து மாற்றமொன்று இடம்பெற்றது. இதற்கான முக்கியமான பொறுப்பை, ஜனாதிபதி சிறிசேன ஏற்க வேண்டும்.

இப்படியான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாட்டின் தலைவர் என்ற பொறுப்புக்குத் தான் தகுதியற்றவர் என்பதற்கான சமிக்ஞைகளை, அவர் வெளிப்படுத்தி வந்திருந்தார்.

எல்லாவற்றும் மேலாக, ஒக்டோபர் 26ஆம் திகதி அவர் மேற்கொண்ட முடிவும், அதன் பின்னரான அவரது நடத்தைகளும், ஜனாதிபதிப் பதவிக்கு அவர் பொருத்தமற்றவர் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. ஏனென்றால், அரசியலென்று வரும் போது, சட்டத்தை வளைப்பது என்று ஒன்று இருக்கிறது; சட்டத்தை முறித்தல் என்ற ஒன்று இருக்கிறது. சட்டத்தை வளைப்பதென்பது, அனைவரும் செய்யும் ஒன்று தான். சட்டத்தை வளைப்பது தவறானது தான், ஆனால், கவலைக்குரிய விதமாக, அரசியல்வாதிகளுக்கான குறைபாடாகவன்றி, அரசியல்வாதிகளோடு சேர்ந்துவரும் சிறப்பியல்பு போன்று தான் அது மாறிவிட்டது; மக்களும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால், ஒக்டோபர் 26ஆம் திகதி நடந்தது, சட்டத்தை முறிக்கும் நடவடிக்கை. நாட்டின் அரசமைப்புப் படி, பிரதமரை நீக்குகின்ற அதிகாரம், ஜனாதிபதிக்குக் கிடையாது. அது தெளிவாக இருக்கிறது. சிங்கள மொழிமூலத்தில் எப்படி இருக்கிறது, ஆங்கில மொழிமூலத்தில் எப்படி இருக்கிறது என்பதெல்லாம் இங்கு தேவையே இல்லை. இலங்கை அரசமைப்பின் மூன்று மொழிமூலங்களிலும், பிரதமரை நீக்குகின்ற அதிகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை. வேறு விதமாகச் சொல்பவர்கள், ஒன்றில் மக்களை ஏமாற்றுகிறார்கள்; இல்லையெனில் தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள். இரண்டுமே ஆபத்தான விடயங்கள்.

பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் தனக்கில்லை என்பது, ஜனாதிபதிக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இலங்கையின் நீதித்துறையின் முக்கிய பிரிவுகள், அவருக்கான ஆலோசனைகளை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றன. நாட்டின் பிரதான சட்ட அதிகாரியான சட்டமா அதிபர், இவ்விடயங்களில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க வேண்டுமென்பது சட்ட ஏற்பாடாகும். ஆகவே, சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்ட பின்னர், அதிகாரமில்லை என ஜனாதிபதிக்குக் கூறப்பட்டு, அதையும் மீறி ஜனாதிபதியால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இல்லாவிட்டால், சட்டமா அதிபர், தவறான ஆலோசனையை வழங்கியிருக்கலாம். மீண்டும், இவை இரண்டுமே அச்சத்தை ஏற்படுத்துவன. சட்டப் பின்புலமற்ற இப்பத்தியாளர், சட்டமா அதிபர் தவறாகக் கூறியிருக்கலாம் என்று எவ்வாறு கூற முடியுமென்ற கேள்வி எழுப்பப்படலாம். ஆனால், நாட்டின் அரசமைப்பில் தெளிவாக உள்ள விடயத்தைக் கூறுவதற்கு, இயல்பறிவு (common sense) போதுமானது. அத்தோடு, தற்போதைய ஜனாதிபதி சிறிசேன, 5 ஆண்டுகள் தான் பதவி வகிக்கலாம் என்று அரசமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் போது, இல்லை, 6 ஆண்டுகள் என்று வாதாடியவரும் இதே சட்டமா அதிபர் தான்.

இவ்விரண்டு காரணங்களையும் தாண்டி, மூன்றாவது காரணமொன்றும் இருக்கிறது: சட்டமா அதிபரிடம் இது தொடர்பில் கேட்க வேண்டாமென்ற ஆலோசனை, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கலாம். இவ்விடயத்தைச் சட்டமா அதிபரிடம் கேட்டால், முடியாது என்று சொல்வார், ஆகவே, அரசமைப்பில் ஏதாவது ஓட்டை இருக்கிறதா என்று பார்த்துச் செய்யலாம் என்ற ஆலோசனை வழங்கப்பட்டிருக்கலாம். இவ்விடயத்தில் சட்டமா அதிபரின் மௌனத்தைப் பார்க்கும் போது, இது நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மேலே குறிப்பிடப்பட்ட சாத்தியக்கூறுகளில் எது நடந்திருந்தாலும், இலங்கையின் சட்டக் கட்டமைப்புப் பற்றிய கேள்விகளை எழுப்ப வேண்டியதாக இருக்கிறது.

இது இவ்வாறிருக்க, இவ்வாறான தவறான முடிவை எடுத்த ஜனாதிபதி சிறிசேன, அத்தவறை ஏற்றுக்கொண்டு, இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், சிறிய பொய்களைச் சொல்வோர், அவற்றிலிருந்து தப்புவதற்குப் பெரிய பொய்களைச் சொல்வது போல, செய்த கேள்விக்கிடமான விடயங்களை மூடிமறைப்பதற்காக, தொடர்ச்சியாக அவ்வாறான நடவடிக்கைகளே தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி விலக்குவதாக, 2094/43 என்ற இலக்கத்தில் வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர், ஒக்டோபர் 30ஆம் திகதி, அதே வர்த்தமானியோடு இணைக்கப்பட்டு, 2094/43A என்ற இலக்கத்தில், அமைச்சரவையைக் கலைப்பதாக, ஒக்டோபர் 26ஆம் திகதியிடப்பட்டு, வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது. ஆகவே, ஏற்கெனவே அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் கேள்விக்குரியன என்பதை அவர்களே ஏற்றுக்கொள்வது போலவே இது அமைந்திருந்தது.

அதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை (விலைக்கு?) வாங்குவதற்காக, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, அவர் உத்தரவிட்டிருந்தார். பிரதமராகத் தன்னால் நியமிக்கப்பட்ட ராஜபக்‌ஷவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லையென்பதை ஏற்றுக்கொள்வதாகவே அந்நடவடிக்கை அமைந்தது. திரும்பவும், தனது ஆரம்ப நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காகவே, அவரால் இந்நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதாக அமைந்தது. அதன் பின்னர், தன்னோடு கலந்துரையாடிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு, ஒக்டோபர் 5 அல்லது 7ஆம் திகதியில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக, ஜனாதிபதி வாக்குறுதியளித்தார் என்பதை அறிய முடிகிறது. வாய்மூலமான அந்த வாக்குறுதியும் காற்றில் விடப்பட்டது. அதன் காரணமாக எழுந்த எதிர்ப்பைச் சம்பாதிக்கத் தான், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 16ஆம் திகதிக்கு வெறுமனே 2 நாள்கள் முன்னதாக, நாடாளுமன்ற அமர்வை முன்னகர்த்தியிருந்தார்.

இவையெல்லாமே, நாட்டின் சட்டத்தையும் பொதுமக்களின் நம்பிக்கையும் ஜனாதிபதி சிறிசேன மீறியமைக்கான சில உதாரணங்களாகும். இவை அனைத்துமே, ஜனாதிபதிப் பதவிக்கு அவர் பொருத்தமற்றவர் என்பதைக் காட்டுகின்றன. ஆனால், இப்பத்தியாளரின் கருத்துப்படி, இவற்றையெல்லாம் விட, நாடாளுமன்றத்துக்கு அருகில் வைத்து, கடந்த திங்கட்கிழமை (05) அவர் ஆற்றிய உரை தான், அவரது தகுதியின்மையை வெளிப்படையாகக் காட்டியிருக்கிறது.

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள் என்று பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் வெளிநாடுகளும் சர்வதேச அமைப்புகளும், வாய்கிழியக் கத்திக் கொண்டிருக்கும் போது, மக்களின் பலத்தைக் காட்டுவதற்கான பேரணி என, நாடாளுமன்றத்துக்கு அருகில் நடத்தப்பட்ட பேரணியில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி சிறிசேன, தன்னால் பதவியிலிருந்து (சட்டவிரோதமாக) விலக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சமபாலுறவாளர் என்றழைத்ததோடு, அவ்வாறு குறிப்பிடுவதற்கு, சமபாலுறவாளர்களைக் கேலியாக அல்லது மரியாதைக்குறைவாக அழைப்பதற்குப் பயன்படுத்தப்படும் சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். அதே சொல்லை மீண்டும் பயன்படுத்தி, அவரோடு சேர்ந்திருக்கும் குழுவும் அப்படியானது என்ற வகையிலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சமபாலுறவாளராக இருப்பதென்பது எவ்விதத்திலும் தவறானது கிடையாது. ஒருவரது பாலியல் தெரிவென்பது, ஆட்சியாளராக அவர் ஏற்பதற்கு எவ்விதத்திலும் தாக்கல் செலுத்தக்கூடாது. ஆட்சியாளர் ஒருவர் பாலியல் தெரிவு என்னவென்பதை அறிய வேண்டுமென நினைப்பது, அவர் அணிந்திருக்கும் உள்ளாடையின் நிறத்தை அறிய விரும்புவதற்குச் சமமானது. ஜனாதிபதியாக நாம் தெரிவுசெய்ய விரும்பும் ஒருவர் விரும்பி அணியும் உள்ளாடையின் நிறம், எமது தெரிவில் எந்தளவுக்குத் தாக்கம் செலுத்தக்கூடாதோ, அந்தளவுக்குத் தான் அவரின் பாலியல் தெரிவும் எமது தெரிவில் தாக்கம் செலுத்தக்கூடாது. இதில், எவ்விதமான சர்ச்சையோ, முரண்பாடோ கிடையாது.

ஆனால், பிரதமர் விக்கிரமசிங்கவைச் சமபாலுறவாளர் என ஜனாதிபதி சிறிசேன அழைத்தபோது, அவ்வரங்கத்தில் எழுந்த கூச்சல்கள், எதற்காக அவர் அதைக் கூறினார் என்பதை வெளிப்படுத்தின. கடும்போக்கு சிங்கள – பௌத்த வாக்குகளை இலக்குவைக்கும் ஜனாதிபதி சிறிசேன, கடுமையான பழைமைவாதத்தைத் தன்னுடைய கையில் எடுத்திருக்கிறார். இதில், கவலைதரக்கூடிய விடயம் என்னவென்றால், அப்போது மேடையில் அமர்ந்திருந்த மஹிந்த கூட, ஜனாதிபதி சிறிசேனவின் கருத்தைக் கேட்டு, அவமானத்தில் அல்லது வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டு தான் சிரித்திருந்தார். ஜனாதிபதி சிறிசேன சொன்னதை அவர் விரும்பியிருந்தார், ஆனால் அவரது உள்மனது, “நான் கூட இதைச் சொல்லியிருக்க மாட்டேன்” என்று கூறியது என்பதைத் தெளிவாகப் பார்க்கக்கூடியதாக இது. இத்தனைக்கும், இதே மஹிந்த தான், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில், அப்போது ஜனாதிபதி வேட்பாளராக இருந்த சிறிசேனவை, ஆண்மையற்றவர் என்ற கருத்துப்படி விமர்சித்திருந்தார். அப்படிக் கூறியவரே தடுமாறுமளவுக்குத் தான், ஜனாதிபதி சிறிசேனவின் கருத்து அமைந்திருந்தது.

இலங்கை அரசமைப்பின் அத்தியாயம் IIIஇன், 12ஆவது உறுப்புரையின் 1ஆவது உப பிரிவு, “சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள்; அத்துடன் அவர்கள் சட்டத்தால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள்” என்று, தெளிவாகக் குறிப்பிடுகிறது. எனவே, அவரது இந்த சமபாலுறவு வெறுப்புக் கருத்து, இலங்கை அரசமைப்புக்கும் முரணானது தான்.

ஆனால், அரசமைப்பு, சட்டம், நீதி என்பவற்றைத் தாண்டி, நாட்டை ஒன்றுசேர்க்க வேண்டிய தலைவர் என்ற அடிப்படையில், மக்களுக்கிடையில் சகவாழ்கைக் கட்டியெழுப்ப தேவைகொண்ட ஜனாதிபதியொருவர், மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி, தனது சுயலாபத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ள முயலும் போது, ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கான தார்மீகமான தகுதியை அவர் இழந்துவிட்டார். ஜனாதிபதியாக இருப்பதற்கான ஏனைய தகுதிகளெல்லாம் ஒருபக்கமாகவிருக்க, அப்பதவியில் இருப்பதற்கான தார்மீகத் தகுதியை ஒருவர் இழந்த பின்னரும், அப்பதவியில் அவர் தொடர்வதென்பது, எந்த வகையிலும் நியாயமற்றது.

நாட்டின் அரசியல் குழப்பங்கள் ஓரளவுக்குத் தெளிந்த பின்னர், ஜனாதிபதி சிறிசேனவுக்கு எதிரான பெருங்குற்றப் பிரேரணை (impeachment) சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் இவ்விடயம் முதன்மைப்படுத்தப்படுமென நம்புவோம்.Post a Comment

Protected by WP Anti Spam