By 26 November 2018 0 Comments

“ஊரின் தொடக்கத்தில் உள்ளது என் வீடு !”(மகளிர் பக்கம்)

சமீபத்தில் ஒரு கவிதை சமூக வலைத்தளங்களை கலக்கிக் கொண்டிருந்தது. ஒரு பெண்ணிடமிருந்து ஜனநாயகத்தை நோக்கி வீசப்பட்ட சூடான கேள்விக் கணை அது. அந்தக் கவிதைக்குச் சொந்தக்காரர் கவிஞர் சுகிர்தராணி. அரசுப் பள்ளி ஆசிரியையான இவர் சமகால தலித் இலக்கியத்தில் முக்கியமான பெண் கவிஞர். பெண் உடல் அரசியல் குறித்து பேசியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். இந்த சமூக வெளிச்சம் இவருக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. தன் போராட்ட வாழ்க்கை, அதன் வெற்றி குறித்து பகிர்கிறார் இங்கே…

“பிறந்தது ராணிப்பேட்டை அருகில் உள்ள லாலாபேட்டை என்னும் கிராமம்.இப்போதும் அங்கேயேத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அப்பா சண்முகம் பாரி நிறுவனத்தில் ஊழியர். அம்மா தவமணி. உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர்.பத்தாம் வகுப்பு வரை சொந்த ஊரில் இருக்கும் பள்ளியில் தான் படித்தேன். ஊரின் கடைசியில், இல்லையில்லை ஊரின் தொடக்கத்தில் ஒரு பத்து பதினைந்து வீடுகள் இருக்கின்றன. அங்குதான் எங்கள் வீடும் இருக்கிறது. சிறு வயதிலேயே நாம் மட்டும் ஏன் ஊரிலிருந்து தள்ளி இருக்கிறோம் என்ற சிந்தனையும் கேள்வியும் எனக்குள் துளைத்துக் கொண்டே இருந்தன.

நாங்கள் எங்கள் வீட்டுக்குள் தெருவுக்குள் எங்களுக்குள் மகிழ்ச்சியாக, கொண்டாட்டமாகத்தான் இருந்தோம். ஆனால் ஊருக்குள் நுழைந்தவுடன் அவை காணாமல் போகின்றன என்ற வருத்தமும் ஒருபுறம் இருந்தது. பள்ளியில் மற்ற பிள்ளைகளோடு படிக்கும்போதும் அந்த மகிழ்ச்சி கிடைக்கவே இல்லை. பொதுவாகப் பள்ளி வகுப்பைப் பொறுத்தவரை பெயர் வரிசை அல்லது உயர வரிசைஅடிப்படையில் தான் உட்கார வைப்பார்கள். ஆனால் நான் நன்றாகப் படித்தும் வகுப்பின் கடைசியில் உட்கார வைக்கப்பட்டேன். என்னோடு யாரும் பழகமாட்டார்கள்.

உடன்படிக்கும் பிள்ளைகளும் நான் ஏதாவது கொடுத்தால் வாங்கி சாப்பிடமாட்டார்கள் சாதி என்ற விஷ(ய)ம் படிக்கும் பிள்ளைகளின் பிஞ்சு நெஞ்சில் கலந்திருந்தது என்பதை அது என்னவென்று புரியாத வயதிலும் என்னால் உணர முடிந்தது. இலவசப் புத்தகங்கள் கொடுக்கும்போது ஹரிஜன்ஸ் என அழைக்கும்போதும் அப்படி ஒரு வலி தோன்றும். வளர வளர சாதி என்னும் ஒன்று தான் இதற்குக் காரணம் எனப் புரிய ஆரம்பித்த போதிலிருந்து இந்த வலி ஒரு தனல் போல், ஒரு கங்கு போல் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது.அப்பா அடிப்படைக்கல்வி மட்டும் படித்திருந்தார்.

மிக நேர்த்தியாகத்தான் எப்போதும் உடுத்துவார். அநீதி நடக்கின்ற போது தைரியமாகக் குரல் கொடுப்பார். ஊரில் திருவிழாக்காலம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் பறையடிப்பது, இறந்தவர்களைப் புதைப்பது போன்ற விஷயங்களைச் செய்வதை எதிர்த்தே வந்திருக்கிறார். அதனால் ஊர்ப் பஞ்சாயத்து வரைக்கும் சென்று எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறார். நான் இன்று, தைரியமாகப்பேசுகிறேன், திருத்தமாக உடை உடுத்துகிறேன் என்றால் அவையெல்லாம் அப்பாவின் தாக்கம் தான். என் அப்பாதான் என்றுமே என் உதாரண மனிதராக இருந்திருக்கிறார்.

அப்பா தேவையான சுதந்திரத்தை வழங்கி இருந்தார். சிறுவயதிலேயே மரம் ஏறுதல், நீச்சல், மலை ஏறுதல் என கற்றுக் கொண்டேன். இவற்றை ஆண்கள் மட்டும்தான் செய்யவேண்டுமா? ஏன் பெண்கள் செய்தால் என்ன தவறு? என்று எனக்குள் எழுந்த கேள்வியால் பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சமூகக் கட்டமைப்புகளை மீற ஆரம்பித்தேன். சாதி மற்றும் பெண்ணடிமைத்தனம் என இரு விஷயங்களும் சிறு வயதிலேயே என்னை மிகவும் பாதித்தன. காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லைதானே?

மதச்சார்பற்ற நாடு என பெருமை பொங்கக் கூறிக் கொண்டாலும் சாதி குறித்த மக்களின் மனோநிலை மாறவில்லையே.ஏறக்குறைய பத்தாம் வகுப்பு வரை என்னுடைய பருவம் தோழிகளற்ற, யாரும் என்னுடன் பேசாத பழகாத கலக்காத ஒரு பருவமாகக் கழிந்தது. என் வாழ்வில் பத்தாம் வகுப்பு வரையிலான அந்த 15 ஆண்டுகள் கருப்பு நாட்களாகத் தான் கழிந்தது எனலாம். என் வாழ்நாளில் ஒதுக்கிவைக்கப்பட்டு வலியோடுக் கழிந்த அந்த 15 ஆண்டுகளை யார் திருப்பித் தருவார்? என் போன்றே தம் வாழ்நாள் முழுவதையும் இழந்து விட்டிருப்பவர்களின் வாழ்நாளை யார் தருவார்?

எவ்வளவு பெரிய கொடுமை இது? இவை எனக்கு மட்டும் நடக்கவில்லை, தனிப்பட்ட என் அனுபவம் மட்டுமில்லை. எங்கள் சமூகத்தைச் சேர்ந்த அத்தனை சுகிர்தராணிகளும் அனுபவித்த வலிகள்தான் இவை. அதன்பிறகு ராணிப்பேட்டையில் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்தேன். அது நகரம் என்பதால் அனைவரோடும் கலந்து பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. சாதி என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயமாக எல்லார் மனதிலும் இருந்தாலும் பொதுவாகவே சாதியை கையில் இறுக்கிப் பிடித்திருப்பது கிராமங்கள் தான். அந்த விஷயம் இந்தப் பள்ளியில் இல்லாதிருந்தது எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

வீட்டில் அண்ணன் படிக்கும் ராணிமுத்து, மாலைமதி போன்ற ஜனரஞ்சகமான புத்தகங்களை படித்துக்கொண்டிருந்த நான் இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்தது இங்கு தான். இயல்பாகவே எனக்கு தமிழ் ஆர்வம் இருந்தது. அது வெளிப்படக் காரணம் ராணிப்பேட்டை பள்ளியில் இருந்த இலக்கியமன்றம். மாதா மாதம் இங்கே பேச்சுப் போட்டிகள் நடக்கும். முதன்முதலாக ‘வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறிகள்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டிக்கு நான் கலந்து கொண்ட போது தமிழ் ஆசிரியை ஒருவரிடம் அது குறித்து ஆலோசனைகள் கேட்டேன்.

அப்போது அவர்தான் திருக்குறள் சம்பந்தப்பட்ட நூல்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தினார். அந்தப் போட்டியில் இரண்டாம் பரிசு வாங்கினேன். அறிவு விசாலமாக வாசிப்பு தேவை என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ளும்போது அது தொடர்பான இலக்கிய நூல்களை வாசிக்கும் வழக்கம் எனக்கு ஏற்பட்டது. இந்தப் பள்ளிதான் என் வாசிப்புக்கான ஒரு திறப்பாக இருந்தது. அப்போது மாத இதழொன்றில் வந்த கவிதைகளைப் படிக்க நேரிட்டது. கவிதை என்ற வடிவம் எனக்கு மிக நெருக்கமாகத் தோன்றியது.

கவிதையில் நாம் கொடுக்கும் உணர்ச்சியை வலியை அனுபவத்தை அடுத்த நொடியிலேயே வாசிப்பவரிடம் கொண்டுவர முடியும் என்னும் நம்பிக்கை எழுந்தது. இதுவரை என்னுள்ளில் கனன்று கொண்டிருந்த விஷயங்களைக் கவிதையாக எழுதினால் என்ன என்று தோன்றியது, இப்படியாகத்தான் கவிதை என்னுள் தளும்பத் தொடங்கியது. அப்பா எதிர்த்துப் போராடின சாதி என்னும் கொடுமையை நானும் என் எழுத்து வழியாக எதிர்த்துப் போராட வேண்டும் என நினைத்தேன். கலை, ஓவியம், எழுத்து போன்ற வழிகளில் மக்கள் மனதை மாற்ற இயலும் என நானும் நம்பினேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தேன். பேருந்தில் பயணிக்கும் போது நண்பர் கவிப்பித்தன் அவர்களின் நட்பு கிடைத்தது. அதன் மூலம் அவர் நடத்தி வந்த ‘புல்வெளி’ எனும் கையெழுத்து இதழில் கவிதைகள் எழுதினேன். பின்னர் ‘அருவி’ போன்ற சிற்றிதழ்களிலும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அதன்பிறகு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறிமுகம் ஆனது. கவிதைப்பட்டறை போன்ற எழுத்துலகிற்கான வெளி அங்குதான் எனக்குத் தொடங்கியது. அதன்பிறகு பி.ஏ.இளங்கலைத் தமிழ் படிக்க ஆரம்பித்தேன்.

அங்கும் இலக்கியங்களின் பெரிய திறப்பு எனக்கு வாய்த்தது. நிறைய வாசிக்க வேண்டிய அவசியம் உணர்ந்து நிறைய சிறந்த இலக்கிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்படி சில நிகழ்வுகள் சென்னைக்குப் போவதற்கான வாய்ப்பினை எனக்கு அளித்தன. இப்போது பல மாவட்டங்களில் இலக்கிய நிகழ்வுகள் பெரிதாக நடந்தாலும் அந்த காலத்தில் சென்னையில்தான் அதிகம் நிகழ்வுகள் நடந்தன. அந்தக் காலகட்டத்தில் கவிதைதான் என் எழுத்து வடிவம் என தீர்மானமான முடிவுக்கு வந்தேன்.

கவிதை என்பது வாசித்த கணத்திலே படிப்பவர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தக் கூடியது. உடனுக்குடன் எதிர்வினைகளை நிகழ்த்தக்கூடியது. ஒரு தலித்தாகவும் பெண்ணாகவும் வாழ்வது என்பது மிகக் கடினமானது. இச்சமூகம் இரண்டு பேரையும் ஒரே இடத்தில்தான் வைத்திருக்கிறது. இதை எழுதி எழுதித்தான் கடக்க வேண்டும். இவற்றையே என் கவிதைகளின் பாடுபொருளாக எடுத்துக் கொண்டேன். பெரும்பாலும் தலித் விடுதலை, பெண் விடுதலை, இயற்கை மற்றும் மானுட மாண்புகளையும்தான் என் கவிதைகள் பாடுகின்றன. நான் காதல் கவிதைகள் எழுதுவதில்லை.

அதை எழுதுவதற்குப் பலர் இருக்கிறார்கள். நாமும் அதையே செய்யத் தேவையில்லை என்று முடிவு செய்தேன். சமூகத்தின் மனசாட்சியை குத்திக் கிழிக்கிற கூர்மையான ஆயுதமாக என் கவிதைகள் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். தொடர்ந்து பல ஆண்டுகள் நிறைய வாசித்தேன். மொழிபெயர்ப்புக் கவிதைகள், ரஷ்ய இலக்கியங்கள், தெற்காசிய இலக்கியங்களை வாசித்தேன். என் வாசிப்பு தளம் விரிவடைந்தது. இலக்கிய நிகழ்வுகளும் என் இலக்கிய உலகை விசாலமாக்கின.

பத்தாண்டுகளுக்கும் மேலாக நிறைய கவிதைகளை வாசித்தும் எழுதியும் வந்த பிறகு 2002 ஆம் ஆண்டு என் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். எனக்கென இலக்கிய உலகில் ஓர் அடையாளம் கிடைத்தது. பெண் உடலரசியல் இயக்கம் 2000க்கு பிறகு தீவிரமடைந்திருந்தது. பாலினச் சமத்துவமின்மை, பெண்கள் மீதான கலாசாரப் பண்பாட்டு சமூக அழுத்தங்களை பூடகமாகச் சொல்லி ஆணாதிக்கத்தை இன்னும் வலுப்படுத்தாமல் கவிதை எனும் ஆயுதத்தை இன்னும் கூர்மையாக வைக்க வேண்டிய தேவை எழுந்தது.

ஆனால் உடலரசியல் என்றாலே இங்கே காமத்தை எழுதுகிறார்கள் என்று தட்டையாகத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண் உடலைச் சிதைக்கும் மனப்பான்மை உலகெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. பெண்ணுடைய உடல் போகத்திற்கானது அல்ல, அவள் உடலும் உள்ளமும் ஒருசேர விடுதலை அடைவதுதான் சமூக மாற்றத்திற்கான வழி என்பதால் இவற்றை வெளிப்படையாகப் பேச வேண்டிய தேவை எழுகிறது. சாதித் தூய்மை குடும்பத் தூய்மை அனைத்தும் பெண் உடலில் இருப்பதாக இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஆணவப் படுகொலைகள் நடக்கக் காரணமும் இதுதான். பெண் தன் உடலைக் கடக்க விரும்பினாலும் புனிதம், தீட்டு என கட்டுப்பாடுகளால் இந்த சமூகம் அதைச் செய்யவிடுவதில்லை. பெண்ணியம் என்பது ஒரு பரந்துபட்ட தளம். மொழி, நிலம், இனம், பால் சார்ந்து பெண்ணியம் இங்கே மாறுபடுகிறது. இதுதான் பெண்ணியம் என்று இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. வரையறுக்கவும் முடியாது. ஆண் செய்யும் வேலையை பெண் செய்தாலும் ஆணுக்குக் கிடைக்கும் கூலி பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. குறைவாகத்தான் கிடைக்கிறது.

உடல் ரீதியாக பெண்களின் மாதாந்திரத் தேவைகளுக்கு மட்டுமல்ல தினப்படி தேவைகளுக்கும் கூட இன்னும் பல இடங்களில் பெண்களுக்கென்று கழிப்பறை வசதிகள் இல்லை. இது போன்று பெண்கள் எதிர்கொள்ளும் எல்லா அநீதிகளையும் எதிர்த்துக் கேட்கும் குரல்தான் உடலரசியல் கவிதைகள். உடல் சார்ந்த அரசியல் என்பது வெறும் உடல் சார்ந்த சுதந்திரம் மட்டும் இல்லை. அவள் உடல் சார்ந்து சமூகம் கட்டமைக்கின்ற எல்லா பிம்பங்களையும் கட்டுடைப்பது. இந்த சமூகத்துக்கு உடலரசியல் குறித்தான புரிதல் இல்லை.

அதனைக் காமமாக மட்டும் பார்க்கும் கண்ணோட்டமே இங்கு நிறைந்திருக்கிறது. இதைக் கேள்விக்குட்படுத்தவே உடல்மொழி அல்லது உடலரசியலை கவிதைகளில் பேசுகிறோம். பெண்ணியக் கூறுகளை எங்கள் கவிதைகள் பாடுகின்றன. பெண் நிருபர் ஒருவர் செய்தி சேகரிக்க சென்ற போது யாரென்று தெரியாத சில நபர்களால் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகினார். ஆனால் ‘அது ஒரு விபத்து தான், நான் அவமானப்பட இதில் என்ன இருக்கிறது? இதில் என் மீது எந்தக் குற்றமும் இல்லை’ எனச்சொல்லி அதன் பின் எப்போதும் போல் வேலைக்குச் சென்றார் என்ற செய்தி நாம் எல்லாரும் அறிந்தது.

அவர் இந்தப் பெண் சமூகத்துக்கான ஒரு சரியான முன்னுதாரணம். புறக்கணிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான நான், அவற்றையெல்லாம் புறந்தள்ள கல்வி என்னும் கைப்பொருள் கொண்டு பயணித்து வந்திருக்கிறேன். இன்று சாதி, பொருளாதார வேறுபாடுகளற்ற சமத்துவத்தை, சகோதரத்துவத்தை சுதந்திரத்தை மாணவர்களுக்குக் கற்றுத் தருகின்ற ஓர் ஆசிரியராகப் பணிபுரிகின்றேன். என் குடும்பத்தினரும் கல்வியின் தேவையை உணர்ந்து படித்து அனைவரும் இன்று அரசுப் பணிகளில் இருக்கிறார்கள்.

இப்படிச் சமூகத்தின் பொதுப்புத்திக்கு எதிராக எதிர் அரசியலும் செய்வது அவசியமாகிறது. யாருடைய இரக்கமும் சுயபச்சாதாபமும் இனித் தேவையில்லை. எதிர்ப்புக்குரலும், போராட்ட குணமும்தான் இப்போது இங்கே அவசியமாகிறது. தொடர்ந்த எழுத்து, தொடர்ந்த செயல்பாடுகள் மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டுவர இயலும். கலகக்குரல் எழுப்பவேண்டும். பேசியோ எழுதியோ செயல்பட்டோ தான் இங்கே பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன.

மேலும் பல மாற்றங்கள் நிகழ என் கவிதைகளும் சமூக செயல்பாடுகளும் எனக்கு அவசியமாகிறது. வாழ்க்கை மாற்றத்திற்குக் கல்வி ஒரு ஆயுதம், அதுபோல கலைப்படைப்புகள் சமூக மாற்றத்திற்கான ஓர் ஆயுதம். சாதிய ஆணாதிக்கச் சமூகத்தின் கூட்டு மனசாட்சியை தட்டியெழுப்பக் கூடிய மிகக் கூர்மையான ஆயுதம் கவிதை. அதைத்தான் நான் கைக்கொண்டிருக்கிறேன், கவிதை என் ஆயுதம் மட்டுமல்ல அது என் வாழ்க்கையும்தான்.

கவிதைத் தொகுப்புகள்

1. கைப்பற்றி என் கனவு கேள் (2002)

2. இரவு மிருகம் (2004)

3. அவளை மொழிபெயர்த்தல் (2006)

4. தீண்டப்படாத முத்தம் (2010)

5. காமத்திப்பூ (2012)

6. இப்படிக்கு ஏவாள் (2016).

விருது

நெய்தல் இலக்கிய அமைப்பின் சார்பில் சுந்தர ராமசாமி விருது.

ஔவை விருது

மற்றும் பல.Post a Comment

Protected by WP Anti Spam