செல்லுலாய்ட் பெண்கள்!!(மகளிர் பக்கம்)

Read Time:25 Minute, 16 Second

இனிமையான குரலில் கம்பீர மான தொனியில் வசனம் பேசக்கூடிய உயர் வர்க்க அம்மா பாத்திரங்களை ஏற்றதன் மூலம் அதிகாரம் மிக்க ஒரு ஜமீன் தாரிணியாகவே அவர் திரையில் உலவி இருக்கிறார். எளிய அம்மாக்களை விட பண பலமும் அதிகாரம் செலுத்தக்கூடிய பெண்ணாகவும் பல படங்களில் அவரைப் பார்க்க முடிந்திருக்கிறது. அதே நேரம் கனிவு ததும்ப, பாசத்தைக் கொட்டும் தாயாகவும் அவரைப் பார்க்க முடிந்தது. வட மாநிலங்களைப் போல் குளிர் கூடிய பிரதேசமாகத் தமிழகம் எப்போதும் இருந்ததில்லை.

ஆனால், இந்திப் படங்களின் பாதிப்போ என்னவோ, தமிழ்ப்படங்களிலும் சால்வை போர்த்தியபடி வரும் அம்மாக்களைப் பல படங்களில் நாம் பார்த்திருந்தாலும் சாந்தகுமாரிக்கே அது பாந்தமாகப் பொருந்தியது. தமிழில் அவர் அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், சாந்தகுமாரி என்று பெயர் சொன்னால், அந்த நாளைய ரசிகர்களால் அடையாளம் கொள்ளப்படும் ஒரு நடிகையாக அவர் இருந்திருக்கிறார். தமிழ்,தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் நடித்தவர். குறிப்பாக வாய்ப்பாட்டு, வயலின் இசைக்கலைஞரும் கூட. இது எந்த நடிகைக்கும் இல்லாத ஒரு சிறப்பு.

இசையும் நடிப்பும் ஒன்றிணைந்த கலவை

ஆரம்ப காலத் திரைப்படங்களில் பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நடிக்க முடியும் என்ற நிலையில், 1930களில் தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கியவர். பாடத் தெரிந்த அவர்களில் பலரும் நடிக்கத் தெரியாமல் இருந்ததும் உண்மை என்பதைப் பழைய படங்களைப் பார்க்கும்போது உணர முடிந்திருக்கிறது. பின்னர், அவர்களில் பலரும் நடிப்பைக் கைவிட்டுப் பாடகர்களாக, முழு நேர கர்நாடக இசைக் கலைஞர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டவர்கள். அதன் மூலம் ரசிகர்களும் கூட அந்தத் தொந்தரவிலிருந்து விடுபட்டார்கள்.

ஒரு சிலர் நன்றாக நடித்தாலும் சரியாகப் பாடத் தெரியாமல் இருந்திருக்கிறார்கள். நடிப்பும், இசையும் ஒருங்கே கைவரப் பெற்றவர்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால், இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இசைக்கலைஞராகத் தன் வாழ்க்கையைத் துவங்கி பின் திரையுலகில் நன்கு பாடத் தெரிந்த நடிகையாகவும் நுழைந்து பின்னர், இசையை விடுத்து முழு நேர நடிகையாக மட்டும் மாறியவர் சாந்தகுமாரி ஒருவராகத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது. நடிகைகள் பி.பானுமதியும் எஸ்.வரலட்சுமியும் இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளவேயில்லை.

‘மிஸ்ஸம்மா’ தெலுங்குப் படத்தில் பி.லீலா பின்னணி பாடுவார் என்று தயாரிப்பாளர் தரப்பு சொன்னதை ஏற்காமல், அப்படத்திலிருந்தே விலகினார் பானுமதி. அந்த வாய்ப்பு நடிகை சாவித்திரிக்கும் பாடும் வாய்ப்பு பி.லீலாவுக்கும் போய்ச் சேர்ந்தது. இன்று வரை அப்படம் ரசிகர்கள் நெஞ்சிலும் நினைவிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. பாடத் தெரிந்தவர்கள் பாடவும், நடிக்கத் தெரிந்தவர்கள் நடிக்கவும் என இரு தரப்புக்கும் வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டதன் மூலம் பின்னணிப் பாடகர்கள் என்ற பிரிவு உருவாகி அவர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்ற தென்னவோ உண்மை.

ஜெமினி வாசனின் ‘மங்கம்மா சபதம்’ ‘மங்களா’வாகவும், ‘அபூர்வ சகோதரர்கள்’ ‘நிஷான்’ ஆகவும் தமிழிலிருந்து இந்தியில் எடுக்கப்பட்டபோது அப்படங்களில் கதாநாயகியாக பானுமதி நடித்தார். ஆனால் பாடவில்லை. இந்த இரு இந்திப் படங்களில் மட்டும் ஷம்ஷாத் பேகம், கீதா ராய் இருவரும் தனக்காகப் பின்னணி பாட அவர் ஒப்புக்கொண்டார். புரியாத மொழி என்பதும் அதற்கு ஒரு காரணம். இப்படி சில விதிவிலக்குகள் தவிர, பெரும்பாலும் இருவரும் தங்கள் சொந்தக் குரலிலேயே இறுதி வரை பாடினார்கள். வித்தியாசமான குரல் வளம் கொண்டவர்களும் கூட.

வயலின் இசைக்கலைஞர் நடிகையான ரசவாதம்

வெள்ளாள சுப்பம்மா என்ற இயற்பெயர் கொண்ட சாந்தகுமாரி, ஒன்றுபட்ட சென்னை ராஜதானியில் அமைந்த கடப்பா மாவட்டத்தின் ராஜுபாலம் கிராமத்தில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் மே 17, 1920 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரின் பெற்றோர் சீனிவாச ராவ், பெத்த நரசம்மா. ஒட்டுமொத்தக் குடும்பமும் கலையின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தது. தந்தை சீனிவாசராவ் ஒரு நாடக நடிகர்; தாயாரோ கர்நாடக இசைப் பாடகர். அதனால் இயல்பாகவே சிறு வயதில் தாயாரிடமிருந்து இசைப்பயிற்சியைப் பெற முடிந்தது.

அப்போதைய நான்காவது ஃபாரத்துடன் (ஒன்பதாம் வகுப்பு) பள்ளிப் படிப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இசையில் பெரும் ஆர்வம் இருந்ததால், மேற்கொண்டு அதைத் தொடர்வதற்காக 1934 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் சென்னைக்குப் பயண மானார்கள். இனிமையான குரல் அமையப் பெற்றதால் வாய்ப்பாட்டுடன், கூடவே வயலின் வாசிக்கவும் கற்றுக் கொண்டார். பேராசிரியர் சாம்பமூர்த்தி ஆசிரியராக இருந்து அவருக்கு இசையைப் பயிற்றுவித்தார். சுப்பம்மாவுடன் சக மாணவியாக இருந்து சங்கீதம் பயின்றவர் பிரபல பாடகி டி.கே.பட்டம்மாள் என்பதும் இருவரும் சம காலத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டம்மாளுக்கு பக்க வாத்தியக்காரராகவும் இருந்து வயலின் வாசித்திருக்கிறார். .அப்போது பெண்கள் தனித்துப் பாடுவதும் கச்சேரிகள் செய்வதும் அபூர்வமான ஒன்றாக இருந்தது. இசையும் நாட்டியமும் கைவரப் பெற்ற இசை வேளாள சமூகத்தினர் மட்டுமே பாடியும் ஆடியும் வந்தபோது, பிற சமூகத்தவர்களால் அது இழிவாகவும் பார்க்கப்பட்டது. இசை, நடனக் கச்சேரிகள், ‘தேவிடியா கச்சேரி’ என்றே மற்றவர்களால் அழைக்கப்படுவது இயல்பாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருந்தது. இசையும் நடனமும் கற்பதும், ஆடுவதும் பாடுவதும் பிற சமூகத்தினர் மத்தியில் முற்றிலும் விலக்கப்பட்டிருந்த காலம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

தேவதாசி ஒழிப்பு மசோதா அறிமுகமான பின்னரே சதிர் என்ற ஆட்ட முறை பின்னர் பரதமாகி, பார்ப்பன சமூகத்துப் பெண்கள் ஆடவும், பாடவும் முன் வந்தார்கள். முதலில் மேடையேறிப் பாடியவர் டி.கே.பட்டம்மாள். அதற்கு பலத்த எதிர்ப்பு பார்ப்பன சமூகத்திடமிருந்து எழுந்தது. ஆனால், இன்றைக்கோ முழுக்க முழுக்க இசையும் நடனமும் அவர்கள் வசமாகவே ஆகிப் போயிருக்கிறது என்பதையும் கவனத் தில் கொள்ள வேண்டி யிருக்கிறது. எந்த ஒரு புதிய மாற்றம் நிகழும்போதும் அதற்கு எதிர்ப்புகள் எழுவதும், பின்னர் அதுவே நடைமுறையாவதும் என மாற்றங்கள் எப்போதும் நிகழ்ந்தபடியே இருக்கின்றன.

நாடறிந்த பாடகி நடிகையும் ஆனார்.

சுப்பம்மா தன்னுடைய 15 ஆவது வயதிலேயே நாடகக்குழு ஒன்றில் சேர்ந்து தென்னிந்தியா முழுவதும் சென்று நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். அதன் அடுத்தக்கட்டமாக ஓராண்டுக்குள் அகில இந்திய வானொலியில் பாடக்கூடியவராகத் தேர்ச்சி பெற்றார். வானொலியில் இசையமைப்பாளர் எஸ்.இராஜேஸ்வர ராவுடன் இணைந்து ஏராளமான பாடல்களையும் பாடினார். அத்துடன் சென்னை வித்யோதயா பள்ளியில் இசை ஆசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினார். அதற்காக அப்போது ஒரு மாதத்துக்கு அவருக்குக் கிடைத்த ஊதியம் இரண்டு ரூபாய்கள் மட்டுமே.

ஆனால், அதுவே அப்போது மிகப்பெரிய தொகைதான். பி.வி.தாஸ் என்ற இயக்குநர், நாடகம் ஒன்றில் சுப்பம்மா பாடுவதைக் கேட்டு மெய் மறந்து போனார். உடனடியாக அவருக்குத் திரைப்படங்களில் நடிப்பதற்கும் பாடுவதற்கும் வாய்ப்பளித்தார். முதலில் சற்றுத் தயங்கினாலும் பின்னர் திரைப்படத்தில் நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்தார் சுப்பம்மா. ஆனால், சுப்பம்மாவின் பாட்டிக்கோ தன் பேத்தி சினிமாவில் நடிப்பதில் கொஞ்சமும் விருப்பமில்லை. தொடர்ந்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் அவர்.

ஆனால், மதுராவின் வாரிசு, பலராமனின் மகள் சசிரேகாவாக ஒப்பனை செய்துகொண்டு சுப்பம்மா வந்தபோது, பாட்டிக்கு எதிர்க்கத் தோன்றவில்லை. மனமார வாழ்த்தி நடிப்பதற்கு அனுப்பி வைத்திருக்கிறார். 1936ல் பி.வி.தாஸ் இயக்கிய ‘மாயா பஜார் அல்லது சசிரேகா பரிணயம்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அதுவரை சுப்பம்மா என்றிருந்த பெயரை சாந்தகுமாரி என்று மாற்றியவரே இயக்குநர் பி.வி.தாஸ் தான். இதே படம் 1957ல் ‘மாயா பஜார்’ எடுக்கப்பட்டபோது, அதில் நடித்தவர் சாவித்திரி.

அதற்கு அடுத்த ஆண்டில் தெலுங்குப் பட இயக்குநர்களில் ஒருவரான பி.புல்லையா தயாரித்து இயக்கிய ‘சாரங்கதரா’ திரைப்படத்தில் கதாநாயகி சித்ராங்கியாக நடித்தார் சாந்தகுமாரி. இப்படத்தில் பணியாற்றும்போதே புல்லை யாவுக்கும் 17 வயது சாந்தகுமாரிக்கும் இடையில் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. புல்லையா தெலுங்கு, தமிழ் இரு மொழிப் படங்களையும் இயக்கிப் பின்னாளில் பெரும் புகழ் பெற்றார். 1950களில் ’சாரங்கதரா’ தமிழில் தயாரிக்கப்பட்டபோது சாந்தகுமாரி அப்படத்தின் கதாநாயகனான சிவாஜி கணேசனுக்குத் தாயாக நடித்தார்.

இயக்குநர் பி.புல்லையாவுக்கு முன்னதாகவே தெலுங்கின் முன்னோடி இயக்குநரான சி.புல்லையா பல புகழ் பெற்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தமிழில் கே.சுப்பிரமணியம் போல, தெலுங்கில் பல புரட்சிகரமான கதையமைப்பைக் கொண்ட ‘வர விக்ரயம்’ போன்ற படங்களை இயக்கியதுடன், பல புதுமுகங்களையும் தெலுங்குத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர். 1967லேயே அவர் காலமாகி விட்டார். ஆனால், சில திரைப்பட ஆய்வாளர்கள் கூட ஒரே பெயரில் இருக்கும் இந்த இருவர் பற்றியும் குழப்பிக் கொள்வதும், இருவரையும் ஒருவர் போல எண்ணி எழுதுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இவை தவிர்க்கப்பட வேண்டியவை.

நெஞ்சில் ஓர் ஆலயம் மகனுக்கு மட்டுமல்ல

தமிழ்த்திரையில் மனம் கவர்ந்த அம்மாக்கள் பலர் உண்டு என்றாலும் சாந்தகுமாரிக்கும் ஒரு தனித்த இடம் உண்டு. சில படங்களில் அவரது பாத்திர வார்ப்பு மறக்க முடியாதவை. எந்தத் தாய்க்கும் தன் பிள்ளைகளுக்கு மணம் முடித்துக் கண் குளிரப் பார்த்து மகிழ்வது, பேரப்பிள்ளைகளை அள்ளிக் கொஞ்சுவதும் அவர்களுடன் நேரம் செலவிடுவதும் இயல்பானவை. ஆனால் தன் முன்னாள் காதலியை நினைத்து நெஞ்சுக்குள் மருகி, திருமணமே வேண்டாம் என மறுத்து மருத்துவ சேவையை மேற்கொண்டிருக்கும் மகன் மீது வாஞ்சையும் அன்பும் கொண்டு அவனைத் திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்து விட மாட்டோமா என்று தவிக்கும் தாயைக் கண் முன் நிறுத்தியிருப்பார்.

அப்படிப்பட்ட மகன் நெஞ்சு வெடித்துச் செத்துப் போன பின், அவன் பெயரில் மருத்துவமனை ஒன்றைக் கட்டி, அவனுக்காக சிலையும் செய்து வைத்திருக்கும் முன்னாள் காதலியும், அவளது கணவனும் அழைத்ததன் பேரில் சிலை திறப்புக்காக காரில் கண்ணீர் வழிய செல்லும் அந்தத் தாயின் மனநிலையை விவரிக்க வார்த்தைகள்தான் ஏதும் உண்டா? ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ மகனுக்கு மட்டுமல்ல, அந்தத் தாய்க்கும் சேர்த்துதான் நாம் கட்டி வைத்திருக்கிறோம் நம் நெஞ்சத்துக்குள். இயக்குநர் தரின் அற்புதமான பாத்திரப் படைப்புகளில் அந்தத் தாயும் மறக்க முடியாதவரே. அதே தரின் மற்றொரு படமான ‘விடிவெள்ளி’ படத்திலும் நாயகனின் அம்மா இவரே. முன்னவர் வசதியான அம்மா என்றால், இவரோ ஏழ்மை நிலையில் இருக்கும் அம்மா.

பெண்ணுக்கு அவமானம் எது?

இந்தியப் புராணங்களும் இதிகாசங்களும் பெண்ணை இழிவுபடுத்துவதற்கு இன்றைக்கு வரை பயன்படுத்தும் ஆயுதம் அவளது ஆடையை அவிழ்ப்பது என்பதையும் கலாசாரமாகவே வைத்திருக்கிறார்கள். மகாபாரதம் அதற்கு முன்னோடி. அதைத் தூக்கிப் பிடிப்பவர்கள்தான் வட மாநிலங்களில் பெண்களை, அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் நிர்வாணப் படுத்தித் தெருவில் துரத்துவதையும் ஓட விடுவதையும் வேடிக்கை பார்ப்பதையும் வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். இது பெண்ணுக்கு அவமானமா அல்லது அவ்வாறு அவர்களை ஓட விடுபவர்களுக்கு அவமானமா?

இப்படி ஒரு காட்சி இயக்குநர் தரின் ‘சிவந்தமண்’ படத்தின் இறுதிக் காட்சியில் இடம் பெறும். மாறு வேடத்தில் இருக்கும் கதாநாயகனையும் அவனது நண்பர்களையும் வெளியே வரவழைப்பதற்காக வில்லன் கோஷ்டியினரின் உத்தியாக அவனுடைய தாயின் சேலையை அவிழ்க்க உத்தரவிடப்படும். முந்தானை விலக்கப்பட்டவுடனேயே எதிர்பார்த்தது போலவே கதாநாயகன் மறைவிலிருந்து சீறிச் சினந்து வெளியே வருவான், உடன் அவனது நண்பர்களும். அத்துடன் வில்லன் குழுவில் இருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுடப்பட்டுச் சாவார்கள்.

அந்தத் தாய் அப்போது சொல்லுவாள், ‘ஒரு தாய்க்கு மானபங்கம் நேரும் என்றால், என் இங்குள்ள அத்தனை பேருமே என் மகன் பாரத் ஆக மாறுவார்கள்’ என்று. அப்படி ஒரு உணர்ச்சிப் பிழம்பாக சாந்தகுமாரி நடித்திருப்பார். அத்துடன், புரட்சிக்குழுவில் இருக்கும் தன் மகனும் நண்பர்கள் வெடிகுண்டு வைத்திருக்கும் பாலத்தின் மீது வரும் ரயிலில் பயணித்து வரும் தன் கணவரைக் காப்பாற்ற தள்ளாத வயதிலும் இரவில், இருளில் கதாநாயகியுடன் இணைந்து பாலத்திலிருக்கும் வெடிகுண்டை அகற்றச் செல்வதுமாக ஒரு வீரப் பெண்மணியைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.

வசந்த மாளிகையின் மகாராணி கொலையும் செய்வாள்

‘வசந்த மாளிகை’ படத்திலோ தன் இரு பிள்ளைகள் மீதும் அன்பும் பாசமும் கொண்ட தாயாக மட்டுமல்லாமல், மிடுக்கும் அதிகார தோரணையும் மிக்க மகாராணியாகவும் இருப்பார். ஆனால், அவரே தன் பிள்ளை மீது பாசம் கொண்டு வளர்க்கும் ஆயாவை சுட்டுக் கொல்லவும் தயங்காதவராக வில்லத்தனமும் செய்வார். கொலை செய்து விட்டுத் தப்பித்துக் கொள்வதும் கூட உயர் வர்க்கத்துக்கு மிக எளிதாக இருந்திருக்கிறது.

ஒரு ஜமீன்தார் வீட்டில் வேலை செய்பவர்களின் நிலைமை நாயினும் கேவலமானது என்பதை அக்காட்சி நினைவூட்டும். ஆனால், அதன் பொருட்டு தன்னை விட்டு முற்றிலும் விலகிச் செல்லும் இளைய மகன் ஆனந்த், தன் மீது அன்பு காட்ட மாட்டானா? யாராவது அவனது குடிப்பழக்கத்திலிருந்து அவனை மீட்க வர மாட்டார்களா என ஏங்குபவராகவும் இரு வேறு நிலைகளில் தன் நடிப்பை வெளிப்படுத்துவார். ஒரு நடிகருக்கு எந்தப் பாத்திரம் என்றாலும் ஏற்று நடிக்க முடியும் என்பதையும் அதன் மூலம் நன்கு வெளிப்படுத்தியிருப்பார்.

கதாநாயகியிலிருந்து சொந்தப் படத்தயாரிப்பு வரை

துணைவரும் திரைத்துறை சார்ந்தவர் என்பதால், இருவரும் இணைந்து தங்கள் மகள் பத்மா பெயரில் பத்ம படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி சொந்தமாகப் படங்களைத் தயாரித்தனர். பொதுவாகவே அக்காலகட்டத்தில் புராண, இதிகாச கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ச்சியாகப் படமாக்கப்பட்டு வந்த நேரத்தில், 1937ல் ‘தர்ம பத்தினி’ என்ற சமூகக் கதையமைப்பு கொண்ட படத்தை சொந்தமாகத் தயாரித்து நடித்தார்.

இவர் நடித்த முதல் சமூகப் படமும் இப்படம்தான். ஏ.நாகேஸ்வர ராவ் பள்ளி மாணவராக வேடமேற்று முதலில் திரையில் தோன்றியதும் இப்படத்தில் தான். இது 1941ல் தமிழிலும் வெளியானது. சாந்தகுமாரியின் முதல் தமிழ்ப்படம் இதுவே. தாய்மொழி தெலுங்கு என்றால், தமிழ் உச்சரிப்பில் அதற்கான எந்த அடையாளமும் இன்றி மிக அழகாகத் தமிழில் பேசி நடிக்கக் கூடிய நடிகை. ராகினி பிக்சர்ஸ் பட நிறுவனத்தையும் தொடங்கி சொந்தமாக 1947ல் தமிழில் தயாரித்து நடித்த படம் ‘பக்த ஜனா’.

புல்லையாவின் இயக்கத்தில் பல தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். இரு நிறுவனங்களின் மூலமாக 22 படங்களைத் தயாரித்திருக்கிறார். 1979ல் ‘முத்தைதுவா’ தெலுங்குப் படத்தில் புல்லையாவும் சாந்தகுமாரியும் கணவன்-மனைவியாகவே நடித்திருக்கிறார்கள். இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இது. என்.டி.ராமாராவ் தயாரித்து இயக்கிய ஒரு படத்தில் அவருக்குப் பாட்டியாகவும் நடித்திருக்கிறார்.

திரையுலகின் மம்மி – டாடி

தெலுங்கு, தமிழ்ப் படங்களில் அப்போதைய முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், கல்யாண்குமார், சிவகுமார், நாகேஸ்வர ராவ், என்.டி. ராமாராவ், ஜக்கையா என அனைவருக்கும் அன்னையாக நடித்தவர். திரைக்கு வெளியிலும் கூட அந்த ‘செல்லுலாய்ட் மகன்கள்’ இவரை ‘மம்மி’ என்றே அன்பு பொங்க அழைத்து மகிழ்ந்தனர். அதேபோல அவரது கணவரும் இயக்குநருமான பி.புல்லையா ‘டாடி’ என்று அழைக்கப்பட்டார். ஒட்டுமொத்தத் திரையுலகும் இவர்களை டாடியும் மம்மியுமாக நினைத்து அழைத்து மகிழ்ந்தது, 1936ல் துவங்கிய இவரது திரைப்பயணம் 1979 வரை நீண்டது.

250 படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் இவர் நடித்தவை 60 படங்கள் மட்டுமே. திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகினாலும், தன் ஆரம்பகால இசைப் பயணத்தை அதன் மீதான பிரியத்தையும் அவர் மறக்கவில்லை. பக்திப் பாடல்கள் எழுதுவதும் அதற்கு இசையமைப்பதும் என்று தனக்கு விருப்பமான துறையில் கவனம் செலுத்தினார். பாலமுரளி கிருஷ்ணா இப்பாடல்களைப் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்குப் படங்களில் ஆற்றிய சேவைக்காகவும் பங்களிப்புக்காகவும் 1999ல் ரகுபதி வெங்கையா விருது பெற்றார். 2006 ஆம் ஆண்டு தன் 85வது வயதில் முதுமை காரணமாகவும் உடல் நலக் குறைவாலும் காலமானார்.

சாந்தகுமாரி நடித்த திரைப்படங்கள்

குணசுந்தரி கதா, பக்த ஜனா, அம்மா, பொன்னி, மனம் போல மாங்கல்யம், பெண்ணின் பெருமை, பொம்மைக் கல்யாணம், சாரங்கதரா, கலைவாணன், ஆசை, விடிவெள்ளி, நெஞ்சில் ஓர் ஆலயம், தாயே உனக்காக, சிவந்த மண், வசந்த மாளிகை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிகப்பெரிய பைக் நிறுவனங்கள்-டாப் 10 தமிழ்!!(வீடியோ)
Next post கடற்படை கப்பல்களை கைப்பற்றியதால் பதட்டம் அதிகரிப்பு!!(உலக செய்தி)