By 8 December 2018 0 Comments

மன அழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் வரலாம்!!(மருத்துவம்)

வயிறு சம்பந்தமான பிரச்னைகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக பல்வேறு சுகாதார ஆய்வுகளின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது என்பதை நாம் எல்லோருமே யூகிக்க முடியும். இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் பாசுமணியிடம் வயிற்றுப்புண் தோன்றும் காரணங்கள், மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் பற்றி பேசினோம்…

‘‘மருத்துவரீதியாக இரைப்பை மற்றும் முன்சிறுகுடல் பகுதியினையே வயிறு என்று குறிப்பிடுகிறோம். இந்த இரண்டு பகுதிகளிலும் ஏற்படுகிற புண்ணுக்கு
அல்ஸர்(Ulcer) என்று பெயர். தமிழில் வயிற்றுப் புண் என்கிறோம். இதில் இரண்டு நுட்பமான பிரிவுகள் உண்டு.இரைப்பையில் மட்டும் புண் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர் (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் அதனை டியோடினல் அல்சர்(Duodenal ulcer) என்றும் வகைப்படுத்தலாம்.

இரைப்பை மற்றும் முன் சிறுகுடல் ஆகிய இரண்டு பகுதியிலும் புண் ஏற்படுகிற நிலைக்கு பெப்டிக் அல்சர் (Peptic ulcer) என்றும் அழைப்பதோடு இவைகளை மொத்தமாக சேர்த்து வயிற்றுப்புண் என தமிழில் கூறுகிறோம்.’’

வயிற்றுப் புண் தோன்ற காரணங்கள் என்ன?

‘‘இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும், பெப்சின் எனும் என்ஸைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவதால் வயிற்றுப் புண் ஏற்படுகிறது. இதனை இரைப்பை அழற்சி(Gastritis) என்றும் குறிப்பிடுகிறோம்.

காரம் உள்ள உணவுகள், புளிப்பு மிகுந்த, மசாலா அதிகம் உள்ள உணவுகள், எண்ணெயில் மூழ்க விட்டு பொரித்த உணவுகள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடுவதாலும் வயிற்றுப் புண் ஏற்படும். மது அருந்துதல், புகைபிடித்தல், காற்றடைத்த வண்ண வண்ண குளிர்பானங்கள், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது; போன்ற காரணங்களாலும் வயிற்றுப்புண் ஏற்படலாம்.

ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையை கேட்காமல் எடுத்துக் கொள்வதாலும் வயிற்றுப்புண் ஏற்படும். முக்கியமாக, நாம் அருந்துகிற தண்ணீர் சுகாதாரமற்று இருப்பதாலும், ஆரோக்கியமற்ற உணவு, கெட்டுபோன உணவு போன்ற காரணங்களாலும் ஹெலிக்கோபாக்டர் பைலோரி(Helicobacter pylori) என்கிற கிருமி இரைப்பையை பாதித்து புண் ஏற்பட காரணமாக இருக்கிறது.

இந்த ஹெலிக்கோபாக்டர் பைலோரி(Helicobacter pylori) என்கிற கிருமி குழந்தையாக இருக்கும்போது பிறருடைய எச்சில் மூலம் கூட பரவலாம். இது குழந்தைகளை முத்தமிடுவதால் அவர்களுக்கு இந்த நோய் கிருமி தொற்றுகிறது. அதனால் குழந்தைகளை கவனமாகக் கையாள வேண்டும்.’’

வயிற்றுப்புண் வந்திருப்பதற்கான அறிகுறிகள் என்ன?

‘‘ஒருவருக்கு வயிற்றுப்புண் வருவதற்கு இவையெல்லாம் அறிகுறிகளாகும். நெஞ்சுப் பகுதியில் கடுமையான எரிச்சல், புளித்த ஏப்பம், பசி இன்மை. வயிற்றில் வலி, நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி, சாப்பிடுவதற்கு முன் வயிற்று வலி, சிலருக்கு சாப்பிட்டதற்கு பிறகு வருகிற வயிற்றுவலி, புண்ணில் ரத்தக் கசிவு ஏற்பட்டு ரத்த வாந்தி வரலாம்.’’

இதனால் ஏற்படும் பாதிப்புகள்…

‘‘ஒருவருக்கு இரைப்பைப் புண் தொடர்ந்து கவனிக்கப்படாமல் இருந்தால், தீவிர நிலை அடைந்து உயிருக்கே ஆபத்தாக அமையலாம். மேலும், அது புற்றுநோயாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகளும் உண்டு. குறிப்பாக, 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வயிறு சம்பந்தமான பிரச்னையை உடனே கவனிக்க
வேண்டும். புண் இரைப்பையில் இல்லாமல் முன் சிறுகுடலில் இருந்தால், குடல் அடைப்பு ஏற்படுவதுண்டு. குடலில் துளை விழுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.’’எப்படி பரிசோதிக்கப்படுகிறது?

‘‘வயிறு சம்பந்தமான நோயாளிகளை முதலில் அவர்களை வயிற்றை தொட்டு பார்த்தும் மூச்சை இழுத்து விடுதல் பயிற்சி செய்து பார்த்தும் மருந்துகள் வழங்கப்படுகிறது. பிரச்னை தீராத பட்சத்தில் எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்து இரைப்பையில் புண் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

இந்தப்புண் தற்காலிகமாக ஏற்பட்டதா அல்லது மேலே குறிப்பிட்ட ஹெலிக்கோபாக்டர் பைலோரி கிருமியால் ஏற்பட்டதா என்று கவனிக்க வேண்டும். புற்றுநோய் பாதிப்பா என்பதை பார்க்க இரைப்பையிலிருந்து பயாப்சி(Biopsy) எடுத்து பரிசோதிக்க வேண்டியிருக்கும்.’’

சிகிச்சை முறைகள் பற்றி…

‘‘ஆரம்பநிலையில் பல்வேறு மாத்திரைகளின் மூலமே குணமாக்க வழங்கப்படுகிறது. இதுபோன்ற மருந்துகள் கொடுத்தும் சிலருக்கு குணமடையாவிட்டால், அவர்களுக்கு மட்டும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. அதனால் வயிறு சம்பந்தமான பிரச்னைக்கு முதலில் இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவரை அணுகுவது நல்லது.’’

வயிற்றுப் புண் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

‘‘வயிற்றுப்புண் வந்தவர்கள் மருத்தவரின் ஆலோசனையின் படி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், மது, புகை பழக்கத்தை கட்டாயமாக நிறுத்திவிட வேண்டும். நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். மனநிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.’’

மனநிலை எப்படி வயிற்றுப் புண்ணை உண்டாக்குகிறது?

‘‘சந்தோஷமான மனநிலை மாற்றத்தின்போது அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது என்று சினிமாக்களில் சொல்வதைப் பார்த்திருப்போம். வயிற்றில் பால் வார்ப்பது என்று பழமொழிகள் சொல்கிறோம்.

இதில் கொஞ்சம் மருத்துவ உண்மையும் இருக்கிறது. மனநிலையில் இறுக்கம் ஏற்படும்போது வயிற்றில் சுரக்கும் அமிலங்களின் நிலையில் கடும் ஏற்றத்தாழ்வுகள் நிகழ்கின்றன. இதன் காரணமாகவும், உணவு விருப்பத்தில் ஏற்படுகிற மாற்றம் காரணமாகவும் அல்ஸர் ஏற்படுகிறது. குறிப்பாக, பெப்டிக் வகை அல்ஸர் ஏற்படுவதற்கு மன அழுத்தம் காரணம் என்று ஆய்வுகளில்கண்டறியப்பட்டுள்ளது.’’

அல்ஸர் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

‘‘வயிற்றுப் புண் உள்ளவர்கள் 3 வேளை உணவை, 6 வேளையாக சிறிது சிறிதாக பிரித்து சாப்பிடுவது நல்லது. மசாலா மிகுந்த, காரம் நிறைந்த எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

முடிந்தால் நிறுத்திக் கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள் வேகவைத்த உணவுகள், நீராவியில் வெந்த உணவுகள் அன்றாடம் எடுத்துக் கொள்ளுங்கள். ஃபாஸ்ட் புஃட் உணவு வகைகள்,
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்த்துவிடுங்கள்.

அதிக இனிப்பு எண்ணெய் பலகாரங்களையும் அதிக புளித்த உணவுகளையும் தவிருங்கள். இது மாதிரியான பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் வயிற்றுப்புண் வந்தவருக்கும் நோயை குணப்படுத்த முடியும். வயிற்றுப்புண் பாதிப்பு இல்லாதவருக்கும் முன்கூட்டியே தடுக்க முடியும்.’’Post a Comment

Protected by WP Anti Spam