By 8 January 2019 0 Comments

தேனீ வளர்ப்பில் தேசிய சாதனை!!(மகளிர் பக்கம்)

“மகிழ்ச்சியாக இருந்த என் வாழ்க்கை ஒரு நாள் துன்பமும், துயரமும் சூழ தலைகீழாய் ஆனது. என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் இருந்த போது எனக்கு கைகொடுத்தது நான் வளர்த்து வந்த தேனீக்களே” என்று நெகிழ்ச்சியாக பேசுகிறார் 10 ஆண்டுகளாக தேனீ வளர்ப்பில் நிறைவான வருமானம் ஈட்டிவரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்பின் சுகுமாறன்.

“என்னுடைய சொந்த ஊர் சிவகங்கையில் உள்ள முத்துப்பட்டி. 12 ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மதுரையில் பி.ஏ. படித்தேன். கணவர் வீட்டில் பொருளாதார நெருக்கடி இருந்தது. எனக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவரும் ஓரளவிற்கு வளர்ந்துவிட்டார்கள். பொருளாதாரச் சூழலை சமாளிக்க ஏதாவது வேலைக்கு போகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் மதுரை வேளாண் அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்பு பற்றி இலவசப் பயிற்சி கொடுப்பதாக செய்தித்தாளை பார்த்து தெரிந்துகொண்டேன். நானும் பயிற்சியில் கலந்து கொண்டேன். முதலில் 10 பெட்டிகளை கொண்டு தேனீ வளர்க்கத் தொடங்கினேன். மதுரையில் சொந்த தோட்டம் இல்லாததால் சிவகங்கையில் அப்பாவின் தோட்டத்தில் வைத்து வளர்த்து வந்தேன். தேன் சேகரித்த முதல் முறையிலே 8 கிலோ எடுக்க முடிந்தது” என்றார்.

ஜோஸ்பின் தேனீ வளர்த்து வரும் செய்தி ஊர் முழுவதும் தெரிந்திருக்கிறது. ஊரில் உள்ள விவசாயிகள் தேனீ வளர்ப்பு முறை பற்றியும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள் மானிய விலையில் வாங்குவது குறித்து ஜோஸ்பினிடம் கேட்டுள்ளனர். “எங்கள் பகுதியில் இருந்து தேனீ வளர்க்க விவசாயிகள் ஆர்வமாக இருந்தனர் அவர்களுக்கு ராணித் தேனீக்களை பிரித்து, தேனீ பெட்டிகளை உருவாக்கி கொடுத்தேன். அப்போதுதான் தேன் சேகரித்து விற்பனை செய்வதைவிட, தேனீக்களை வணிகம் செய்தால் நல்ல வருமானம் என்பது எனக்கு தெரிந்தது. 1 லட்சம் கடன் பெற்று தேனீ பெட்டிகளை வாங்கினேன்” என்றார்.

அடுத்தடுத்த தேனீ வளர்ப்பு வேலையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தவருக்கு பெரும் துன்பமும் துயரமும் காத்துக்கொண்டிருந்தது.
“எந்தத் தொய்வும் இல்லாமல் நல்ல நிலையில் என்னுடைய பணி சென்றுகொண்டிருந்தது. என்னுடைய மகளுக்கு திடீரென காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எலும்பு முறிவுக்கு சிகிச்சை எடுத்து வந்தோம். ஆனாலும் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. சில நாட்களுக்கு பிறகுதான் என் மகளுக்கு எலும்பு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தெரியவந்தது. வாழ்க்கையின் மிக மோசமான நாட்களை நான் சந்தித்து வந்தேன்.நன்றாக ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்தவளுக்கு திடீரென இப்படி ஒரு வியாதியா என்று என்னால் நம்பவே முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும் மகளை காப்பாற்ற முடியவில்லை.

அவளுடைய இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சில மாதங்களுக்கு பிறகு தேனீப்பெட்டிகளை வந்து பார்த்த போது எறும்புகள் மோய்த்து வீணாய் போகிவிட்டது. சில நாட்களில் என்னுடைய கணவரும் இறந்து விட்டார். வாழ்க்கையே எனக்கு இருளாக இருந்தது. முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த என் வாழ்க்கைக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தது நான் வளர்த்த தேனீக்கள்தான். அழிந்து வரும் தேனீக்களை காக்க முடிவுசெய்தேன். 10 லட்சம் வங்கியில் கடன் பெற்று 1000 தேனீ பெட்டிகளுடன் “விபிஸ் இயற்கை தேனீ பண்ணையை” உருவாக்கினேன். சிவகங்கை கண்மாய்களில் வளர்ந்துகிடந்த நாவல் மரங்களுக்கு நடுவே பெட்டிகளை வைத்து, நாவல் தேனை சேகரித்தேன். கசப்பும், இனிப்புமாய் இருந்த நாவல் தேன் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது என்று ஆய்வுகள் கூறியதால், நாவல்தேன் விற்பனை நன்றாக இருந்தது.

திலிருந்து வேம்புத்தேன், காபித்தேன், முருங்கைத்தேன் என பத்துவிதமான தனிமலர்த் தேனை உற்பத்தி செய்து வருகிறேன். அதாவது, 2 கி.மீ பரப்புக்கு முருங்கை மரங்கள் வளர்ந்து கிடந்தால், அவ்விடத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் இருந்து சுத்த முருங்கைத்தேனை பெறலாம். விறுவிறுக்க சுறுசுறுப்பாய் தேனீக்கள் பல மணித்துளிகள் வேலை செய்து, தேனை சேகரித்தாலும் நாம் அதை அலுங்காமல், குலுங்காமல் அரைமணி நேரத்தில் சேகரித்துவிடலாம். அதிக நேரம் செலவு செய்யத் தேவையில்லை. பெரும் இடம் தேவையில்லை. முதலீடும் அதிகம் தேவையில்லை. ஆனால், தேன் உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும், அவற்றை சந்தைப்படுத்துதலில் சவால்கள் இருந்தன.

துளசித்தேன், பூண்டுத்தேன், மாம்பழம் தேன், நெல்லிக்கனி தேன், அத்திப்பழ தேன், பலாப்பழத்தேன் என மதிப்புக்கூட்டிய 25 வகையான தேன்களாகவும் மாற்றத் தொடங்கி விற்பனையை அதிகரித்தேன். அழிந்து வரும் தேனீக்களை காக்க, “வீட்டுக்கொரு தேனீ பெட்டி, வீட்டுக்கு ஆயுள் கெட்டி” என்ற கோஷத்தை முன்னிறுத்தி ‘பழுப்பு புரட்சி’யை செய்து வருகிறேன். தேனீ வளர்ப்பு குறித்து இரு புத்தகங்களும் எழுதியிருக்கிறேன். இலவசமாக மதுரையில் தேனீ வளர்ப்பு வகுப்பு எடுத்து வருகிறேன். தேனீக்கள் மூலம் நடக்கும் அயல்மகரந்தச் சேர்க்கையினால், விளைச்சல் அதிகரிக்கும். எங்க வீட்டில் தேனீ பெட்டி இருப்பதால், அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள முருங்கை மரம், எலுமிச்சை மரங்களில் காய்கள் அதிகம் கிடைக்கிறது.

விவசாயிகளும் இதை உணர்ந்து தேனீ பெட்டிகளை வாங்கிச் செல்கின்றனர். தேனீக்கள் பூக்களில் இருந்து மட்டுமில்லை, பழங்களிலிருந்தும் தேனை சேகரி க்கின்றன. வெளி நாடுகளில் ஆப்பிள் தேன், ஆரஞ்சு தேன் என பழத்தேன்களும் விற்பனை செய்கின்றனர். பழத்தோட்டங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் தேனீ பெட்டி வைத்து பயன் பெற்று வருகின்றனர். நோய் நொடி அற்ற வாழ்க்கையை பெற தேனீக்கள் பெரும் பங்கு வகிக்கிறது அத்தகைய தேனீக்களை நாம் பாதுகாப்பது அவசியம்” என்கிறார்.இவருடைய பணிகளை பாராட்டி இதுவரை 6 தேசிய விருதுகள் தேனீ வளர்ப்பு முறையில் வழங்கப்பட்டிருப்பது இவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.Post a Comment

Protected by WP Anti Spam