By 4 December 2018 0 Comments

கர்ப்ப கால நம்பிக்கைகள் எது சரி? எது தவறு?(மகளிர் பக்கம்)

ஆசை ஆசையாய் பெற்றுக்கொள்ளப் போகும் குழந்தை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் எனும் கற்பனை கர்ப்பிணிக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் இருக்கும். இதன் விளைவாகப் பாட்டிமார் முதல் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வரை பலரும் பல யோசனைகள் சொல்வார்கள். பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் கர்ப்பகால நம்பிக்கைகளை முன்வைப்பார்கள்.

அவற்றில் எது சரி, எது உண்மையில்லை என்று தெரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுவது இயல்பு. அந்த நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, கடைப்பிடிக்கத் தொடங்குவதற்கு முன்னால், மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வதே நல்லது. அப்போதுதான் தேவையில்லாத பயங்களையும், பழக்கங்களையும் களைய முடியும். அதன் மூலம் கர்ப்பிணியின் ஆரோக்கியத்தையும் வயிற்றில் வளரும் சிசுவையும் காப்பாற்ற முடியும்.

கர்ப்பம் குறித்து இன்றைக்கும் மக்கள் மத்தியில் உலா வருகிற சில முக்கியமான நம்பிக்கைகளில் உண்மை எது, பொய் எது என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது சரியா?

குங்குமப்பூவுக்கும் குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாலை அப்படியே குடித்தால் மசக்கை மாதங்களில் கர்ப்பிணிக்குக் குமட்டல் ஏற்படும். இதைத் தவிர்க்க ஒரு வாசனைக்காகவும், ருசிக்காகவும் பாலுடன் குங்குமப்பூவைச் சேர்க்கும் பழக்கம் வழக்கத்தில் வந்திருக்க வேண்டும். அதில் இரும்புச் சத்து இருப்பதால், ரத்த உற்பத்திக்கு உதவும்; கரோட்டினாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் ஆகியவையும் இருக்கின்றன. இவை தாய்க்கும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகின்றன.

எனவே, தரமான குங்குமப்பூவைச் சாப்பிட்டால் நல்லது. குழந்தை கறுப்பாகவோ, சிவப்பாகவோ பிறப்பதற்குப் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு வந்துள்ள மரபணுக்கள்தான் காரணம். பெற்றோர் சிவப்பு நிறத்தில் இருந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும். சருமத்தின் நிறத்தை நிர்ணயிப்பது மெலனின் எனும் நிறமிகளே தவிர, குங்குமப்பூ அல்ல!

பப்பாளி, மாம்பழம், அன்னாசி, எள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்பது உண்மையா?

இது உண்மையில்லை. எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம். அளவுதான் முக்கியம். பப்பாளி, அன்னாசி எதுவானாலும் ஒரு சில துண்டுகளைச் சாப்பிடுவதால் கரு கலையாது.

கர்ப்பிணி இடதுபக்கமாகப் படுத்தால் நல்லது என்று கூறுவது சரியா?

இது அறிவியல் விதிப்படி சரிதான். கர்ப்பிணி மல்லாந்து படுக்கக்கூடாது. அப்படி படுக்கும்போது வளர்ந்து வரும் கருப்பை அம்மாவின் இதயத்துக்கு ரத்தம் எடுத்து–்ச்செல்லும் ரத்தக்குழாயை அழுத்த ஆரம்பிக்கும். இதனால் அம்மாவின் இதயத்துக்குத் தேவையான ரத்தம் போகாமல், ரத்த அழுத்தம் இறங்கிவிடும். தலை சுற்றி, மயக்கம் வரும்.

இதனைத் தவிர்க்க இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பது நல்லது. அப்படிப் படுக்கும்போது, குழந்தைக்குச் சீரான ரத்தம் போகும். இடது பக்கம் படுப்பது அம்மாவுக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் பிரச்னை இல்லாமல் ஓய்வெடுக்க வசதியாக இருக்கும். என்றாலும், ஒரே பக்கமாகப் படுத்துக் களைப்பாக இருந்தால், சிறிது நேரத்துக்கு வலதுபக்கம் படுத்துக் கொள்ளலாம். தவறில்லை.

தாய்க்கு சுகப்பிரசவம் ஆகியிருந்தால், மகளுக்கும் சுகப்பிரசவம் நிகழும் என்று சொல்வது உண்மையா?

சென்ற தலைமுறையில் தாய்க்குச் சுகப்பிரசவம் ஆகியிருந்தால் மகளுக்கும் சுகப்பிரசவம் ஆகியிருக்கலாம். காரணம், அப்போதைய உணவுமுறை, உடல்நிலை, வாழ்வியல் முறைகள் அனைத்தும் தாய்க்கு அமைந்தது போலவே மகளுக்கும் அமைந்திருக்கலாம். அப்படியான சூழலில் தாய்க்கும் மகளுக்கும் சுகப்பிரசவம் ஆகியிருக்கலாம். ஆனால், இப்போதைய வாழ்க்கைமுறைகளும், உணவு முறைகளும் வெகுவாக மாறிவிட்டன.

குறிப்பாக, உடல்பருமன் உள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே, தாய் சுகப்பிரசவம் ஆகியிருந்தால், மகளுக்கும் சுகப்பிரசவம் நிகழும் என்று உறுதிகூற முடியாது. மேலும், பிரசவத்தை மரபுரீதியாகப் பொருத்திப் பார்க்கவும் முடியாது. அதற்கு நிறைய நடைமுறைக் காரணங்களும் உள்ளன.கர்ப்பிணிக்கு வயிறு பெரிதாக இருந்தால், பெண் குழந்தை பிறக்கும் என்று கூறுவது உண்மையா?

கர்ப்பிணியின் வயிறு பெரிதாக காணப்பட்டால், பெண் குழந்தை என்றும், சிறிதாக இருந்தால், ஆண் குழந்தை என்றும் கூறுவது வழக்கம். ஆனால், அதில் உண்மையில்லை. குழந்தையின் பாலினத்துக்கும் கர்ப்பிணியின் வயிற்றின் அளவுக்கும் தொடர்பில்லை. வயிறு பெரிதாக இருப்பதற்கு உடல்
பருமன், குழந்தையின் எடை, பனிக்குட நீரின் அளவு, இரட்டைக் குழந்தைகள் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

தாய்க்கு நீரிழிவு இருக்குமானால், குழந்தையின் பனிக்குட நீர் சற்று அதிகமாகவே இருக்கும். அப்போது கர்ப்பிணியின் வயிறு பெரிதாகவே இருக்கும். குழந்தையின் எடை அதிகமாக இருக்கும்போதும் இரட்டைக் குழந்தைகளின்போதும் பனிக்குட நீரில் குழந்தையின் சிறுநீரும் அதிக அளவில் கலப்பதால், தாயின் வயிறு பெரிதாகக் காணப்படும்.

அடிக்கடி வாந்தி எடுத்தால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு அதிக முடி இருக்கும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?

குழந்தையின் முடிக்கும் கர்ப்பிணி வாந்தி எடுப்பதற்கும் தொடர்பில்லை. கர்ப்பம் தரிப்பதை வெளிக்காட்டும் அறிகுறியாக வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் கர்ப்பிணிக்கு முதல் டிரைமெஸ்டரில் தோன்றுவதுண்டு. கர்ப்பிணியின் உடல்நிலை, நோய் எதிர்ப்புச் சக்தி என பலதரப்பட்ட காரணங்களால், ஒரு சிலருக்கு வாந்தி குறைவாக இருக்கும்; வேறு சிலருக்கு வாந்தி கடுமையாகும்.

பிரசவ வலி விரைவில் ஏற்பட்டு, குழந்தை பிறந்தால், அது ஆண் குழந்தையாக இருக்குமா?

பிரசவ வலிக்கும் குழந்தையின் பாலினத்துக்கும் தொடர்பில்லை. தாயின் முகம் பொலிவாக இருந்தால், பெண் குழந்தை பிறக்கும் என்று கூறுவது உண்மையா?

தாயின் முகப் பொலிவுக்கும் பெண் குழந்தை பிறப்பதற்கும் தொடர்பில்லை. கர்ப்ப காலத்தில் தாயானவள் மகிழ்ச்சியாக இருந்தால், முகம் பொலிவாக இருக்கும். வாந்தி, மயக்கம் என எதுவும் ஏற்படாமல், சரியான உணவைச் சாப்பிட்டு, உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, ஆரோக்கியம் காத்தால், தாயின் முகம் பொலிவுடன் இருக்கும். இது சுகப்பிரசவத்துக்குத் துணை செய்யலாம்; பெண் குழந்தை பிறக்கும் என்று உறுதிகூற முடியாது.

மூன்றாம் டிரைமெஸ்டரில் கர்ப்பிணிகள் வேலை செய்யக்கூடாது என்கிறார்கள். இது சரியா?

இல்லை. இது தவறான கருத்து. தினமும் அரைமணிநேரம் நடைப்பயிற்சி செய்வது, சின்னச் சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வது போன்றவை உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். பொதுவாக, இந்த டிரைமெஸ்டரில் கர்ப்பிணிகளுக்கு உடல் சோர்வாக இருக்கும். அந்தச் சோர்விலிருந்து மீள இந்தப் பயிற்சிகள் அவசியம். உடலை வருத்தும் வேலைகளையும், களைப்பை உண்டாக்கும் வேலைகளையும் தவிர்க்க வேண்டும். பளுவான பொருட்களைத் தூக்கக்கூடாது.

செல்போன், கம்ப்யூட்டர், மைக்ரோ ஓவன் போன்றவற்றைப் பயன்படுத்தினால் கர்ப்பத்தில் வளரும் குழந்தையைப் பாதிக்கும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

இதில் முழு உண்மையில்லை. இந்தக் கருவிகளைப் போதிய இடைவெளிகளில் வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் ஆபத்தில்லை.
கர்ப்பிணிகள் கிரகணங்களைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் குழந்தைக்குப் பிறவிக் குறைபாடு ஏற்படும் என்பது உண்மையா?

இதிலும் உண்மையில்லை. தொலைநோக்கி இல்லாமல் கிரகணத்தைக் கண்ணால் பார்த்தால், கர்ப்பிணியின் கண்ணுக்கு வேண்டுமானால் பாதிப்பு ஏற்படலாம்; கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாது.

வயிற்றில் உள்ள குழந்தையின் தொப்புள் கொடி அதன் கழுத்தில் மாலையாகச் சுற்றிக் கொண்டால், தாய் மாமனுக்கு ஆகாது என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உள்ளது. இது சரியா?

குழந்தையின் கழுத்தில் ‘கொடி’ சுற்றிக்கொண்டால், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பழைய பிரசவ முறைகளில் இப்படிக் கொடி சுற்றிப் பிறப்பது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தாக முடிந்திருக்கிறது. ஆனால், தற்போதைய நவீன மருத்துவ முறையில் சிசேரியன் மூலம் இந்தப் பிரச்னையை எளிதாகத் தீர்த்துவிடலாம். எனவே, இதற்காகப் பயப்படத் தேவையில்லை.Post a Comment

Protected by WP Anti Spam