கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!( மகளிர் பக்கம் )

Read Time:6 Minute, 48 Second

மற்ற நாட்களில் தொட்டுக்கூடப் பார்த்திருக்காத உணவுகளை எல்லாம் தேடிப் பிடித்துச் சாப்பிடத் தோன்றும் கர்ப்ப காலத்தில். இது ஒரு புறமிருக்க, இரு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிடச் சொல்கிற அறிவுரையின் பேரில் கண்டதையும் சாப்பிட்டுக் குழந்தைக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொள்கிற பெண்கள் இன்னொரு பக்கம். கர்ப்ப காலத்தில் எப்படிப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்? விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.

பதப்படுத்தப்படாத பால்

கர்ப்பிணிகளுக்குப் பால் அவசியமானது. கால்சியம் பற்றாக்குறையைச் சரிசெய்ய எல்லாருக்கும் பால் குடிக்கச் சொல்லிப் பரிந்துரைப்பார்கள் மருத்துவர்கள். பதப்படுத்தப்படாத பால் மற்றும் பால் பொருட்களை உபயோகிப்பது கிருமித் தொற்றுகளுக்கும் அவை ஏற்படுத்துகிற நோய்களுக்கும் வழிவகுக்கும். பாலை எப்போதும் நன்றாகக் காய்ச்சியே குடிக்க வேண்டும்.

சீஸ்

சிலருக்கு இயல்பிலேயே சீஸ் அதிகம் பிடிக்கும். இன்னும் சிலர், பால் பொருட்கள் நல்லது, கால்சியம் பற்றாக்குறையைப் போக்கும் என்கிற எண்ணத்தில் சீஸ் சாப்பிடுவார்கள். கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பதே சிறந்தது. அதிலும் மிகவும் மென்மையான சீஸ் வகைகளில் பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். அவை கருவின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவை.

அரைகுறையாகச் சமைத்த அசைவ உணவுகள்

அசைவ உணவுகளை வாங்குவதில் தொடங்கி, சுத்தப்படுத்துவது, சமைப்பது வரை ஒவ்வொரு விஷயமுமே கவனமாகப் பார்த்துச் செய்யப்பட வேண்டியவை. எனவே, இவற்றில் எங்கே கோளாறு இருந்தாலும் அந்த உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். வெளியிடங்களில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது. வீட்டில் செய்கிற போதும் முழுமையாக சமைக்கப்பட்டவையா எனப் பார்த்து சாப்பிட வேண்டும்.

ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் கலந்த மருந்துகள்

எந்தக் காரணத்துக்காகவும் ஆல்கஹால் கூடாது. ஆல்கஹால் குடிக்கிற பழக்கமுள்ள பெண்களுக்குக் குறைப்பிரசவமாகலாம் அல்லது பிறக்கும் குழந்தை குறைகளுடன் இருக்கலாம். அதே போல ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகளை உபயோகிப்பதையும் இந்த நாட்களில் தவிர்க்க வேண்டும்.

சமைக்கப்படாத முளைகட்டிய தானியங்கள்

முளைகட்டிய தானியங்கள் இருமடங்கு ஆரோக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவற்றை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது அறிவுறுத்தத் தக்கதல்ல. செரிமானத்திலும் பிரச்னைகளை ஏற்படுத்தும். மிகவும் சுகாதாரமான முறையில் முளைகட்டப்பட்ட தானியங்களை அளவாகச் சாப்பிடலாம்.மற்றபடி கடைகளில் பாக்கெட் செய்யப்பட்டு விற்கப்படும் முளைகட்டிய தானியங்களை சாப்பிடும்போது கவனம் தேவை. அவற்றிலுள்ள கிருமிகள் உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். முளைகட்டிய தானியங்களை ஆவியில் வேக வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானது.

அதிக அளவு காபி

கர்ப்ப காலத்தில் சிலருக்கு காபி, டீ குடிப்பதே பிடிக்காமல் போகும். வேறு சிலருக்கு அதிகளவில் குடிக்கத் தோன்றலாம். கட்டாயம் காபி குடித்தே தீர வேண்டும் என்பவர்கள் ஒரு நாளைக்கு 2 கப்புக்கு மேல் குடிக்க வேண்டாம். காபியெல்லாம் குடிக்கிறதில்லை… கோலா பானங்கள்தான் என்கிறவர்களுக்கும் ஒரு அட்வைஸ்.

காபி, கோலா பானங்களில் உள்ள கஃபைனின் அளவு 200 மில்லிகிராமைத் தாண்டக்கூடாது. எப்போது பார்த்தாலும் காபியை மட்டுமே குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதீத கஃபைன் சேர்க்கை, கருவை பாதிக்கக்கூடும்.

எம்.எஸ்.ஜி சேர்த்த உணவுகள்

மோனோ சோடியம் குளூட்டமேட் எனப்படுகிற எம்.எஸ்.ஜி சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. சைனீஸ் உணவுகளில் இது அதிகம் சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து இதைச் சாப்பிடுவதால் குழந்தைக்குப் பிறவிக் கோளாறுகள் ஏற்படும் அபாயங்கள் அதிகரிக்கும். எனவே, எம்.எஸ்.ஜி சேர்த்த உடனடி உணவுகள் மற்றும் ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்கவும்.

அதிக உப்பு சேர்த்த உணவுகள்

மசக்கையின் காரணமாக சிலர் வெறும் உப்பைக்கூடச் சாப்பிடுவார்கள். உப்பு அதிகம் சேர்த்த ஊறுகாயை விரும்புவார்கள். இப்படி நேரடியாக மட்டுமில்லை. மறைமுகமாகவும் உப்பு அதிகமுள்ள உணவுகளை உண்பது கர்ப்பகால ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.

உதாரணத்துக்கு சிப்ஸ், சமோசா, சீஸ், சாஸ், பாக்கெட் செய்யப்பட்ட நொறுக்குத்தீனிகள் போன்றவையும் கூடாது. உப்பு அதிகமுள்ள உணவுகள் உடலில் அதிக நீர் சேரக் காரணமாகும். சாலட் போன்ற உணவுகளிலும் உப்பு தூக்கலாகத் தூவி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வினாத்தாள் வெளியானதால் பரீட்சை ரத்து!!(உலக செய்தி)
Next post கலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…!!(அவ்வப்போது கிளாமர்)