By 28 November 2018 0 Comments

சேவை செய்தால் மன அழுத்தம் நீங்கும்!!!( மருத்துவம்)

பிறருக்கு கெடுதல் செய்யாமல் நல்லது செய்தாலே நமக்கும் நல்லதே நடக்கும். இது அனைவரும் அறிந்த விஷயம். அதிலும், மக்களுக்கு செய்யும் மகத்தான தொண்டு உங்கள் மனநலத்தை மேம்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தன்னார்வத் தொண்டு செய்யும் தனிப்பட்ட மனிதருக்கு என்னவெல்லாம் நடக்கும்?

மகிழ்ச்சி

பொதுவாக சுயநலமில்லாமல், பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யும் ஒவ்வொரு சிறு உதவியுமே பெறுபவருக்கும் சரி, கொடுப்பவருக்கும் சரி… மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். பிறருக்கு உதவி செய்யும் போது உண்டாகும் மகிழ்ச்சி, மூளையில் இருக்கும் வெகுமதி மையங்களை(Reward centers) தூண்டுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

அதாவது மூளையில் இருக்கும் இந்த வெகுமதி மையங்கள் உறவோடு நெருங்கிய தொடர்புள்ளவை என்பதால், எப்போதெல்லாம் மற்றவருக்கு உதவுகிறீர்களோ அப்போதெல்லாம் உங்கள் மூளை இயற்கையாகவே சுறுசுறுப்பாக செயலாற்ற ஆரம்பித்துவிடுகிறது. மற்றவர்கள் மீது வெறுமனே பரிதாபம் கொள்வதால் மட்டும் இது நடந்துவிடாது, நீங்கள் செய்யும் உதவி அர்த்தமுள்ளதாக இருந்தால் மட்டுமே முழு சந்தோஷம் அடைய முடியும். இதனால் உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி உங்கள் மனநலத்தை பாதுகாக்கும்.

ஆக்ஸிடோசின்

ஹார்மோன்கள் மற்றும் நடத்தையியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, தன்னார்வத் தொண்டு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்களுக்கு அதிக அளவு ஆக்சிடோசின்(Oxytocin) உற்பத்தியாகிறது. ஆக்சிடோசின் என்பது சமூகத் தொடர்புகளின் கட்டுப்பாட்டிற்கு பொறுப்பாகும் ஒரு நரம்பியல் கடத்தி என்பதால், அவர்கள் தொடர்ந்து சமூதாயத்தோடு இணைந்து செயல்படும்போது, அவர்களுக்கிருக்கும் Anxiety தொடர்பான மன அழுத்தத்தை குறைக்கிறது. இதனால், தொடர்ந்து அவர்களுடைய மனநலனை பாதுகாக்க முடிகிறது.

மன அழுத்த மேலாண்மை

தீவிரமான மன அழுத்தம் உடையவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு திரும்பத் திரும்ப எதையாவது நினைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில், சமூகத்தோடு தொடர்பில் இருப்பது நல்லது என்று பொதுவாக மருத்துவர்கள் கூறும் அறிவுரை. இவர்கள் தங்களை சமூக நற்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வதால், இன்னும் விரைவாக மன அழுத்தப் பிரச்னைகளிலிருந்து வெளி வர முடியும்.

Psychology and Ageing journal-ல் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வின் படி, சமுதாய நற்பணி செய்வதால் மன அழுத்தமும், ரத்த அழுத்தமும் குறைவதாக தெரிய வந்துள்ளது. ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 3 மணிநேரம் தன்னார்வத் தொண்டு செய்பவர்களது ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைவதாகவும். மன நலத்திற்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என்பதையே இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

அர்த்தமுள்ள வாழ்வு

‘நம் பிறப்பால் என்ன பயன்? யாருக்கும் உபயோகமில்லாமல் இருக்கிறோமே… எந்த சமுதாயத்திற்காக என்ன செய்தோம்?’ இதுபோன்ற கேள்விகளை, சில நேரங்களில் நமக்குள்ளேயே கேட்டுக் கொள்வோம். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இதுபோல் உணரும் நேரங்களில், தன் வாழ்க்கையே பயனற்றது என நினைத்து, தற்கொலைக்கு கூட முயல்வார்கள். இதுபோன்ற சிந்தனை வரும்போது, நாம் ஏன் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன் வரக்கூடாது?

நீங்களாகவே ஏதோவொரு வகையில், மற்றவர்களோடு இணைந்து நற்பணிகளில் ஈடுபடலாம். அது பொருளாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உடல்ரீதியான உதவிகளை மாற்றுத் திறனாளிகளுக்கோ அல்லது முதியவர்களுக்கோ செய்யலாம். அப்போது அவர்கள் முகத்தில் வெளிப்படும் புன்னகை உங்கள் மனதிலும் மகிழ்ச்சியைத் தூண்டக்கூடும். இதுபோன்ற தன்னார்வ தொண்டுகளில் ஈடுபடுத்திக் கொள்ளும்போது உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிவிடும்.

நேர்மறை எண்ணங்கள்

மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு, நேர்மறை எண்ணங்கள் அவசியம். துயரத்தில் தங்கி, உங்களுக்குள்ளேயே ஏற்படும் சுயபச்சாதாபத்தினால் எதிர்மறை எண்ணங்களே உங்களை ஆட்கொள்ளும். சமுதாயத்தில் கோடிக்கணக்கான மக்கள் அடிப்படை கல்வி கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓய்வு நேரங்களில் அவர்களுக்கு எழுதப் படிக்க சொல்லித் தரலாம். இது ஒரு வகையில், மன அழுத்தத்தினால் உங்களுக்குள் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களை போக்கி, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள உதவும். உங்கள் மனதை மேலும் விசாலப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

மூளைத்திறன் அதிகரிப்பு

தன்னார்வத் தொண்டு மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது. ஒருவரின் மூளை ஆரோக்கியத்துடன் இயங்கும் போது, மனநிலையை கட்டுப்படுத்தக்கூடிய ஹார்மோன்களை சுரக்கச் செய்ய முடியும். மேலும், மூளை மற்றும் மனதோடு இயைந்து செய்யக்கூடிய செயல்களை ஒருங்கிணைக்க முடியும். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ப்ளும்பெர்க் பள்ளியின் பொது சுகாதார ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இளைஞர்களுக்கான வழிகாட்டும் திட்டத்தில் செயலாற்றிய வயதான தன்னார்வத் தொண்டர்களிடத்தில் பார்வைத்திறனோடு இயைந்த புலனுணர்வுத்திறனில் மேம்பட்ட முன்னேற்றத்தை கண்டறிந்தனர்.

சுயநலமின்மை

இதற்காக பெரிய அளவில் தன்னார்வத் தொண்டு நடவடிக்கைகளில் எல்லாம் இறங்கி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. சுயநலமற்ற சேவை எந்த இடத்திலும் செய்யலாம். சுயநலமற்ற பழக்க வழக்கங்கள் ஒருவரின் நலனில், நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. உங்களுக்கான முக்கியத்துவத்தை விடுத்து, பிறருக்காக செய்யும் எந்தவொரு விஷயமுமே சுயநலமின்மையைக் குறிப்பது. சுயநலமில்லாமல் செயல்பட ஏராளமான வழிகள் இருக்கின்றன. குறைந்தபட்சம் கருணை மனப்பான்மையோடு இருந்தாலே உங்கள் மனநலத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

மாநகர பேருந்தில் போகும்போது வயதானவர்களோ, மாற்றுத்திறனாளிகளோ நின்று கொண்டிருந்தால் அவர்களை உங்கள் இடத்தில் உட்காரச் செய்யலாம். எதிர்ப்படுபவர்களில் யாருக்கு எந்தவிதமான உதவி தேவைப்படுகிறதோ உங்களால் ஆன உதவியைச் செய்யலாம். பக்கத்து வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்து கொடுக்கலாம். விலங்குகளை தொந்தரவு செய்யாமல், அவற்றையும் கனிவோடு நடத்தலாம். இது போன்ற சின்னச்சின்ன சுயநலமற்ற செயல்களைச் செய்தாலே உங்கள் மனதிற்கு ஒரு திருப்தி கிடைக்கும்.எதுவுமே முடியாவிட்டால், எதிரில் இருப்பவர்களை கடுஞ்சொற்களால் காயப்படுத்தாமல் இருப்பதே மனிதத்தின் வெளிப்பாடு!Post a Comment

Protected by WP Anti Spam