நடைமுறைக்கு வரும் தனியார் மருத்துவமனை சட்டம்…பொதுமக்களுக்கு என்ன நன்மை?( மருத்துவம் )

Read Time:9 Minute, 45 Second

தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்துவதற்கான 1997-ம் ஆண்டு சட்டத்தை, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததற்கு சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பாராட்டு தெரிவித்திருந்தார். அமலுக்கு வரும் இந்த சட்டத்தால் பொதுமக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்பு அலுவலர் சோமசுந்தரத்திடம் கேட்டோம். ‘‘மத்திய அரசு 2010-ம் ஆண்டில் The Clinical Establishments (Registration and Regulation) Act 2010-ஐ இயற்றியது.

இது மாநில சட்டத்தில் வருவதால் தமிழ்நாட்டில் தற்போது தமிழ்நாடு கிளினிக்கல் எஸ்டாபிளிஷ்மென்ட் சட்டம் மற்றும் விதிகள் 2018 என்று இயற்றப்பட்டு தற்போது நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவிலியர் மற்றும் இரண்டு படுக்கை இல்லை என்றால் அதை கிளினிக் என்று அழைக்கக்கூடாது. அனைத்து வகையான மருத்துவமனைகளும் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தண்ணீர் வசதி, தொலைபேசி வசதி, காவலாளி போன்ற வசதிகள் இருக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடைமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் உள்ள அனைத்து வகை மருத்துவம் மற்றும் மருத்துவமனைக் கழிவுகளையும் அகற்ற தகுந்த சாதனங்களும் வசதிகளும் கட்டாயம் இருக்க வேண்டும். எனவே, இச்சட்டம் மருத்துவக் கழிவுகள் சரியாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதைத் தடுக்க உதவியாக இருக்கும்.
மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற அனைத்து வகை ஊழியர்களின் கல்வித்தகுதி மற்றும் மருத்துவமனை சாதனங்கள் குறித்த பதிவேடுகள் போன்றவை பராமரிக்கப்பட வேண்டும் என்பது இச்சட்டத்தில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் பற்றிய தகவல், அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகள், சிகிச்சை மற்றும் பரிசோதனை முடிவுகள் குறித்த ஆவணங்களை மருத்துவமனை நிர்வாகம் சரியான முறையில் பராமரிக்க வேண்டியது அவசியம் என்கிறது இச்சட்டம்.

மருத்துவமனையின் பதிவு சான்றிதழ் மருத்துவமனையில் அனைவரும் பார்ப்பதற்கு வசதியான ஓர் இடத்தில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். மருத்துவமனையை மற்றொருவருக்கு மாற்றும்போது புதிதாக பதிவு செய்ய வேண்டும். இப்படி செய்வது நுகர்வோர் மேற்கொண்டு அந்த மருத்துவமனை குறித்த தவறுகளை சுட்டிக்காட்ட ஏதுவாக இருப்பதோடு, சட்டப்படியான நடவடிக்கைகளுக்கும் உதவியாக இருக்கும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், மருத்துவர்கள் போதிய அளவில் இல்லாததும் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம்.

தற்போதைய சட்டத்தில் இன்னும் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்தை சரியான முறையில் அமல்படுத்துவதோடு, அது குறித்த முழுமையான விழிப்புணர்வினை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியதும் அரசின் கடமை’’ என்றவர் இதுவரை நடைபெற்ற மருத்துவமனை உயிரிழப்புகள் பற்றியும், மருத்துவமனைகளை முறைப்படுத்துவதற்கான 2010 ஆம் ஆண்டு சட்டம் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 47-வது பிரிவில், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான மருத்துவ வசதிகளை அளித்து, தரமான மருத்துவ சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்று

The Clinical Establishments (Registration and Regulation) Act 2010-ல் சொல்லப்பட்டுள்ளது. இச்சட்டத்தை இந்தியாவில் சிக்கிம், மிசோரம், இமாச்சலபிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், பீகார், உத்திரபிரதேசம், உத்ரகாண்ட், அசாம், ஜார்கண்ட், ராஜஸ்தான், புதுச்சேரி, சண்டிகர், அந்தமான், லட்சத்தீவு போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில், இச்சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு இச்சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை அளிக்கக்கூடிய மருத்துவமனைகள் பல இருந்தாலும், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் பல மருத்துவமனைகளில் தரப்படும் மருத்துவம் தற்போது கேள்விக் குறியாகி உள்ளது. இதுகுறித்த விவரங்களை RTI மூலம் சேகரித்தபோது, தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று மருத்துவ சேவைகளின் இயக்குநர் அலுவலகம் அப்போது பதில் அளித்தது. மருத்துவ சிகிச்சை, மருத்துவ சோதனை மற்றும் மருத்துவம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எந்த ஒரு நிறுவனமும் இந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தனி ஒரு மருத்துவரால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனை, சேவை மையங்கள், அரசு மற்றும் பொது நிறுவனங்களால் நடத்தப்படும் மருத்துவமனைகள் போன்ற அனைத்தும் இந்தச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. ஆனால், இந்திய ராணுவத்தால் நடத்தப்படக்கூடிய மருத்துவனைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அகில இந்திய தேசிய கவுன்சிலால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் இந்த கவுன்சிலில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவுமுறைகள் நடத்தப்பட வேண்டும். இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறும் மருத்துவ நிறுவனங்கள், முதல் முறை செய்யும் தவறுக்கு 10 ஆயிரம் ரூபாயும், அடுத்த முறை செய்யும் தவறுக்கு 50 ஆயிரம் ரூபாயும், தொடர்ந்து செய்யப்படும் தவறுகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதங்கள் விதிக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தில் ஒவ்வொரு நோய்க்கும் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. மேலும் இதில் மருத்துவமனைகள் A, B, 1(A), 1(B) என்று தரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ பரிசோதனை நிலையங்களும் அவற்றின் தன்மைக்கு ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்திய மருத்துவம், யுனானி, யோகா, சித்தா, ஹோமியோபதி போன்ற முறைகளை பின்பற்றும் மருத்துவமனைகளும் இதில் அடங்கும். மேலும் இதுபோன்ற மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் கல்வித்தகுதியும் நெறிமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் போலி மருத்துவர்கள் மற்றும் போலி மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்த முடியும். மேலும் மக்களுக்கு சரியான, தரமான மருத்துவ சிகிச்சையை வழங்கிடவும் இச்சட்டம் வழிவகை செய்யும்’’ என்கிறார் சோமசுந்தரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘இறகு’ பிடுங்கும் காலம்!!(கட்டுரை)
Next post இப்படிப்பட்ட இடங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை !(வீடியோ)