By 4 December 2018 0 Comments

Sleeping Beauty Syndrome!!( மருத்துவம் )

தலைப்பைப் பார்த்தால் அழகாக தூங்குவது தொடர்பான பிரச்னையாகவோ அல்லது அழகான பெண் தூங்குவது தொடர்பாகவோ இருக்கும் என்றுதானே தோன்றுகிறது… ஆனால், அதுதான் இல்லை.

அனைத்து வகை உயிரினங்களுக்கும் தூக்கம் என்பது அத்தியாவசிய தேவை. ஆனால், அதுவே அளவு கடந்து செல்லும்போது மிகை உறக்கம் (Hypersomnolence Or Excessive Sleeping) என மருத்துவ உலகில் குறிப்பிடப்படுகிறது.

எப்போதாவது, அரிதாக நிகழும் இந்த நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் அன்றாடம் சாப்பிடுவதற்காகவும், இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காகவும் விழித்து இருக்கும் நேரம் தவிர்த்து 12 முதல் 24 மணி நேரம் வரை ஆழ்ந்த தூக்கத்திலேயே கழித்து விடுகின்றனர். இதனையே வேடிக்கையாக Sleeping Beauty Syndrome என்று அழைக்கிறார்கள். மருத்துவர்கள் Kleine Levin Syndrome (KLS) என குறிப்பிடுகிறார்கள்.

இந்த பாதிப்பு பொதுவாக, வளர் இளம் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. பல மணிநேரம் தொடர்ந்து ஆழ்ந்து உறங்கும் பாதிப்பு உள்ளவர்கள் எப்போதாவது விழித்தெழும்போது எந்தவித இலக்கும் இல்லாமல் இருத்தல், குழப்பம், மனப்பிரமை, எரிச்சல், சோம்பல் மற்றும் அக்கறையின்மை உட்பட பலவிதமான அறிகுறிகளை மெல்லமெல்ல உணரத் தொடங்குவார்கள். பல்வேறு கட்டங்களாக வெளிப்படும் இத்தகைய அடையாளங்கள் ஒரு வருடத்தில் 2 முதல் 12 தடவை தோன்றும் தன்மையைக் கொண்டவை.

ஒரு நாளில் பலமணி நேரத்தை நீண்ட நித்திரையிலேயே கழிக்கும் பழக்கம் கொண்டவர்கள் தங்களுடய நலனில் சிறிதும் அக்கறை கொண்டு இருக்க மாட்டார்கள். அது மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு சென்று வருவதில் சற்றும் ஈடுபாடு இல்லாதவர்களாகவும் எப்போதும் ஒருவிதமான சோம்பல் உணர்வுடன் காணப்படுவார்கள்.

பல மணி நேரம் தொடர்ந்து உறக்கத்தில் இருப்பவர்களுக்குத் தோன்றுவதாக மேலே சொல்லப்பட்ட அறிகுறிகளில், ஏதேனும் ஒன்று ஏற்பட்ட பின்னர் அது ஓரிரு நாட்கள் அல்லது பல மாதங்களுக்கு நீடிக்கும்.

இவ்வாறு ஏற்படுகிற அறிகுறி மெல்லமெல்ல மறைந்துவிடும். பொதுவாக, இது மாதிரியான நேரங்களில் நோயாளிகள் தங்களுக்கு உண்டான அனுபவத்தை மீண்டும் நினைவுப்படுத்திப் பார்க்க முடியாது. அதே வேளையில் இத்தகைய அறிகுறிகள் எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி சிறிது நேரத்திலேயே மீண்டும் வரக்கூடிய தன்மை கொண்டவை.

KLS நோயாளிகளை பரிசோதனை செய்யும்போது, அவர்களின் நடத்தைமுறைகளில் எந்தவிதமான செயல்திறன் இழப்பிற்கான அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை. இவர்கள் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதும் தெரிய வந்தது.

அது மட்டுமில்லாமல் இந்த நபர்கள் வழக்கமான தூக்க முறைகளுடன் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்வதும் தெரிய வந்தது. நோயாளிகளின் வயதின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களாகத் தோன்றும் இந்த அறிகுறிகள் மெல்லமெல்ல குறைந்து கடைசியாக முழுவதும் மறைகின்றன.

40 முதல் 50 வயதுக்குட்பட்ட நோயாளிகளிடம் அளவுக்கதிகமான தூக்கம், பலவீனமான அறிவாற்றல்(கவனக் குறைபாடு, ஞாபக மறதி, பேச்சுத்திறன் இன்மை முதலானவை) தேவையின்றி உண்ணுதல், பாலுணர்வில் அதீத நாட்டம், ஒற்றைத் தலைவலி, சீரற்ற உடல் சீதோஷ்ண நிலை, வெளிச்சம் மற்றும் ஓசை அலர்ஜி, இதய துடிப்பில் மாற்றம், ரத்த அழுத்த மாறுபாடு, ஃப்ளு காய்ச்சல் உட்பட ஏராளமானவை KLS-க்கான அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

மருத்துவ உலகில் இன்றுவரை Sleeping Beauty Syndrome-க்கான காரணம் என்ன என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. இருப்பினும் இந்நோயின் தன்மை அடிப்படையில் மூளையின் அடிப்பாகம் மற்றும் நரம்பு ஆகிய பகுதிகளில் காணப்படுகிற பாதிப்புகள் மிகை உறக்கத்திற்கான காரணங்களாக கருதப்படுகின்றன. ஏனென்றால், மூளையின் இவ்வுறுப்புகள், தூங்கும் முறைகள், பசியின்மை, செக்ஸ் ஈடுபாடு
முதலானவற்றை ஒழுங்குபடுத்துகின்றன.

நீண்ட நேரம் உறங்குவதைத் தடுக்க சரியான சிகிச்சைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், KLS-க்கான அறிகுறிகளை நீக்குவதற்குத் தனியார் உற்பத்தி செய்யும் சில மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதுதவிர, மனப்பித்தைச் (Bibolor Disorder) சரி செய்யப் பயன்படும் மாத்திரைகளும், தாம்பத்ய நாட்டத்தைத் தூண்டும் மருந்துகளும் இக்குறைபாட்டை நீக்குவதாக தெரிகிறது.

இருப்பினும், KLS ஃபவுண்டேஷன் 2005-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியுடன் இணைந்து Sleeping Beauty Syndrome-ஐ குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.Post a Comment

Protected by WP Anti Spam