By 1 December 2018 0 Comments

பாலைவனத்துக்கான பயணமா, பால்நிலவுக்கான பயணமா?(கட்டுரை)

நல்ல உறவு (நல்லுறவு) என்பது மற்றவர்களுடன் ஏற்படுத்திக் கொள்கின்ற கட்டாய ஒப்பந்தம் அல்ல. மாறாக, அது இயல்பாக விரும்பி, மனதில் தோன்ற வேண்டிய ‘புனித உறவு’ ஆகும்.

ஆனால், 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி வரை, ‘நல்லாட்சி’ என்ற ஒற்றை வார்த்தை, மலிந்து காணப்பட்ட சொல் ஆகும். அவர்கள், வலிந்து ஏற்படுத்திய உறவு என்பதால்தான், நல்லுறவும் நல்லாட்சியும் இன்று வலுவிழந்து விட்டது.

இவ்வகையில், இலங்கை அரசியலில், கடந்த ஒரு மாத காலமாகப் பல ‘அசிங்கங்கள்’ அரங்கேறி வருகின்றன. பேரினவாதப் பெருந் தேசியக் கட்சிகள் இரண்டும், ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, உயர்சபையில் கடை(கீழ்)த்தனமாக, கைகலப்பில் ஈடுபடுகின்றன.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான அதிகாரப் போட்டியாகும். ஏனெனில், ஆட்சியாளர்கள் தர்மத்தை வௌிச்சத்தில் தொலைத்துவிட்டு, அதை இருட்டறையில் தேடுகிறார்கள். இதனால்தான், தமிழ் மக்களது வாழ்வும் வளமும் தொ(க)லைந்த போகின்றது.

தமிழ் மக்களை, இந்த நாட்டினுடைய பங்குதாரர்களாகப் பெரும்பான்மையின மக்கள், இன்னமும் கருதாத நிலையில், அரங்கேறிக் கொண்டிருக்கும் நாடாளுமன்றப் போரில், தமிழர் தரப்பு வெறும் பார்வையாளர்களாக இருப்பது மட்டுமே, சாலப்பொருத்தமாக இருக்கும்.

இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை, பொதுத் தேர்தலுக்கான திகதி வெளியிடப்பட்டமையை எதிர்த்து, ஐ.தே.க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, சிவில் அமைப்புகள் உட்பட 13 மனுக்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஜனாதிபதியின் இந்தத் தீர்மானங்களுக்கு டிசெம்பர் ஏழாம் திகதி வரை, நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கும் போது, “இலங்கையின் 200 ஆண்டு கால நீதித்துறைக்குக் கிடைத்த உன்னதமானதும் உயரியதுமான வெற்றி” எனப் பெருமிதப்பட்டார்.

ஆனால், போரின் பாதிப்புகளில் இருந்து, இதுவரை மீளமுடியாதுள்ள தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், இதை வெற்றி என்று கருதவோ, பெருமிதம் அடையவோ எதுவும் இல்லை.

ஏனெனில், பெரும்பான்மையினத் தலைவர்களில் எவர் வந்தாலும், தமிழ் மக்களுக்கு, எதுவும் கிடைக்காது என்பதில், தமிழ் மக்கள் இப்போது மிகத்தெளிவாக உள்ளனர். இது, பெரிய பட்டறிவு.

இன்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காகத் தமிழர்களிடம் கையேந்துகிறார்கள். ஒரே சமயத்தில் நெஞ்சில் வேஷத்தையும் கைகளில் (கைலாகு) பாசத்தையும் காட்டுகின்றார்கள்.

பொதுவாக, அரசிறமையில் நீதி, நியாயம், தர்மம் ஆகியவை வலிமையாகக் காணப்பட வேண்டும். ஆனால், இலங்கையில் பெரும்பான்மை இனம் என்ற வலிமையே நியாயமாகக் காணப்பட்டது; காணப்படுகின்றது. அது தமிழ் மக்களுக்கு பயத்தைக் கொடுத்தது; அநியாயங்களைச் செய்கிறது. நாடு சுதந்திரமடைந்த 70 ஆண்டுகளில், தமிழினம் 40 ஆண்டு காலம், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வாழ்ந்து(மாண்டு)ள்ளது.

இவ்வாறாகப் பெரும்பான்மையினம் குழம்பிய நிலையிலோ, தெளிந்த நிலையிலோ எவ்வாறாகவாவது இருக்கட்டும். ஆனால், தமிழர் விடயத்தில் தமிழர் தரப்பு எப்பொழுதும் விழிப்புடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். ஏனெனில், பெரும்பான்மையினருக்கு ஆளுகின்ற பிரச்சினை; நம்மவர்களுக்கு வாழுகின்ற பிரச்சினை.

வன்னியில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்ட போது, வாய் மூடி மௌனமாக இருந்த சர்வதேசம், நாடாளுமன்றத்தில் மிளகாய்த் தூள் வீசப்பட்ட போது, வாய் திறக்கின்றனர்; இது அரசியல். பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் கூட்டமைப்புடன் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே, வாய்ப்புகள் தேடி வருகின்றன; வாய்ப்புகளை வசப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில், பெரும்பான்மையினத் தலைவர்களது விருப்பமின்மையையும் பாராமுகத்தையும் உலகத்துக்குப் பாரப்படுத்த, நல்ல வாய்ப்புக் கூட்டமைப்புக்குக் கைகூடியுள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் குழப்பங்களைத் தீர்க்க, சர்வதேசம் உறுதி அளித்துள்ளதாக இராஜதந்திரிகளுடனான சந்திப்பின் பின், இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு யார் பிரதமர், யார் ஜனாதிபதி, யார் அமைச்சர் என்பது முக்கியமல்ல. தற்போதைய நெருக்கடிகளை விட, மிக அதிக நெருக்கடிகளைத் தமிழ்ச் சமூகம் கண்டு விட்டது.

முள்ளிவாய்க்கால் அவலம், போர்க்குற்றம் தொடர்பில் இதே சர்வதேசம் தட்டி வைக்க வேண்டியவர்களைத் தட்டி வைத்திருந்தால் இவர்கள் தற்போது, முட்டி மோதியிருக்க மாட்டார்கள். ஆகவே, அன்று பிழையைக் கண்டிக்காது, செல்லம் கொடுத்தமையால் இன்று, இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் கூடச் செல்லாக்காசு என ஆக்கப்பட்டு விட்டதோ என்றவாறாக எண்ணத் தோன்றுகிறது.

ஒரு பெரும் இக்கட்டான நிலையில் நாடு உள்ளது. பெரும்பான்மையினம் கதிரையைப் பிடிக்க, ‘கன்னை பிரித்து’ அடிபடுகின்றது. எந்நிலையிலுமே இனப்பிரச்சினையைப் பொருட்படுத்தாத பேரினவாதம், இந்நிலையிலா தமிழ் மக்களின் இன்னோரன்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்போகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே தமிழ்க் கட்சிகளின் எண்ணிக்கை, உச்சமாக அதிகரித்திருக்கையில் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனிக்கட்சி, முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தனிக்கட்சி, முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தனிக்கட்சி, கிளிநொச்சியில் சந்திரகுமார் தனிக்கட்சி எனத் தனிக்கட்சிகள் பெருகி வருகின்றன.

கடந்த செப்டெம்பர் மாதம், திருகோணமலைக்கு ஜனாதிபதி சென்றிருந்தார். அங்கு சம்பந்தன், ஜனாதிபதியை வரவேற்றார். “நாட்டை ஒன்றிணைக்கும் பெறுமதியான தலைவர் எமக்குக் கிடைத்துள்ளார்” என, ஜனாதிபதிக்குச் சம்பந்தன் புகழாரம் சூட்டினார்.

இங்கேயும் கூட, சம்பந்தன் கூறியது போல, பெறுமதியான தலைவர் எமக்குக் கிடைத்துள்ளார் எனத் தமிழ் மக்கள் ஒருபோதும் கருதியிருக்கவில்லை. ‘மாற்றம் ஒன்று வேண்டியே’ மைத்திரிக்கு (2015 ஜனவரி) வாக்களித்தனர்.

முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியமை “நான் செய்த பாவமே” என மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார். இவ்வாறு ஆளுக்கு ஆள், மாறி மாறிச் சேறு பூசுவதைக் கேட்கவும் பார்க்கவும் நாம் (தமிழ் மக்கள்) என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை.

ஆகவே, தம்மைப் (கூட்டமைப்பு) பற்றிய தமது மதிப்பீட்டை விட, தமிழ் மக்களது மதிப்பீட்டுக்கு கூட்டமைப்பு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்த வரை, ரணிலுக்கா, மஹிந்தவுக்கா கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது என்பது, ஒரு சிக்கலான நிலை என்று மக்களுக்குத் தெரியும்.

ஆனாலும் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளது எனச் சந்தேகப்படுகின்றனர். கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்காக, அயராது பாடுபடுகின்றார் எனத் தமிழ் மக்கள் ஐயம் கொள்கின்றார்கள்.

தமிழ் மக்கள் எக்காலத்திலும் தனிக்கட்சி அரசியலை ஆதரித்தவர்கள் அல்லர். அத்துடன், தனித்து நின்று, எக்காலத்திலும் உரிமைகளைப் பெற முடியாது என்பதிலும் தெளிவாக உள்ளனர்.

இந்நிலையில் கூட்டமைப்பின் பலம் சுருங்கி வருகின்றது. 16 ஆகக் காணப்பட்ட கூட்டமைப்பு அணி 14 என ஆகி விட்டது. வடக்கில் ஒருவர் கிழக்கில் ஒருவர் என விலகி விட்டார்கள். கால ஓட்டத்தில், மேலும் குறையாது கட்டிக் காப்பது முக்கியம்.

பரிதாபத்திலும் பரிதவிப்பிலும் நகர்கின்றது தமிழர் வாழ்வு. அதனை மீட்டெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு முன்னால் இருக்கையில், எங்கள் தலைவர்களது பலவீனங்கள் (ஒற்றுமையீனங்கள்) எதிரிக்குப் பலமாகின்றன.

எமது ஒற்றுமையே, எங்கள் வாழ்வுக்காகத் தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்களுக்கு, இன்றைய நாளில், தமிழர்களாக நாங்கள் செய்யும் மிகப் பெரிய காணிக்கையாகும்.Post a Comment

Protected by WP Anti Spam