By 3 December 2018 0 Comments

பிரான்ஸ் அரசியல்: தடுமாறுகிறது ஐரோப்பா!!(கட்டுரை)

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கான ஆதரவு, உள்நாட்டில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் பேரணிகள் மூலம், அவரது கொள்கைகளுக்கும் அரசாங்கத்துக்கும் எதிர்ப்புகளைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவது தெரிவிப்பது, தொடர்ச்சியாகவே பிரெஞ்சு ஜனாதிபதிக்குக் கடினமானதொரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பிரெஞ்சு அரசியல் விவகாரங்களில் பல ஆய்வாளர்கள், ஜனாதிபதி மக்ரோனின் அரசியல் நிலை பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “அவர், முன்னைய ஜனாதிபதிகளான ஃபொஷ்வா ஹொலான்டே, நிக்கோலா சார்க்கோசி ஆகியோரைக் காட்டிலும், சிறந்ததொரு தலைவராக பிரான்ஸின் வரலாற்றில் இடம்பெறுவது கேள்விக்குறியே” எனத் தெரிவிப்பதோடு, 2022க்கு முன்னர், பதவியிலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக அகற்றப்படாவிட்டால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அவருக்கு தற்போதைய நிலையில் எள்ளளவேனும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக “மஞ்சள் அங்கி” (Yellow vest) போராட்டம், ஜனாதிபதி மக்ரோனின் தொடர்ச்சியான அரசியல் கனவைக் கடுமையாக பாதித்துள்ளது எனலாம்.

2017இல், பிரான்ஸில் பொருளாதார அபிவிருத்தி, ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களில் பிரான்ஸ் தலைமை தாங்குதல் என்ற முழக்கத்துடன், அதிகாரத்துக்கு மக்ரோன் வந்ததை, மக்கள் மறந்துவிடவில்லை. இருப்பினும், ஜனாதிபதி மக்ரோன், ஐரோப்பாவில் வலுவானதொரு தலைவராக மாறக் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டார் என்பதும், பிரான்ஸின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய அவரே காரணமாக இருந்தார் எனவும், எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றஞ்சுமத்துவது மற்றும் அரசியலில் அவர், தோல்வியுற்ற ஒரு நபராகக் கருதப்படுவதுமே அவரது அரசியல் கனவைத் தகர்க்கப்போகும் காரணிகளாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிரான்ஸில் கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பானது, கடந்த மாதங்களில், ஜனாதிபதி மக்ரோனின் பணியை ஏற்றுக்கொள்வோரின் சதவீதம், 26 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. இன்று, ஜனாதிபதி மக்ரோன், தனது நாட்டிலுள்ள எதிர்த்தரப்புக் குழுக்களை எதிர்த்துப் போராடுவதற்கு முயற்சி செய்கிறார் என்ற போதிலும், அதில் அவர் அவ்வளவு சீக்கிரம் வெற்றிபெறுவதாகத் தெரியவில்லை. குறித்த எதிர்ப்பானது, குறிப்பாக அவருடைய கொள்கைகளுக்கு எதிராகவே உள்ளமை, பிரான்ஸ் அரசியலில் நிச்சயமற்ற ஒரு தன்மையை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மக்ரோனை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், பெரும்பாலும் பிரான்ஸின் தேசியவாத இயக்கத்தின் உறுப்பினர்களாக உள்ளன. இவர்கள், பிரான்ஸ் பழமைவாத, சோசலிஸ்ட் செயற்பாட்டாளர்களோடு இணைந்தே, மக்ரோன் அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குகின்றனர்.

எது எவ்வாறாயினும், உண்மையில் தலைமைத்துவம் இல்லாது அண்மைய வருடங்களில் மிகவும் அவதிப்படும் அமைப்பு, பிரான்ஸ் அல்ல; மாறாக அது ஐரோப்பிய ஒன்றியமே ஆகும். 2021ஆம் ஆண்டு ஜேர்மனியின் சான்செலர் அங்கேலா மேர்க்கெல், அதிகாரத்தில் இருந்து விலகுவார் என அறிவித்துள்ளதுடன், பல ஆய்வாளர்களின் கருத்துப்படி மேர்க்கெலின் பின் வாரிசான வரும் எந்த அரசியல்வாதியும், ஐரோப்பிய சமன்பாடுகளை மேர்க்கெல் எதிர்கொள்ளும் வழியில் சமாளிப்பார்கள் என எண்ணமுடியாது என்றே கருதுகின்றனர். மறுபுறம், பிரெக்சிற்றைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றிய தலைமைத்துவத்தை ஏற்கமுடியாது நிலைக்கு உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் தேசியவாதத் தலைவர் ஒருவரை (இப்போதுள்ள அரசியல் நிலைமைகளை பொறுத்தவரை) ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளில் மிகவும் மாறுதலான தன்மையை ஏற்படுத்துவதைத் தவிர்க்கமுடியாமல் போகலாம்.

ஆகையால், அடுத்த தேர்தலில் ஜனாதிபதி மக்ரோன், அதிகாரத்தை மீண்டும் தக்கவைத்து, பிரான்ஸின் அரசியல் நிலைமைப்பாடுகளையும் தாண்டி, ஐரோப்பிய ஒன்றிய நலன்களுக்கு அவசியமானது. 2017இல், பிரான்ஸ் மக்கள், நடைமுறையில் தங்கள் நாட்டின் இரண்டு பாரம்பரியக் கட்சிகள் — அதாவது சோசலிஸ்டுகள், பழமைவாதிகள் — இருவரையும் அகற்றி, அரசாங்கத்தை மக்ரோன் அமைப்பதற்கு வாக்களித்திருந்தார்கள். ஆயினும், மறுபுறத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களைப் பற்றி, மரின் லு பென், அவர் சார்ந்த பிரெஞ்சு தேசியவாதிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தத் தேர்தல்களை வெல்வதன் மூலம், பிரான்ஸின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோனைத் தோற்கடிப்பதில் முக்கிய பங்கொன்றை ஆற்ற முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். பிரான்ஸில் சமீபத்திய ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னால், தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் உள்ளமையும், குறித்த அரசியல் நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியே என, சில ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரான்ஸில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எதிர்ப்புகள், மக்ரோனின் நிர்வாகத்துக்கு எதிரான கடைசிப் போராட்டங்கள் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுதல் அவசியமானது. இந்த எதிர்ப்புகள் பிரான்ஸ் அடுத்த ஜனாதிபதித் தேர்தல்களுக்கான 2022 வரை தொடரும் என்பதிலும் சந்தேகம் இல்லை. மேலும், குறித்த இவ்வாறான எதிர்ப்புகள் மற்றும் மக்ரோனின் அரசியல் நிலைமைகளில், மிகவும் செல்வாக்குச் செலுத்தும் என்பதுடன் அவை ஐரோப்பிய நாடுகளின் அரசியல் நிலைமைகளையும் பாதிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இந்நிலையில், பிரான்ஸில் தற்போதைய எதிர்ப்புகளுக்கு எதிராக, மக்ரோனோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ எவ்வாறான அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளப்போகின்றார்கள் என்பதே, இன்றைய நிலையில் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.Post a Comment

Protected by WP Anti Spam