By 16 December 2018 0 Comments

இலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன!!(கட்டுரை)

இவ்வாண்டு ஜூன் முதலாம் திகதி, இப்பத்தியாளரின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில், “மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்துகளைப் பார்க்கும் போது, எனது நண்பர்களுக்கு நான் வழக்கமாகச் சொல்வதைத் தான் என்னால் சொல்ல முடியும்: மைத்திரிபால சிறிசேன என்பவர், [ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி] ட்ரம்ப்பின் இன்னொரு வடிவம். கொள்கைகள் பற்றி இருவருக்கும் எதுவும் தெரியாது; இருவரையும் சுற்றி, திறனில்லாத அலுவலர்கள் இருக்கிறார்கள்; அத்தோடு அவர்களிருவரும் சர்வாதிகாரிகளாக மாற விரும்புகின்றனர்” என்று பதிவுசெய்யப்பட்டது.

இக்கருத்து, சிறிது மிகைப்படுத்தப்பட்டது போல அப்போது தெரிந்திருக்கலாம்; ஆனால், அதன் அடியில், முக்கியமான உண்மை இருந்ததை மறுக்க முடியாது.

மே மாதத்தின் பல்வேறு தருணங்களில், ஜனாதிபதி சிறிசேன தெரிவித்த கருத்துகளின் பின்னணியில் தான் அக்கருத்துத் தெரிவிக்கப்பட்டது. ராஜபக்‌ஷக்களை, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தான் காப்பாற்றுகிறார்; சமூக ஊடக வலையமைப்புகளை முழுவதுமாக முடக்க வேண்டியிருக்கும்; தமிழ்ப் “பிரிவினைவாதிகள்” வெளிநாடுகளில் ஒன்றுகூடுகிறார்கள்; 100-நாள்கள் வேலைத்திட்டத்தை யார் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை போன்ற கருத்துகளை, பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருந்த அவர், போலியான செய்தி என தான் கருதிய செய்தி தொடர்பாக விசாரணை செய்யுமாறு, பொலிஸ்மா அதிபருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

இவற்றின் பின்னணியில் மேலே குறிப்பிடப்பட்ட டுவீட்டை வாசிக்கும் போது, அதன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

இதன் பின்னணி எதற்காகவென்றால், ஜனாதிபதி சிறிசேனவின் தற்போதைய நடவடிக்கைகள் புதிதாக அமைந்திருக்கவில்லை; இதற்கான சமிக்ஞைகளை, இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்தே அவர் வெளியிட்டிருந்தார். அதிலும், இவ்வாண்டு மே மாதத்தில், அவரது கருத்துகள், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை அடைந்திருந்தன. ஆகவே, ஜனாதிபதி சிறிசேன பற்றி விழிப்பாக இருக்காத தவறு, எம்மீதும் காணப்படக்கூடும்.

இப்பத்தியின் ஆரம்பத்தில், ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பற்றிய ஒப்பீடு வழங்கப்பட்டமைக்குக் காரணமும் இருக்கிறது. பல விருதுகளை வென்று, ஐ.அமெரிக்காவின் ஊடகச் சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவரும் ஜோன் ஒலிவரின் இவ்வார நிகழ்ச்சியில், அதிகாரவயம் (authoritarianism) பற்றி அவர் தனது கவனத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஜனாதிபதி ட்ரம்ப்பை இலக்குவைத்த அந்நிகழ்ச்சியில், அதிகாரவயச் செயற்பாட்டின் முக்கிய விடயங்கள் மூன்றாகும் என, கருத்தொன்றை அவர் வெளிப்படுத்தினார். தனது பலத்தை அதிகமானதெனக் காட்டுதல்; எதிரிகளை மோசமாக விமர்சித்தல்; நிறுவனக் கட்டமைப்புகளை உடைத்தல் ஆகியனவே, அந்த 3 விடயங்களாகும்.

நாட்டு மக்களைக் காப்பாற்றக்கூடிய, நேர்மையும் திறனும் தனக்குத் தான் உள்ளது என, அண்மைய மாதங்களில், ஜனாதிபதி சிறிசேன தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை, அரசமைப்புக்கு முரணாக நீக்கியமையைக் கூட, நாட்டைக் காப்பாற்றுவதற்காக எடுத்த முடிவு என, தனது பலத்தை வெளிப்படுத்தவே அவர் முயன்றிருந்தார்.

தன்னுடைய எதிரியெனக் கருதும் ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய தேசியக் கட்சியினரையும், இயலுமானளவுக்கு அவர் தூற்றிவிட்டார். ஒரு கட்டத்தில், அவர்கள் சமபாலுறவாளர்கள் என்று, பகிரங்கமாக விமர்சித்தார். (இவ்விடயம் ஏற்கெனவே அலசப்பட்டிருந்தது. சமபாலுறவாளராக இருப்பதில் எத்தவறும் கிடையாது. ஒருவரின் ஆட்சித் திறனுக்கும் அவரது பாலியல் தெரிவுக்கும் இடையில் எத்தொடர்பும் இல்லை. ஆனால், ஒருவரைச் சமபாலுறவாளர் என அழைப்பது, பழமைவாதச் சமூகங்களில், இழிவான தூற்றுதலாகத் தான் பார்க்கப்படுகிறது)

அடுத்தது மூன்றாவதும் முக்கியமானதுமாக, இலங்கையின் நிறுவனக் கட்டமைப்புகளைச் சரிப்பதில், ஜனாதிபதி சிறிசேன, ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். அரசமைப்பு என்ற கட்டமைப்பை, ஏற்கெனவே உடைத்தெறிந்துவிட்டார். அவருடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசமைப்புப் புத்தகத்தைக் கொண்டே தாக்குதல் நடத்தியது, அரசமைப்பை எவ்வாறு அவர்கள் கருதுகிறார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணமாக அமைந்தது. அரசமைப்புத் தவிர, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமை, கலைத்தமை, நாடாளுமன்றத்தின் சட்டரீதியான செயற்பாடுகளை ஏற்கப் போவதில்லையெனப் பிடிவாதம் பிடித்தமை என, அவரின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதேபோல், பொலிஸ் துறையையும் அரச அச்சகத் திணைக்களத்தையும் தனக்குக் கீழ் கொண்டு வந்தமையும், இவ்வாறான நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகத் தான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாகக் காணப்படும் ஊடகங்கள் மீதான அவரது விமர்சனங்கள், மீளவும் ஞாபகப்படுத்தப்பட வேண்டியனவல்ல. அரச ஊடகங்களின் கட்டுப்பாடுகள் காரணமாக, மஹிந்த ராஜபக்‌ஷவின் துதிபாடும் ஒலிவாங்கிகளாக அவைமாறியிருக்கின்றமை, மிகவும் வெளிப்படை.

இவ்வாறு, அதிகாரவய ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவரும் அத்தனை நடவடிக்கைகளையும், ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்டு வருகிறார். எனவே, ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கைகளை, வெளிப்படையாகவே விமர்சிக்க வேண்டியிருக்கிறது. சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியதைப் போன்று, மஹிந்த ராஜபக்‌ஷவின் துணையுடன் ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட இந்த அரசியல் நெருக்கடிகள் அனைத்தும், ஆயுதந்தாங்காத சதிப்புரட்சியென்று கூறுவதில் எந்தத் தயக்கமும் இருக்கத் தேவையில்லை.

சதிப்புரட்சிகள் — ஆயுதங்களுடன் நடந்தாலென்ன, வேறு வழிகளில் நடந்தாலென்ன — ஒரு விடயத்தை எதிர்பார்க்கின்றன: அந்தச் சதிப்புரட்சியை வழக்கமானதான ஒன்றாக மக்கள் உணர்வது தான். அதனால் தான், அரசமைப்பு முரணான இந்த அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதும், அரச ஊடகங்கள் அனைத்தும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால் கைப்பற்றப்பட்டிருந்தன. நாட்டில் இருக்கின்ற கணிசமான மக்கள், ஜனாதிபதி சிறிசேனவை (தவறாக) நியாயப்படுத்துகின்ற செய்திகளைத் தான், கடந்த ஒரு மாதமாகப் பெற்று வருகின்றனர் என்பதுவும், ஜனாதிபதி செய்தவை அனைத்தும் அரசமைப்புக்கு ஏற்புடையன என்றும் கருதுகின்றனர் என்பதுவும், ஆபத்தான ஒன்றல்லவா?

இதனால் தான், ஊடகங்களும் பொதுமக்களும், இவ்விடயத்தில் உறுதியாகச் செயற்பட வேண்டியது அவசியமானது. அரசமைப்புக்கு முரணாக நியமிக்கப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் மூன்று தடவைகள் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷவை, இன்னமும் “பிரதமர்” எனவும், அவரின் குழுவை “அரசாங்கம்” என்றழைப்பதும், ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும், ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளாகும். ஏனென்றால், ஊடகங்கள் என்ற மிகப்பெரிய நிறுவனக் கட்டமைப்புத் தன்னுடைய பணிகளைச் செய்யாவிட்டால், அதிகாரவய ஆட்சியாளர்கள் விரும்பும் முக்கியமான விடயமொன்று நிறைவேற்றப்பட்டுவிடும்.

அதேபோல், அடுத்த தேர்தல் நடைபெறும் போது, அதிகாரவய ஆட்சியாளர்களையும் அவர்களுக்குச் சார்பானவர்களையும் அவர்களை நியாயப்படுத்தியவர்களையும் அவர்களைக் கண்டிக்கத் தவறியவர்களையும் நிராகரிக்க வேண்டிய தேவை, மக்களுக்கு இருக்கிறது. மக்களின் கைகளில் இருக்கின்ற மிகப்பெரிய நிறுவனக் கட்டமைப்பு, தேர்தல்கள் ஆகும். அக்கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, பொதுமக்களுக்கு இருக்கிறது.

ஆரம்பத்தில் கூறப்பட்ட பகுதிக்கே திரும்ப வருவது பொருத்தமானது. ஜனாதிபதி சிறிசேனவுக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் இடையில், வேறுபாடுகள் காணப்படுகின்றன; ஜனாதிபதி ட்ரம்ப் அளவுக்கு, ஜனாதிபதி சிறிசேன மோசமானவரா என்பது கேள்விக்குரியது.

ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப்பால், ஐ.அமெரிக்காவில் இன்னமும் மோசமான அழிவுகளை ஏற்படுத்த முடியாமல் இருப்பது, அந்நாட்டின் நிறுவனக் கட்டமைப்புகளின் பலமாகும். அந்நாட்டின் அரசமைப்பு உறுதியாகப் பின்பற்றப்படுகிறது; அரசமைப்பை மீறிவிட்டு, ஜனாதிபதி ட்ரம்ப்பால் இலகுவாகத் தப்பிவிட முடியாது. அண்மையில் கூட, ஜனாதிபதி ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட மாவட்ட நீதிபதியொருவர், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கெதிரான தீர்ப்பை வழங்கியிருந்தார்.

மறுபக்கமாக, ஐ.அமெரிக்கா அளவுக்கு, இலங்கையின் நிறுவனக் கட்டமைப்புகள் உறுதியாக இல்லை என்பது தான் உண்மையானது. அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பின்னர், இலங்கையின் நிறுவனக் கட்டமைப்புகள் ஓரளவுக்கு உறுதியாகியிருக்கின்றன என்பது உண்மையானது. நீதித்துறையில் ஓரளவு சுயாதீனத் தன்மை; தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் ஆகியன, நம்பிக்கை தருகின்றன. ஆனால், ஐ.அமெரிக்கா அளவுக்கு, இலங்கையின் நிலைமை இல்லை என்பது உண்மையானது. எனவே தான், இலங்கையின் ட்ரம்ப் என்று எம்மால் வர்ணிக்கப்படக்கூடிய ஜனாதிபதி சிறிசேனவைக் கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்கள், ஊடகங்கள், நிறுவனக் கட்டமைப்புகள் அனைத்தும் இணைந்து செயற்படுவது அவசியமானது. செயற்படுவோமா?Post a Comment

Protected by WP Anti Spam