‘கிழக்குத் தமிழர்’ என்னும் மாயவலை!!(கட்டுரை)

Read Time:12 Minute, 59 Second

நாட்டின் ஆளும்மன்றம் அல்லோல கல்லோலமாக இருக்கிறது. ‘யம்பர் அரசியலுக்கும், திருஷ்டி கழிப்புக்கும் என, மிக நல்ல விதமாக வளர்ச்சிகண்டு கொண்டிருக்கிறது.

எது எவ்வாறிருந்தாலும், கிழக்கைப் பொறுத்த வரையில் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, தமிழ் மக்களுடைய அரசியல் பலத்தை ஒருமுகப்படுத்துவது வரவேற்கத்தக்க தொன்று. ஆனால், இவ்வாறு ஒற்றுமைப்படுத்துவோர் எந்தவிதத்திலும் தமது நலன் கருதாத, முற்றிலும் பொது நோக்குக் கொண்டவர்களாக இருத்தல் அவசியம் என்ற வாதம் முகிழ்ப்பு பெற்று வருகிறது.

தமிழர் அரசியலில் பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதன் ஒழுங்கில், 1972ஆம் ஆண்டில், தமிழர் கூட்டணியும் இவ்வாறுதான் உருவாக்கப்பட்டது. ‘மூர்த்தி ஐயா’ போன்ற, தன்நலம் கருதாத பல பெரியவர்கள், முயற்சி எடுத்ததன் காரணமாகத் தமிழர் கூட்டணி உருவாகி, பின்பு அது, தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் பரிணாமம் பெற்றது.

இப்போது கிழக்கில் உருவெடுத்துள்ள கிழக்குத் தமிழர் ஒன்றியம், இவ்விதத்திலான ஒன்றா, இந்த ஒற்றுமையை உருவாக்க முனைபவர்கள் யார், ‘மூர்த்தி ஐயா’ போன்றவர்களுடைய மனப்பாங்கு இவர்களுக்கு உண்டா? என்கின்ற பல கேள்விகள் இதற்குள் உண்டு.

1989இல் அம்பாறை மாவட்டத்தில், விடுதலைக் கூட்டணியின் சார்பில், பங்காளிக் கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போட்டியிட்டது. அன்றைய காலகட்டத்தில், மக்கள் ஆதரவு கிடைக்காமையினால் தோல்வி கிட்டியது. அதன் பின்னர், அம்பாறைத் தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு, அரசியல் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற குரலோடு, தமிழர் மகாசபை என்ற கட்சி உருவாக்கப்பட்டது.

மாற்றுச் சிந்தனை என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராகச் செயற்படத் தொடங்கியிருந்தது. 1994இல் நடந்த பொதுத் தேர்தலில், அச்சபை அம்பாறையில போட்டியிட்டது. மக்கள் அங்கிகரிக்கவில்லை.

மாற்றுச் சிந்தனை என்ற கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் விமர்சனத்துக்குள்ளாக்கிக் கொண்டே செயற்படுவது என்பது ஒருவிதமான தூக்கலான அரசியல் என்ற பார்வையே பலருக்கும் இருந்து வருகிறது.

அரசியலில் கிடைக்கின்ற தோல்விகளை, திராட்சைப் பழப் புளிக்குள் இருக்கும் புளிப்புச் சுவையைப் போல் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

அதன் அடுத்தபடியாக, இப்போது கையாளப்படுகின்ற இன்னுமோர் உத்தியே, கிழக்குத் தமிழர் ஒன்றியம் – கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்கிற அமைப்பு.

அரசியல் தூய்மை என்பது அடி மட்டத்திலிருந்து, மேல் நிலை வரையில் காணப்படவேண்டும் என்ற சிந்தனை கட்சிகளைப் பொறுத்தது. சில கட்சிகளிடம் அரசியல்தூய்மை இருக்கும்; அது இல்லாதவைகளும் கட்சிகளாகத்தான் இருக்கின்றன.

2008ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபை பிரிக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டதிலிருந்து கிழக்கில் ஒரு புதுவிதமான அரசியல் பார்வை அதிர்வுகளுடன் உருவாகியிருக்கிறது என்பதற்கு மாற்றுப் பதில் இருக்கப் போவதில்லை.

இருந்தாலும், தமிழர்களின் அரசியல் உணர்வென்பது மாற்றுச் சிந்தனை என்ற பகுதிக்குள் நுழைவது அல்லது நுழைப்பது சாத்தியம் குறைந்ததாகவே இருக்கிறது. கிழக்கின் முதலாவது முதலமைச்சர் சந்திரகாந்தன், அவருடைய காலத்தில் ஆற்றிய பணிகள் அமைச்சர் தெய்வநாயகம், நல்லையா மாஸ்ரர், அமைச்சர் இராஜதுரை, தம்பிமுத்து என்பவர்களுடைய செயற்பாடுகளுடன் இணைந்ததாகத் தான் பார்க்கப்படுகிறது. இப்போது வியாழேந்திரனும் இணைந்திருக்கிறார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கிருக்கின்ற ஆதரவுகள், ஏனைய எதிர்ப்பு அரசியல் கட்சிகளுக்கிருக்கின்ற வாக்குகள் என்பவற்றோடு இன்னனுமும் ஒரு தொகை வாக்கினை இணைத்துக் கொள்வதன் மூலம், கிழக்கு மாகாணத்தில் ஓர் எதிர்க்கட்சியாகவேனும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

தம்மை ஒரு தூய்மையான அரசியல் வாதிகளாகக் காட்டிக் கொள்வதற்கே அனைவரும் முயல்கின்ற அதே வேளையில், தமிழர் பிரதேசங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பட்டியலில் இணைந்து, தேர்தலில் போட்டியிடுவதே வெற்றிக்கு அதிக சாத்தியங்களைக் கொண்டது என்பதனை உணர்வதனாலோ என்னவோ கிழக்கில் 2008 மாகாணசபை போல், தமிழத் தேசியக் கூட்டமைப்பு, தேர்தலில் போட்டியிடாதிருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது.

தேர்தல்களில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப் பல கட்சிகளில் போட்டியிட்டுத் தோல்விகளைத் தழுவிக் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்களும் அரசியல் ஆசையுடனேயே காணப்படுகின்றனர். அவ்வாறாகப் பலர், கடந்த தேர்தல்களில் பெரும்பான்மைக் கட்சிகளில் போட்டியிட்ட தமிழர்களின் வெற்றிக்காகப் பரப்புரைகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்களும் தோல்விகளையே கண்டிருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க அரசியலிலே ஈடுபட்டுத் தோல்வி கண்டவர்கள் பலர், தங்களை அரசியல் சாராதவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றார்கள். அரசியலுக்காகவே உருவாக்கப்படும் அமைப்புகளை அரசியலில் இல்லாதவைகள் என்று சொல்லிக் கொள்கின்ற நிலைமைக்கு, மீண்டும் ஒரு சாட்சியாகத் கிழக்குத் தமிழர் ஒன்றியம் அமைந்திருக்கிறது.

இவ்வாறானவர்களுடைய புத்திசாலித்தனத்துக்குள் என்ன இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளாத, உண்மையிலேயே தமிழர்களின் ஒற்றுமையை உளம்கொண்ட பலர், இது ஒரு நல்ல யோசனை என்ற அடிப்படையில், இதற்கு ஆதரவு வழங்க முன்வருகின்றார்கள்.

இதிலே, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மறைகரமும் இருக்கின்றது என்பது குறிப்பிட்ட தமிழர்கள் அறியாத விடயமல்ல. மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கில் இன்னும் முன்னிலைப்படாத நிலையில் இருக்கும் மட்டும் தான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் ஒற்றுமை, சிங்களக் கட்சிக்கு எதிரான கோசங்களை இடுவார்கள் என்பதை ஆழ்ந்து யோசிக்கக் கூடிய ஒவ்வொரு தமிழனும் அறிவார்கள் என்பதும் வெளிப்படைதான்.

அதற்கு கடந்த ஒக்டோபர் இறுதியில் நடைபெற்ற புதிய பிரதமர் நியமனத்தின் ஊடாகச் சாட்சிகளும் கிடைத்துவிட்டதென்றே கூறலாம்.

இந்த வியூகங்கள் எல்லாம், கிழக்குத் தமிழர் ஒன்றியம் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குழி பறிக்கும் செயல்கள் என்பதே உண்மை நிலைவரம் ஆகும்.

பாரம்பரியமான கட்சியொன்றுக்கு, இதுவரை தமிழ் மக்களை வழிநடத்தி வந்த கட்சிக்குப் பலம் சேர்த்து, தமிழ் மக்களை ஓரணியில் திரட்டுவதே யதார்த்தமானது; வரவேற்கத்தக்கது; நியாயமானது.

இதைவிடுத்து எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுச் சின்னத்தில் போட்டி போட்டு, தமிழ் மக்கள் அனைவரதும் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதென்பது எந்தவிதத்திலும் யதார்த்த நிலைமையோடு ஒன்றியதல்ல. இது தமிழர்கள் அனைருக்கும் தெரிந்த விடயமே.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைச் சுக்குநூறாக்கி, தமிழ் மக்களைக் கையறு நிலைக்குக் கொண்டு வந்தவர்கள், தமிழ் மக்களைப் பிராந்திய ரீதியில் பிரித்து, அரசியல் செய்ய விளைபவர்கள், தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், தமிழர் தம் பாரம்பரிய நிலத்தை அங்கிகரிக்காதவர்கள் என்றெல்லாம் பல்வேறு அடை மொழி விளக்கங்கள், தமிழர் அரசியலில் இருக்கத்தான் செய்கின்றன. இவைகளில் மாற்றம் ஏற்படுவதற்கு காலம் கனிய வேண்டும். அதற்காகக் காத்திருப்போம்.

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய சூழலில், முதலில் தமிழ் மக்களுடைய பலத்தை நிரூபிக்கும் வகையில் முன்னணிக் கட்சியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்களையெல்லாம் வாக்களிக்கச் செய்து, கிழக்கிலே பெறக்கூடிய அதிகூடிய, தமிழ் மாகாண சபை உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதும், அதன் பின்னர், ஏனைய மாகாணசபை உறுப்பினர்கள் யாரோடு சேர்ந்து ஆட்சி அமைப்பது என வியூகம் வகுப்பதும் தான் நடைமுறைச் சாத்தியமாகும்.

இதை விடுத்து, தமிழர்கள் எல்லாம் ஒன்றுபடுதல், தமிழ் முதலமைச்சரை உருவாக்குதல் போன்ற வெற்றுக் குரல்கள் ஒலித்து, ஏனைய மக்களை ஒன்றுதிரளச் செய்வது, தமிழர் தம் அரசியலைப் பலவீனப்படுத்தும் ஒன்றாகவே அமையும்.

இந்த இடத்தில் தான், தமிழ் மக்களின் வாக்குகளை, அந்த அந்தக் காலத்தில் சிதைத்து, தமிழ் மக்களின் வாக்குப் பலத்தைக் குறைக்கின்ற செயற்பாட்டின் மற்றொரு வடிவமா என்கிற சந்தேகமும் இருக்கிறது.

தேர்தல்கள் வரும்போதெல்லாம் காளான்கள் முளைக்கும். இவை காய்த்துக் குலுங்கி மரமாகிவிடும் என்ற மாயை, ஒருமித்த அரசியலுக்குள், அரசியலிலே தோல்வி கண்டவர்கள், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்ற நீண்ட பட்டியலால் உருவாக்கப்படுகிறது.

இந்த மாயவலைக்குள் தமிழ் மக்கள் சிக்கிக் கொள்வார்களா, வெற்றிக் கனி என்ற கற்பனையை உடைத்தெறிவார்களா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Japan ஜப்பான் நாட்டை பற்றின அதிர வைக்கும் தகவல்கள்!!(வீடியோ)
Next post எளிது எளிது வாசக்டமி எளிது!(அவ்வப்போது கிளாமர்)